(1) அந்த நகரத்து அழகி(சிறுகதை)
அந்த நகர மைய குறீயீடாக அமைந்திருக்கின்ற மணிக்கூட்டு கோபுரமடியில் இருந்து அந்த பிராந்தியத்தையே அலறவைத்து வந்தது ஒரு சத்தம்..சத்தம் என்றால் வெறும் சத்தமல்ல ஊரிலுள்ள கெட்டவார்த்தைகளுக்கு எல்லாம் அலங்காரம் செய்த மாதிரி அது. மிஞ்சினால் ஒன்றோ இரண்டோ மூன்றோ மூல தூசண வார்த்தைகள் இருந்திருக்கும் . அதை பல வடிவத்தில் மாற்றி பல வார்த்தை ஜாலங்களில் தொடர்ச்சியாக அந்த பிரதேசத்தையே ரீங்காரமிட்டு கொண்டிருந்தது.
அந்த கல்லூரி வாசலினூடாக சந்தையில் இருந்து காய்கறி வாங்கி கொண்டு பையோடு ஏதோ யோசனையுடன் செல்லும் நடுத்தர வயது மனிதர் கூட இச்சத்தத்தின் அர்த்தத்தை மனதுக்குள் ரசித்து உதட்டில் சில கணம் புன்னகையை வைத்து எடுத்து விட்டு செல்லுகிறார்..நூலகம் நோக்கி செல்லும் பருவ பெண்கள் கூட ஒருவரை ஒருவர் பார்த்து வெட்கபடுகிற மாதிரி வெட்கபட்டு கொண்டு,, வெளியில் அருவருத்து கொண்டு ஆனால் உள்ளுக்குள் ரசித்து கொண்டு செல்லுகின்றனர்.முனியப்பர் கோயிலுக்கு செல்லும் நடுத்தர பெண்கள் தீடிரென்று சினந்து கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி அவதானித்த பின்னர் அட இவளோ என்று சொல்லிக்கொண்டு செல்லுகின்றனர். அவளே தான் ,,,இவர்கள் ஒளித்து வைத்து ரசிக்கும் இவர்களால் ஊத்தை வார்த்தைகள் என்று வர்ணிக்கப்படுபவையை உதிர்த்து கொண்டிருப்பவள்,.அத்துடன் இந்த நகரத்தின் சிலரின் உபாதைகளையும் ஊத்தைகளையும் பெற்றுக்கொள்ளுபவளும்.அவளே. ஏதோ அவசரத்தில் ஏதோ நோக்கத்துக்காக சென்று கொண்டிருந்த அவளை.வழி மறித்து அந்த மணிக்கூட்டு கோபுரத்தடிக்கு கிட்ட உள்ள மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த பதினாறே நிரம்பாத சில பொடியள் அவளை பார்த்து சல்லிக்கல்லு யனைவமே அப்பி என்று சிங்களம் தமிழும் கலந்த அந்த பாடல் வரிகளை பாடியதே அவளுக்கு வந்த கோபம். அதனால் வந்தது இந்த வார்த்தை ஜால சத்தம்.அரை குறையாக உதிர்க்கப்படும் யனவமே அப்பி என்ற சிங்கள வார்த்தைக்கு அர்த்தம் சரியாக அந்நகரத்து வாசிகளுக்கு தெரியுதோ இல்லையோ.சல்லிக்கல்லு என்று தமிழ் போல இருக்கும் அந்த சொல்லுக்கு அர்த்தம் அவர்கள் கொள்ளுவது வேறு மாதிரி.
ஏன் என்று அவளுக்கு தான் முதல் தெரியுமே,..அதன் பின்னர் தானே மற்றவருக்கு தெரிந்திருக்கும்.அவளிடம் அவசரத்தில் இருட்டில் அனுபவிக்க போன ஒன்று.இவர் அனுபவிக்கும் அத்தருணத்தில் அவள் ஜடமாக இருந்து மள்ளாக்கொட்டை சாப்பிட்டு அதன் சுவையை ரசித்து கொண்டிருந்திருக்கிறாள். அந்த ஆத்திரத்தில் அவளிடம் சில்லறை காசாக உருவகபடுத்தி சல்லிக்கல்லுகளை கொடுத்து வந்திருக்கிறான்...அவளும் ஏமாந்திருக்கிறாள் அன்றிலிருந்து அவளுக்கு சல்லிக்கல்லு என்று பட்டம் முடிசூட்டப்பட்டு இப்பவும் தொடர்கிறது.
இந்த சல்லிக்கல்லு தேவைப்படுகிறது அங்குள்ள பெண்கள் தங்களை கண்ணகிகளாக உருவகபடுத்த..அப்படி ஒரு மாதிரி பெண்கள் அவர்களுக்கு தென்பட்டால் கூட சல்லிகல்லு என்று அழைக்க தொடங்க பார்ப்பார்கள்
கெக்கே போட்டு ரசித்த பொடியள் மீண்டும் ஒருமுறை அவளிடம் அதை எதிர்பார்த்து கூவ .அதை செவிசாய்க்க கூடிய எல்லை எல்லாத்தையும் தாண்டி சென்று விட்டாள்,.றீகல் தியேட்டர் அடியில் அடல்ஸ் ஒன்லி படத்தின் கட்அவுட்டை உள்ளே உள்ள படம் எப்படி இருக்கும் என்று மிகை கற்பனை பண்ணிக்கொண்டு ஆவென்று பார்த்து கொண்டிருந்தது. ஒன்று..நடக்கும் வேகத்தில் அதையும் சாடையாக இடித்து தள்ளிக்கொண்டு மூத்திர ஒழுங்கைக்குள் நகர்ந்து கொண்டிருந்தாள்.இந்த மூத்திர ஒழுங்கை கடைசி மட்டும் காவி பின் தாங்க மாட்டாமால் கடைசியில் ஒதுங்குபவர்களின் இடம்.இது. இந்த பகுதியிலிருந்து நகரத்து மைய பகுதிக்கு செல்லுவதுக்கு சுலபமான சேறும் சகதியும் நிரம்பி வழியும் குறுக்கும் பாதை.
அவளை கடந்து செல்லும் அந்த தோடம்பழ வியாபாரி கூட இவளை சுவைத்து இருப்பான் ,,அவனுக்கு கூட இவளின் அவசரம் கிராக்கிக்குத்தான் என்ற நினைப்பு.நெற்றியில் பட்டையும் சந்தனம் சவ்வாதுமாக ஒண்ணுக்கு ஒதுங்க இடம் தேடி கொண்டிருக்கிற பெட்டிக்கடை வைத்திருக்கின்ற அந்த பழசு கூட இவளிடம் சென்றிருப்பார்,அவரின் நினைப்பு கூட இவளின் அவசரம் கிராக்கியை தேடித்தான் என்று..அவளோ அவனின் நினைப்புடன் இந்த நகரமுழுவதும் தேடி அலைந்து கொண்டிருக்கிறாள்..அவனை நாலு நாளாக அவளின் கண்ணில் காண கிடைக்கவில்லை. அதனால் ஏற்படும் தவிப்பை தண்டரோ போட்டு கூவியா சொல்லவா வேணும் அவர்களுக்கு..அவனின் நட்பு கிடைத்த பின் அதை விட்டு விட்டேன் அதையும் சேர்த்து சொல்லுவா வேண்டும் .இவர்களின் நினைப்பை எல்லாம் காவி நினைக்க அவளுக்கு இடமில்லை.ஏனெனில் .நினைப்பு முழுவதையும் அவனே பிடித்து விட்டான்.
நகரம் இவளது அவசரத்தின் வேகத்தை விட வேகமாக இப்ப இயங்க தொடங்கி விட்டது. அந்த பிரதான றோட்டில் இறங்கினவள் எந்த பக்கம் போவது என்று தனது மூளையை கசக்கி கொண்டு நின்றாள் .சிறிது அதில் நின்று நிதானித்து விட்டு ஆஸ்பத்திரி இருக்கும் தெரு பக்கமாக விறு விறுவென்று நடக்க தொடங்கி விட்டாள் .தெரு நடுபகுதியில் உள்ள மரங்களின் கீழ் மனிதர்கள் மட்டுமல்ல மினிவான் ,வாடகை கார்களும் ஓய்வெடுத்து கொண்டிருந்தன.கண்டக்டர்கள், வாகன ஓட்டனர்கள் அதில் சாவகசமாக நின்று கொண்டும் குந்தி கொண்டும் சிலர் பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒன்றுடன் சாய்ந்து கொண்டும் வாயடித்து கொண்டிருந்தார்கள் ..அதுக்குள் அவன் நிற்கிறானா என்று துளாவினாள். அவள் தேடும் அவன் அதுக்குள்ளும் சில நேரம் நிக்க கண்டிருக்கிறாள் இவன் அறிமுகம் கிடைக்க முந்தி.
அவளை பொறுத்தவரை அவளுக்கு இப்ப உலகத்தில் மிகவும் அழகன் அவன் தான்
.ஆனால் பரட்டை தலையுடன் பல நாள் பல்லு தீட்டாத காவி படர்ந்த பற்களுடனும் கிட்ட சென்றால் பல மாதம் உடம்பு கழுவதாதால் ஏற்படும் ஒருவித அழுக்கு வாசனையுடனும் அந்த கடை வாசல்களிலும் தெருக்களிலும் வலம் வரும் ஒருவன் தான் அவன்.அவனை பார்த்தால் ஒரு காட்டு மனிதனோ அல்லது ஆதிவாசி போன்று அமைந்த தோற்றம் ,,அவனது பற்கள் எப்பவுமே சிரித்தப்படி இருப்பது போல் தோற்றமளிக்கும் அதில் எப்பவுமே வீணி வடிந்தபடி..உண்மையில் அவன் எப்பவுமே சிரித்தபடி இருப்பது அல்ல ..அவனது உருவ அமைப்பே அப்படி இயற்கையில் அமைந்து விட்டது .அங்குள்ள கடை க்காரர் அதில் கூடி இருக்கும் சிலரிடம் எப்பவும் கேட்டு கொண்டிருப்பான்.
இப்படி ,,அண்ணே ஒரு பணிசும் ஒரு டீயும் வாங்கி தாண்ணே .என்று அரியண்டம் கொடுத்து கெஞ்சி கொண்டு இருப்பான்..அதற்க்கு விலையாக பத்து மடங்கு பெறுமதியான வேலையை வாங்கி விடுவார்கள் .அவன் எந்த தொட்டாட்டி வேலை செய்து முடித்தாலும் அவனுக்கு அதிகம் கிடைக்கும் சம்பளம் பணிசும் டீயும் தான் .அவனுக்கும் அதுக்கு மேல் தேவை இருப்பது போல் தெரியவில்லை . தெரியவில்லையோ மேலும் தேவைகள் இருக்கு என்று தெரியாதோ என்னவோ தெரியாது.அப்படி யாரும் இல்லாத நேரங்களில் மூலையுள்ள கடை வாசலில் சாய்ந்து கொண்டு இருந்த படி போய் வரும் பெண்களை கண் வெட்டாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பான் .
.அவனது தாமசத்தால் உருவாகிய இறுகிபோன உடல் உருவாகி இருந்தது. சில வேளை வேண்டுமென்றே தெரியாத மாதிரி தனது உடையை நழுவ விட்டு தனது அங்கங்களை தெரியதக்கதாய் விட்டு விட்டு இருப்பான் ..அதால் போகும் .பெண்கள் அருவருத்து திட்டி கொண்டு செல்லுவார்கள் ..அவர்கள் அருவருத்த மாதிரி தானே நடிக்க வேண்டும் ....சில வேளை ரசித்தும் இருக்காலாம் ஏனெனில் தையல்காரன் கவர்ச்சியாக தைக்கும் உடைகளிற்க்குள் ஒளிந்து கொண்டு கவர்ச்சி காட்டும் கோறை நெஞ்சு உடைய அவ்வூர் இளைஞர்களிலும் பார்க்க உண்மையிலையே இயற்கை கட்டமைப்பானவன்.
இந்த இடத்திலையும் இப்ப காணவில்லை என்ற போது நெஞ்சுக்குள் அவளுக்கு என்னவோ செய்தது .அவன் எங்கு போயிருப்பான் நகரத்தை விட்டு வெளியில் போக கூடியளவுக்கு அவனுக்கு தேவையுமில்லை ஆற்றலுமில்லை என்று பழகிய கொஞ்ச நாளில் அவளுக்கு நல்லா தெரியும்.
அவனை நினைத்து கலங்குவதுக்கு காரணம் காதல் என்ற கெட்ட வார்த்தையினால் என்று கடைசி வரையும் நினைக்கமாட்டாள். அதில் அவளுக்கு நம்பிக்கை இல்லை..அதுக்காக அவள் விபச்சாரி தானே அவளுக்கு எங்கை தெரிய போகுது என்று நினைக்க கூடாது .இந்த பலராலும் பூசிக்கபடும் காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் நன்றாகவே தெரியும் .இவளை தாண்டி பள்ளிக்கு செல்லும் பெட்டைகள் பொடியளின் பகிடிகளுக்கு புன்னகை உதிர்த்து விட்டு அது காய முன்பு ..அங்காலையும் நிற்கும் பொடியளும் பகிடி விட அதற்க்கும் வழிய விட்டுட்டு செல்லுகிறார்கள்.
அந்த நாட்களில் அந்த கிராமத்து சந்தியில் காலை நேரம் களிப்பூட்டி கொண்டு இருக்க ஸ்கூல் பஸ்க்காக இவள் வரும் போது அந்த பிரதேசமே குளிர்மை கொண்டாடி கொண்டு இருக்கும்..அவளின் அசைவு அங்குள்ள கல்லூரி பெண்களில் இருந்து வித்தியாச படுத்தி கொண்டு இருக்கும் ..அது இயற்கை கொடுத்த வரம் ...அவளின் புன்னகை த்தும்பும் போல் இருக்கும் அப்பாவித்தானமான முகம் அங்கு இருப்பவர்களின் உணர்வுக்களுக்கு தக்க மாதிரி விடை கொடுத்து கொண்டு இருக்கும். அவ்வூர் வாசிகளை விட அவன் நவ நகாரிகமாக இருந்தான் அண்மை காலமாக தான் அவ்வூரில் தென் படுகிறான் ,இவள் பள்ளிக்கு வரும் நேரங்களில் அவனும் வழமையாக வருவதுண்டு .அவள் அங்கு பரப்பும் முழு புன்னகையையும் தனதாக்கி கொள்ள யோசித்தான் ..அதற்க்கு தனக்கு தெரிந்த சகல அஸ்திரங்கள் சகலவற்றையும் பிரயோகித்தான் ..
.
இரட்டை பின்னலில் வந்தால்என்னை விரும்புவதாக அர்த்தம் என்று சொல்லி தன்னிடம் உள்ள கடைசி அஸ்த்திரத்தையும் பாவித்து முடித்தான்
அடுத்த நாள் அந்த ஸ்கூல் பஸ் இரட்டை பின்னலுடன் சென்றது .அன்றிலிருந்து அவளுக்கு கசிறினோ பீச் காட்டினான் .. படத்தில் நாயகன் நாயகிக்கு நெருப்பூட்டி திரையில் சிவப்பாக்கா ..ராணி தியேட்டர் பொக்ஸ் றூமில் இருந்த படி சிவப்பு பச்சை எல்லாம் காட்டினான் அவன் கடைசி யில் இவளுக்கு சிவப்பு கொடி காட்டி விட்டு சென்று விட்டான்..ஆனால் காலம் செல்ல அவளுக்கு வயிறு காட்டியது ...அதனால் கிராமத்து சொந்தகளினால் தூக்கிய எறிப்பட்டவள் நகரத்தில் அலைந்தாள் அவனைத்தேடி ..ஆனால் நகரமோ அவளை இந்த தொழில் செய்யும் நரகத்தில் தள்ளியது.
அவள் ஸ்ரான்லி றோட்டில் தேடினால் அவன் நிற்க்கலாம் என்ற நப்பாசை அவளுக்கு ...மூட்டை தூக்கு தொழிலாளிகளுடன் நிற்க்க கண்டதாக நினைப்பு.
இடியும் மழையும் நகரத்தை உலுப்பி கொண்டிருக்க அவனும் அவளும் தற்சயலாக பாழடந்த கட்டிடத்தில் ஒதுங்கிய போது தான் அந்த நட்பு உருவாகியது .நகரமே நள்ளிரவில் நித்திரை வராமால் போராடி கொண்டிருக்க ..இழக்க ஏதும் அற்ற அந்த இருவரும் அந்த இரவை முதல் இரவாக்கி அங்கு ஒரு யோக நடனம் செய்த அன்றிலிருந்து பிறகு அவர்கள் பல முதல் இரவுகளை சந்தித்து இருந்தார்கள்.
அவள் அவனிடமிருந்து அந்த காலம் ஏமாற்றிய காதலினிடமோ அவள் ஈடுபட்ட பாலியல் உறவுகளிலிருந்து பெற்று கொள்ளாத புதிய அனுபவத்தை பெற்றாள்..அதற்க்கு என்ன பெயர் சொல்ல தெரியமால் தவித்தாள்
அந்த தவிப்பு அடங்காமால் தான் இன்னும் தவிப்புடன் அவனை தேடி கொண்டிருக்கிறாள். அவள் பத்திரிகை படிப்பவளல்ல ..அவளை கடந்து செல்லும் போய் வருவர்களின் முக அசைவுகளை படிப்பதன் மூலம் அங்கு ஏதோ நடக்க கூடாத விசயம் நடந்து விட்டது அவளுக்கு உணர்த்தியது.
அந்தி தேவன் கோப கணைகளை வீசி கொண்டிருந்தான் ..முனிசபல் விளக்குகள் மெல்ல மெல்ல எரிய தொடங்கி கொண்டிருந்தன ..அப்பொழுதும் அவனை தேடி கொண்டிருந்தாள் ..அந்த நகர தெருவில் ஈயை கூட காணவில்லை ..அவ்வூர் சன ங்கள் வீட்டுக்கு இரட்டை தாள்ப்பாள் பூட்டு பூட்டி பங்கருக்குள் இருப்பது மாதிரி இருந்து கொண்டு செய்தி கேட்டு கொண்டு இருந்தனர்.
பயம் கவ்விய உணர்வுடன் மறு நாள் காலை விடிந்தது..சனங்கள் மெல்ல மெல்ல குசு குசுத்து கொண்டு தெருவுக்கு இறங்கி தங்களுக்குள் கதைத்து கொள்ளுகிறார்கள்.
அங்கங்கை பிரேதம் கிடக்காம் உண்மை பொய் தெரியாது என்றது ஒன்று.
இரவு முழுவதும் பங்கருக்கிலை இருந்தது போல் இருந்து விட்டு வெளியில் வந்து ..ச்சாய் அவங்களாய் இருக்காது ..சும்மா ஆட்களாய் இருக்கும் என்று புறநானாற்று வீரம் கக்கியது.
அப்பொழுது சைக்கிளில் வந்த
பொடியன் ஒருவன் அவர்களை பார்த்து சொன்னான் ..இப்பத்தான் பார்த்துட்டு வாறன்.
முற்றவெளியிலை உண்மையாய் த்தான் என்று.. .
அவன் பிரேதமாக கிடந்து இருந்தான் என்று அவளுக்கு தெரியாது ..ஏனென்றால் அவளும் பிரதேமாக அவனருகில் கிடந்திருந்தாள்.
-----------------------------------------------------------------------------------------------
(2) ஒரு தற்கொலை முயற்சி (சிறுகதை)
அந்த திரைபடம் திரையில் சும்மா தன் பாட்டில் ஓடி கொண்டிருந்தது. அந்த தியேட்டரில் அதிகம் கூட்டமில்லை அது ஒரு இலங்கை படம் .வேறு எங்கையோ அரைத்த மாவை அரைத்ததை எடுத்து மேலும் அரைத்து கொண்டிருந்தது .அதிகம் கூட்டமில்லை அதுவும் வந்தவர்கள் வெளியில் எரியும் வெய்யிலின் புழுக்கத்தை தணிக்க ஒதுங்கி இடம் தேடித்தான் இங்கு வந்தவர்கள் மாதிரி மூலைக்கு மூலைக்கு தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள் ,அவர்களுடன் அங்கு இருவர் திரையை வெறித்து பார்த்த படி படம் பார்த்து கொண்டிருந்தனர் ..அதில் ஒருவன் திரையை பார்த்து ரசிப்பது போல் இருந்தான் .மற்றவன் படத்தை வெறுத்து திரையை எரித்து விடுவது போல் பார்த்து கொண்டிருந்தான்
படத்தை ரசித்து பார்த்த
அந்த உயரமானவன் திரையில் கதாநாயகன் கதாநாயகிக்கு ஏதோ நாடகத்தனமாக கூறிய வச னத்தை
திரும்ப திரும்ப தனக்காக கூறியது போல் நினைத்து கண்ணீர் வடித்து கொண்டிருந்தான்.திரையில் வேறு காட்சியும் ஓடியும் அவனுக்கு அந்த காட்சியும் வசனமும் தான் தொடர்ச்சியாக ஓடி கொண்டிருந்தது.அவனுக்கு அருகில் இருந்த நண்பனுக்கு ஆச்சரியம்..அழுவதுக்கு ஒன்றுமில்லை அப்படி அழுவதென்றாலும் ஏன் இந்த படத்துக்கு வந்தோமோ என என்று நினைத்து அழத்தான் ஒன்று இருக்கிறது ..உன்னையும் அவனுக்கு பிறந்த உன் பிள்ளையையும் ஏற்று கொள்ளுகிறேன் என்னுடன் வந்துவிடு...என்ற வசனம் வந்த இடத்திலிருந்து அவன் மோகன் அழுது கொண்டிருக்கிறான் என்பது அவனுடன் வந்தவனுக்கு தெரியாது மட்டுமல்ல . அந்த வசனம் வந்ததே தெரியாத மாதிரி தான் திரையை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் இவ்வளவு நேரமும்
..
கடல் நோக்கி ஓடும் ஆறு மாதிரி கன்னங்களில்இரு பக்கங்களிலும் கண்களிலிருந்து ஒழுகும் கண்ணீர் தங்கு தடையின்றி ஒழுகி கொண்டிருந்தது.அந்த வழியும் கண்ணீருடன் அவன் பக்கம் திரும்பி இதை தான் அவளிடம் கேட்டேன் என்று அவளிடம் யாசித்ததை பொருத்தி இவனிடம் ஒப்புக்கொடுத்தான்.அவனின் நண்பன் அவனின் அந்தரங்கங்களை நன்கு அறிந்தவன் ,,அதையும் மீறி அதையெல்லாம் அசிங்கங்களாக நம்புகிறவன் கூட ..அதனால் அவர்களிடேயே அடிக்கடி விவாதம் நடைபெறும் ....அதனூடாக நட்பு என்ற போர்வையில் அவர் அவர்களின் தனித்தன்மை அழிக்க முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருப்பதுண்டு ..அதே போல் இப்பொழுதும் அப்படி ஒரு தர்க்கம் தொடங்கி விட்டது .படம் முடிந்ததது என்று தெரியாமால் விவாதத்தினூடாக நடக்கிறார்கள் வெளியேறுகிறார்கள் .ஆத்திரபடுகிறார்கள் பரிதாபப்படுகிறார்கள் ..படம் பார்க்க வந்தவர்கள் மூணு மணி நேரம் போனது முப்பது மணி நேரம் போனது மாதிரியான உணர்வுட ன் வெளியேறுகிறார்கள். வெளியே வெப்பம் தகித்து மதியத்தை கொதி தண்ணியாக்கி அத்தெருவில் போகிற வருகிறவர்களை குதிக் காலில் நடக்க வைத்து பரத நாட்டிய கலையை உருவாக்கி கலை சேவை செய்து கொண்டிருந்தது. இந்த எந்த பிரச்சனை எதுமின்றி அவர்களின் பிரச்சனையே மையமாகி உரத்த குரலில் தர்க்கம் செய்து கொண்டு பஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர்.பஸ் நிலையம் வந்தது கூட தெரியாமால் பஸ்ஸில் ஏறுகி றார்கள்
.
உள்ளுக்குள் அழுது பொருமி உருகி குமைந்து கொண்டிருந்த மோகனின் உணர்வுகளை .இந்த பஸ் கூட தாங்கமாட்டாமாலோ என்னவோ முக்கி முனகி தான் நகர்ந்து கொண்டிருந்தது. திருவிழாவில் காணமால் போன குழந்தை மாதிரி அவனது மனதும் தனித்துவிட அங்கும் இங்கும் தாவியது. .நண்பன் பஸ்ஸை விட்டு இறங்கி சென்றது கூட தெரியாமால் மனது எதிரும் புதிருமாக நின்று யுத்தம் செய்து கொண்டு இருந்தது. தீடிரேன்று ஏதோ முடிவு வந்து விட்ட மாதிரியும முகத்தில் அப்ப அப்ப இடைக்கிடை சில ரேகைகள் வந்து மின்னல் வேகத்தில் வந்து மறைந்து கொண்டிருந்தன. முடிவை நிறை வற்ற நினைக்கும் மனதின் வேகத்துக்கு பஸ்ஸின் வேகம் ஈடு கொடுக்காததை நினைத்து இப்ப ஒரு புதிய வேதனையுடன் அவனது முகம் தவித்து கொண்டிருந்தது.
ஆளை மயக்கும் கவர்ச்சிகரமானவாக இருந்தாலும் இயல்பாகவே கூச்சம் சுபாவம் உடையவன், அவனோட்டை பொடியன்களிலும் வித்தியாசமாகவே இருந்தான் .உணர்வு தரும் இலக்கணங்களையெல்லாம் இலக்கியமாக்கி கொள்ளுபவன் . அவனும் கவிதை என்ற பெயரில் ஏதோ ஏதோ எல்லாம் கற்பனை பண்ணி கிறுக்கி வைப்பான். கவிஞர்கள் வர்ணிக்கும் வர்ணணை கற்பனைகளை எல்லாம் நிஜம் என கற்பனை பண்ணி கொண்டிருந்தான் ..அது போலவே காதலையும்...அதையும் மனதில் விக்கிரகபடுத்தி ஆலோபனை செய்து பூஜை செய்து தெய்வீகபடுத்தி வைத்திருந்தான் கனகாலமாக..இவன் மேல் மன்மத கணைகளை எறிந்த அவனுக்கு ஒத்த பெண்களை கூட அலட்சி படுத்தியே இருந்தான் . ஏனோ தெரியவில்லை...அவனுக்கு அவனிலும் பார்க்க வயதுக்கூடிய பெண்களை பார்க்கும் போது மனதில் பூ பூக்கும் ...அதை கூட நேரிடையாக கூட பார்க்க முடியாத கோழையாக இருந்தான்.
அவன் பாடசாலையை விட்டே நாள்கள் மாதங்கள் வருடங்கள் ஆகி விட்டன..பொதுவாக மாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்தில் சோம்பலை கொன்று தூக்கத்திலிருந்து எழும்பி வீதியில் சென்று பல காலமாகி விட்டது. அதனால் அவனது மூன்று வீடு தள்ளி புதிதாக வாடகைக்கு கூடியேறிய அவளை காண அவனுக்கு காண சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பள்ளி செல்லும் நேரத்தில் அவள் வீட்டுக்கு முன் நிற்பாள் தனது மகனை பள்ளிக்கு அனுப்பு நோக்குடன்.அவளது கணவன் திருமணம் செய்து சுகத்தை அறிமுக படுத்திவிட்டு மிகுதி சுகத்தை கடிதம் மூலம் வெளிநாடு ஒன்றிலிருந்து கொடுத்து கொண்டிருந்தான் .அவளின் அழகான விழிகளில் பொய்யான சுக அனுபவிப்பு தெரிந்து கொண்டு இருக்கும்....அவளது இளமையின் உணர்வுகளை கொல்லும் இந்த சமூக கோட்பாடு கவசகங்ளுடன் காலத்தையும் துரத்தி கொண்டு இருந்தாள்.....
அன்று ஒரு நாள் பள்ளி செல்லும் நேரம் சைக்கிளில் செல்லும் போது அவளது மகனை ஏற்றி செல்ல கேட்ட பொழுதிலிருந்து அவனுக்கு அவளின் அறிமுகம் கிடைத்தது...இயல்பாக பழகுவது மாதிரி பழகினாலும் இரண்டு பேரும் வெவ்வேறு தளத்தில் நின்று வெவ்வேறு கோணத்தில் அணுகி கொண்டிருந்தனர்.அவனோ காரணம் தெரியாமேலே இவள் மேல் ஒரு வித ஈர்ப்பு கொண்டு இவ்வளவு காலமாக பூட்டி வைத்த விக்கிரகத்துக்கு ஆராதனை செய்து காதல் என்று பெயரிட்டு திருவிழா கொண்டாடி கொண்டிருந்தான். அவளோ தனது தனிமையை போக்க குற்ற உணர்வு என்ற வெடி குண்டை கட்டி கொண்டு இவன் மூலம் இனிமையாக்க முயன்று கொண்டிருந்தாள்.
கடிதத்தில் இவ்வளவு காலமும் சுகம் அனுப்பிய அவளின் கணவன் நெடுகவும் வெளிநாட்டில் திரவியம் தேடி கொண்டிருக்க முடியமா ...நாடு திரும்ப போகும் செய்தி வந்தது. அவள் அவன் தன்னிடம் விலகி நிற்குமாறு கேட்ட பொழுது நடந்த உரையாடலின் போது தான் .....அந்த திரை பட உரையாடல் போன்ற தொனியில் இவன் அவளை பார்த்து கேட்டிருக்கிறான் ...அப்போது தான் அவனது வார்த்தைகளிலிருந்து அவளுக்கு அவன் கட்டிய காதல் கோட்டையை பற்றி தெரிந்தது ...அவன் அவளை வெறுக்க வேணும் என்பற்க்காக ...அப்படியொரு தொனியில் அந்த கடைசி சந்திப்பில் பேசியிருக்கிறாள்....அப்பிடியொரு இழி பேச்சை வாழ் நாளில் அவன் கேட்டிருக்க மாட்டான்.
அவன் தனது வாழ்நாளை முடிக்கும் நோக்குடன் பஸ்ஸை விட்டு இறங்கி கொண்டிருந்தான். அந்த பஸ்ஸும் அவனுக்கு யமலோக அழைப்பாணையை கொடுத்து விட்டு சோகத்துடன் செல்லுவது போல் அவனை இறக்கி விட்டு சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது தான் தொலைக்காட்சி அறிமுகமான காலம் . அதுவும் சில வீடுகளில் தான் இருக்கும் அந்த வீடுகளும் பனை உயர அன்ரனாக்களை கட்டி தொலைக்காட்சி இருப்பதை பறைசாற்றி கொண்டிருக்கும்....அவளது வீட்டிலும் தொலைக்காட்சிப்பெட்டி .அவ்வூர் அரைவாசி சனங்களும் அங்கு பிரச்சனம் .அது போல அவனது வீட்டிலும் யாருமில்லை .அவனது முடிவுக்கு அனுக்கூலமானது..விட்டத்தில் விவாசய பயன்பாட்டுக்காக தொங்கி கொண்டிருந்த பொலிடோல் என்ற நச்சு திரவாகத்தை தன்னை அழிக்க பயன் படுத்தி கொண்டான் அவளது வீட்டில் கும்மாளமும் குதுகாலமும் காற்றில் மிதந்து கொண்டிருந்தது. இங்கு அவன் அரை குறை உயிரில் துடித்து கொண்டிருந்தான்.
ஆஸ்பத்திரி கட்டில் துடித்து கொண்டிருக்கிறான் .இப்பொழுது உயிர் தப்ப வேணும் என்று துடித்து கொண்டிருக்கிறான்.. கடைசி நேர உயிர் ஆசையில் தன்னை எப்படியும் காப்பற்றும் படி டாக்டர் நர்ஸ் பார்த்து கெஞ்சி கொண்டிருக்கிறான்...பொலிசார் சூழ இன்னுமொரு தற்கொலை முயற்சி செய்த பொடியனை கொண்டு வந்து காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.ஆனால் அந்த பொடியனோ டாக்டரிடமும் இரகசியமாக கூறுகிறான் தன்னை இறக்க விடும்படி ....என்னவோ தெரியாது அந்த அரசியல் பொடியன் இறந்து விட்டான் இவன் மோகன் எப்படியோ என்னவோ தெரியாது தப்பி விட்டான்.
காற்று வாக்கில் அவளிடம் செய்தி மாறி போனது ....தற்கொலை செய்ய முயற்சி செய்த பொடியன் இறந்து விட்டான் என்று .மோகன் தான் இறந்து விட்டான் என்று தனது குற்ற உணர்வு டன் அவளும் ஒரு தற்கொலை முயற்ச்சி எண்ணத்துடன் அதற்க்கான ஆயத்தங்களை செய்யும் போது ...பாடசாலை சென்று திரும்பிய மகனின் அம்மா என்று விளிக்கும் குரல் கேட்கிறது..அதே நேரம் பின்புலத்தில் இவ்வளவு நடந்து இருக்கு என்று எதுவும் தெரியாத அவளது கணவன் சந்தையிலிருந்து திரும்பி வந்து அவளை வாஞ்சை யுடன் கூப்பிடும் குரலும் கேட்கிறது.
தூங்கி சாவதுக்கு சுருக்கு கயிறுடன் நிற்கும் அவள் தூங்குவாளா இல்லையா என்பது இந்த கணம் மாறி அடுத்த கணம் வரும் போது தெரியும்.
----------------------------------------------------------------------------------------------
( 3) ஒரு சனிக்கிழமை இரவில்(சிறுகதை)
நான் உள்ளே போக சரியாக மட்டு மட்டாக அந்த நிலக்கீழ் ரயிலின் கதவு சாத்த பட்டது ..ஓடி வந்து
ஏறிய பின் இன்னும் பதட்டம் தணியவில்லை .இது தான் இந்த இரவின் கடைசி ரயில் .இதை விட்டிருந்தால் இந்த குளிருக்குள் விடியும் மட்டும் இந்த வெறியுடன் தள்ளாடி திரிய வேண்டி இருக்கும். நினைத்து பார்க்கவே குளிரில் துடிக்குது தேகம்.இது ஒரு சனி இரவு .அதனால் நடுநிசி தாண்டியும் கூட்டமும் கூச்சலும் அதிகமாக காணபட்டது தள்ளாடி தள்ளாடி இருக்க இடம் தேடி கொண்டிருந்தேன் .எனது நிலைமையை பார்த்து எனக்கே ஒரு வெட்கம் வந்தாலும் என்னைப்போல் பல பேர் வெட்கமில்லாமால் அப்படி அப்படி ஆண்களும் பெண்களும் அங்கங்கே .எப்படி குடித்தாலும் நான் நிதானம் தவறுவதில்லை ஆனால் இன்று என்னை அறியாமால் வாய் உளறியது. வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல இந்த பரதேசி மோகன் ஊத்தி விட்டானே..அவன் ஊத்தினால் எனக்கு என்னுடைய மதி எங்கை போனது ?தமிழில் இப்படி உளறுவுதை கண்ட எனது முதுகு பிறகு பக்கமாக நின்ற வெள்ளை இனத்தவன் ஒன்று தனக்கு தான் ஏதோ ஒன்று சொல்லுறன் என்று நினைத்து வள் என்றோ வட் என்றோ ஏதோ சொல்லி என்னை பார்த்து முறுகினான் .
கிழமை முழுவதும் யந்திரமாய் சுழன்று வேலை செய்து வார கடைசி எப்ப வரும் என்று துடித்து காத்திருந்து குடித்து கும்மாளமடித்து களைப்பை இறக்கி செல்லும் இப்படியான கூட்டத்துடன் பயணம் செய்து கன காலம் ....அதனால் அவர்கள் போடும் எல்லா அட்டகாசமும் கூச்சலும் கும்மாளமும் இந்த வெறியில் கூட என்னால் சகிக்காமால் விலகி இருக்க இடம் தேடினேன் ..இந்த இரைச்சல்களின் ஒலியை மீறி கிழித்து ஒலித்து ஓய்ந்து ஒரு தரிப்பிடத்தில் நின்றது ரயில்..இறங்கினார்கள் ஏறினார்கள்..அப்போது அந்த பெட்டியின் மூலையில் இடம் காலியாக கண்டு யாரும் பிடித்து விடுவார்களோ என்று அவசரப்பட்டு ஒரு தவளை பாய்ச்சல் பாய்ந்து அந்த இடத்தில் இருந்து கொண்டேன்.
அந்த சீட்டுக்கு முன் சீட்டில் சாவகாசமாக அதுவும் இந்த நேரத்தில் கூட புத்தகம் வாசித்து கொண்டு எதேச்சையாக என்னை பார்த்து விட்டு தொடர்ந்து வாசித்து கொண்டிருந்தாள். ஒரு வெள்ளை இனத்து பெண்.அந்த ஒரு கணம் தான் இருக்கும் இருவரின் பார்வை சந்தித்து இருக்கும் ..ஆனால் எனக்கோ பல நாள் பழகிய பந்தம் மாதிரியான ஓர் உணர்வு. அவள் திரும்பவும் பார்க்க மாட்டாளா என்ற ஏக்கம் என்னுள் எழுந்தது. இந்த வெறி செய்யும் வேலையாக இருக்குமோ என்று நினைத்தேன்.சிலரை காரண காரியமில்லாமால் பிடித்து போவதுண்டு இடம் காலம் கூட பார்க்காமால் கூட.. எனது பார்வையின் அரவம் கண்டாளோ என்னவோ அல்லது தனது பாதுகாப்பை கருதியோ என்னவோ படிப்பதை நிறுத்திவிட்டு என்னை ஒருதரும் பார்த்து சிறு புன்னகையை உதிர்த்தாள் ..எனக்கு சொல்லவா வேண்டும் .அவளது புன்னகை சிந்த முன் இதற்க்காக காத்திருந்தவன் போல நானும் விரைந்து புன்னகைத்து அதை ஏந்தினேன். நான் போகும் இடத்துக்கு செல்ல இன்னும் ஒரு மணித்தியாலம் எடுக்கும் ..அதுவரை இவள் இருப்பாளோ அதற்கு முன் இறங்குவளோ அப்படி இறங்காமால் இருந்தால் என்றால் ,பேச்சு கொடுத்து பார்த்தால் ,அவள் என்னுடன் பேசினால் ,அப்படி அப்படி நினைத்து கொண்டிருந்தால்...
ஹி ஹி ஹி... என்று நைந்த நக்கல் குரலுடன் சிரிப்பை கக்கி விட்டு தொடர்ந்தது அது . இரண்டு கழுதை வயது ஆகிவிட்டது உனக்கேன் உந்த புத்தி இப்படி போகுது என்றது...வேற யாருமில்லை எனது மனம் தான் ..உங்களுக்கும் கேட்காது முன்னுக்கு இருக்கும் அவளுக்கும் கேட்காது ஆனால் அது பேசுவது கதைப்பது சிரிப்பது கோபிப்பது எல்லாம் எனக்கு தெளிவாக கேட்கும்..இந்த மனம் சிலவேளை எனக்கு கதை சொல்லும் என்னுடன் சண்டை பிடிக்கும் செல்லம் குத்தும் ஆலோசனை கூறும் அபப்ப வரும் .அபப்ப வராது.சிலவேளை பொழுது போகாமால் இருக்கும் பொழுது இந்த மனம் வந்து என்னுடன் வந்து கதைக்காதோ என்று ஏங்குவேன் தேடினாலும் நான் விரும்பினாலும் காத்திருந்தாலும் கூட வராது .எங்கையோ சுத்தி திரியும் எங்கை போய்ட்டுது என்றுஎனக்கு கூட தெரியாமால் இருக்கும்...இந்த மனதின் ஒரு கெட்ட பழக்கம் நேரம் காலம் தெரியாமால் வந்து தொந்தரவு கொடுக்கும் ...கதை கேள் கேள் என்று சொல்லி..
உன் பாட்டில் என்ன பினாத்தி கொண்டு இருக்கிறாய் நல்ல ரசமான கதை சொல்லுகிறேன் கேட்கிறாயா என்றது... தனது சொந்த கற்பனையை வர்ணஜாலம் செய்து எழுதும் இலக்கியவாதிபோல் இட்டு கட்டி சொல்லும் கதை என்று நினைக்காதே ...நிசமாய் நடந்த உண்மை கதை ..உனக்கே கதையின் மாந்தர்கள் கூட ரொம்ப பழக்கமே என்றது மனம். சொல்லு சொல்லு என்று கெஞ்சி கொண்டு ஆவலுடன் இருப்பேன் என..நினைத்து தன் பாட்டில் கதை சொல்ல ஆயத்தமானது ...நிறுத்து நிறுத்து என்று வாய் விட்டே சத்தமே போட்டு விட்டேன் .அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மொழி விளங்கா விட்டாலும் இந்த ஓடும் ரயிலை நிறுத்தச் சொல்லி தான் சத்தம் போடுறான் என்று அனுமானித்து என்னை ஒரு மாதிரி பார்க்கிறார்களோ என்று எனக்கு ஒரு மாதிரியாக இருக்கவில்லை .முன்னுக்கு இருக்கும் அவளும் ஒரு மாதிரி பார்த்தது தான் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
மனதிடம் முரண்டு பிடிக்காமால் அமைதியாக அனுசரித்து கதையை வேற ஒரு நாள் பார்க்காலம் இப்ப என்னை விடு என்றேன் .உனக்கே அடுக்கமா இந்த சனிக்கிழைமை இரவில் அதுவும் அழகான வெள்ளை இன பெண்ணோடு ஒத்த அலைவரிசையில் பயணிக்கும் போது இப்பிடி குழப்பலாமா என்றேன்... இல்லை சொல்லுவேன் என்று சின்ன பிள்ளை மாதிரி சிணுங்கி மீண்டும் அடம் பிடித்தது ....இயலாத கடைசியில் கதையை சொல் என்று வேண்டா வெறுப்பாக சொல்லி வேட்டு எனது லீலைகளில் கவனமாக இருந்தேன்.
அது சொல்ல தொடங்கி விட்டது...மள மளவென..
அன்று நடந்த விளையாட்டு போட்டியில் எவ்வளவு சனம் ,,விளையாட்டும் அங்கங்கை நடந்து கொண்டு இருந்தது..ஆக்களும் அங்கங்கை கூடி கதைத்து , கூடி குடித்து ஞாபங்கள் மீட்டி கொண்டிருந்தனர் .இதிலை கடலை போட்டிருக்கின்ற இவனும் வந்திருந்தானே ..இவனுக்கு எங்கை அங்கை நடந்தது ஞாபகம் வரப்போகுது
..இப்ப இருக்கிறதிலும் பார்க்க நாலு மடங்கு குடியுடன் அல்லவா அன்று இருந்திருந்தான். இவனது குடி தான் ஊருக்கெல்லாம் தெரிஞ்ச மாதிரி தானே ..கி.மு கி.பி மாதிரி குடிக்கு முந்தி குடிக்கு பிந்தி என . குடிக்க முந்தி வர்க்கம் புரட்சி மசிர் மண்ணாங்கட்டி,புண்ணாக்கு என என்னனோவோ எல்லாம் கதைப்பான் ,கு.பி அவனது பேச்சு நடை பாவனை எல்லாம் எதிர்மாறாய் இருக்கும் ....இவனை பற்றியா சொல்ல வந்தது இல்லையே ..நான் சொல்ல வந்தது அன்று விளையாட்டு போட்டி வந்திருந்த இவனுடன் ஊரில் அந்த காலம் கூடி திரிந்த ராஜாவே பற்றி , அவனுக்கு என்ன என்று கேட்கிறியளா ..இவனுக்கு தான் நல்லா தெரியுமே அவனுடைய காதல் கதை ...அந்த பிற்சேர்க்கையான.இருபது வருடங்களுக்கு பின் நடந்த விசயத்தை ..இங்கு அந்த விளையாட்டு போட்டியில் நடந்த அதிசயத்தை.சொல்லத்தான் வந்தேன்..நான் கதை சொல்லுறன் கேட்காமால்.அங்கை பாருங்களேன் இவ்வளவு வெறியிலும் ...அந்த பெண்ணுடன் வழிந்து சரசம் குத்திக்கெண்டு இருப்பதை. என்றது மனது.
என்ன என்னைப் பற்றி வர்ண்ணை சொல்லி கொண்டிருக்கின்றாய் என்று இடைமறித்து கேட்டேன் , எனக்கும் அவளுக்கும் இந்த கணங்களில் நடக்கும் கதையில் இருக்கும் சுவாரசியம் உனது கதையில் இல்லையே என்றேன் ... அதற்க்கு மனது கதையின் முடிவுதான் சுவாராசியமானது ...அதுக்குள் அந்தரப்படுகிறியே என்றது .அப்படி என்ன சுவராசியம் நடந்தது என்று அலுத்து கொண்டு கேட்டேன் ..உனக்கு அவனது காதல் நிறைவேறாது போனது தெரியும் ..அந்த விளையாட்டு போட்டியில் இருபது வருடங்களுக்கு அவனும் அவளும் தற்செயலாய் திருப்ப சந்தித்து கதைத்ததால் ..இந்த .இருவரும் தங்களது கணவன் மனைவி பிள்ளை குட்டிகள் எல்லாவற்றை விட்டு துறந்து விட்டு இணைத்து விட்டார்களாம் ....எப்படி இருக்கிறது .....என்றது .மனது.
நல்லாயே இல்லேயே என்றேன் ...நீ ரசனையே இல்லாதவன் என்று அந்த காலம் அவனது காதலை நீ விமர்சிக்கும் போது அவன் சொன்னது சரி போலை என்றது நகைப்புடன்.
அவனைப்போல பைத்தியக்காரன் என்று நினைத்தானா என்னை?. .வேணுமென்றால் இதோ இவளிடம் கேட்டு பார் எனது ரசனையின் அளவுகோலை .என்றேன்.
அப்பதான் மனது . எனக்கும் அவளுக்கும் நெருக்கத்தை . பார்த்திருக்கும் போலை கோபத்தில் மறைந்து விட்டது
கூப்பிட்டு கூப்பிட்டு மனதை தேடினான் ... மனதை காணவில்லை .. எனக்கும் அவளுக்கும் இருக்கும் உறவை சொல்ல இந்த மனம் சாட்சிக்கு கூட இல்லாமால் மறைந்து விட்டதே
இப்பொழுது அவ்வளவு ஆர்ப்பாட்டம் இல்லை இந்த ரயில் பெட்டியில்.
...ஒருவன் புல்லாங்குழலை இனிமையாக வாசித்து கொண்டிருந்தான் .. மிதந்து வந்து கொண்டிருந்தது.சிலர் அமைதியாக கேட்டு கொண்டிருந்தனர் ...சிலர் தூங்கி வழிந்து கொண்டிருந்தனர் ..ரயிலும் அந்த ஒலியையும் அரவணைத்து கொண்டு சென்று கொண்டிருந்தது .
.நானும் அவளும் அந்த மூலையில் ...
இந்த ரயில் இனிமேல் எங்குமே நிற்க கூடாது .வாழ் நாள் பூராவும் ஓடி கொண்டே இருக்கவேண்டும் என்று .நினைத்து கொண்டேன்
ஆனால் தூங்கி வழிந்து கொண்டிருந்த என்னை கடைசி ஸ்டேசனில் சுத்த செய்பவன் தட்டி எழுப்ப தான் தெரிந்தது நான் தான் கடைசி பிரயாணி என்று ..
வெறி கூட முறிந்து விட்டது .. இந்த நிசியில் வீட்டுக்கு எப்படி போவது என்று தெரியவில்லையே ...புத்திசொல்ல மனம் கூட பக்கத்தில்லை இல்லையே...கோபித்து கொண்டு போய் விட்டதே என்ன செய்வது என்று தெரியாமால் விழித்து கொண்டிருந்தேன்.
தீடிரென்று மனம் தோன்றி இப்ப ஒரு கதை சொல்லுட்டுமா என்றது .. இந்த நேரத்தில் கதை கேட்க விரும்பமில்லை தான் ..மனம் முந்திய மாதிரி கோபித்து கொண்டு சென்று விடும் என்ற பயத்தில் சொல்லு என்று பவ்வியமாக கூறினேன்..
உன்க்கும் அவளும் இடையில் நடந்த கதையை தான் சொல்ல போறன் என்றது
மனம் சொல்லிக்கொண்டு வந்தது ..வெளியில் நல்ல பால் நிலா ..நானும் நடந்து வீடு செல்லும் வரையும் கேட்டு கொண்டு வந்தேன்....
மிதுவின் கிறுக்கல்கள் வலை பதிவுக்காக எழுதப்பட்ட கதைகள் இவை
No comments:
Post a Comment