Pages

வாசகர் வட்டம்

Thursday, November 24, 2011

மிதுவின் கார்த்திகை மாத(2011) சிறுகதைகள்

வாடகைக் காதலி(சிறுகதை)





அவனுக்கு இன்று அரசாங்க முத்திரை இடப்பட்டு வந்த கடிதத்தை பார்த்ததிலிருந்து உப்பிடித்தான் இருக்கிறான்.வீட்டுக்கு அண்மையிலுள்ள சந்தியை இதற்க்குள் வந்து விட்டேன் என்பதை நினைக்கும் பொழுது அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது,.இப்ப கொஞ்ச நேரம் முன் தான் அந்த டச்சு கிழவனிடம் விடைபெற்று வந்த மாதிரி இருந்தது, அவனை அறியாமால் வருபவர்கள் போவர்களுக்கு வழி விட்டு மற்றும் திரும்ப வேண்டி இடத்தில் திரும்பி நிற்க வேண்டிய இடத்தில் நின்று இவ்வளவு தூரத்தை நடந்து கடந்தது ஒரு நிமிடத்துக்குள் என்ற மாதிரி இருந்தது.அதற்கு காரணம் அவனுக்கு தெரியாததல்ல,, .எண்ணங்களோடு முட்டி மோதி சமாதனப்படுத்தி இருக்கும் பொழுது மறுபுறத்தில் தீடிரென்று கொழுந்து விட்டு எரியும் மனக்குமுறல்களை தணித்து ஆழ்மனத்தை அடக்குவதில் செலவழித்ததில் நிஜ கால அளவை கடந்த ஞானி போல் இருந்தான்.இப்ப கொஞ்ச முன்பு தான் தனது பாசத்துக்கு நேசத்துக்கும் நட்புக்குமுரிய அந்த கிழவனிடம் அந்த செய்தியை சொல்லி அதற்கு என்ன செய்யலாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்றல்லாம் விவாதித்து ஏதோ முடிவை பெற்று கொண்டது போல் இருந்த இந்த மனம்.அதற்க்குள் அந்த ஒரே விசயத்தையே திரும்ப திரும்ப அரைத்து உள்ளத்தை குமுற வைத்து வாந்தி எடுத்து கொண்டிருந்ததை பார்க்க தன்னிலையே வெறுப்பு கொண்டான் .இது என்ன வாழ்க்கையடா ..சொந்த பிறந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை பற்றி ஏன் இவ்வளவு கவலை படுவான் என்று அலுத்து கொண்டான்,

 வந்த ஆத்திரம் கோபத்தில் விரக்தியில் வாசித்தததும் வாசிக்காததுமாய் இருந்த எறியப்பட்ட கடிதம் மேசையின் மூலையில் நிலத்தில் இதோ விழப்போறன் என்ற மாதிரி ஒழங்கற்ற மாதிரி மேசையில் தொங்கி கொண்டிருந்தது,திரும்ப எடுத்து வாசித்து பார்க்க மனமின்றி இருந்தவன், அப்படி இருந்த நிலையை மாற்றி அந்த கடித்ததில் கறுத்த தடித்த எழுத்துகளில் கோடிட்ட வாசகங்களை திரும்ப திரும்ப படித்தான். இலங்கை இந்திய சமாதன ஒப்பந்தத்தின் அடிப்படையில் அங்கு அமைதி திரும்பி விட்டது, இன்னும் இரு வாரங்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் இல்லாவிடின் வெளியேற்ற படுவீர் ,,

,வாசித்தவன் தொடர்ந்து வாசிக்காமால் நிறுத்தி விட்டு இவங்கள் பிரச்சனை முடிந்து சமாதனம் வந்து விட்டது என்று சொல்லுறாங்கள் ,சனம் இனிமேல் தான் பிரச்சனை அடிபாடு தொடங்க போகுது என்று பரவலாக கதைக்குது .,இப்படி கடிதம் கிடைத்தவன்கள் எல்லாம் அவனவன் எங்கையல்லாம் ஓடி தப்ப என்று யோசித்து கொண்டிருக்கிறான்கள் ,எங்கை ஓடி தப்பிறது.. ..இவன்கள் எடுத்த முடிவைப் போல தான் மற்ற ஜரோப்பா நாடுகள் முழுவதும் எடுக்கும் ,,ஓடுறது என்றால் எங்கை ஓடுறது ...கனடாக்காரனும் உவன் ஸ்கன்டிநேவியன் நாட்டு காரன்களும் உள்ளுக்கு விட்ட அகதிகளை ஒரு போதும் திருப்பி அனுப்பினதாய் சரித்திரம் இல்லையாம் என்று சொல்லுகினம்.....யார் கண்டாங்கள் எல்லாம் உதை... ஒரு காலத்திலை சரித்திரம் திரும்பிச்சுது என்றால்.

 அந்த டச்சு கிழவன் ,,கிழவன் என்று தான் அவனை அன்போடு கூப்பிடுவான் .கிழவன் என்று சொல்லுமளவுக்கு அவனுக்கு அவ்வளவு வயதில்லை சரியாக,வாழ்க்கையை அனுபவிக்க தொடங்கும் வயதான நாற்பது அப்படித்தான் இருக்கும் ,,உண்மையாய் வாழ்க்கையை ரசித்து கொண்டாடி குதூகலித்து இந்த வயதிலும் இருக்கும் அவனைப் பார்க்க ..ஒரு வித பொறாமை கலந்த ஆச்சரியம் தான் ,,அவன் அனார்கிசிஸ்டாம் என்று முதல் சொல்லும் பொழுது அது என்ன என்று புரியவில்லை ,...எப்படி முதலில் அவனுக்கு பழக்கம் ஏற்பட்டது என்று சுவையான சம்பவம் .அதிலும் பார்க்க சுவையான விடயம் வாரக் கடைசியில் ஒரு காதலியை சந்திக்கும் ஏக்கத்துடன் இருப்பது மாதிரி இருந்து சந்தித்து மது அருந்தி விவாதித்து அவர்கள் தங்களுக்குள் கொண்டாடுவது. .ஒரு பெட்டை பிடியன் ,வரண்டு பாலைவனமாக இருக்கும் உன் மனதை குளிர்மையாக்கி பசும் சோலை மாதிரி வைத்திருக்கும் உன் உடலுக்கும் நல்லது என்று அடிக்கடி அந்த கிழவன் அவனுக்கு ஆலோசனை சொல்லுவான்.அது மட்டுமன்றி அப்படியான சூழ்நிலைகளை உருவாக்குவதற்க்காக தனது தெரிந்த வளங்கள் வழிமுறைகள் அனைத்தையும் அவனுக்காக பயன் படுத்தினான் ,அவனது முயற்சி ஒரு பொம்மைக்கு உயிர் வர வைக்கும் முயற்சியாகத்தான் இருந்தது .கிழவன் இவனை ஒரு சங்கோஜ பிரஜையோ ,,என்று நினைத்தாலும் ,அது உண்மை இல்லை ..ஏதோ படி தாண்டா பதிரனாக சின்ன வயதிலிருந்து பழக்க படுத்திய காரணமோ அல்லது பவுத்திரமாக தமிழில் செய்த பெட்டையை பெற்றோர் ..மூலம் இறக்குமதி செய்யும் நோக்கத்தில் இருப்பது தான் காரணமோ தெரியாது.

ச்சாய்... கிழவன் சொன்னமாதிரி ஒரு டச்சு பெட்டையை பிடித்து இருந்தால் .இந்த சமயத்தில் மற்றவன்கள் செய்யிற மாதிரி கலியாணம் செய்ய போறன் என்று காட்டி விசா எடுத்திருக்கலாம் ,,என்ன உவகளோடை தொடர்ந்து வாழப்போறமே அல்லது அவகள் தான் எங்களோடை வாழுவுகளோ,,ஒரு கொஞ்ச வருசத்துக்கு பிறகு ,ஒன்று நாங்கள் துரத்துவம் அல்லது அவகள் விட்டு போவாகள் ,நிச்சயமாக தொடர்ந்து இருக்கும் திருமணம் இல்லாவிட்டாலும் ,ஆனால் விசா மட்டும் நிச்சயமெல்லோ ,,,என்று நினைத்து சந்தர்ப்பங்களை தொலைத்ததை தேடி கொண்டிருந்தான்.

டெலிபோன் மணி அடித்தது,,மீண்டும் அவன் மைத்துனர் தான் சொர்க்கத்துக்கு போகும் பாதையும் வழிமுறைகளும் ஆலோசனை சொல்லி கொண்டிருக்கிறார் ,,அதை விட சொர்க்கத்தில் இருந்து இன்றைக்கு மட்டும் நாலு தரம் அடித்து போட்டார் ,மைத்துனருக்கும் தான் இருக்கும் நாடு அப்படி என்ற நினைப்பு வேற,அவனை பொறுத்தவரையில் அவன் இருக்கும் நிலமையில் இந்த நாட்டை விட்டு ஏதாவது நாடு ஒன்று ஏற்கும் என்றால் அது சொர்க்கமே

.சனம் சொர்க்கத்தின் நுழைவாயிலை அடைந்து விட்டால் காணும் என்ற நிலையில் தங்களுக்கு தெரிந்த சகல வழிமுறைகளை யாவற்றையும் பயன் படுத்தி கொண்டு முயற்சி செய்யுதுகள் சிலதுகளுக்கு வெற்றி சிலதுகளுக்கு தோல்வி உந்த அம்ஸ்ரடாமாலை வாறதை விடு ...எல்லாம் ஏயாப்போட்டும் எங்கட கள்ள முறையளும் அடிப்பட்டு போச்சாம் ,,உங்கட பிறவுண் தோலை கண்டால் காணுமாம் உதுக்காலை விடுறான்கள் இல்லையாம் ,,,மைத்துனர் மட்டும் கனடா போனாப்போலை வெள்ளையாய் போனார் என்று நினைத்தாரோ தெரியாது ,,ஏதோ புது டெக்னீக்களை பார்த்து செய்து இங்காலே கெதியாய் வரப்பார் என்று சொல்லி டெலிபோனை வைத்துப்போட்டார் ,

 சூர்னாம்காரின் டச்சு பாஸ்போட்டிலை தன்ரை தலையை மாத்தி எல்லாம் றெடியாக்கி வைச்சு இருக்கக்கை இந்த ஆள் இப்படி பயப்படுத்துது...என்று நினைத்தவன் ,,ராஜன் தான் தனக்கு ஒன்று ஒழுங்கு படுத்தக்கை அவனுக்கு ஒன்று ஒழுங்கு படுத்தனவன் .அதோடை ராஜனின் மாத்தின பாஸ்போர்ட்டை பார்க்க்ககை கீளீனா மாத்தின மாதிரி இருக்கு ,,தனக்கு மாத்தின பாஸ்போர்ட் கொஞ்சம் கீளினாக மாத்தவில்லை என்று அவனுக்கே பட இப்பவே ஏர்போர்ட்டில் பிடிபட்டமாதிரியான உணர்வு மேலோங்கியது

 அவனிலும் விட கிழவன் தான் என்ன செய்யலாம் என்று மூளையை கசக்கி பிழிந்து எதாவாது வருகுதா என்று அசையாமால் \யோசித்து கொண்டிருந்தான் ,தீடிரென்று புதிய கண்டுபிடிப்பை கண்டு பிடித்தவன் போல் துள்ளி குதித்தான் ..மகிழ்ந்தான் ,,என்றாலும் இது நடைமுறைக்கு சாத்தியமா ,அவன் சம்மதிப்பானா என்ற அச்சம் புருவத்தில் ஓடி மறைந்தது.

 இது தான் திட்டம் ,,,டச்சு பெட்டையோடை ஜோடியாக போறது,,,,என்று சொல்லிவிட்டு தொடர்ந்து சொன்னான், எனக்கு தெரிந்த பெட்டை இருக்கிறாள் அவள் உந்த நாடுகளுக்கு எல்லாம் போறவள் ,,வாறவள்..என்ன அவளுக்கு கனடா போறதுக்கு நீ டிக்கட் போட்டியெண்டால் ,,அவள் உனக்கு ஜோடியாக நடிக்க தயாராவாள் திட்டம் வரைந்து பேசி கொண்டிருந்தவனை இடைமறித்த அவன் ,,விளையாடுறீயா ,,எனக்கே டிக்கட் போடுறதுக்கு எங்கெல்லாம் தெண்டி அல்லாடுகிறேன் ,,,,அவளுக்கும் டிக்கட் என்றால் ....நான் எங்கு போறது,,,என்று சொல்லும் பொழுது குரலில் ஒரு பரிதாபமும் கையறந்த நிலையும் கலந்திருந்தது

 கிழவனின் சேமிப்பு அவளின் டிக்கட்டாக மாறியது

 என்னதான் திட்டத்தை வரைந்தாலும் சிறிலங்காகாரன் சூர்னாம் நாட்டுக்காரன் மாதிரி இருந்தாலும் ,,,எங்கேயோ இவர்களிடம் இருக்கும் அப்பாவித்தனமான தோற்றமோ வெகுளித்தனமோ அவன்களிடமிருந்து வித்தியாச படுத்தி காட்டுகிறது ..அதனால் ,,அதுவும் இவனை பார்த்தாலே தெரிகிறது .என்ன செய்யலாம் என்று கிழவன் மேலும் யோசித்தான்

 நாலு ஜந்து மணித்தியாலங்களில் பாரிஸ் விமான நிலையத்தில் இருந்து பயணம் அம்ஸ்டாமிலிருந்து பெல்ஜியத்துக்கூடாக பாரிஸ் செல்லும் பஸ் இல் இந்த ஜோடிகள் .

..அவள் அவனது கை குலுக்கும் பொழுது உள்ளங்கையை சுரண்டிய பொழுதே அவள் இந்த ஜோடி நடிப்புக்கு தயராகி விட்டாள்,,இவன் பதட்டபட்டது தயாரகவில்லை என்றதையும் காட்டியது

 போரில் இந்த அஸ்திரத்தை ஒரு முறை தான் பாவிக்கலாம் அதற்கு மேல் பாவிக்க கூடாது என்று குந்திதேவி சத்தியம் வாங்கியது போல் ,,,கிழவனும் இவனிடம் சத்தியம் வாங்கி கொடுத்திருந்தான்.ஒரு முறை தான் பாவிக்கவேணும் .என்று..மூன்று மாத்திரைகள் , அந்த நேரத்தில் பதட்ட படாமால் இருக்க வேணும் என்பதற்க்காக,,,

அது ஹாலந்தை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட சிறிது போதை வஸ்து கலந்த மாத்திரை மருத்துவ தேவைகளுக்காக பாவிப்பக்கபடுவது

 பஸ் மெல்லிய ஒளியில் தூங்கி வழியும் பிரியாணிகளுடன் பெல்ஜியத்தினூடாக ஓடிக் கொண்டிருந்தது ,அவனும் அவளும் பக்கத்தில் இருந்தாலும் ஜோடியாக தெரிய மறுத்தது ..கிழவன் கொடுத்த மாத்திரை அவனுள் சென்றது ,,அவனுக்கு அவளின் மனது நெருங்கி வருவது போல் இருந்தது அவன் பேசினான் அவளும் பேசினாள்

 ...அவள் தனது காதலன் கனடாவில் படிக்கிறான் என்றாள் ,,,
அவனுக்கு இப்பொழுது மிதப்பது போன்ற மனத்தடை எதுவும் இல்லாத உணர்வு ...எனது காதலி நீ தான் இப்ப என்றான் .
.
ஏதோ நகைச்சுவையை கேட்ட மாதிரி சிரித்தாள்.

அவன் தூங்க இடமும் தலையணையும் தேடினான்
.
அவள் அவளது தோள்பட்டையை காட்டினாள் .
அவனோ அவளினுள் துவண்டான் ..அவளும் நெளிந்தாள்...ஏனோ அவளும் அதை அனுமதித்தது மாதிரி இருந்தது ,,அவன் அவளின் அதரத்தை மலர வைக்கும் முயற்சில் முயன்றான் அவளோ நாகரிகமாக தடுத்து கூறினாள்

...எனது காதலனை தவிர உதட்டில் முத்தம் கொடுப்பதில்லை என

 அவன் என்ன கணக்கு இது என்று சிரித்தான் ,,,அவளும் சிரித்தாள் அது என்ன கணக்கு என்று விளங்கவில்லை
 ஜோடியாக அழகாக நடித்து அந்த விமான நிலையத்தில் உள்ள பாஸ்போர்ட் செக் பண்ணும் இடத்தை கடந்து விட்டார்கள்..
.இருவரும் அங்குள்ள கோப்பி கடை ஒன்றில் ,,,ஒலிபரப்பு அலறுகிறது,
,,இவனது சூர்னாம் பாஸ்போர்ட்டு பெயரை சொல்லி வரும்படி ,,இவனுக்கு அவனின் பெயர் தானே ஞாபகத்தில் இருக்கும் ..

.அவர்கள் நேரடியாகவே வந்து விட்டார்கள் ..விசாரணை தொடங்கியது ..டச்சு எழுத வைத்து பார்த்தார்கள் கதைக்க வைத்து பார்த்தார்கள் .

 ..அத் தருணத்தில் அவர்களை நம்ப வைக்கும் நோக்கில் அவள் அவனை அடிக்கடி இறுக்க கட்டி அணைப்பதுமாயும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுவதுமாயும் இருந்தாள் ..
 விமானம் புறப்படும் நேரம் கடந்து விட்டது ..விமான பணிப்பெண்கள் காத்திருந்தார்கள் இவர்களை கூட்டி செல்ல
,,சந்தேகம் தீர்ந்து அதிகாரிகள் அவனை அனுமதித்து வெளிக்கிடும் பொழுது ,,

 ,அதே நேரம் அங்கு,உள்ளுக்கு பிடிப்பட்டிருந்த ராஜன் சத்தம் போட்டான்

,,,,உவனும் சிறிலங்காகாரன் என

 அவள் கனடா சென்றாள்

 அவனும் ராஜனும் ..

......
 (யாவும் கற்பனை) 


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------




கள்ள வேலை ( சிறுகதை)


கொஞ்சம் இறுக்கி போடடா ..உரக்க கத்தினான் என்னை சைக்கிளில் வைத்து உழக்கியவன் .இயலுமட்டும் எதிர் காற்றுக்கு போராடி என்னடா இவன் போடுற டபிள் பெடல் அவ்வளவு காணதே என்று சலித்து இயலாப்பாட்டில் கூவிய குரல் அது..எங்கோ யோசித்து கொண்டிருந்தபடியால் என் உதைப்பின் வேகம் குறைந்திருக்க வேண்டும்.இந்த கணத்தை விட்டு ஏதோ ஒரு காலத்தில் யோசிப்பதில் ஒரு சுகம்.அது மட்டுமே எங்களுக்கு இப்ப வாழும் வாழ்க்கையில் இருக்கு .என்ன நான் சுகம் காண நினைத்தால் அவன் வேதனை அனுபவிக்க இருக்கு அவ்வளவு தான். டே உழக்கடா ஊண்டி என மீண்டும் சத்தம் போட்டான், ,அவனிலும் பிழையில்லை ஒரு பத்து நிமிசம் பிந்தி போனாலும் அந்த எருமை தலையன் ஒரு மணித்தியால காசை வெட்டி போடுவான் .அதுவும் நாலு கில்டன் இலங்கை காசுக்கு பத்தினொன்டாலே பெருக்கி பாத்தால்...வயித்த பத்தி எரியுது ..அவனும் தன்ரை வயிறும் மனம் எரிந்து கொண்டு தான் சம்பளம் தாறன் என்று சொல்லுறான்..அவனோ வடக்கு ஹாலந்து தேசத்தின் சிறு தோட்ட முதலாளி .நாங்களோ அண்மையில் அந்த நாட்டுக்கு வந்த அகதி மக்கள்.அவன் தனது வரி ஏய்புக்காக வேலை செய்ய அனுமதி இல்லாத எங்களை பயன் படுத்துகிறான் .நாங்கள் அவனை பயன் படுத்துகிறோம்.இதிலை டயலாக் வேறை என அலுத்து கொள்ள எங்களை தாண்டி ஒரு பச்சை கார் ஒன்று சென்றது ,

 ராஜன் தான் ...அது.. அவனும் எங்களை போலத்தான் ஆனால் வந்து குறுகிய காலத்தில் இப்படி வசதியாக, பத்து நிமிசத்திலை. நாங்களோ ஜந்து மைல் தூரத்தை இந்த எதிர் காற்றையும் சேர்த்து கடக்க ஒன்றே கால் மணித்தியாலம் பிடிக்குது.எப்படி சம்பாதித்தான் என்ற வினாவுக்கு தங்களின் பொறாமையின் பூச்சுகளுடன் வர்ணம் தீட்டி தங்களின் நினைப்புக்கு ஏற்றவாறு ஆக்கள் ஒவ்வொரு கதை கூறுவினம்...எதை நம்புறது எதை நம்பாமால் விடுறது என்று தெரியலை சில வேளை,.ஒரு நாளைக்கு மூன்று தரம் நூறுமைல் தூரமுள்ள அம்ஸ்ரடாமுக்கு காரில் போட்டு திரும்புறான் ,அப்பிடி என்ன அவசியமோ தெரியலை ,எனக்கு அது பெரிய ஆச்சரியமில்லை ,,அந்த டச்சு தோட்டக்காரனுக்கோ அது பெரிய ஒருஆச்சரியம் ,,,தானே ஒருதரமோ இருதரமோ தான் வாழ்நாளில் போயிருக்கிறன் அதோடை அங்கு போகவணுமெண்டும் தேவை இருக்கவில்லை என்கிறான்.

,,எங்கள் இரண்டு பேரையும் உவன் கேட்டவன் ஒருக்கா காட்டில் இருந்து வந்திருக்கிறம் என்ற நினைப்பில் உங்கட ஊரிலை முந்தி பந்து கண்டிருக்கிறீயளோ சைக்கிள் கண்டிருக்கிறீயளோ என்று,,,,, இப்ப இவருக்கு இவங்கள் எல்லாம் வீரன் சூரன்களா விபரம் தெரிந்தாக்களாக இருக்கிறான்கள் என்று அறிந்தா பிறகு ஒரே கொன்பியூஸ் ,, அதன் பின் டச்சுக்காரனுக்கு ராஜனுக்குமிடையில் அந்நியோன்யம் வளர்ந்தது .மாதிரி இருந்தது..அது எவ்வளவுத்துக்கு என்று எங்களால் உணர முடியவில்லை .எங்களால் என்பது என்னையும் என்னை சைக்கிளில் வைத்து தள்ளும் நண்பனையும் மட்டும் தான் சொல்லுறன். ஏனென்றால் ,மற்றவர்கள் எல்லாம் ராஜனால் அங்கு வேலைக்குச் சேர்க்கப் பட்டவர்கள் என்று கால போக்கில் தான் அறிந்து கொண்டோம்.

சைக்கிளில் என்னை வைத்து உதைக்கும் தோழர் இருக்கிறாரே .. அவர் ஊரிலை போராட்டத்துக்கு தலைமை சக்தியாக அவர்கள் தான் இருக்க வேணுமென்ற கொள்கையோடு அந்த காலம் பாட்டாளி வர்க்கத்தை தேடி மலையகம் சென்ற ஆக்களில் ஒருவராம் .அவர் நல்ல அன்பான நட்புத்துவத்துக்குரிய ஆள் என்றாலும் எதுக்கு எடுத்தாலும் காரண காரியங்களை சொல்லி ஒரே தொண தொண. அதனால் எனக்கு சிலவேளை எரிச்சல் ஏற்படுவதோடு மட்டுமன்றி பிரச்சனைகளையும் விலைக்கு வாங்க வைத்து விடுவார்.எப்பவும் அநியாயத்துக்கும் அடக்குமுறைக்கும் குரல் கொடுக்கிறதை நீ தப்பாய் புரிந்து கொண்டு விட்டாய் என்று கூறுவார் ... இந்த போர்குணத்தை இலகுவில் மாற்ற இயலாமால் கிடக்கு என்பார். எனக்கு என்றால் சிலவேளை இவற்றை கதையை கேட்க சிரிப்பு சிரிப்பாய் வரும்

,,,நித்திரையிலை கூட வாய் விட்டு சிரித்து இருக்கிறன் .அண்ணை என்று முதல் கூறி இப்ப வாடா போடா என்று பழக்கப்பட்டா பிறகும் கூட கனதரம் சொல்லி இருக்கிறன் .நாட்டில் இருந்து எப்ப பிளைட் ஏறினமோ உந்த உளவராங்களை எல்லாம் எங்கையாலும் கட்டி கடலிலை போட்டுட்டு வந்த இடத்திலை நாலு காசு சம்பாதிக்க பார்க்க வேணும் என்று .அவரை மாத்த வெளிக்கிட அவர் என்னை மாத்த பார்த்தார் அதுக்கு நான் விடவில்லை .அண்ணை உங்களுக்கேற்ற ஆக்களை தேடி உப்படியாய் இருந்தால் .அப்படியான ஆட்கள் கிடைக்கும் வரை காத்திருந்தால் தட்டி போடும் அப்படி .யாரும் வந்தாலும் அவையளும் மண்டை தட்டின ஆட்களாதான் இருப்பினம் என்று.அப்படி இப்படிசொல்லி ஒரு மாதிரி ஆளை மறுத்தான் கொடுத்து மாத்தி தான் இந்த தோட்டத்திலை பூ பிடுங்கிற வேலைக்கு கூட்டியண்டு போறன்

..நாங்களாய் உப்பிடி அங்கினை வேலை தேடி கேட்டதிலை கிடைச்சிட்டு நாலு கில்டன் என்றான் .அதுக்கென்ன என்று நாங்கள் போய்க்கொண்டிருக்கிறம் .அதுக்கும் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கு இந்த ஆள்,,போன இடத்தில் ஏடா கூடாம நடந்திடும் பயம் ..பயந்த மாதிரியே...

அழகாய் வளர்ந்து இருக்கின்ற அந்த பூவை எல்லாம் பிடுங்கி எறிய ஒரு மாதிரி இருந்தது எனக்கு முதலில்.பிடிங்கிய பூ எல்லாம் கசங்கி வாய்க்கலுக்கு பரிதாபமாக கிடக்க .இது என்ன பைத்தியகாரத்தனம் என்று தோன்றியது,,,ஏன் இப்படி செய்கிறான்கள் என்று விளங்கவில்லை..என்னுடைய தோழர் இருக்கிறாரே அவர் எதையும் பக்கெண்டு பிடிச்சுடுவர் .இந்த பூவை தக்க தருணத்தில் பிடிங்கினால் அடி வேர் கிழங்கு நல்லாய் வரும் அவங்களுக்கு கிழங்குதான் முக்கியம் பூ அல்ல என்று சொல்லிப்போட்டு அது போல என்று தொடங்குவார் .நான் அந்தரப்பட்டு அவற்றை புராணத்துக்கு பிறேக் போட்டு விடுவன்.அன்றைக்கு உந்த ஆள் என்னத்தை சொல்ல......

....இடுப்பு நாரி குனிந்த படி இந்த தொங்கலில் இருந்த அந்த தொங்கல் வரையும் பிடிங்கி போட்ட படி நிமிராமால் போகணும் ...கொஞ்சம் நிமிர்ந்தாலும் அங்காலை வேலை செய்து கொண்டிருக்கிற தோட்டக்கார முதலாளி கோய் என்று கூக்குரிலிட்டு எச்சரிக்கை செய்து குனிய செய்வான். இடுப்பல்லாம் வலிக்கும் முதுகெல்லாம் உழையும் இடையில் விட்டுட்டு ஓடிடுவமா என்று தோன்றும் ..நாலு கில்டன் நமஹா என்று தோஸ்திரம் சொல்லி விட்டு தொடர்ந்து வேலை செய்வம் .

 டே ,,,போய் வேலை செய்யடா ..எல்லாரும் தான் கஸ்டப்படுறம் உரத்த குரலில் தமிழில் கேட்டது வேலை கஸ்டத்தில் வேலை செய்ய முடியாமல் தன்னிச்சையாக வெளியேற முடிந்த அந்த ஆட்களில் ஒருவனை விரட்டி கொண்டிருந்தான் ராஜன் ,அவன் தோட்டத்தில் இருந்து வெளியில் ஓடுவதும் ராஜன் உள் இழுத்துவதுமாக கொஞ்சம் நேரம் கடந்தது இதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம் தோட்டக்காரன் நான் உட்பட வேடிக்கை பார்க்க முடியாதவர் தோழர் என்று சொல்லாமல் தெரிந்திருக்கும்

 வாதங்கள் முற்றின...ஒரே களேபரம் ... கொடுக்கும் நாலு கில்டனில் ஒரு கில்டன் ராஜனுக்கு என்ற கதை வெளியில் வந்தது ..அந்த ஒரு கில்டன் கொமிசன் தான் தோட்டக்காரனுக்கு இல்லாத அக்கறை ராஜனுக்கு இருக்கவேண்டி வந்தது என்று தெரிய வந்தது.

 அவன் செய்வதே பக்கா உடல் சுரண்டல் அதுக்குள்ளை நீ வேற என்று தோழர் கத்தினார்... செய்யிற கள்ள வேலை நீ என்ன கதைக்கிறாய் உனக்கும் மூன்று கில்டன் தான்

..என்னை மீறி ஒன்றும் நடக்காது என்று உறுமினான் ராஜன் ராஜனும் தோட்டக்காரனும் என்னவோ பேசினார்கள் தோட்டக்காரன் கூறினான் நாலு கில்டன் தருகிறேன் அதில் மாற்றமில்லை என்று சமாதனப் படுத்தினான் வேற ஒரு தோட்டத்தை காட்டினான் நாளை அங்கு வேலை என அது முடிய எல்லா காசும் சேர்த்து தாறன் என்று

 எப்படி வீச்சா டபிள் பெடல் போட்டாலும் மணிக்கூட்டை பார்த்த பொழுது நேரம் பிந்தி விட்டதாகவே தோன்றியது ... ஆனால் அந்த தோட்டத்தில் ஒரு தரும் பூ பிடுங்க வேலைக்கு என்று ஆட்களை காணவில்லை அந்த டச்சு காரணையும் காணவில்லை ராஜன் ஆட்களை காணவில்லை ராஜனும் டச்சுக்காரனும் சேர்ந்து எங்களது சம்பளத்திற்க்கும் வேலைக்கும் செய்த சதி...அப்பத் தான் விளங்கியது யாருக்கு முறையிடுறது ..செய்த வேலையோ அனுமதியற்ற வேலை

 திரும்பி வரும் வழியில் தென்னிந்திய திரை நடிகர்களின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது அந்த பூத்தோட்டங்களில் ஒன்றில் ஆடி பாடி கொண்டிருந்தனர்..அதையாவது பார்ப்பம் என்று சிறிது நேரம் நின்றால்

,,,பிரபல நடிகர் ஒருவர் வலிய வந்து கதைத்தார்...மகிழ்ந்தார் ...உலகத்தின் எந்த துருவ மூலைக்கு சென்றாலும் தமிழரை காணக் கிடைக்குது என்று...

 உதுக்கு எல்லாம் சந்தோசம் கொள்ளும் மனம் நிலையில் அப்போது இல்லை

 ...மூன்று கில்டனுக்கு என்றாலும் நான் வேலை செய்திருப்பன் .
..

ச்சேய் இது எல்லாம் இந்த தோழரால் வந்த வினை

 இப்ப எல்லாம் பிழைக்க தெரியாத ஆட்களைக் கண்டால் நாலு அடி தூரத்திலை போயிடறது

 இப்ப நான் அச்சா பிள்ளை

மிதுவின் கிறுக்கல்களை பார்க்க

Saturday, October 29, 2011

மிதுவின் ஜப்பசி மாத(2011) சிறுகதைகள்

1985(சிறுகதை)


வேகமாக சென்ற லண்டன் நிலக்கீழ் ரயில் தீடிரென்று நின்றது.ஏதோ நினைவுகளுடன் போராடி முட்டி மோதாடி எங்கோ நின்றிருந்தவைனயும் மறித்து திரும்பி நிஜத்துக்கு வரச்செய்தது.என்ன என்று அறியும் ஆவலுடன் தவிக்கும் மற்ற பயணம் செய்து கொண்டிருக்கும் பிரயாணிகள் போலவே அங்கும் இங்கும் நோட்டமிட்டு கொண்டு அசைந்த கண்கள் ஒரு இடத்தில் அசையாமால் தீடிரென்று நின்றது,அந்த வெள்ளை தோலுகளுக்கிடையில் இருந்த ஆசிய நாட்டு பெண்ணாய் இருந்ததுக்கல்ல,,எந்த வித சலனமற்று அமைதியாக அடுத்த கணம் எதுவானாலும் வரவேற்கும் முகபாங்குடன் இருக்கும் அவளை எங்கையோ எங்கையோ நெருக்கமாக பார்த்திருக்கிறேனே என்று என்று .......அவன் தவித்துக்கொண்டு அதற்க்குரிய விடையறிய முன் .நினைவுகள் வழுவி நழுவி நேரம் ,நாள் மாதம் வருடங்கள் கடந்து அந்த வருடத்தில் அந்த நாளில் ஒடுங்கியது


1985 ஆண்டும் ஜனவரி மாதம் ,,குளிர்காலம் ,,எப்பொழுதும் இல்லாத குளிராம் இம்முறை. எப்பொழுது ஒரு முறை தான் இப்படி வருமாம் ,வந்திட்டு போகட்டுமே அவர்கள் இந்த நாட்டுக்கு வரும் பொழுதா வரவேண்டும் அதுவும் .அகதி என்ற கெளவரவ பட்டத்துடன் விஜயம் செய்யும் பொழுது.இலைகளை உதிர்ந்த மரங்கள் அரை நிர்வாணமாக காட்சி அளித்தன,அந்த தொப்பி ,இந்த சால் அந்த ஜம்மர் ,இந்த ஜக்கெட் என ஆயிரத்தெட்டு மயிர் மண்ணாங்கட்டி எல்லாத்தினால் மூடி கட்டி நிற்கும் பொழுது கூட இந்த குளிர் நரம்புகளையெல்லாம் சுண்டி இழுக்குது, இந்த மரங்களுக்கு ஏன் இந்த தேவையற்ற கோலம் என்று தேவையற்ற ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது ,அந்த மரங்களுக்கு கீழ் அவனைப்போல பக்கத்தில் இருந்த ஒருவன் இது கெதியிலை தீருகிற விசயமாய் தெரியல ,,என்ன நினைக்கிறியள் என்று இலவச அபிப்பிராயம் கேட்டான்.


.இடம் - மேற்கு பெர்லின் ,நம்ம ஊர் வீடுகள் வேலிகளால் அடைத்தது போல் உயர்ந்து எழுப்பபட்ட சுற்றி வர மதில்காளால் அமைக்கபட்ட ஊர். மேற்கு ஜெர்மனிக்கு சொந்தமான இடம்.ஆனால் நிலபரப்பால் தொடர்பற்ற கிழக்கு ஜெர்மனிக்கு நிலபரப்புடன் தொடர்புடைய பிரிட்டன் , பிரான்ஸ் அமெரிக்க நாடுகளினது இராணுவ கட்டுப்பாட்டுடைய பிரதேசமாகும் ,,,இப்படி சொல்லும் பொழுது உங்களுக்கு விளங்காமால் சிதம்பர சக்கரம் மாதிரி இருக்குது அல்லே,,,\ஹி ஹி ..ஓ,,ஓ.உங்களை ப்போலத்தான் அப்படித்தான் அவனுக்கு அப்பொழுது விளங்காமால் இருந்தது.

அது ஒரு இடைதங்கல் அகதி முகாம் ,அது ஒரு பழைய இராணுவ ஆஸ்பத்திரி ,ஜந்து அடுக்கு கட்டிடம்....இதிலிருந்து மேற்கு ஜெர்ம்னி முழுவுதும் ஸ்டட்  அடித்து அனுப்புவார்களாம் ,,அது என்ன வேற கோதாரியோ என்று தெரியலை...அந்த கட்டிடம் முழுதும் இலங்கையர் உட்பட பல் வேறு நாடுகளை சேர்ந்த அகதிகளின் சகவாசம் தான் இருந்தது கொஞ்ச நேரம் முன்பு,,

ஒரு நிமிடத்துக்கு முன்னர் எல்லாரும் கட்டிடத்தை விட்டு உடனடியாக வெளியேறுங்கள் என்ற அறிவிப்புடன் சேர்ந்து வந்த செய்தி ,,கட்டிடத்துக்குள் டைம் பாம் என்று .அதோடை வந்த இன்னுமொரு செய்தி வதந்தியோ தெரியலை வைத்தது சீக்கியராம் ,அவங்கடை முக்கியான கோயிலுக்குள்ளை இந்திய ஆமியாம் ,,இந்திய ஆமி அதுக்குள்ளை போன காரணம்  இந்திரா காந்தியை சுட்ட தொடர்புடைய ஆக்களை பிடிக்கவாம் ,,அதுக்காக பெர்லினில் இந்த கட்டிடத்துக்கு அகதியாக வந்த சீக்கியர் ஏன் டைம் பாம் வைக்கோனுமென்ற காரணம் விளங்கவில்லை.

அந்த கட்டிடத்தின் மைதானத்தில் அகதிகள் எல்லோரும் அங்கங்கே நடுபகுதியில் சிலரும் இலைகளற்ற மரங்கள் கீழே சிலர் அங்கங்கே அமர்ந்திருக்கின்றனர் ,,,பொலிசாரும் குண்டு மீட்பு படையினரும் கட்டிடத்துக்குள்..மதிய சாப்பாட்டு நேரம் அப்போ...இதுவரை வாயிலை ஒரு பொழுதும் வைத்து பழக்கமில்லாத சாப்பிடு தந்தாலும் மணியடிச்ச மாதிரி சாப்பாட்டை நேரத்து தந்து விடுவாங்கள் .இந்த பிரச்சனையால் அந்த நேரம் எப்போவோ போய்விட்டது.பக்கத்தில் இருந்த நண்பருக்கு வயிற்றைக் கிண்டுது போலை அதற்காக இலவச அபிப்பிராயத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.  அந்த மைதானத்தை பார்த்தால் அங்கங்கே பல சிறுகதைகளும் சில உப கதைகளும் நடந்து கொண்டிருந்தன,,பக்கத்தில் இருப்பனுக்கு பதில் சொல்ல வேணும் அதோடை பார்க்கிற எல்லாத்தே கதையாக கிரகிக்க வேணும் என்றால் அவனால் முடியிற காரியமா?

தூரத்தில் ஒருத்தி யாரோயோ தேடி கொண்டிருக்கிறாள்.. அது நமது கதாநாயகி அல்லோ .அவள் தேடுவது சுரேசாக நிச்சயமாக இருக்காது .எப்படி தெரியும் என்று கேட்கலாம்.நேற்றுத்தான் அவர்களிடையே உள்ள பிரச்சனைக்காக அவன் மத்தியஸ்த்துக்கு போய்ந்திருந்தானே ...நாடு விட்டு நாடு வந்து அடுத்து என்ன நடக்க போகுது என்று  தெரியாத இந்த மூன்று கிழமைக்குள் அவர்களிடையே என்னவெல்லாம் நடந்து விட்டது .நடந்திருக்காது நடக்கேலாது என்கிறீர்களா ? சுரேஸ் கூட அந்த சில நிமிடங்களிலை நடந்த அந்த விசயத்தையா தூக்கி பிடிக்கிறியள் என்கிறான் .அவளோ வருடக்கணக்காக பாதுக்காப்பாக வைத்திருந்ததை அந்த மூன்று கிழமைக்குள் ஏற்பட்ட வினையால் அந்த நேரங்களில்அதை இழந்து விட்டேன்.என்கிறாள். அது என்று ஒன்றும் இல்லை என்கிறான் சுரேஸ் .ஒருவேளை,இருந்திருந்தால் முக்கியமான ஒன்று என்றால் சில நிமிடங்களில் இழக்கக்கூடிய விசயமாக என்கிறான்.அதற்க்கு அருவமில்லை உருவமில்லை ,,,டைம் பாஸ்க்கா த்தான் அவளுடன் பழகினேன்,மூன்று கிழமையில் எனக்கு காதல் வருமா என்ன..வராதா காதலை வா வா என்கிறியாள் என்னங்க நீங்க என்கிறான்? இந்த மூன்று கிழமையில் இவ்வளவு காலமும் இல்லாத சுதந்திரத்தை அல்லது ஏங்கிய சந்தோசத்தை பாதுக்காப்பான முறையில் பயன் படுத்தி கொண்டாள் அவ்வளவு தான் என்பது சுரேஸின் வாதம்....சுரேஸை அவளைப்போல இந்த மூன்று கிழமைகளில் தான் அவனுக்கும் பழக்கம் ...அந்த மூன்று கிழமைகளில் அவனைபற்றி அறிந்து கொண்டது உதைப்போல பல சிறுகதைகளை


அவளோ அவனை உண்மையாக காதலித்தேன் இப்பவும் கூட அவரை காதலிக்கிறேன் ,,அவரின் சந்தோசத்திற்க்காத்தான் அந்த நேரத்தை பகிர்ந்து கொண்டாள் என்று கூறுவதோடு காலம் காலமாக  நம்மவர் சொல்லும் காதலின் அர்த்தத்தை வியாக்கியனம் செய்து கொண்டாள் ....
என்ன வந்தததோ தெரியவில்லை ...சுரேஸ் தீடிரென்று மத்தியஸ்த்தம் செய்ய போன அவனுக்கே தெரியாத விடயத்தை ஒன்றை கூறினான் ...நான் இங்கை இருக்கிறது பிடிக்கவில்லை என்று சிலோனுக்கு போறுதுக்கு எழுதி கொடுத்திட்டன் .வாற கிழமை கொழும்புக்கு பயணம் தெரியுமோ என்றான்...


இவள் காதல் கத்திரிக்காய் பெரிசா பீத்துறாள் ,,,என்னோடை கொழும்பு வர தயாரோ என்று கேட்டு சொல்லு என்றான்
அவளின் பதிலுக்கு காத்திருக்காமால்..... இவள் இந்த வெளிநாட்டு வாழ்க்கையை விட்டு வரமாட்டாள் என்று எனக்கு நல்லாய் தெரியும் அதனால் தான் இன்னும் சொல்லுறன் ..இந்த காதல் என்றதுக்கு உருவமில்லை அருவமில்லை எந்த மண்ணாங்கட்டிமில்லை என்று சொல்லி கெக்கரித்து சிரித்தான்.
அவள் எந்த விதமான சலமற்று சொன்னாள் ... கொழும்புக்கு உன்னுடன் வரமாட்டன் ,,உன்னைப்போல காதலை டைம் பாசுக்கு எடுத்ததைப்போல இதை எடுக்க முடியாது ஏனென்றால் உண்மையான அகதி நான் ...எப்படி இருந்தாலும் உன்னை இன்னும் காதலிக்கிறேன் என்று சொல்லி அழுகுரலுடன் அவ்விடத்தை அகன்றாள்...


இன்னும் நேரமாகுமாகுமோ...என்று தெளிவான ஆங்கிலத்தில் பக்கத்தில் இருந்த ஒன்று அவனைக் கேட்டது....

அவன் ரயில் இருப்பதை அறியாமல் குழப்பமான பதில் கூறும் பொழுது தான் அவள் கண்டு கொண்டாள்
ஞாபகமிருக்கோ என்றாள்

நல்லாய் ஞாபகமிருக்கு ..எப்படி இருக்கிறியள் என்றான்

பல வருடக்கதையை ஒரு சொல்லில் சொல்லுவது மாதிரி இருந்தது

நான் லண்டன் வந்தாப்பிறகு அவரை இலங்கையில் தேடி கண்டு பிடித்து ஸ்பொன்சர் பண்ணி கூப்பிட்டு திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் என்றாள்

சந்தோசம் என்றேன் ..அவனை விசாரித்ததாய் சொல்லுங்கோ...என்று முடிக்க முன்

இடைமறித்து சொன்னாள்,,அவர் என்னோடை கோபம் ஒரு வெள்ளையோடை இருக்கிறார்.. என்றாலும் எப்ப வந்தாலும் அவரை ஏற்றுக்கொள்ளுவன் அவருக்காக காத்திருக்கிறன் என்றாள்

தீடிரென்று ஏதோ காரணத்துக்காக இவ்வளவு நேரமும் நின்ற ரயில் பெரிய ஹாரன் சத்தத்தை அடித்து விட்டு தீடிரென்று வெளியேறியது

அந்த சத்தத்ததின் மொழிபெயர்ப்பு இவனுக்கு இப்படி இருந்திருக்குமோ
அவனும் மாறப் போறதில்லை அவளும் மாறப் போறதில்லை ..இந்த சமூகம் மாறப்போறதில்லை...என
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புன்னகை( சிறுகதை)




அவள் அப்பொழுது நடந்து கொண்டிருந்த இடம் ஒரு சூனிய பிரதேசம் ஒரு ரயில் நிலையமும் கூட...அந்த நாட்டவர்கள் இறங்க முடியாத வேற நாட்டவர்கள் இறங்கி ஏறக்கூடிய இடம்,,அவளுடன் இவ்வளவு தூரம் பயணம் செய்த பொழுது வழித் துணைக்கு வந்தவளைக்கூட யாரோ தெரிந்தவர்கள் கூட்டி சென்று விட்டார்கள் .கூட வந்தவளும் அவளைப் போல அகதியாக வந்தவள் தான் ,,ஏன் அவளை மட்டும் சொல்லுவான்..அந்த நிலையத்துக்குள் நுழைந்தவர்கள் பலரும் அந்த நோக்கத்துட்ன் வந்தவர்கள் தான் .அவர்கள் எல்லாம் இந்த இடத்துக்கு வந்த பின் எல்லாம் வெற்றிக் கரமாக முடிந்து விட்டன என்ற களிப்புடன் கூட்ட வந்தவர்களுடன் சென்று கொண்டிருக்கிறார்கள்

.இவளை கூட்ட வரவேண்டியவர்கள் இன்னும் வரவில்லை ..அந்த நிலையத்தில் தீர்வையற்ற விலையில் மதுபானம் எடுக்கலாம் அந்த நோக்கத்துக்காக அங்கு வருபவர்களும் உண்டு.அப்படி வந்தவர்களும் திசை தெரியாமால் நிற்கும் இவளைப் போல   நிற்பவர்களையும் மதுபானங்களுடன் கூட்டி போவதுண்டு.நிறவெறியில் வந்த ஒருவன் பார்க்க தமிழன் போல இருந்தான்... அக்கா சிறிலங்காவோ ...என்று தள்ளாடிய படி கேட்டான்.அவனே தொடர்ந்தான்...இங்கை மூன்று எழுத்துகள் கனக்க உலவாவி கொண்டிருக்கு .பேசாமால் இதிலை நிக்காமால் பக்கண்டு அடுத்து வாற ரயிலிலை ஏறி மாறுங்கோ ,,,இன்னும் இங்கிருந்து அரை மணித்தியால ஓட்டம் இருக்கு 

,,,பயப்பிடாதையுங்கோ..ஒன்றுக்கும் யோசியாதையுங்கோ ,,,எங்கட ஆட்களுக்கு உதவி செய்யாமால் யாருக்கு உதவி செய்ய போறன் உங்களை கூட்டி எண்டு போறனே என்று பட பட வென்று சிவாஜி பாணியில் வசனம் பேசி கொண்டிருந்தான் ,,,வசனம் பேசுவதற்கு குடித்த பானமும் உதவி செய்து கொண்டிருந்தது.அவனுக்கு

அவள் யாருடைய பேச்சையும் கேட்க தயாராய் இல்லை .யாருடைய பேச்சையும் கேட்க அனுமதி இல்லை. ஏனெனில் இவள் செல்ல வேண்டிய இடம் ,இடத்தை அடைவதற்கான பாதை அதில் வரும் இடர்கள் அதை சமாளிக்க வேண்டிய தந்திரங்கள் இலங்கையிலையே போட பட்டு விட்டன. அதை அவளின் அண்ணன் மேற்கு ஜெர்மனி ஏதோ நகரத்தில் இருந்து தொலைபேசி மூலம் துல்லியமாக தெரிவித்து இருந்தான், இராணுவத் திட்டம் போல அவன் கூறிய வழி முறையில் ஆலோசனையில் ஒரு இடத்தில் தவற விட்டால் கூட தான் இருக்கு இடத்துக்கு இலகுவாக வந்து சேர மாட்டாய் என பல முறை எச்சரித்து இருந்தான்.எச்சரிப்புகளில் முக்கிய எச்சரிப்பும் ஒன்றும்  இருந்தது ..மேற்கு பெர்லினில் பொலிசிலை பிடிப்பட்டியோ அங்கு வைத்து இருந்து காலம் தாழ்த்தி அவர்கள் விரும்பும் ஏதாவாது மேற்கு ஜெர்மனி நகரத்துக்கு அனுப்புவார்கள் . அப்படி நடந்ததால் உனக்கு அது கட்டாயம் நரகம் மாதிரி இருக்கும் சில வேளை என்று.அதனால் அந்த திட்டத்தின் வரைவில்ஒரு முனை கூட அழியக் கூடாது என நினைத்துக் கொண்டாள் ,,,தன்னை கூட்ட வர வேண்டியவர்களின் தாமதத்தினால் அது எல்லாம் தவிடு பொடியாக போய் விடுமோ என சலனப்பட்டாள்

இவள் இலகுவில் எதுக்கும் சலனப்படக்கூடியவள் அல்ல..என அவளை தெரிந்தவர்களுக்கு தெரியும் ,,எந்த எதிரியையும் ஆயுதத்தை போட்டு விட்டு சரணடைய வைக்கும் ஆயுதம் அவளிடம் இருந்ததது.அது என்னவெனில் அவளின் அதரத்தில் எப்பொழுதும் பூத்துக் கொண்டிருக்கும் புன்னகை ,,,அந்த புன்னகைக்கு அர்த்தம் தெரியுமால் உள்ளுர் இளைஞர்கள் முதல் ஆசிரியர்கள் பெரிசுகள் வரை தலையை பிச்சு கொண்ட வரலாறுகள் உண்டு.கோபத்துக்கும் அந்த புன்னகை தான் .சந்தோசத்துக்கும் அந்த புன்னகை தான்.. .நீ என்ன ஜென்மமடி நட்புடன் கண்டிக்கும் தோழிகளும் உண்டு..அவளை பற்றி யாரும்  தவறாகச் சொன்னால்  உன்ரை நாக்கு அழிகிடுமடா ..அது ஒரு பாவமடா ,,அதைப் போய் ..என்று அவளுக்கு வக்கலாத்து வாங்கும் ஒரு ரசிகர் பட்டளாமே இருக்கு உள்ளூரில் ,மொனலீசாவின் ஓவியம் போல புன்னகையை பரப்பி கொண்டிருந்த அவளை சொந்த கிராமத்தை விட்டு  உடனடியாக விலகி இப்படியான கரடு முரடனான வழிகளால் அந்த அண்ணன் வசிக்கும் நாட்டுக்கு சென்றே ஆக வேண்டும் நிர்பந்தம் வரும் என கனவில் கூட நினைத்து இருக்க மாட்டாள் சிறிது காலங்களுக்கு முன்

நால்வர் புடை சூழ வந்த உயர்ந்த ஒருவன் அவளின் அருகில் வந்து நீங்க அவரின் தங்கையா ,,,என நளினமாக கேட்டான் ..எப்படி அவளை அவன் இலகுவாக அடையாளம் கண்டான் என்பதற்க்கு ஆச்சரியபடுவதுக்கு ஒன்றுமில்லை .அவர்கள் போட்ட இராணுவத்திட்ட மாதிரியானதின் ஒரு பகுதி தான் இதற்கு உதவி இருக்கு என கூறிக்கொண்டாலும் ,,,அவனுக்கு இது எல்லாம் பெரிதான விடயமல்ல ஏனெனில் எத்தனை பெயரை இப்பிடி அழைத்து இதுவரை காலமும் சென்று இருப்பான் ...ராஜா என்று எதோ பெயர் சொல்லி தன்னை அறிமுகப் படுத்தி கொண்டான் ... தனது பெயரை பதிலுக்கு இப்பொழுது சொல்ல வேணுமென்று அவசியமில்லை என்று பட்டதோ என்னவோ தெரியவில்லை.  அர்த்தம் தெரியாமால் மற்றவர்களை கிறங்கடிக்க வைக்கும் வழமையான புன்னகையையே தவழ விட்டாள்.

அந்த அரை மணித்தியால நிலக்கீழ் ரயில் பிரயாணம் அதற்க்குள்.அதில் அவளை அளவெடுத்து கொண்டிருந்தார்கள் அவனும் அவனுடன் வந்தவர்களும். அவனை தவிர மூவர் .அதில் ஒருவர் இவளுக்கு ஒரு சித்தப்பா முறை வரக்கூடியளவுக்கு வயதானவர் மற்றவன் ஒருவன் ராஜா மாதிரியே இருந்தான்.மற்றவன் கொஞ்சம் வயதில் இளையவன் ...இவர்கள் அனைவரும் அவன் தூக்கி எறியும் எலும்பு துண்டுக்காக ஒட்டி இருப்பவர்கள். அவன் விடும் ஏவல்களை தப்பமால் செய்வர்கள் ...எல்லாருக்கும் கிழக்கு ஜெர்மனியின் மலிவு விஸ்கியினால் ஏற்பட்ட மயக்கம் ..அவர்களின் கண்களை முகத்தில் எங்கோ செருக வைத்து கொண்டிருந்தது ...ராஜா மட்டும் ஏனோ தெரியாது இந்த மம்மல் நேரத்தில் கூட கூலிங் கிளாஸ் அணிந்திருந்தான் .அதனால் தலையிலிருந்து கால்வரையும் அணு அணுவாக பார்த்து கொண்டிருந்தான். உள்ளுக்கு விழுங்கிய விஸ்கிக்கு அவளை taste ஆக்கி கொண்டிருப்பது  அவளுக்கு தெரியாது.  அந்த வயதில் குறைந்த இளையவன் மட்டும் எதிர்காலத்தை அறிந்த ஞானி போல் குழம்பினான் ...அந்த அவளில் தவழும் கள்ளம் கபடமற்ற புன்னகை அந்த சிறியவனுக்கு என்னவோ செய்திருக்கவேண்டும் .ஏன் இவள் இவனிடம் மாட்டினாள் ,இவளுக்கு ஏதாவது உதவி செய்ய வேணுமென்று உள் மனது துடித்தது.. ஆனால் வெறியின் வேகத்து இணங்க தனது கையறந்த நிலையை எண்ணி ஏற்ற இறக்கத்துடன் வேதனைப் பட்டு கொண்டிருக்க மட்டுமே முடிந்தது அவனால்...இவர்களின் எந்த மனநிலையையும் கணக்கில் எடுக்காமால் அந்த நிலக்கீழ் ரயில் விபரீதமான சத்தத்துடன் மிகப் பெரிய இருட்டை இவர்களுக்கு வழங்கி விட்டு பெரிய சுரங்கத்தினூடாக போய் கொண்டிருந்தது.


நிலக்கீழ் ரயில் நிலையத்தில் ஓரிடத்தில் இறங்கினார்கள் ..வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விளக்கின் ஒளியினால் நகரம் பகல் போல இருந்தது .அது போல நீண்ட அடைக்கபட்ட மதிலை தாண்டி மெல்லிய ஒளியில் தூங்கிய நகரமும் அவள் நின்ற இடத்தில் இருந்து பார்க்க கூடியதாய் இருந்தது..அது கிழக்கு பெர்லின் இது மேற்கு பெர்லின் என ஊகித்து கொண்டாள்,,,

இன்று இரவு பாரிஸ் செல்லும் ரயிலில் உங்களை அனுப்ப இயலாது ..தாமதமாகி போய் விட்டது .நாளை காலை ரயிலில் தான் போகலாம் என்ற குண்டை தூக்கி போட்டான்

ஒரு டெலிபோன் பூத்தடியில் காத்திருந்தார்கள் டெலிபோன் பண்ணுவதற்க்கு ..ஒரு ஜெர்மானியன் ''சைஸ'' என்று சத்தம் போட்டு கொண்டு சென்றான் . அது ஜெர்மனியர்களின் பிரணவ மந்திரம் போன்றது என்று அவர்களுக்கு தெரியும் அவளுக்கு தெரியாது.

முதலில் அவன் அவளின் அண்ணனுடன் உள் சென்று பேசினான்

பின் அவள் பேசினாள்

இவர்களின் ஒழுங்குமயமான திட்டத்தை உடைத்தெறிந்தது ராஜாவின் திட்டம் தான் என்பது அவர்களுக்கு தெரியாது

அன்று இரவு அவள் அந்த மூவருடன் தங்க வேண்டும் என்ற பதட்டமின்றி அதே புன்னகையுடன் ,அவர்களின் வீடு என்ற கோதாவில் இருக்கும் அறைக்குள் நுழைந்தாள் ,பிரமச்சாரிகளின் வீட்டை வலிந்து சுத்தம் செய்திருப்பது தெரிந்தது..அதனால் சுத்தம் செய்ய படமாலே பல பகுதி இருந்தது..கண்ணுக்கு புலப்பட்டது.அறைச் சுவரில் அரை குறை ஆடைகளுடன் கவர்ச்சி கன்னிக்ள் நடனமாடிக்கொண்டிருந்தனர்

அந்த சிறியவனையும் ராஜாவையும் தவிர மற்றவர்கள் இருவரும் பிணமாகாத குறை ஒன்றை தவிர மற்றும் படி எல்லாமாகி அந்த வெளி கோலில் உள்ள செட்டியில் சயனித்து கொண்டிருந்தனர்

நீங்கள் உள்ளே படுங்கோ ..நாங்கள் வெளியிலை படுக்கிறம் தேவை என்றால் கூப்பிடுங்கோ என்று நாகரிகமாக கூறினான்

அதே புன்னகையுடன் நன்றி தெரிவித்துவிட்டு எந்த வித அவ நம்பிக்கையின்றி உள்ளே சென்றாள்.
நீண்ட பயண களைப்பு நித்திரை என்ற ஓட்டத்தினூடாக இரவை விரைவாக்கியது ...பலத்த சத்தத்துடன் அலாரம் ஒன்று இருளை விலக்கி வெளிச்சத்தை தந்து உறுமி விட்டு அடங்கியது..

அதை தொடர்ந்து கதவு மெல்லிதாக தட்டும் சத்தம் கேட்டது ,,

பதட்டத்துடன் வந்த அவன் வெளியில் பொலிஸ்காரர் கதவை தட்டுகிறார்கள்.
ஒரே வழி இருக்கு என்றான் ..நாங்கள் குடும்பஸ்தர்கள் மாதிரி நடிப்பது.
அவர்கள் கொஞ்சம் நாகரிகம் தெரிந்தவர்கள் டிஸ்டர்ப் பண்ணமாட்டார்கள் அதன் மூலம் தப்பிக்கலாம் என்றான்

அவள் அதே புன்னகைத்தான் பதிலாக தந்தாள் .

இருவரையும் பெட்சீட் மூடியது

அவன் அவனது வேலைதிட்டத்துடனான அடுத்த நிகழ்ச்சியை ஆரம்பிக்கலானான்..சந்தர்ப்பம் அமைந்தால்.  அரைவாசிக் கட்டம் மட்டும் தான் முயற்சி செய்வேண்டும். அதன் பின் இருவரின் செய்கையாக மாறிவிடும் என்ற அவனது அனுபவ கணிப்பு அங்கு பொய்மையாகி கொண்டிருந்தது.

அவள் அவனது பிடியிலிருந்து விலக மூர்கத்தனமாக போராடி கொண்டிருந்தாள்

மீண்டும் கதவு சத்தம் கேட்டது ..அதன் பின்,ஓங்கிய உதை சத்தத்துடன் கதவு திறந்து கொண்டது

அங்கே அவர்களில் அந்த வயதில் இளையவன் பெரிய கொட்டனுடன் நின்று கொண்டிருந்தான்
அவளை வெளியை விடு இல்லாவிட்டால் ,,,என்று கொண்டு
வெளியில் வந்து தன்னை மறந்து அவனிடமிருந்து தப்பிய சந்தோசத்தில் அந்த சிறியவனின் கையை பிடித்து நன்றி மனோபாவத்துடன் முத்தமிட்டாள்

கையை உதறிய அவன் ..நீயுமா பரத்தை ..ஏன்டி நாடு விட்டு நாடு வந்து எங்கட கலாசாரத்தை கேவலபடுத்தி எல்லாரும் அலையறியள்..என்று கூவினான்

..இதற்கு அலைவது எனது நோக்கமாக இருந்தால் உன்னிலும் பார்க்க பார்ப்பதற்க்கு கவர்ச்சியாய் இருக்கும் அவனிடம் இணங்கி இருப்பேனே,,,என சொல்ல வாய் எடுத்தவள் சொல்லவில்லை ..ஆனால் வழமையான அவளது புன்னகையே பதிலாக தந்தாள்

அவள் இப்பொழுது பாரிஸ் செல்லும் ரயிலுக்குள் இருக்கிறாள் ,,,மேற்கு பெர்லின் zoolagy garden ரயில் நிலையத்தில்....ஆரோ இரு வெளி நாட்டவரை பொலிசார் பிடித்து செல்லுகின்றனர்.இவள் இருக்கும் இடத்தையும் தாண்டி செல்லும் நோக்கிலும் ஒரு பொலிஸ்காரன் வருகிறான் ..ஆனால் அதே புன்னகையுடன் சலனமற்று இருக்கிறாள் ...அவளது தெளிந்த புன்னகையோ தெரியாது ...வந்தவன் .எந்த வித சந்தேக படாமால் தாண்டி சென்று இறங்கி விடுகிறான்..ரயிலும் வெளிக்கிட்டு விட்டது....இதே புன்னகையுடன் இனிமேல் ஒரு பிரச்சனையில்லாமால் அண்ணணின் மேற்கு ஜெர்மனியின் நகரத்துக்கு சென்று விடுவேன் என்று அவள் நம்புகிறாள்

நாங்களும் அவள் போல அப்படியே நம்புவோம்


மிதுவின் கிறுக்கல்களிலிருந்து-நன்றி

Tuesday, September 13, 2011

பட்டணம் போற வழியில் (சிறுகதை)


பட்டணம் போற வழியில் (சிறுகதை)


நேரம் போய் விட்டதை அப்பொழுது தான் உணர்ந்தான் .அதை துரத்தி பிடிக்கும் நினைப்பில் அவசரத்தில் அவன் செய்யும் காரியங்களை பார்க்க அவனுக்கே ஒரு நகைப்பாக இருந்தது.ஒரு கணம் சுதாகரித்து தனது அடுத்தடுத்த வேலைகளை செய்ய தயாரானவனை றேடியோவில் சரியாக இப்ப ஏழு மணி என்று கொண்டு இசை முழக்க பரிவாரங்களுடன் வந்த கே.எஸ் ராஜா இடை மறித்தார்.கிழக்கு பறவை மேற்கு வானில் பறக்க பார்க்குது என்று ஏதோ சொல்லி ஓடாத படத்தை ஓட்டுவதற்க்காக கூவுவதை பார்க்க எரிச்சல் எரிச்சலாக வந்தது .உந்த வானொலி நிகழ்ச்சி முடிய அரை மணி நேரம் எடுக்கும் அதுக்கு முதல் அவன் அந்த எக்ஸ்பிரஸ் பஸை பிடிக்கவேண்டும் அதற்காக அந்த அரை மணித்தியாலத்துக்குள் கால் மைல் தூரத்தில் உள்ள சந்தியை அடைந்தே தீரவேண்டும் அதுக்குள் எல்லாம் முடிக்கவேண்டும். எல்லாம் முடித்து விட்டு நடந்து கொண்டிருந்தான்.அன்று அவன் வாரத்தில் ஒரு நாள் பட்டணத்துக்கு போகும் நாள் .எப்போது இல்லாமால் அன்று அவனது நடை உடை பாவனை எல்லாம் மாறி இருக்கும் .அவன் இன்று பட்டணம் போகிறான் என்று சொல்லாமால் ஒரு சொல்லல் பார்ப்பவர்களுக்குள் உணர்த்தி கொண்டிருக்கும்.ஏன் அன்று விசேசமாக அப்படி போய் வருகிறான் என்று யாரும் கேட்டதுமில்லை .யாருக்கும் தெரிந்ததுமில்லை யாருக்கும் சொன்னதுமில்லை.

 அவனைப்போல பல பேர் அவசரத்துடன் அந்த வேக பஸ்ஸை பிடிப்பதற்கு காத்திருப்பர்,பஸ்ஸில் ஏறக் காத்திருப்பர் என்று கூறுவது கொஞ்சம் மரியாதை குறைவு .ஏறுவதற்க்கு இவர்கள் படும் பாடு இருக்கே அந்த தள்ளு முள்ளு பாய்தல் இறங்குதல் இடித்தல் எல்லாம் பார்க்க கிடைத்தால் ஒரு கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.அந்த காட்சியை முழுமையாக இரசிக்க கிடைக்க வேணுமென்றால் நீங்கள் அந்த வாகனத்தில் போகாதவராக இருக்க வேண்டும். அப்படி போகாமல் அந்த காலை வேளையில் அந்த சந்தியில் அந்த நேரம் வழக்கமாக பிரச்சனமாகி இருப்பார் தண்ணியடிச் சாமியார் இதற்காகவே.அவரை இந்த நேரத்தில் மட்டும் விரும்பினால் சாமியார் என்று அழைக்கலாம் அதுக்குரிய அணிகலனுடன்  உங்களுக்கு தரிசனம் தருவார்.மற்ற நேரங்களில் நிறை வெறியில் இருக்கும் அவரையும் அவரது நடத்தைகளையும் பேச்சுகளையும் பார்க்க மற்றவர்களுக்கு தான் கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

 வழமையாக அந்த பஸ்ஸை காத்து நிற்கும் அந்த சொற்ப நேரங்களில் அவனும் அந்த சாமியாரும் உரையாடி சிரித்து குதூகலிப்பார்கள்.தராதரம் பார்ப்பவர்களுக்கு பார்ப்பதுக்கு ஒரு மாதிரியாக இருக்கும் .எந்த மாதிரியுமே இவனுக்கு இருக்கவே இருக்காது .மேலும் சொல்லப் போனால் ஒரு குதூகலம் இருப்பதைத்தான் காணக்கூடியதாக இருக்கும் .இவர்கள் இருவருக்கும் என்ன பந்தம்? அப்படித்தான் இருந்தாலும் இவ்வளவு சுவராசியமாக பேச என்ன தான் விசய தானம் இருக்கு என்று அறிய அந்த அவசரத்தில் கூட காதை நீட்டி கேட்க முனைவர் சிலர்.சாமியாருக்கு இவ்வளவு வயது வந்தும் உந்த 20 மைல் தூரத்தில் உள்ள பட்டணத்துக்கு செல்லவில்லை என்ற மனக்குறை எப்பவுமே இருக்கு.. இப்படி வேசம் கட்டி டிப் டொப்பா எல்லாம் வெளிக்கிட்டு இடித்து பிடித்து ஏறி போறீங்களே அப்படித்தான் என்னதான் அங்கு இருக்கடப்பா?.நானும் ஒரு நாள் பட்டணம் வந்து எப்படி இருக்கு என்று கட்டாயம் பார்க்கோணும் என்பார் புன்னகையுடன். அவன் இவர் இப்படி வெள்ளாந்தியாக கேட்பதனால் அவரை ஒன்றுமறியா முட்டாள் என்று எப்பொழுதுமே நினைத்ததுமில்லை.அரசியல் முதல் கொண்டு சகல விடய தானங்களையும் விரல் நுனையில் வைத்திருப்பார் .அத்துடன் விவாதிக்கும் போது விளக்கும் பொழுது அவருக்கே உரித்தான பாணி இருக்கும் என்பது அவனை தவிர அவ்வூரில் யாருக்குமே தெரியாது என்பது தான் உண்மை.இவரை முதல் முதல் கண்டது எப்ப என்பதை ஞாபகத்தில் நினைத்து பார்க்க முயற்சி செய்தாலும் ஞாபகத்துக்கு வர முடியாத படி பல வருடங்களாகி விட்டன.

 ஒரு நாள் எப்பவும் போலவே அவ்வூர் வைரவ கோயிலடி வடக்கு வீதியிலுள்ள வேப்ப மரத்தின் கீழ் கொதிக்கும் கோடை வெய்யிலை தணிக்க உதவும் சோழ்க்காற்றினை அநுபவித்து கொண்டு ஏகாந்தமாக இருப்பது வழக்கம் .நாலடி தள்ளி ஒரு பெரும் சுவர் அதை தாண்டி யாரும் பல காலமாக பாவிக்க படாத பாழடைந்த வீடு .பல காலமாக வெளிப்படையாக பலரும் பாவிக்காத வீட்டை கொஞ்ச காலமாக ஆக்கிரமித்து இருக்கிறார்கள் அவ்வூர் இளைஞர் சிலர் ,அவ்வூர் இளைஞர்கள் மட்டுமல்ல வேறு புது முகங்களும் அங்கங்கே கண்ணில் தென்பட தொடங்கி இருக்கிறார்கள்.நாடு பிடிப்பதற்க்காக நாடு விட்டு கடல் கடந்து போய் கையை காலை உடம்பை உரமாக்கி பல கலைகளையும் கற்று திரும்பி இருக்கினம் என்று சனம் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறான் .கொஞ்ச காலத்துக்கு முதல் இந்த  கோயிலுக்கு முன்னால் உள்ள வெட்டையில் பன மட்டையை பற்றாகவும் ஊமத்தங்கொட்டையை பந்தாகவும் நினைத்து அரை கால் சட்டையுடன் விளையாடிய அதே சிறார்கள் தான் இப்ப ஏகே யோ ஜீ 3 யையோ ஏதோ இரும்பாலை செய்த ஆயுத்த்தை தூக்கி கொண்டு திரிந்து கொஞ்ச காலமாக அவ்வூர் மக்களை மிரள வைத்து கொண்டு இருக்கிறார்கள்.அவல மரணச்சத்தம் கேட்க என்னவென்று கேட்க போனபொழுது தான் முகத்தை மறைத்த தாடியுடன் அழுக்கு நிறைந்த உடையுடனும் மல்லாக்காய் படுத்த படி குளறியென்று இருந்தார்

அவரை அவர்கள் கையில் கிடந்த எல்லாத்தினாலும் தாக்கியபடி விசாரித்து கொண்டிருந்தனர்.இவன் உளவாளி விசாரிக்கிறம் இதிலை தலையாடதையுங்கோ... பின் தலையிடாதே என்று மாறி ...,பிறகு கனக்க கதைச்சி என்றால் இவருக்கு நடக்கிறது தான் உனக்கு நடக்கும் என்று உச்ச ஸ்தாயில் அவர்களின் வார்த்தைகள் தடித்த பொழுதும் அவர் அப்பாவி என்று  ஏதோ அவனுக்கு பட்டதால் பல மணிநேரம் வாதிட்டு மீட்டு எடுத்து வந்ததில் ஏற்பட்ட பந்தம் இப்பவும் தொடர்கிறது,

அவர் பக்கத்தில் இருக்கிற நாலு ஊரை தாண்டிய அடுத்த ஊரை சேர்ந்தவர் ..ஏதோ பிரச்சனையில் ஊரை விட்டு வெளிக்கிட்டு ஊர் ஊராய் அலைகிறார் என்பது மட்டும் அவரை பற்றி அவர் அவனுக்கு சொன்ன கதை அவ்வளவு தான் ..அதற்க்கு மேல் அவரது நதி மூலத்தையும் ரிசி மூலத்தையும் விசாரிக்கவுமில்லை மேல் விபரங்களை சொல்லவுமில்லை. அன்று அப்படி  உளவாளி என நினைக்கப் பட்டவர் . இன்று உள்ளுர் வாசியாக மாறி தண்ணிச்சாமியார் என்றாலே எல்லாருக்கும் தெரிந்தவராக பிரபலமாகியும் விட்டார்

சந்தியை அடையும் பொழுது தேநீர் கடையிலிருந்து இப்பொழுத நேரம் சரியாக ஏழு மணி முப்பது நிமிடம் என்று விடைபெறுவது கே.எஸ் ராஜா ,,,என்று றேடியோ அலறியது.....அதை காது கொடுத்து கேட்டவன் பின்  சந்தியை நோக்கி கண் கொடுத்து பார்த்தான் .எல்லோரும் அவசரத்தில் பஸ் வரும் திசையை நோக்கி பார்த்த வண்ணம் இருந்தனர் ..பஸ் இன்னும் வரவில்லை...வழமையான நேரத்தில் அங்கு காணும் சாமியார் இன்று கொஞ்சம் லேட்டாய் வந்தாலும் எப்பொழுதும் பரட்டையாக தோன்றும் தலையை வாரி இழுத்து நசனலும் வேட்டியுமாய் காட்சியளித்தார்.அவர் அவனை பார்த்து சிரிக்கும் பொழுது நான் இன்றைக்கு பட்டணம் போறன் எல்லோ என்று சொல்லாமால் சொல்லுவது மாதிரி இருந்தது.

 பஸ்க்குள் நெரிசலோடு நெருசாலாக ஏறிய படியால் அவர் பஸ்ஸில் ஒரு தொங்கலில் அவன் மற்ற ஒரு தொங்கலில்.அசுர வேகத்தில் செல்லும் அந்த வாகனம் பட்டணத்து தரிப்பிடத்தில் வழமை போல் எட்டுமணி பதினந்து நிமிடத்தில் நிற்பேன் என சொல்லுவது போல் ஓடிக்கொண்டிருந்தது.எதிர்புறமாக வேகமாக ஓடும் வீடுகளும் மரங்களும் வேலிகளும் அதை உறுதி செய்தன.இவ்வளவு காலமும் அவரது தனிப்பட்ட அந்தரங்கத்தை கேட்காதவனின் மனது அவர் இன்று ஏன் பட்டணம் செல்லுகிறார் என்று அலட்டிக்கொண்டது .முன் சீட்டில் ஒன்று ஒரு பெரிசு சுவராசியமாக பேப்பர் படித்து கொண்டிருந்தது.பேப்பரின் தலைப்பில் பல நாள் கிடப்பில் இருந்த இரட்டை கொலை வழக்கு இன்று மேல் நீதிமன்றத்தில் என்ற வரிகள் முந்திரிகை கொட்டை எழுத்தில் சிரித்து கொண்டிருந்தது.,நெரிசலில் சுகம் காணும் இளசுகள் ஒரு புறமும் .நெருசலில் வேதனைபடும் பழசுகளுமாய் பட்டணத்தை நோக்கி பஸ்ஸின் வேகத்திலும் பாரக்க மனசை அப்படி ஒரு விரைவில் வைத்திருந்தினர் அதனால்..அப்படி ஒரு அவசரக் களை அவர்களிடம் தோன்றியது.ஆனால் சாமியாரின் எண்ணமோ பஸ்ஸில் பிரயாணம் செய்யாமால் எங்கோ பிரயாணம் செய்து கொண்டிருந்தது.

வையடா இன்னொரு வெடி அவளின்ரைக்குள்ளை. என்று..அவளை கொலை செய்த பின்னும் அந்த வீரியமற்றவர்கள் வீரியம் காட்டியது..அவளோடை தொடர்புடையவனும் அவளோடு சேர்ந்து மாண்டு போனது சந்தர்பசவசத்தால் தான் அதற்க்கு சாட்சியானது அதனால் அந்த ஊரை விட்டு வெளியேறியது  தண்ணிச் சாமியாராக மாறியது எல்லாம் பழங்கதையாக போய் விட்டது என்று நாட்களை கடத்தியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.முடிவுறாத வழக்காக கீழ்க் கோட்டில் கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கை இத்தனை வருடங்கள் பின் மேல்கோட்டில் விசாரணையாம் ,,விலாசமில்லாமால் இருந்தவைரை எப்படியோ விலாசம் தேடி கண்டிபிடித்து அவருக்கு மேல் கோட் மூலம் அழைப்பாணை கையளிக்க பட்டிருந்தது,விருப்பத்தோடு பார்க்க வேண்டி நினைத்த பட்டணத்தை பார்க்க போக இப்படி ஒரு விருப்பமில்லாத சூழ்நிலை நிலையில் அமைந்தது அவருக்கு வேதனை அளித்தது.அவனுக்கு இந்த கதையை சொல்ல வேணும் என்று மனது துடித்தது ஆனால் அவன் இந்த சன நெருக்கத்தை தாண்டி பஸ்ஸின் மூலையில் அல்லவா இருந்தான், அவனும் அவரிடம் இந்த அவசர பட்டண விஜயம் ஏன் என கேட்க ஆவலுடன்  இருந்தாலும் கேட்க முடியாமால் தவித்தான் .இப்படி ஒருதருக்கு ஒருதர் பேச முடியாமால்தவித்து கொண்டிருக்கும் பொழுது பஸ் அந்த பரந்த வெளியினூடாக ஓடிக் கொண்டிருந்தது.


அந்த ஒரு கணம் முடிந்த அடுத்த கணத்தில்.தூக்கி ஏறியப்பட்டு ஒரு பற்றை மறைவுக்கு பின் அருகருகே கிடந்தனர் .பஸ்ஸில் சந்திக்க பேச முடியாத இருந்தவர்களுக்கு விபத்து என்னவோ நடந்து இவர்களை இப்படி ஆக்கி விட்டிருக்கு.இருவருக்குமே பலத்த அடி அங்கங்கே அவர்களின் உடம்பின் பல பாகங்களிலுமிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பரிதாபட்டு கொள்ளவே மட்டும் முடிந்திருந்தது.,எழும்ப திராணியற்று கிடந்தனர்

 பலத்த சத்தம் கேட்டது ,தனது முழு சக்தியை பிரயோகித்து தன் முன்னால் மறைத்த பற்றைச் செடியை விலக்கி பார்த்தார்

அரிவாளுடன் இருந்த நால்வர் ஒருவரோடு ஒருவர் பிணைத்து கை விலங்கு மாட்டி இருந்தவர்களை துரத்தி கொண்டிருந்தனர் .

,,அங்கு ஒரு பழிவாங்கல் ஒரு முயற்சி நடந்து கொண்டிருந்தது இவருக்கு விளங்கியது

பழைய கொலையாளிகளுக்கு புதிதாக கொலையாளிகளாக போறவர்கள் தண்டனை கொடுத்து கொண்டிருந்தனர்

 தலை முண்டம் ஒன்று அவர்கள் இருந்த பத்தை நோக்கி உருண்டு வந்து வெட்டுண்ட காளிதாஸின் தலையின் பாணியில் கிடந்தது

இவர்கள் பத்தை மறைவில் கிடந்தமையால் யாரும் இவர்களை கவனிக்கவில்லை

பட்டண கோட்டில் நடக்கும் வழக்குக்கு இந்த வெளியில் தீர்ப்பு வழங்கபட்டிருக்கிறது..

என்ன நடந்தது ஏன் என்று ஒன்று தெரியாமால் அவன் தவித்து கொண்டிருந்தான்

தனது முதல் பட்டண விஜயம் நிறுத்தபட்டுவிட்டது இந்த கதையின் தலைப்பு இது தான் என்று நகைச்சுவையாக கூறிக் கொண்டு

அவனுக்கு இவ்வளவு நாளும் சொல்லாத கதையை முதலில் இருந்து சொல்லி கொண்டிருந்தார்,,,அவனும் கேட்டு கொண்டிருந்தான்


அந்த வெளியில் இப்பவும் பெரிய கூச்சலும் கலவரமுமாகவே இருந்தது. அது இன்னுமே அடங்கவில்லை

அதைப்பற்றி ஒன்றும் கவலைப்படாமால் அவர்கள் இருவரும் பேசி கொண்டு இருக்கின்றனர்.

.
அந்த பற்றை மறைவுக்கு பின்னால் படு காயம் அடைந்து இருக்கும் இருவரையும் யாரும் காணும் மட்டும்

 பேசிக்கொண்டு இருப்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்.. அந்த கணத்தில் அவர்களுக்கு?

மிதுவின் கிறுக்கல்களில் எழுதப்பட்டது 

Sunday, June 12, 2011

லண்டனில் திரையிடப்பட்ட 1999 என்ற கனடிய தமிழ்த் திரைபடம்

லண்டனில் கனடாவில் புலம் பெயர்ந்த தமிழர்களால் உருவாக்கப்பட்டு பல விருதுகளை பெற்ற 1999 என்ற திரைபடம் 11.06.11 அன்று காண்பிக்கப்பட்டது.இத் திரைபடம் அதிகம் அறியப்பட்டிராத ஒரு நிறுவனத்தின் திரைபட விழா மூலம் திரையிடப்பட்டது. லண்டன் புறநகர் பகுதியான kingston இல் திரையிடப்பட்ட பொழுதும் அரங்கு நிறைந்த நிலையில் பல இனத்தவரும் காணப்பட்டனர்.இந்த படம் சகல மட்டத்து திரைபட ரசிகர்களாலும் பார்க்க கூடிய படம். ஆனால் இந்த படத்தை லண்டனில் யாரும் விநியோகிக்க முன் வரவில்லையாம் என்பது துன்பகரமான செய்தி. இந்த படம் இத்திரை படவிழாவில் இலவசமாக காண்பிக்கப் பட்டது.இந்த படம் பார்த்து முடித்துவிட்டு என்னுள் எழுந்த கருத்து.தென்னிந்திய மற்றும் குப்பை படங்களை ரசித்து பழக்கப்பட்ட ரசிகர்கள் இந்த படத்தை விரும்பி பார்க்க மாட்டார்கள் என்று விநியோகப்பவர்களின் முன் முடிவுகள் தான் காரணம் தான் என்று நினைக்கிறேன்.


விருதுகள் பெற்ற திரைபடம் அதனால் நல்ல படமாக இருக்கும் என்ற நோக்கில் படம் பார்க்க போகும் பொழுது இருக்கவில்லை .ஆனால் படம் முடித்து திரும்பும் போது நான் எதிர்பார்த்ததிலும் மேலாக ஒரு திருப்தி இருந்தது.இந்த படம் ஆரம்பமாகும் முன்னர் திரைபட விழா முக்கியஸ்தர்கள் பேசினார்கள். அதில் பேசிய ஒரேயொரு தமிழரான பெண்மணி இத் திரை படத்தை பற்றிய முன்னோட்டத்தை கூறும் போது .தாயகத்தில் இருக்கும் பிரச்சனைகளை தாங்கள் இப்ப இருக்கும் புலம் பெயர்ந்த நாட்டிலும் கொண்டு வந்து சேர்க்கிறார்கள் என்று ..அவருடைய அந்த கருத்தில் முழுமையாக எனக்கு உடன் பாடில்லை.இந்த கோஸ்டி மோதலை மையக் கருவாக இந்த படம் எடுக்கப் பட்டமையால் அவ அப்படி கூறியிருந்தார்.நான் அறிந்தவரை இந்த குழுவாக இருந்து மோதலில் ஈடுபடுவது தமிழர்கள் மட்டுமல்ல ,,சீனர்கள் கறுப்பர்கள் கிழக்கு ஜரோப்பியர்கள் சீக்கியர் போன்றோர் வெவ்வேறு கால கட்டத்தில் குழு மோதலில் பிரபலமாகி இருந்திருக்கிறார்கள் ,காலப் போக்கில் ஆரோக்கியமான சமூகமாக தங்களை ஆக்கிய பின்னர் அவர்களிடமிருந்த இந்த போக்கு அகன்று இருந்தது.தமிழர்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சனையாக கூறியது பேச்சாளரின் தவறான கணிப்பு என்பது எனது கருத்து.


டொரண்டோ நகர இனம் புரியா இரவு நேர அமைதியின் பின்னனியில் திரைபடம் ஆரம்பமாகிறது . ஆரம்பத்திலையே பிரபல குழு தலைவன் மரநாயின் தம்பியை இன்னொரு குழு தலைவனான குமாரின் தம்பி துப்பாக்கியால் சுட்டு கொல்லுகிறான் .குமார் ஆரம்பத்தில் தம்பியை தாக்கியவனை தாக்க போய் அதன் தொடர்ச்சியாக சந்தர்ப்பவசத்தால் ஒரு குழுவுக்கு தலைவனாகிறான் .இவனில் விசுவாசம் வைக்கும் பாசமுள்ள தகப்பனுக்கு மகனா இருக்கும் அன்பு என்ற இளைஞன் .அவனுக்கு சிறு வயது முதல் ஒரு பெண் மேல் காதல் . வாட்டர்லூ பல்கலைகழகத்தில் படிக்கும் அன்புக்கு தெரிந்த குடும்பத்து நேரம் கிடைக்கும் நேரம் போதெல்லாம் பொதுசேவை செய்யும் அமைதியான அகிலன் என்றொருவன்.அன்பு விரும்பும் அதே பெண்ணைத்தான் அகிலனும் விரும்புகிறான்.இவர்கள் இருவரின் காதல் ஒரு தலைக்காதல் என்பது குறிப்படதக்கது.மரநாயின் தம்பியை கொலை செய்த குற்றத்திலிருந்து குமார் தனது தம்பியை பொலிசாரிடமிருந்தும் மரநாயிடமிருந்தும் காப்பாற்ற தனது மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ளுகிறான். தனக்கு விசுவாசம் உள்ள அன்புவை இந்த கொலையின் சூத்தரதாரி என மரநாயுடமும் பொலிசாரிடமும் மாட்டி விடுகிறான்.


அன்புக்கும் அகிலனுக்கும் நடக்கும் முக்கோண காதல் பற்றிய பிரச்சனையுடனும் . குமார் மரநாய் பொலிசார் போன்றோரிடமிருந்தும் அன்பு எப்படி மீளுகிறான் என்பதோடு படம் நகருகிறது.அன்புக்கு விசுவாசமான நண்பனாக நடிக்கும் உடும்பன் என்ற ஒரு வயதான இளைஞன். .அன்புவுடன் பழகிய நண்பர்கள் விலகி ஓடும் பொழுது உடும்பன் மட்டும் கடைசி வரையும் மட்டும் அன்புவுடன் துணை நிற்பது போல் உருவாக்கப்பட்ட உணர்ச்சிகரமான பாத்திரம் .கடைசியில் குமாரின் தம்பி பிடிபட போகும் சாத்தியங்கள் தான் என்று தெரியும் வரும் போது அவன் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு அழித்து கொள்ளுகிறான் .அன்பு அந்த அன்பான தகப்பனாரின் இருதய நோயையும் சுகப்படுத்தி அமைதியான குடும்ப வாழ்வுக்கு போவதோடு படம் முடிவடைகிறது..



படத்தில் சில காட்சிகள் நாடகத்தனமாக இருக்கின்றன என்று சிலர் சொல்லக்கூடும் .அதை ஈடு கட்டும் விதமாக பின்னனி இசை அற்புதமாக ஒலிப்பதனால் காட்சிகள் எல்லாமே சினிமாத்தனமாகவே இருக்கின்றன. இந்த படத்துக்கு இசை அமைத்தது இன்னும் இலங்கையை வதிவிடமாக கொண்டிருக்கும் இளைஞனாம் .திரை கதையின் திசை மாற்றத்தோடு அதற்க்கேற்றவாறு பின்னனி இசையும் அற்புதமாக பயணிக்கிறது .மற்றும் கதையின் காட்சி அமைப்பை முன்னும் பின்னும் மாற்றி மாற்றி காட்டும் தமிழ் படத்தில் இதுவரை வராத புதிய முறை கதை சொல்லலை கையாண்டுள்ளார் இயக்குனர். இதன் மூலம் ஓரே காட்சியை மற்றும் காட்சியின் தொடர்ச்சியை வெவ்வேறு பாத்திரங்களின் பார்வையில் எப்படி இருக்கின்றன என்பதன் மூலம் அழகாக திரைக் கதையை நகர்த்தும் பொழுது இயக்குனரின் திறமை மிளிர்கிறது.






குழு தலைவன் குகனின் உதவியாளார் அன்புவை மாட்டி விடச் சொல்லும் போது மனசாட்சியை விட்டு எப்படி செய்வது என்று தவிக்கும் இடம் நன்றாக இருக்கிறது. காருக்குள் இருந்து தகப்பனாருடன் தொலைபேசியில் உணர்ச்சிபூர்வாமாக பேசும் பொழுது அன்புவின் நடிப்பு நன்றாக இருக்கிறது .அன்புவின் நெருங்கிய நண்பனாக வரும் உடும்பன் என்ற பாத்திரம் அதிகம் பேசமால் அற்புதமாக வெளிப்படுத்த பட்டிருக்கிறது.அகிலனின் நண்பர்களில் ஒருவர் ஆங்கிலத்திலேயே முழுவதும் கதைப்பார் .ஒரு இடத்தில் நண்பரில் ஒருவர் அவரை பார்த்து கூறுவார். உனக்கு நாங்கள் பேசுற தமிழ் உனக்கு விளங்குது தானே? பின்னை என்னத்துக்கு உப்பிடி பேசுறாய்..தமிழிலை கதையன்.. என்ற இடம் மூலம் புலத்தின் வளரும் சிறார்களின் நிலமையை நன்றாக வெளிபடுத்த பட்டிருக்கிறது.காட்சிகள் மூலம் குழு வன்முறையாளர்களிடம் கூட அன்பு ஈரம் மனசாட்சி நட்புத்துவம் இருக்கிறது என வெளிபடுத்தபட்டிருக்கிறது.இந்த படத்தில் இயங்கும் பாத்திரங்கள் அநேகமானவை வில்லத்தனமானவர்களாக சித்தரித்தாலும் நடிப்பு திறமை மூலம் எல்லாரும் கதாநாயகர்களாகவே மிளிர்கிறார்கள்.எதிர்பாராத கதை திருப்பங்களை உருவாக்கி திரைக் கதை நன்கு அமைக்கப்பட்டிருக்கிறது, குறிப்பாக இரவு நேர காட்சி அமைப்புகளில் ஒளி அமைப்பு நன்றாக இருக்கிறது. இந்த படத்தின் முக்கிய கதாநாயகியான கீதாவையும் முக்கிய வில்லனான மரநாயையும் வருவார்கள் வருவார்கள் என பார்வையாளர்களை எதிர்பார்க்க வைத்து கடைசி வரையும் காட்டாமால் விட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.




இலங்கையிலும் தென்னிந்திய திரைபடங்களின் போர்முலாவை மீறி வாடைக்காற்று , பொன்மணி என்ற படங்கள் வந்த போதிலும் திரும்பவும் தென்னிந்திய திரைபட பாணியையே பின் பற்றினார்கள். இத் திரைபடத்தைப் பற்றி சினிமா சம்பந்தமான அறிவு தங்களுக்குள் கூட இருக்கு என்று நினைக்கிற பண்டிட்டுகள் என்ன குறை கூற வருவார்கள் விமர்சிப்பார்கள் என்று எனக்கும் ஓரளவுக்கு தெரியும். ..அவற்றையெல்லாம் தவிர்த்து ..இது போன்ற நல்ல புலம் பெயர்ந்த தமிழ் சினிமாக்களை பாரட்ட வேண்டும்




இத்திரை படவிழா முடிவுற்ற பின் அங்கு கூடி நின்ற பார்வையாளர்களுடன் உரையாடிய வேற்று இனத்து பத்திரிகையாளர்கள் இந்த படத்தை பற்றி வியந்து பாரட்டியதை கேட்க கூடியதாயிருந்தது

(கதாநாயகன் கதாநாயகி ஆடி பாடும் டூயட் காட்சிகள் அடங்கிய படம் சிட்னியிலும் கனடாவிலும் திரையிட்டு இருந்தார்கள் என்று அறிய கூடியதாய் இருந்தது .திரைபட விழாக்களில் என்ற படியால் அந்த காட்சிகளை தவித்து காட்டி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் .உண்மையில் அந்த காட்சிகளை தவிர்த்து காட்டி இருப்பது தான் நன்றாக இருக்கிறது என்பது எனது அபிப்பிராயம்)

Friday, May 20, 2011

பெர்லின் சுவர் உடைய முன்பு ஒரு மே தினத்தில்(மீள் பதிவு)

வந்து மூன்று மாதம் தானாகிறது...இந்த குளிரும் நாடும் எனக்கு ஒத்துக்கொள்ள முரண்டு பிடித்துக்கொண்டிருந்ததது... வின்ரர் முடிஞ்சுது இப்பவும் உனக்கும் குளிருதே என்றபடி... யன்னல் சீலை திறந்தான் கண்ணன்......அவன்...இந்த பெர்லினுக்கு வந்து கனகாலம்...சொல்லுவன் தானே....

அந்த யன்னலூடகவோ...பெர்லின் சுவர் கண்ணில் தெரிந்தது.....சுவரை தாண்டி... ஒரு காவல் கோபுரம் ...அதில் நிற்கும் ஒருவனை பார்த்து வாஞ்சையோடு..... இந்த பக்கத்து றோட்டோரம் நடந்து செல்லுவோர் கை காட்டுகின்றனர்...அவனும் பதிலுக்கு புன்னகைத்து கை அசைக்கிறான்

மக்களை ,மொழியால்...அன்பால் ஒன்றாயிருந்தாலும்......இந்த சுவர் வீம்புக்கு நிமிர்ந்து நின்று ...அரசியலுக்காக பிரித்து வைக்குது

சீலை திறந்து...மதிலையே உற்று நோக்கியவன்....மெளனம் கலைந்து....டேய்...இருந்து பார்...ஒருநாளைக்கு உந்த மதில் உடைந்து...போகும்......சனம் ஒன்று சேருமென்றான்...

எனக்கு அது... வெறுப்பின் உச்சகட்டத்தில் வரும்... நப்பாசையாகவே...பட்டது.......

ம்ம் ...என்றபடி.....மீண்டும் ...நான் போர்வைக்குள்...........கீழே.....அழைப்பு மணி அடித்து சத்தம் கேட்கிறது...இவன்ரை கேர்ள் பிரண்டாயிருக்கோணும்....இவன் ஆள் சுள்ளி தான்...கெதியிலை.மொழியையும் பிடிச்சு....டொச்சு பெட்டையை ஒன்றையும் மடக்கிட்டான்...........அவன் நேற்றே சொன்னவன் .. இன்றைக்கு மே நாளடா வேளைக்கு எழும்பு ஒரு இடத்துக்கு போக வேணுமென்று ......எழும்ப விட்டால் தானே...இந்த குளிர்.....

உவன்...இந்த டொச்சு பெட்டையை ..பிடிச்சதாலை.... கன ஜெர்மன்காரரின்ரை தொடர்புகிடைச்சு இருக்கு......அப்பவே ஊரிலையிருக்க்கையையே தன்னை புத்திஜீவியாக காட்டுறதுக்காக உந்த சிவத்த புத்தங்களை எல்லாம்..வாசிச்சு கொண்டு திரிந்தவன்.......இங்கையும் தொடருது போலை ....வாவன் ஊர்வலத்துக்கு...எல்லாம் தெரியுமெண்டவன்......பார்ப்பம்
வாசலில்..கார்...ஸ்ராட்டாகி கேட்டது....அவர்கள் காருக்குள் ஏறி விட்டார்கள் எனக்காக தான் காத்து கொண்டிருந்தனர்..காருக்குள் இன்னொரு டொச்சுக்காரனும் இருந்தான் ... .....ஏற்ற இறக்க சுருதிகளுடன் அந்த மொழியில் ஏதோ சிரித்து கதைத்து கொண்டிருந்தனர்

அவள் ஏதோ கேட்டாள்...அவனிடம்....என்னை பற்றி தான் கேட்கிறாளென்று புரிந்தது....இவனும் பதிலுக்கு சிரித்துக்கொண்டு சொல்லிட்டு......என்னடா என்று தமிழில் நமிட்டு சிரிப்புடன் பார்த்தான்.. ....அந்த சிக்னல் லைட்டை கடந்து வலது பக்கம் திரும்ப....அவ்வழியே இராணுவ டாங்கி கடந்து சென்றது...........இப்பொழுது பிரித்தானிய எல்லைக்குள் உட்பட்டு நுழைகிறீர்கள் என்ற போர்ட் வரவேற்றது....அதையும் தாண்டி வலது இடது என்று பல திசைகளில் திரும்பி கார் தன் பாட்டில் நகர்ந்து கொண்டிருந்தது

வெஸ்ற் பெர்லினை செக்கன்ட் வேர்ல்ட் வார் காலத்தில் இருந்து பிரிட்டிஸ் அமெரிக்க பிரான்ஸ் இராணுவ வலயமாய் வைச்சிருக்கினமாம்.....போர் சூழல் இருக்கிற மாதிரி...நினைச்சால் மரண விசாரணையை கூட நடத்தாமால் தடுக்கலாமாம்....அழகான கார்களும் பஸ்களுமும் ஓடுகின்ற அந்த றோ்ட்டில் இராணுவ டாங்கிகளும் ஓடி கொண்டிருக்கின்றது ஆச்சரியமாய் இருந்தது

கார் கடைசியாக ஒதுக்கு புறத்தில் உள்ள கட்டிட பகுதிக்கு வந்தடைந்து....அங்கு தான் பின்னேரம் நடை பெறும் மே டே ஊர்வலத்துக்கான ஆயுத்தங்கள் நடக்கிறது......

இப்படித்தான்...ஊரிலை இருக்கிற சைக்கிள் கடை மாணிக்கண்ணை கேட்டதுக்க்காக உந்த மே டே ஊர்வலத்திற்க்கு போனது நினைவுககு வந்தது.....எட்டுமணித்தியாலய நேர கட்டுபாடு தொழிலாளர் பெற்று கொண்ட நாளாம்... வானிலை சிவத்த கொடியெல்லாம் கட்டி யாழ்ப்பாணம் போய் உலக தொழிலாளரே ஒன்று சேருங்கள் என்று கோசம் போடுவினம்... பல பேர் பின்னர் மீற்றிங்கிலை வீறாப்பிலை பேசுவினம்.......மாணிக்கண்ணை சொன்னவர்...நாங்கள் இண்டைக்கு மட்டும் தான்...ஹீரோக்கள்......மற்றும்படி திரும்பவும் நாதியற்று போயிடுவம் என்றார்....அவர் அப்படி சொல்லக்கை...எனக்கு அவரை பார்க்க பாவமாயிருந்தது


அங்கை பலஸ்தீனியர் கறுப்பர் என்று ..பல நாட்டுக்காரரும் அங்குமிங்குமாக போஸ்டர் பதாகைளையும் வைத்து ஏதோ செய்து கொண்டிருந்தனர்.... அந்த கட்டிடம் சுத்தபடுத்தாமாலும்... அந்த கட்டிட்டத்தில் red army என்று ஆங்கிலத்திலும் வேறு கோசங்கள் டொச் மொழியிலும் எழுதியிருந்தது...

அந்த கட்டிடத்தின் மூலையில் உள்ள பெரிய அறையில் பலர் விவாதம செய்து கொண்டிருந்தனர்...நீண்ட முடி தாடியுடனுமும்....பார்த்தால் பிச்சைக்காரர் போல் அவர்கள் உடையும் இருந்தது..

கண்ணன் அதிலிருந்த ஒருவனை அறிமுகபடுத்தினான்.. அவனை பார்க்க பயங்கரமாயிருந்தது....அவனது அடர்ந்த மீசை தாடிக்குள்ளால் அவனது பற்களைகளை காட்டி சிரிக்கும்பொழுது....ட்ரகுலா...கிறிஸ்ரோப்பர் அலி போல் இருந்தான் ...அவன் தனது காதலியை அணைத்தப்படியே....ஆங்கிலத்தில் கேட்டான்.....

பீர்..விஸ்கி...ஏதாவது...

அழகான ஆங்கிலத்தில் விவாதம். செய்தான்...செய்தோம்....அவன் ...ஒடுக்கபடும் மக்களுக்காக அவனுக்குள் இருக்கும் நேசத்தை பார்க்கும்போது பின்னர்....அவன் எனக்கு அழகாயே தெரி்ந்தான்....

ஊர்வலத்தில் எவ்வளவோ சனம் ..அமெரிக்காவுக்கு எதிரான கோப கொப்பளிப்பு.....அமைதியாக சென்ற ஊர்வலம் தீடிரென்று ..கலவரமாக மாறியது....கலகமமடுக்கும் பொலிசாரும் குதிரை படை பொலிசாரும் ...ஒரு புறமும் ...கண்ணீர் குண்டுகளையும் பொழிந்த படி மறுபுறமும்.....ஊர்வலத்தை சின்னாபடுத்தி கொண்டிருந்தனர்..... முதலாளித்துவம் தொழிலாளர்களிடமிருக்கின்ற பயத்தை காட்டிகொண்டிருந்தது...

அந்த அழகான மனிதனை பொலிசார் பிடிச்சு சென்று விட்டனர்

ஆனால் அடுத்த வருடமும் இதே போல் மே ஊர்வலம் நடக்கும்...

Friday, April 29, 2011

அரச குடும்ப திருமணம் -குதூகலத்தில் நம்மவர்கள்

 இன்று பிரிட்டனில் எல்லோரும் இந் நாட்டு மன்னர்கள் ஏனெனில் பொதுவிடுமுறை.பொதுவிடுமுறையின் காரணம் என்னவெனில் இன்று பிரிட்டன் அரச குடும்பத்தின் வாரிசுக்கு திருமணமாம்.இன்று நடைபெறும் இதே தேவாலயத்தில் தான் கொஞ்ச காலங்கள் முன்னதாக இந்த வாரிசு தாயாரின் உடலை வைத்திருத்த போது செய்வதறியமால் கண்ணீர் விட்ட காட்சி என் கண் முன் நிற்கிறது. பிரான்சில் கார் விபத்தில் தாய் இறந்ததாக கூறினாலும் ஏதோ சதியோ என் கேள்வி குறியாக இருந்தமை தான் காரணம்.இந்த அரச குடும்பத்தின் திருமணத்தை தங்கள் திருமணம் போல குதுகாலிக்கும் அரச குடும்ப விசுவாசிகளும் இதற்க்காக கோடிக்கணக்கான பணச் செலவு செய்வது வேறு காரணங்களுக்காகவும் எதிர்க்கும் ஒரு பகுதியினருமாக இத்திருமணத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வாரிசின் தாயார் தகப்பனாரும் திருமணத்துக்கு பின் முட்டி கொண்டு அதன் பின் நடந்த விபீரிதம் யாவரும் அறிந்ததே. இந்த வாரிசுவும் காதலியும் திருமணத்துக்கு முன்பே முட்டி மோதிய கதை கட்டுரைகள் பத்திரிகைகளில் படங்களுடன் வெளியாகி இருந்தன. இப்போழுது ஒருவாறு திருமணத்துடன் முடிந்து விட்டன வாழ்த்துக்கள் .இன்றைய மணமகள் சிறிது காலத்துக்கு முன்பு சாதாரண தரிப்பிட பரிசோதக தொழிலாளியுடன் முட்டி மோதிய கதைகளும் உண்டு.தரிப்பிட பரிசோதகரிடம் இன்றைய மணமகள் தான் இந்த நாட்டு முடி வாரிசின் காதலி நான் என சொன்ன் திமிரும் . நீ யாராய் இருந்தால் எனக்கென்ன என்னுடைய தொழில் இது. இந்தா உனது தண்ட பணத்துக்குரிய பற்றுச்சீட்டு சொன்ன அந்த தொழிலாளியின் தைரியுமும் இந்த சந்தர்பத்தில் ஞாபகத்துக்கு வருகிறது.

மூன்றாம் உலக நாடுகளில் உள்ள மக்கள் மட்டுமல்ல இந்த அறியாமையில் மூழ்கி இருப்பது ஏதோ வகையில் வளர்ந்திருக்கின்ற சொல்லப் படுகின்ற இந்த நாட்டிலும் இருக்கிறது. அரச குடும்ப திருமணத்தை தன் வீட்டு திருமணமாக பூரித்து ஒரு பொய்யான மகிழ்வில் மூழ்வதன் மூலம் தங்களிடமும் நிறைய அறியாமை இருக்கிறது என வெளிச்சம் காட்டி கொள்ளுகிறார்கள்.இவர்களுடன் இணைந்து கொள்ளுகிறார்கள் நம்மவர்களில் உள்ள வைற் கொலர்காரர்களும்..அவர்களின் குதுகாலிப்பே ஒரு தனி ரகம் ...அவர்களின் குதூகலிப்பை இணையத்தில் பார்த்தால் தெரியும் சந்தோசங்கள் மகிழ்ச்சிகள் பூரிப்புக்கள் கொட்டி குவிந்திருக்கிறது.

உலகம் முழுவதும் உலகத்தை ஒரு காலத்தில் ஆண்டு சுரண்டி களவெடுத்து கொழுத்து இன்று பல் விழுந்த கிழவி என்ற அடை மொழியோடு அழைப்படுகிறது இன்றைய பிரிட்டன் .கொழுத்து தினவு எடுத்த இந்த அரச பரம்பரை தனது திமிர் இன்னும் அடங்கவில்லை என அடிக்கடி இப்படியான வைபங்கள் நடக்கும் பொழுது காட்டி ஞாபக படுத்த முயற்சிக்கிறது . இந்த நாட்டில் அறியாமை மூழ்கி நிற்கும் சாதாரண மக்கள் மட்டுமல்ல. ஒரு காலத்தில் இந்த ஆண்டாருக்கு அடிமையாக இருந்து நல்ல சேவகன் என பெயர் எடுத்த நம்மவரும் இந்த குதூகலத்தில் மிகவும் முன் நிற்கிறார்கள் என்பது வருத்ததுக்குரிய செய்தி

இந்த அரச குடும்பத்துக்கு விசுவாசமாக காலம் காலமாக நம்மவர்கள் இருந்துள்ளார்கள். வரலாற்றில் பல கதைகள் உள்ளன.அவற்றில் ஒன்று ...அடங்காதமிழன் சுந்தரலிங்கம் என்ற ஒரு பழைய இலங்கை தமிழ் அரசியல்வாதி ஒருவர் இருந்தவர்.இது என்ன அடங்காதமிழன் என்றதுக்கு பின்னர் சொல்லுகிறேன். இந்த சுந்தரலிங்கம் இன்றைய பிரிட்டிஸ் மகாரணிக்கு கணித பாடம் சொல்லி கொடுத்தவராம் .இதனால் பிரிட்டிஸ் மகாராணி இலங்கைக்கு ஒரு முறை விஜயம் செய்த பொழுது தனது அரச குல திமிருடன் எல்லாருக்கும் தனது கையுறையுடன் கை குலுக்க ..இவருக்கும் மட்டும் தனது கை உறையை கழட்டிய பின்னர் கை கொடுத்தாவாம் ,,,இந்த பெருமையை தங்களுக்கே தந்ததாக பெருமை கொள்ளும் நம்மவர்கள் காலம் காலமாக சொல்லி மகிழ்ந்து தங்களையும் தங்கள் உரிமைகளையும் இழந்தார்கள்.

இந்த சுந்தரலிங்கம் மாவிட்டபுரக் கோவில் ஆலய பிரவேசத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்களில் ஒருவர்.இந்த பிரவேச பிரச்சனையில் தனக்கு எதிரான பாதகமான நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அரச குடும்பத்தின் செல்வாக்கை பாவிக்க முனைந்தவர் என்ற தகவல் உண்டு .


இந்த so call நன்கு படித்த அரசியல்வாதி என்று சொல்லப்படும் இந்த சுந்தரலிங்கத்தை ஏன் அடங்காதமிழன் என்று அழைத்தார்கள் என்பதை இப்போழுது சொல்லி விடுகிறேன் .இலங்கை பாரளுமன்றத்தில் சபாநாயகர் இவரை வெளியேற்றிய பொழது வெளியேற மறுத்து இருந்தார் ,அவரை பாரளுமன்ற காவலர்கள் கதிரையுடன் தூக்கி கொண்டு போய் வெளியில் வைத்தார்களாம்.அத்துடன் அந்த காலம் மனோவசிய கலைகளான ஹிப்னாடிசியம் மெஸ்மரிசம் போன்றவற்றை தெரியாத காலம் ஆனால் இவர் கற்று தேர்ந்து இருக்கிறார் .அதன் உதவியுடன் பாரளுமன்றத்தில் சபாநாயகருடன் நடந்த கருத்து மோதலின் போது தனது கடைசி அஸ்திரமாக தனக்கு தெரிந்த மெஸ்மரிச கலையை பாவித்து இருந்தார் .அதனால் சபாநாயகர் மயங்கி விழுந்திருக்கிறார் ..அதனாலும் இவரின் பெருமை ஓங்கி இருக்கிறது


அன்று தொடங்கிய நம்மவர்களின் பிரிட்டிஸ் அரச விசுவாசம் இன்றும் தொடருகிறது .அந்த விசுவாசம் இருப்பதில் பெருமை கொள்ளுகிறார்கள் ,அந்த பெருமைக்குரிய ஆண்டைக்கு நல்ல பெருமைக்குரிய அடிமையாக இருப்பதில் பெருமை கொள்ளுகிறார்கள் .பக்கிகாங் அரண்மனை யன்னல் கதவடியில் இந்த புதிய அரச வம்ச திருமண ஜோடி வழங்கும் பகிரங்க திருமண முத்தத்தை காண வெளியில் திரண்டு காத்திருக்கும் இந்த முட்டாள் மக்கள் கூட்டத்துடன் இவர்களும் காத்து இருக்கிறார்கள் ,அந்த முத்தத்தை கண்ட தரிசனத்தில் சந்தோசத்த்தில் தாங்கள் கொடுத்த சொந்த முத்தங்களை கூட மறந்தே போயிருப்பார்கள்.

பூரிப்பில் திகழும் இந்த பெருமைக்குரிய அரச குடும்ப விசுவாசிகளை வாழ்த்துவதோடு இந்த புதிய திருமண தம்பதிகளை எனது பங்குக்கு வாழ்த்துகிறேன் ,


பிரிட்டன் அரச குடும்ப திருமணம்: செலவு செய்வது யார்? என்று தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்

Thursday, April 07, 2011

கிட்டடியில் தமிழ் நாட்டில் தேர்தலாமே?


இடம் இருந்து வலமாக சாவச்சேரி நவரத்தினம் எம்பி ,தந்தை செல்வா,அமிர்தலிங்கம் நேருவும் இந்திராகாந்தியும் இலங்கை வந்த போது)


தமிழ்நாட்டு தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் தருணத்தில் இந்த தமிழ்நாட்டு வர்த்தக சஞ்சிகைகள் பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களின் தாக்கங்களினால் இலங்கை தமிழர்களையும் பாதித்திருப்பது தவிர்க்க முடியாதவை தானே. சஞ்சிகைகள் பத்திரிகைகள் என்பவற்றின் தாக்கத்தினால் தமிழ்நாட்டு அரசியலை இலங்கை தமிழர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர் தமிழ்நாட்டு தமிழர் இலங்கை அரசியலை தெரிந்து வைத்திருந்ததை விட கூட என்று கூறலாம்.




70 களில் தந்தை செல்வாவின் இறுதி சடங்குக்கு எம்ஜீஆர் வருவார் என யாழ் மக்கள் எல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள்.ஆனால் வந்தவர்கள் அதிமுக சார்பில் நாஞ்சில் மனோகரனும் திமுக சார்பில் ஒருவரும் வந்திருந்தார்கள் .தெல்லிப்பளை தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்துக்கு முன்னர் காரில் கறுத்த கண்ணாடியும் கையில் மந்திரக்கோலுடன் ஏற முற்பட்ட நாஞ்சில் மனேகரனை வழி மறித்த ஒரு இளைஞர் ஆசைத்தம்பி சுகமா என்று கேட்டார். இப்படியொரு கேள்வியை அதுவும் யாழ்ப்பாணத்தில் தன்னிடத்தில் செலுத்துவார்கள் என நாஞ்சில் மனேகரன் எதிர்பார்க்கவில்லை .என்றாலும் நாஞ்சில் மனோகரன் தன்னை சுதாகரித்து கொண்டு ஆசைத்தம்பியை என்ன ஆஸ்பத்திரியிலா விட்டு விட்டு வந்திருக்கிறேன் என நக்கலாக பதிலை சொல்லி சமாளித்து கொண்டார்.

இந்த இளைஞரின் கேள்வியும் இப்படியான நாஞ்சில் மனேகரனின் பதிலும் ஏன் என்பது பலருக்கு விளங்காமல் இருக்கலாம் அல்லது மறந்து இருக்கலாம். செல்வாவின் மறைவுக்கு சிறிது காலத்துக்கு முன்னர் நடந்த லோக்சபா தேர்தலில் எம்ஜிஆரின் அலை காரணமாக 38 தொகுதிகளிலும் அதிமுக வெல்ல. அதிமுக பிரபல பிரமுகரான நாஞ்சில் மனோகரன் மிச்சமுள்ள ஒரு தொகுதியான வட சென்னையில் திமுக வேட்பாளர் ஆசைத்தம்பியிடம் தோற்றிருந்தார்.நாஞ்சில் மனேகரன் இந்த சம்பவத்துக்கு பின்னர் தமிழர் விடுதலை கூட்டணி வட்டாரங்களில் கூறியதாக கேள்வி. யாழ் இளைஞர்கள் நன்கு தமிழ்நாட்டு விபரங்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டாராம்.அன்றல்ல இன்றும் இலங்கை தமிழர்கள் மத்தியில் தமிழ்நாட்டு தேர்தல் மற்றும் அரசியலை உற்று நோக்குவது தவிர்க்க இயலாமல் தான் இருக்கிறது.



அப்போதைய இலங்கையின் உள்ளூராட்சி மந்திரியாக இருந்த தமிழரசுகட்சியை சேர்ந்த திருச்செல்வம் கருணாநிதியுடன்



மிக உலக பிரசித்திபெற்ற வழக்கறிஞர் ஜிஜி பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று சமஸ்டிக்கட்சி அல்லது தமிழரசு கட்சியை எஸ்.ஜே,வி செல்வநாயகம் ஸ்தாபித்தார் .ஜிஜி பொன்னம்பலத்தின் 50க்கு 50க்கு கோரிக்கையை நிராகரித்து சமஸ்டி கோரிக்கையை வைத்தார். அதன் தலைவர் எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்களின் முன்னுள்ள எஸ்.ஜே என்ற விரிவாக்கமான சாமுவேல் ஜேம்ஸ் என்ற கிறிஸ்த்தவ பெயர்கள் காரணமாக பிரச்சனைக்குள்ளானார்.

யாழ் உயர் இந்துத்துவ சிந்தனையுள்ள தமிழ் காங்கிரஸினர் இந்த விடயத்தை ஒரு ஆயுதமாக கையில் எடுத்து செல்வநாயகம் தமிழருக்கு தலைமை தாங்க தகுதி இல்லாதவர் என பிரச்சாரம் செய்தனர் .அப்பொழுது தமிழ்நாட்டில் எழும்பிய திராவிட எழுச்சி அல்லது திராவிட முன்னேற்றகழகத்தின் எழுச்சி இலங்கையில் தமிழரசு கட்சியினருக்கும் உதவியது என்பதை மறுக்க முடியாது.திராவிட முன்னேற்ற கழகத்தினரின் போராட்ட முறைகளை தாங்களும் பின்பற்றியது மட்டுமன்றி அவர்கள் மாதிரியே மேடைப்பேச்சுகளை பேசி மக்களை உசுப்பேத்தினர்.மொத்தத்தில் தமிழ்நாட்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் நகலாக இங்கு இருந்தனர் என்று சொல்லலாம்.

so call சுதந்திர இந்தியாவிற்குக்கு முற்பட்ட காலத்தில் பிரிட்டிஸாரால் உருவாக்கப்பட்ட காந்தி நேருவின் காங்கிரஸ் கட்சியிலும் பார்க்க தமிழ் நாட்டில் ஒரு காலகட்டத்தில் இடதுசாரிகள் வலுவாக இருந்தார்கள் என்று கூறுவோர்களும் உளர்.அது போல யாழிலும் உந்த தமிழரசுக்கட்சியின் எழுச்சிக்கு முன்னர் இடதுசாரிகளின் அலை இருந்தது என்று சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள் .so call சுதந்திர இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் வடக்கில் பருத்தித்துறை தொகுதியில் கம்னீயூஸ்ட் கட்சியில் கந்தையா அமோக வெற்றி பெற்றிருந்தார் .அத்துடன் ட்ரொக்ஸிய சிந்தனை நிரம்பிய என்.எம் பெரேராவின் சமசமாஜக் கட்சிக்கும் யாழில் பல இடங்களில் மிக்க ஆதரவு இருந்திருக்கிறது என்று கூறுவோர் உளர் .

பிற்க்காலத்தில் தமிழர் கூட்டணி தலைவராக இருந்த சிவசிதம்பரம் தோழர் கந்தையாவின் அரசியல் பாசறையில் இருந்து தான் வந்தவர் என கூறுவர் உளர். இப்ப இருக்கிற ஆனந்தசங்கரி முன்னர் சமசமாஜக்கட்சியில் போட்டியிட்டவர் .இப்படி வடக்கில் இடதுசாரிகளுக்கு தமிழர்கள் ஆதரவு வழங்கி இருந்தாலும் பின்னர் வடே தோசை அபிட்ட எப்ப (வடை தோசை எங்களுக்கு வேண்டாம்)என்று கோசம் போட்டு தமிழருக்கு எதிராக ஊர்வலம் போனவர்கள் என்று தமிழர்கள் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டும் உண்டு.


தமிழரசுகட்சி தமிழர்விடுதலை கூட்டணியான பிறகு யாழ் முற்றவெளியில் நடந்த கூட்டத்தை பார்த்த நீயூஸ்வீக சஞ்சிகையின் நிருபர் ஒருவர் எழுதி இருந்தார் .கறுத்த கோட் போட்டு வழக்கறிஞர் தொழிலாக கொள்ளும் இந்த தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் வாய்ச்சவடால் பேச்சின் மூலம் தமிழ் மக்களை தங்களுக்குள் அதிசயக்க வகையில் கட்டுகுள்ளாகிறாக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டார். இந்த நிருபர் இந்த பேச்சு வழிமுறையின் அசல் சொந்தக்கரார்களான திராவிட முன்னேற்ற கழகத்தினரின் பேச்சுக்களை பார்க்கவில்லை போலும்

. 70 களில் தமிழர் கூட்டணி மேடைகளில் பிரபல மேடை பேச்சாளராக வண்ணை ஆனந்தன் என்றொருவர் இருந்தார் இவரின் பேச்சினால் பல இளைஞர்கள் கவரப்பட்டார்கள் . அதனால் முட்டாள் தனமாக உணர்ச்சி வசப்பட்டார்கள். இரத்தத்தால் நெற்றி பொட்டு இட்டார்கள்.இவரின் பேச்சு வழமையான பேச்சில் இருந்து வித்தியாசமான முறை இருந்தது என்பது உண்மை தான் . பின்னர் தான் அறியகூடியதாய் இருந்த்து. தந்தை பெரியாரின் பேச்சு ஸ்டைலை பின்பற்றியிருந்தாராம். இவர் மேடை நாகரிகமின்றி துப்பி பேசுவார் . பெரியார் இப்படி பேசினாரோ தெரியாது. வண்ணை ஆனந்தனின் பேச்சு போலத்தான் இன்று சீமான் அவர்கள் தன் பேச்சினால் இளைஞர்களின் நரம்புகளை முறுக்கேற்ற வைக்கிறார் .காலம் காலமாக உலகத்தில் தமிழன் எங்கை வாழ்ந்தாலும் உந்த உசுப்பேற்றிய பேச்சை நம்பியே ஏமாந்து போவதை வழக்கமாக கொண்டிருக்கிறான்.

இலங்கை தமிழரசுக்கட்சியினர் எப்பொழுதும் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு தான் விசுவாசமாகத்தான் இருந்துள்ளனர் என்று சொல்லலாம் .எம்ஜீஆர் மலையாளி என்பதால் ஒரு அவ நம்பிக்கை காரணமாக இருந்திருக்கலாம் .அதற்க்கு சில உதராணம் கூறலாம் கருணாநிதியின் ஊழல் குற்றசாட்டு காரணமாக அப்பொழுது சன்சோனி கமிசன் அமைத்திருந்தார்கள் ..பிற்கால்த்தில் தமிழர் கூட்டணியில் இணைந்திருந்த உலக பிரபல வழக்கறிஞர் ஜீஜீ பொன்னம்பலம் கருணாநிதிக்காக வழக்காட இந்தியா சென்றமை . எம்ஜீஆர் ஆட்சி காலத்தில் மதுரையில் நடந்த தமிழராய்ச்சி மகாநாடு நடைபெற்றது .அந்த காலம் திமுக என்றாலும் சரி அதிமுக என்றாலும் சரி ஈழ அரசியலை தவிர்த்து அரசியல் நடத்த முடியாத நிலைமை. அந்த தமிழாராய்ச்சி மகாநாட்டுக்கு அமிர்தலிங்கம் தமிழர் கூட்டணி தலைவர்கள் சென்று இருந்தனர்.இவர்களுக்கு வசதி அளிப்பதற்க்கு வரவேற்பதற்க்கு இரு கழகத்தவரும் போட்டி போட்டனர்.எம்ஜீஆர் இவர்களுக்கு என்று பிரத்தியேகமான கார் வசதிகள் போன்றவற்றை அளிப்பதுக்கு ஏற்கனவே ஒழுங்கு படுத்தி வைத்து இருந்தார் .ஆனால் தமிழர் விடுதலை கூட்டணியினர் தங்களுக்குள்ள திமுக விசுவாசம் காரணமாக திமுகவினரினர் காரில் சென்றமையால் எம்ஜீஆரை கடுப்பாகிய நிலைமையும் நடந்ததுண்டு.

இலங்கையில் சிங்களவர் பெரும்பான்மையாராக இருந்தாலும் தமிழ்நாட்டு தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டு அரசியல் காரணமாக இந்துசமுத்திர பிராந்தியத்தில் அவர்களிடம் சிறுபான்மை உணர்வே மேலோங்கி இருந்தது .இப்பொழுதைய தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் நடவடிக்கையின் காரணமாக அவர்களிடம் அந்த பயம் நீங்கியுள்ளது.அத்துடன் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளை கோமாளிகளாக பார்க்கும் நிலமையே இப்பொழுது ஓங்கி உள்ளது.


ஒரே குட்டை ஊறிய மட்டைகளுக்கு காலமாக காலமாக மாறி மாறி வாக்கு அளித்து தமிழ்நாட்டு மக்களுக்கும் இன்னும் விடிவில்லை. உலக தமிழ் மக்களுக்கும் விடிவில்லை .மாற்று அரசியலை விரும்பி ஒரு மாற்றத்தை விரும்புவர்கள் கூட தேர்தல் பாதையைத்தான் காட்டுகிறார்கள் .உது சாதாரண மக்களுக்கு ஒரு விடிவை தராது என்பது தான் நிதர்சனம்

Monday, March 21, 2011

மதிப்புக்குரிய திருவாளர்களை சந்தித்த பொழுது

சூரியன் மறையாத தேசம் என்று ஒருகாலத்தில் சொல்லப்பட்ட நாட்டுக்கு வந்து கொஞ்சகாலம் தான் ஆகிறது . இதற்க்கு முன்பு ஜரோப்பாவில் ஒரு நாட்டில் ஒரு குக் கிராமத்தில் நீண்ட காலம் நாட்களை கடத்தி துரத்தி ஏனோ தானோ வாழ்ந்து கொண்டிருந்தேன்.இந்த லண்டனில் செட்டில் ஆக வேண்டும் என்ற எனது குடும்பத்தினரின் நச்சரிப்பு காரணமாக ஆங்கில கால்வாயை கடந்து வந்த காலம் . அங்கை இடது இங்கை வலது கார்கள் ஓட்டும் முறை மட்டுமல்ல செல்லும் பாதை வழி முறைகளிலும்...பாதையை கடப்பது கூட மிகவும் கடின முயற்ச்சி எடுத்து தான் கடக்க வேண்டும். றோட்டில் எழுதி இருக்கும் வலது பக்கம் பார்த்து கடக்கவும் என்ற வாசகத்தை பார்த்து கடக்க வேண்டிய காலம். அந்த காலம் எப்பவென்றால் பன்னிரண்டு பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர்.


இந்த நாட்டு சூழ்நிலைக்கு உடனடியாக மாற முடியாமால் திண்டாடி கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள் , வெளியில் உலாவ சென்றேன் உடல் ஆரோக்கியத்துக்கு மன்றி மன ஆரோக்கியத்துக்கு நல்லது என்று கூறிக்கொண்டு .ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல இந்த திருவாளர்களை எங்கையாவது சந்தித்தால் எப்படி இருப்பார்கள் என்று பார்ப்பம் என்று,

. பொழுது போகாமால் இருந்த படியால் பொழுது போக்க அன்று முதல் நாள் இரவு ஒரு வீடியோ கசட்டை போட்டு பார்த்ததிலிருந்து அவர்களை பார்க்க வேணும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டு இருந்தது ,அது ஏன் ஏற்ப்பட்டது என்று நினைத்து எனக்கே சங்கடமாயிருந்தது. லண்டனில் பார்க்க எவ்வளவு விசயங்கள் இருக்கும் போது அதை விட்டுட்டு இதை என்று.

சரத்குமார் ராதிகா விவேக் மற்றும் தென்னிந்திய கலைஞர்கள் பங்கு பற்றிய நிகழ்ச்சி அந்த வீடியோவில் .அந்த நிகழ்ச்சி லண்டனில் உள்ள பிரபலமான வெம்பிளி ஸ்டேடியத்திலுள்ள மண்டபத்தில் நடைபெற்றது.அந்த நிகழ்ச்சியில் இடையிடையே வந்து விவேக் விதூசகனாக வந்து சிரிப்பூட்ட முயற்சி செய்து விட்டு போவார் . சிரிக்க தெரியாத இளைஞர்களோ அல்லது மற்றவர்களை எப்பவும் குழப்பத்தில் ஆழ்த்துவதில் சந்தோசமடையும் சில இளைஞர்களோ தெரியவில்லை
கூக்குரல் போட்டு குழ்ப்பி கொண்டே இருந்தார்கள். ஆனால் இந்த நடிகர் விவேக் இந்த நிகழ்ச்சிக்கு வரும் முன்பே இவர்களை பற்றி விபரம் சேகரித்து விட்டார் போலும். வெம்பிளி ஓகேயா , ஹரோ ஓகேயா ஈஸ்ட்ஹாம் ஓகேயா, மற்றும் வேறும் சிலவற்றைக் கூறி அவர்களை குளிர்ச்சீயூட்டி மகிழ்வூட்டி சாந்தப் படுத்தி கொண்டிருந்தார் .விவேக் இந்த நாட்டிற்க்கு வந்து இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மதித்து போற்றியது யாரை என்று நினைக்கிறீர்கள் ? அவர்கள் தான் லண்டன் வாழ் திருவாளர் தமிழ் இளைஞர் கோஸ்டியினர்.

விவேக் கூறிய ஓகேயா ஓகேயா என்றது லண்டனிலுள்ள இடங்களின் பெயர்கள் என்றாலும் அவை அந்த இளைஞர்கள் கோஸ்டியினர்களுக்கு உரித்தான பெயர்கள். இந்த நாட்டில் முடியாட்சி முறை முற்றும் இல்லாமால் போகவில்லை உணர்த்துவதுக்காவோ என்னவோ தெரியவில்லை. அவர்கள் லண்டனிலுள்ள மேற்கூறிய ஊர்களில் எல்லைகளை வகுத்து சேர சோழ பாண்டியர்களாக அரசோட்சி கொண்டிருந்தார்கள்.அவ்வளவுக்கு அவர்களின் ஆதிக்கம் நிலவி வந்தது .அரசோட்சுபோது படைகள் வேண்டாமா ? ஒவ்வொரு குழுவும் எவ்வளவுத்துக்கு தங்கள் குழுக்கு ஆட்களை சேர்க்க முடியுமோ அவ்வளவு இளைஞர்கள் இளைஞிகளை சேர்த்தார்கள் .படைகள் இருந்தால் மட்டும் போதுமா ஆயுதங்கள் வேண்டாமா ?வைத்திருந்தார்கள் அவர்களுக்கு இந்த நவீன ஆயுதங்களில் நம்பிக்கையுமில்லை விரும்பமில்லையும் போலும் .கத்தி அரிவாள் கோடாரி போன்ற பாரம்பரிய ஆயுதங்களை அதிகம் கைவசம் வைத்திருந்தார்கள்

அரசர்கள் மாதிரி இருந்தால் போதுமா? அதை மாதிரியான அல்லது ஒத்த தன்மையான அணிகலன்கள் அணிய வேண்டாமா?..அணிந்திருந்தார்கள் காதிலை மூக்கிலை வாயிலை உடையிலை எல்லாத்திலையும் வித்தியாசம் காட்டி கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு குழுவுக்கு இடையில் இந்த விசயத்தில் கூட குறைய என போட்டி இருப்பதால் காலத்து காலம் வித்தியாசமாக தோற்றமளித்து கொண்டிருந்தார்கள். இளைஞர் கோஸ்டியினரின் அங்கம் வகிக்கும் தனி உறுப்பினர் எதோ விசயத்துக்காக எல்லையை தாண்டி வந்து மற்றவர்களிடம் மாட்டுப் பட்டால் ஒற்றனோ என ஜயப்பட்டு படுமோசமாக நையபுடையப் படுவார்கள்

.இவர்களின் குழுவில் சேருவதுக்காகவே நன்கு படித்த இளைஞர்கள் கூட படிப்பை நிற்ப்பாட்டிய சம்பவம் கூட நடந்து இருக்கிறது .பெரியவர்கள் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று எல்லா வகைப்பட்டவரும் இவர்களைக் கண்டால் மூக்கை பொத்தி வாயை மூடி பவ்வியமாக நடக்க வேண்டி இருந்தார்கள். காளை அடக்குபவன் தான் வீரன் அவனில் தான் பெண்கள் விருப்ப படுவார்கள் என தமிழ் சமூகத்தில் ஒரு காலம் இருந்ததாம். லண்டன் வாழ் டீன் ஏஜ் பெண்களும் எந்த இளைஞர் கோஸ்டியினர் மிகவும் வலுவாக இருக்குதோ அதில் மயங்குபவர்களாக இருந்திருக்கிறார்கள் .இதன் மூலம் கல்வி செல்வம் வீரம் எது சிறந்தது என்றதுக்கு லண்டன் வாழ் இளைஞிகள் சிலர் வீரம் என்ற விடையை செலுத்தி கொண்டிருந்தார்கள்.


இந்த திருவாளர்களின் மகோன்மியத்தை காதுவெளி செவ்வியாக கேள்விபட்டதுவே நான் மேற்கூறியவை ,,அந்த சூப்பர் மார்க்கட்டுக்கு செல்ல அந்த நகரத்திலுள்ள உள்ளூராட்சி சபையால் பேணப்படும் அந்த பார்க்கை பாவிப்பது வழக்கம் .அந்த சன வாகன நெருக்கடி மிகுந்த நகரத்தில் அந்த பார்க்கில் மட்டும் இருக்கும் அந்த தனிமை அந்த ஏகாந்தம் எனக்கு ரம்மியமாக இருக்கும் அந்த பார்க்கோடு சேர்த்து தான் சவக்காலையை வைத்திருக்கிறார்கள் ஏனோ தெரியவில்லை .தூரத்தில் சிறுவர்கள் கோடைக்கால சந்தோசத்தை அனுபவித்து கால் பந்து விளையாடி கொண்டிருக்கிறார்கள் .பார்க்கில் ஒரு சில வயோதிப தம்பதிகள் இருக்கும் சில காலங்களை ஒவ்வொரு கணமாக உலகை ரசித்து கொண்டு இருந்தனர்.பார்க்கை கடந்து அந்த மூலைக்கடையில் பியரை வேண்டிக்கொண்டு அதே பார்க் இட பரப்பூடாக திருப்பி கொண்டிருந்தேன் ,இப்பொழுது பார்க்கின் காட்சியோட்டமே மாறி இருந்தது .அநேகர் இப்ப அங்கங்கே குழுமி இருந்தனர் .

புலம் பெயர்ந்த பின்னர் விஸ்கி பிராண்டி வோட்கா எல்லா வகைகளையும் ஒரு அளவுக்கு மேல் பதம் பார்த்திருக்கிறேன் இப்ப உடலும் வீட்டு சூழ்நிலையும் இடம் கொடுக்காதாதால் கொஞ்சம் காலமாக பியரில் இறங்கி வந்த நிலமை . நாங்கள் விஸ்கி பிராண்டி முழுசாக குடிப்பதை பார்த்து ஒரு வெளிநாட்டு வெள்ளைக்காரனே ஒரு தரம் கூறியது ஞாபகம் .இந்த சிறிலங்காகாரனைப் போல இப்படி முழுசா விஸ்கி குடிக்கிறவனை உலகத்திலை ஒருதரையும் பார்க்கவில்லையென்று. பியர் மட்டுமே குடிக்கிற ஆள் என்று என்னை சீப்பாக நீங்கள் நினைக்க கூடாது என்றதுக்கு தான் மேல் கூறிய எனது மகோன்மியம் .

ரம்மியமாக வீசும் இந்த காற்றை அனுபவித்துக்கொண்டு இந்த பியரையும் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து குடிப்பம் என்று ஒரு மரத்துக்கு கீழுள்ள ஒரு தனி இருக்கையில் அமர்ந்து இருந்தேன்,இருக்கையோடு அண்மித்து மூன்று பக்கம் மூடி ஒரு பக்கம் திறந்த இருக்கைகள் அமைந்த கட்டிடம் இருந்தது, நான் இருக்கும் இடத்தில் இருந்து பார்த்தால் அங்கால் பக்கத்தில் நடப்பது தெரியாது .ஆனால் சில தமிழும் ஆங்கிலமும் கலந்த குரல்கள் கேட்க தொடங்கின. அந்த குரல்களின் வகைகள் அதிகாரம், குழைவு, நமுட்டு சிரிப்பு, நளினம், நக்கல் எல்லாம் கலந்தனவையாக இருந்தன.அந்த குரல்கள் ஆண்களினதும் பெண்களினதும் உடையதாகவும் இருந்தது, நான் பார்க்கவேண்டும் ஆவலோடு இருந்த மதிப்புக்குரிய திருவாளர்களோ என்ற ஜயமும் சந்தோசமும் ஏற்பட்டது.

ஜெர்மன் ஊடகவியளார் ஒருவர் ஜெர்மனில் வாழும் கறுப்பினத்தவர்களின் வாழ்க்கை முறையை அறிவதற்க்கு தன்னை கறுப்பு இனத்தவன் மாதிரி உருமாற்றி அவர்களோடு இணந்து தகவல்களை அறிந்திருந்தார் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள் . நானும் சிலவேளை இந்த இளைஞர் கோஸ்டியில் சேர்ந்து இவர்களின் மகோன்மியத்தை அறிய வேணுமெண்டும் ஆசைப்பட்டதுண்டு, இந்த எனது மனசு இருக்கே நடைமுறைக்கு உதவாத விசயத்தையும் சில வேளை கற்பனை செய்வதுண்டு .இளைஞனை கடந்து இப்ப் இருக்கும் எனது நடுத்தரவயது தோற்றம் பொருத்தமாயிருக்காது என்று எனது மனசுக்கு சொல்லி சமாதானம் சொல்லிய காலங்களுமுண்டு.

இப்படி எனது மதிப்புக்குரிய திருவாளர்களுக்கு மிகவும் அண்மையில் நிற்கிறேன் என்று உணரும் போது புளகாங்கிதமாக இருந்தது.இருக்கும் இடத்தில் இருந்து அவர்களை பார்க்க முடியாமால் இருந்தாலும் அவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்று அறிய எனது காதை நீட்டினேன் .அவர்கள் ஆங்கிலத்தை தவிர்த்து பேசும் தமிழ் வார்த்தைகள் சாதாரணமாக மக்கள் பாவிக்காதவை .ஆனால் நடிகர் வடிவேலு அறிமுக படுத்தும் வசனங்கள் மாதிரி அவர்கள் பயன் படுத்தும் சொற்றொடர்கள் ரசிக்க கூடியதாகவும் இருந்தது. இப்படி புதிய தமிழ் சொற்களை எல்லாம் அறிமுகபடுத்தி இந்த தமிழ் மொழியை செழுமை படுத்தும் இந்த திருவாளர்களை தரிசித்து செல்வதென்றே முடிவு கட்டி விட்டேன். எழுந்து பார்ப்போம் என்று ஒரு கணம் யோசிப்பேன் மறுகணம் இருந்து விடுவேன் அது நாகரிகமில்லை என.

தீடிரென பேசி கொண்டிருந்தவர்களிடையே தீடிரென ஒரு அமைதி பின் ஓர் இரு வார்த்தைகள் அதில் மாமா நிற்கிறார் . தமிழ் மூன்று எழுத்து ஒன்று அங்காலை நிற்குது போலை என்று வார்த்தைகள் அடிபட்டன.இன்னொரு குரல் ஒன்று கேட்டது இப்ப இங்கத்தை பொலிசிலை-தமிழ் ஆக்களும் இருக்கினம் எங்களை பலோ பண்ண ,அவனோ தெரியாது அங்காலை இருக்கிறது என

ஒரு அதிகார குரல் விம்பி வெடித்தது யாரது பார்ப்பம் தூக்கத்தான் இருக்கு; .தூக்கிறது எல்லாம் இயக்க காலத்திலை உருவான சொற்கள் எனக்கு பழக்கமான சொற்களும் கூட. .ஆனால் என்னை பற்றித்தான் பேசுகிறார்கள் என இந்த ரூயூப் லைட்டுக்கு ஒரு கணம் பிந்தி தான் விளங்கியது .அந்த கணம் முடிவதற்க்குள் திருவாளர் கோஸ்டி தலைவர் தீடிரென்று என் முன்னே காட்சியளித்தார்.நான் கேள்விபட்டு மனம் கண்ணால் உருவகபடுத்தி வைத்திருந்ததிலும் பார்க்க மிகவும் கம்பீரமாகத் தான் இருந்தார் .குரலில் மிகவும் கடுமை இருந்தது ,பியர் அடிக்கிற சாட்டிலை எங்களை பலோ பண்ணிறீரோ ,நீர் மாமாவோ மூன்று எழுத்தோ யாராக இருந்தாலும் பரவாயில்லை .எங்களை ஒன்றும் செய்ய இயலாது ஏன் என்றால் இந்த நாட்டில் பிறந்தவர்கள் .வேணுமெண்டால் மாமி வீட்டுக்கொண்டு போய் மூன்று நாள் அல்லது மூன்று மாதம் வைத்திருந்தீர்களில்லை என்று சொல்லி கெக்கரித்து சிரித்தான்..

அட பாவி உங்களை தரிசிக்க இவ்வளவு நாள் துடித்த என்னை மூன்று எழுத்து என்று சந்தேகிக்கலாமோ எனது மனது துடித்தது.இப்பொழுது அந்த மற்ற இளைஞர் இளைஞிகள் முற்றும் முழுதுமோ சூழ்ந்து கொண்டார்கள் .மாறி மாறி கேள்விகள் அதற்க்கு எனது அப்பாவித்தனமான பதில்கள் ..இடை இடையே டெலிபோன் அழைப்புகளை மேற் கொள்ளுகிறார்கள் டெலிபோன் அழைப்பை ஏற்று கொள்ளுகிறார்கள் . என்னை என்ன செய்யவேண்டும் என்பதை முடிவு கட்ட மத்திய குழுவோடையோ தலமைபீடத்துடனோ கதைக்கிறார்களோ என ஜயம் ஏற்பட்டது.என்னை அசைய வேண்டாம் உதிலை இரும் என்று கூறி மூன்று பேரை என்னை சுற்றி காக்க வைத்து விட்டு தூரத்தில் நீண்ட விவாதம் செய்து கொண்டிருந்தனர் . முடிவெடுத்திட்டினம் போலை ஒருத்தி எனது அருகில் வந்து ஜயா உங்களை பார்த்தால் அப்பாவி மாதிரி தான் இருக்கு. உங்களுக்கு ஒன்று செய்யவில்லை உங்களை விடுறம் என்று. சொல்லிப்போட்டு ஒரு கண்டிசன் என்றாள் ..நாங்கள் இப்ப இந்த இடத்தை விட்டு போறம் அரை மணித்தியாலத்துக்கு நீங்கள் இந்த இடத்தை விட்டு அசையக் கூடாது கை தொலைபேசி பாவிக்க கூடாது..நீங்கள் இந்த கண்டிசனை மீறுகீர்களோ என ஒரு ஆள் உங்களை தூரத்திலே இருந்து பார்த்து கொண்டிருப்பார் என்று.

எனக்கு அடித்த பியரால் ஏற்படும் உற்சாகம் தீடிரென இறங்கி விட்டது .அந்த அரைமணித்தியாலத்தில் அங்கேயே இருந்து மீண்டும் ஒரு பியர் குடிக்க சந்தர்ப்பம் தந்த திருவாளர்களுக்கு நன்றி சொல்லி கொண்டேன்

இவர்களின் தரிசனம் அருள் கிடைத்த பிறகு இவர்களை பற்றிய பயம் அவ்வளவு இல்லை..ஆனால் இவர்களின் வீர பிரதாபங்கள் அட்டாகசங்கள் அயோக்கியதனங்கள் பற்றி தமிழ் வட்டாரங்களை தாண்டி ஆங்கில ஊடகங்களும் பேச தொடங்கி இருந்தன

லண்டன் பொலிஸ் குற்ற தடுப்பு ஆணையாளர் ஒரு அறிக்கை விட்டார் இந்த இளைஞர் கோஸ்டி பற்றி இந்த நாட்டில் பிறந்தவர்களாயும் இருந்தாலும் இந்த நாட்டு குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும் இவர்கள் தொடர்ந்து இந்த சமூக சீரழிவை செய்வார்களாயிருந்தால் இவர்களை சிறிலங்காவுக்கு எவ்வித தயக்கமின்றி நாங்கள் நாடு கடத்துவோம்

இந்த ஒற்றை அறிக்கை இவ்வளவு பவுர் புல் ஆக இருக்கும் என்று நான் அப்பொழுது நினைக்கவில்லை .இந்த அறிக்கைக்கு பின்னர் இந்த திருவாளர்கள் முடி துறந்து நாடு துறந்து வனவாசம் போவார்கள் என்று . இந்த திருவாளர்கள் இப்ப கூட்டமாக காண கிடைப்பதில்லை ...இவர்களின் அட்டாகசமும் குறைந்த சந்தோசம் லண்டன் வாழ் மக்களிடையே..

அன்றைக்கு ஒரு நாள் என்னை விசாரித்த குழு தலைவர் சிங்களாய் சென்று கொண்டிருந்தார் ,சிங்கமாய் இல்லை .என்னை கண்டவுடன் கூனி குறுகிக் கொண்டு










\

Wednesday, March 16, 2011

ஊருக்குள் புகுந்த கடல்



இயற்கையின் சீற்றத்தினால் நிலம் அதிர்ந்தது, கடல் ஊருக்குள் புகுந்தது,.ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அழிவு, பெரும் சொத்து நாசம் இதுவெல்லாம் அண்மைக்கால செய்திகள் .அதன் உச்சகட்டமாக ஜப்பானில் நடந்த அண்மையில் நடந்த அழிவினால் ஒரு முறை அணுகுண்டால் அழிந்த அந்த நாட்டில் இன்னுமொரு அணு கதிர் கசிவு ஏற்பட போகுது என்ற செய்திகள்.அந்த நாட்டை கடந்து தங்கள் நாட்டுக்கு வந்துடுமோ என்று அஞ்சு நாடுகள். தங்களுக்கு இந்த பிரச்சனையால் ஒரு ஆபத்து இல்லை என்று தங்களை தாங்களே சமாதானப்படுத்தும் நாடுகள் . இவையை பற்றித்தான் இந்த டிவி பத்திரிகை மற்றும் எல்லா தொடர்புசாதனங்களில் எல்லாம் பேச்சு ஆராய்ச்சி விளக்கம் கட்டுரைகள் .என்ன என்ன எல்லாம் விளக்கத்துடன் படங்களுடன் காரணங்களும் தீர்வுகளும் சொன்னாலும் அனுபவம் வாய்ந்த விஞ்ஞான தரப்பு இயற்க்கையின் குமுறலுக்கு அல்லது கோபத்துக்கு ஒன்றுமே செய்ய இயலாது என்று ஒப்பு கொள்ளுகிறது.ஒப்புக்கொண்டாலும் சில இடங்களில் சிலர் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு இவர்கள் காட்டுகிற கள்ள மெளனங்கள் எரிச்சலை ஊட்டுகின்றன.

அண்மைகாலங்களில் அடிக்கடி உலகத்தில் நடக்கின்ற இயற்க்கை அழிவுகளினால். இந்த மதவாதிகள் ஜோதிடர்கள் ஹாஸ்யம் கூறுவர்கள் புனை திரை கதை கூறுகின்றவர்கள் சொல்லுகிற மாதிரி 2012 உலகம் அழிய போகிறது என்ற உண்மையை . பொய்யை அல்லது கற்பனையை பலரும் இப்பொழுது உற்று நோக்குகிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது.ஆஸ்தினாகட்டும் நாஸ்திகனாட்டும் அவர்களுக்கு வரும் மரண பயம் என்றது பொதுவே.பொதுவாக சொல்லுவார்கள் மரணம் அண்மை கணங்களில் நிகழப்போகுது என்று தெரியும் போது பயம் பெரிதாக வராது என்று .ஆனால் இப்படியான உணர்வு தான் வருமென்று.. நான் சரியாகவே வாழவே தொடங்கவில்லை அல்லது வாழவில்லை ..அதுக்குள் அழியப்போகிறனே என்று .ஆனால் இப்பொழுது தனிமனித பயத்தை தாண்டி இன்னும் சரியாக வாழ தொடங்காத ஒட்டு மொத்த மனித குலத்துக்குரிய பயமாக மாறி இருப்பதை டிவி பத்திரிகைகளில் நடைபெறும் விவாதங்கள் காட்டுகின்றன.

2004 வருடம் ஒரு நாள் ஒரு நள்ளிரவு தாண்டி அசந்து ஆழ்ந்து தூக்கி கொண்டிருந்த எங்களை டெலிபோன் மூலம் அடித்து எழுப்பி ஒரு அவல செய்தி சொன்னான் என் நண்பன் ஒருவன் .நாட்டிலை ஊருக்குள் கடல் புகுந்து விட்டுதாம் பலர் கடலோடு சங்கமாகிவிட்டாராம் என்று .அதுக்கு பெயர் சொன்னான் சுனாமி என்று. இந்த பெயரை ஞாபகபடுத்தி பார்த்தேன் அணமை காலத்தில் கேள்விபட்டிருக்கிறேன் அதுவும் கமலின் படமான அன்பே சிவம் படத்தில் ,கமல் இந்த சுனாமி பற்றி சொல்ல மாதவன் இங்க எல்லாம் வராது என்று சொல்ல இங்கு வரும் என்று கமல் கூறுவார்.எங்கள் அனுபவத்தில் இயற்கை அனர்த்தம் என்றால் ஒரு சூறாவளி ஒரு பெரும் அடை மழை ,ஆறு குளம் பெருக்கெடுத்து வழிவது ,ஒரு மண் சரிவு என்று தான் இருந்திருக்கும் .இந்த கடல் புகுந்த அனுபவம் எங்களுக்கும் இருந்திருக்கவில்லை எங்கள் ஊருக்கும் இருக்கவில்லை என்பது தான் உண்மை.

சுனாமி என்றதை ஒத்த ஒரு கடல் அழிவு நடை முறையினால் தான் குமரி கண்டம் முழுகினதாக சொல்லுவார்கள் இதை தமிழில் கடல் கோள் என்று கூறுவார்கள் .சங்கம் வளர்த்த மதுரை இப்ப இருக்கிற தமிழ் நாட்டில் உள்ள மதுரை இல்லை அழிந்த குமரிகண்டத்தில் உள்ள மதுரை தான் என்று கூறுவோரும் உள்ளர்.கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் வாசித்த காலத்தில் அதில் கடல் கோளை பற்றிய வர்ண்ணையை வாசித்ததாக ஞாபகம், இந்த பூமி அதிர்ச்சி கூட ஓரு பாடத்தில் படித்த விடயமாக ஒரு செய்தியாக கன காலமாக எனக்குள் இருந்தது .செய்தியாக இருந்த இந்த விசயம் ஒருமுறை அனுபவமாக மாறியது எப்பவெனில் 2002 இல் விடுமுறைக்கு இந்தியா சென்ற போது சென்னையில்.திருவான்மையூரில் எனது உறவினரின் மொட்டை மாடியில் ஜாலியாக பேசி கொண்டிருந்த போது இந்த அதிர்வை உணர்ந்தேன்.அந்த மரண பயத்தினால் அன்று இரவு முழுவதும் தூங்கமால் தூங்கி கொண்டு றோட்டிலேயே இருந்து இருக்கிறார்கள் பலர் ..வருவது வரட்டும் ஊரோடு ஒத்தது தானே என்று நினைத்து கொண்டு மற்றவர்கள் போலல்லாது நான் வீட்டிற்க்குள் போய் தூங்கி விட்டேன் .ஆழமான தூக்கம் கிடைத்தது அன்று. அருமையான தூக்கம் எனது வாழ் நாளில் ஒருபோதும் தூங்கி இருக்கவில்லை.அப்பிடி ஒரு சுகனுபவம் அதற்கு காரணத்தை என்னுள் தேடினேன் கிடைக்கவில்லை . அப்பொழுது தான் அங்கிருந்த பெரிசு ஒன்று சொல்லிச்சுது மரணத்துக்கு அருகாமாயில் வரும் பொழுது ஒரு சுகானுபவம் வருமென்று .

2004 இல் வந்த சுனாமி சுப்பர் மூன் என்று அழைக்கப்படும் சந்திரன் பூமிக்கு அண்மையில் வந்த இரண்டு கிழமைக்குள் வந்ததாயும் அது போல் இந்த ஜப்பானில் நடந்த சுனாமியும் வருகின்ற மார்ச் 19 ந்திகதி அன்று நடக்கிற சுப்பர்மூன் காரணமாகத்தான் வந்ததாயும் கூறுவோரும் உளர். இந்த சந்திரனுக்கும் கடலுக்கு ஏதோ தொடர்பு இருக்கத்தான் செய்யுது எனது அனுபவத்திலலை பார்க்கும் போது . வடமராட்சி பகுதியில் உள்ள வல்லிபுரக்கோவில் கடல் தீர்த்தம் பெளர்ணமி அன்றுதான் நடைபெறும் அப்பொழுது அந்தகடல் ஊருக்குள் வந்து விட விருப்பம் காட்டுவது போல பொங்கி எழும்பி ஜாலம் காட்டும்

சில வேளை இந்த இயற்கை அழிவினால் ஜீவராசிகள் இல்லாமால் போய் நான் ஒன்று இல்லாமால் போனாலும் நானும் நானிமில்லாத ஒன்று இருக்க தானே போகிறது.

Monday, February 14, 2011

ஊர் சென்ற போது கொழும்பில் தங்கிய நாட்கள்

ஊருக்கு சென்று திரும்பி வரும்போது கொழும்பில் சில நாட்கள் தான் தங்கியிருந்தேன் .அந்த சில நாட்களில் உறவினர்களின் அழைப்பை ஏற்றுகொள்ளுவதில் அதிகமாக கழிந்தது. அதை மீறி இருக்கும் நேரங்களில் இவர் இவரை சந்திக்க வேணும் என்று நினைத்து கொண்டாலும். ,அதற்கு இடம் கொடுக்காமால் என்னை விரைவில் புகலிடத்துக்கு துரத்துவதில் தான் நேரமும் கண்ணாயிருந்தது. கொழும்பு எனக்கு புதிதான ஊரில்லை .கோழி மேய்த்தாலும் கொர்ணமேந்து உத்தியாகம் பார்க்கவேணும் என்று அந்த காலத்து நியதியின் காரணமாக எனது தகப்பானர் நான் பிறக்கும் முன்பிருந்தே பல காலமாக அங்கு ஜீவனம் நடத்தியிருந்தார்.அதனால் நான் பிறந்த பின்னும் சிறுவயது காலங்கள் அங்கு வசிக்க நேர்ந்து இருக்கிறது

கொழும்பு முகத்துவார பகுதியில் எனது இரண்டு வயதில் எடுத்த போட்டோ


கொழும்பு என்ற ஊருடன் பிறந்த காலத்திலிருந்தே என்னுடன் ஒரு தொடர்பு இருக்கு என்று நினைத்து கொண்டாலும் அம்மாவின் வயிற்றிலிருந்த காலத்திலிருந்தே ஒரு பயப்பீதியுடன் தான் தொடர்பு தொடங்கி இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது,எங்கள் வீட்டின் சுவரில் பல காலமாக ஒரு புகைப்படம் தொங்கி கொண்டிருந்தது .அந்த புகைப்படத்தில் தூரத்தில் நடுக்கடலில் ஒரு பெரிய கப்பல் போய்க்கொண்டிருக்கும்


அந்த புகைப்பட கப்பலை பற்றி கதை கதையாக சொல்லுவதால் சிறு வயதில் பள்ளிகூடத்தில் இலங்கையின் தலை நகரம் கொழும்பு என்று சொல்லி தரும்போதெல்லாம் கூட ஒரு பயபீதி என்னை வந்து கவ்வும். அம்மா அந்த புகைப்படத்தின் கதையை ஒரு முறை அல்ல. பல முறை எனது வயதின் பல படி முறை கால காட்டத்தில் ஏனோ தெரியாது எனக்கு அடிக்கடி சொல்லி கொண்டிருந்திருக்கிறா.அந்த அளவுக்கு அந்த சம்பவம் அவவை அவ்வளவுத்துக்கு பாதித்து இருக்கவேணும் .அந்த சம்பவம் தான் இலங்கையின் நடந்த 1958இல் நடந்த இனக்கலவரம் . அந்த இனக்கலவரம் காரணமாக அடி உதையுடன் மற்றும் மரண பயத்துடன் இருந்த தமிழர்களை கொழும்பிலிருந்து பருத்தித்துறை வரையும் ஏற்றி வந்த கப்பலாம் அது.


.அந்த புகைப்படத்தை பப்பாவுடன் கொழும்பில் அவருடன் வேலையும் செய்யும் சக சிங்கள நண்பர்கள் எடுத்து கொடுத்திருந்தார்கள் .அதில் எனது பெற்றோர் மட்டும் பிரயாண செய்யவில்லை நானும் பிரயாண்ம் செய்து இருந்தேன் அம்மாவின் வயிற்றில் இரண்டு மாத கரு உருவில்.

சரஸ்வதி மண்டபத்தில் சாப்பாட்டுக்கு கை ஏந்தி நின்றது ,கப்பலுக்கு கூட்டி செல்லும் முன்பு ஒரு பிக்கு வேடத்தில் வந்தவர் தங்கள் மீது கைகுண்டு எறிய முயற்சி செய்ய முற்ப்பட்ட போது பிடிப்பட்டது, களுத்துறையில் கோயில் ஜயரை சிவலிங்கத்துடன் கட்டிப்போட்டு எரித்தது
போன்ற கதைகளை அம்மா சொல்லி இருந்தா ..அதனால் வவுனியா தாண்டி ரயில் செல்லும் பொழுது என்னை அறியாமால் இனம் தெரியாத உணர்வு கவ்வி கொள்ளும் .எனக்கு மட்டுமல்ல மற்றும் பல தமிழர்களை அப்பொழுது அவதானித்து இருக்கிறேன் வவுனியா வரை அட்டாகாசம் பண்ணி கதைத்து தங்களுக்குள் குதர்க்கம் செய்து வருபவர்கள் வவுனியா தாண்ட தாங்களாகவே பெட்டி பாம்பாக அடங்கிவிடுவதை.

எனக்கு 8, 9,வயது காலகட்டத்தில் அம்மா தனது முயற்சி மூலம் தனியார் ஆசிரியர் மூலம் சிங்களம் படிப்பத்திருந்தா ..அதனால் இன்றும் எழுதுவேன் வாசிப்பேன் ஆனால் அதன் கருத்து விளங்காது கதைக்க மாட்டேன்.இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் எனது பப்பா தனது 17 வயதிலிருந்து சிங்கள பிரதேசங்களில் வாழ்ந்து வந்தவர் அதிகமாக கொழும்பில் ..சிங்களவர் மாதிரியே அட்ச சுத்தத்துடன் சிங்களம் பேசுவார் .

77 இனக்கலவரத்தில் புத்தம் சரணம் கச்சாமி என்று ஏதோ அவர்களின் மத சம்பந்தமான சுலோகம் சொல்லத் தெரியாமால் தமிழராக அடையாளம் காணப்பட்டு தாக்கப்பட்டதன் காரணமாக யாழ்ப்பாணம் மாற்றாலாகி வர நேரிட்டது .இவ்வளவு சிங்களவர் மாதிரி சிங்களம் கதைக்கும் பப்பா சிங்களம் வாசிக்க மாட்டார் ..கொழும்பில் சில வேளை அரச பஸ்களுக்கும் வருத்தம் ஏற்படுவதுண்டு தனி சிங்களத்தில் போர்ட் போட்டுகொண்டு வரும் வருத்தம். அப்பொழுது பப்பா என்னைத்தான் வாசித்து என்ன எழுதி இருக்கு என்று வாசித்து சொல்லு என்று கேட்பார் அந்த நேரத்தில் ஒரு பச்சை தமிழனாக மாறி முழிப்பதை கண்டு என்னில் ஒரு பெருமிதம் முகத்தில் தோன்றி மறையும்.

இப்படி பிறந்த கால கட்டத்தில் இருந்து கொழும்போடு ஒரு தொடர்பு இருந்தாலும் இப்ப எனக்கு கொழும்பில் வலது இடது தெரியாமால் எனது நிலமை. இடம் எல்லாம் ஒரு புதிய இடமாக இப்ப தெரிந்தது .. என்னுடன் படித்தவர்கள் அநேகமானவர் புலம் பெயர்ந்து விட்டார்கள் அப்படி ஒரிருவர் தான் கொழும்பில் இப்பவும் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருந்தேன் . இன்றும் டே என்றும் மச்சான் என்றும் போட்டு கதைக்கூடிய ஒருவன் கொழும்பில் இருக்கிறான் என்று அறிந்து அவனது டெலிபோன் நம்பர் முன்பே எடுத்து வைத்திருந்தேன் .அவனுடைய கந்தோருக்கு போன் பண்ணினேன்.

30 வருடம் காலத்தை என்ன என்னவெல்லோம் செய்திருக்கும் என்ற அச்சத்தில் நீங்கள் என்று தொடங்கி பவ்வியமாக அவனுடன் பேச்சை ஆரம்பித்தேன் ..எனது பவ்வியமான பேச்சை கண்டு வேறு ஆரோ என அடையாளம் கண்டு குழம்பி . நீ தானா நீ தானா நீ என்று பலமுறை கேட்டுதான் நான் என்று பின்பு உறுதி செய்தான் கொழும்பில் எங்கை இருக்கிறாய்? எங்கை சந்திக்காலம்? என்று ..வினவும் போது...ஆச்சரியம் காத்திருந்தது. அவனது வீட்டுக்கு அடுத்த வீட்டில் தான் தங்கியிருந்தேன் .அவன் சொன்னான் தான் எழுதும் கதைகளில் வரும் சம்பவமாக மாதிரி சர்ப்பரைஸ் ஆக இருக்கிறதே என்று . அவன் படிக்கும் காலங்களிலே 16 வயதிலேயே தனது சிறுகதையை இலங்கை பத்திரிகைகளில் எழுத தொடங்கியவன்.இப்பொழுது இலங்கையில் தமிழ் சிறுகதை உலகில் மிகவும் அறியப்பட்ட ஒரு எழுத்தாளனாக இருக்கிறான் .அவனுடன் கதைக்க நீண்ட நேரம் ஆசை இருந்தது .ஆனால் அவனுக்கும் நேரம் இடம் கொடுக்கவில்லை எனக்கும் நேரம் இடம் கொடுக்கவில்லை

பத்திரிகையை புரட்டிபார்க்கும் போது ஒரு செய்தி பார்க்க கிடைத்தது .அந்த செய்தி கூறியது வளரி பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழா இன்று கொழும்பு தமிழ்சங்க மண்டபத்தில் இன்ன நேரம் நடை பெற இருக்கிறது என்று .அதில் பேச்சளார்களாக குறிப்பிட்ட பெயர்கள் வலை பதிவுலகத்தில் பரிச்சயமான பெயர்களாக இருப்பது மட்டுமல்ல எனக்கும் பரிச்சயமான பெயர்களாக இருந்தது தான். அவர்கள் எனது வலை பதிவுகளுக்கு எப்போதாவது ஓர் இருமுறை பின்னூட்டம் போட்ட பந்த தொடர்பும் இருந்தது.வலைபதிவு சந்திப்பு அது இது என்று இப்பொழுது அமர்களம் போடும் இந்த கால கட்டத்தில். இப்படியொரு நிகழ்ச்சி நான் கொழும்பில் நிற்கும் நாட்களில் நடப்பது சந்தோசத்தை தந்தது. தப்பவிடகூடாது என்று நினைத்து தீர்மானித்து கொண்டிருக்கும் பொழுது .மனைவியின் உறவினரின் முக்கியமான வைபவ நிகழ்ச்சியும் அதே நேரம் நடைபெற இருந்தது .செய்வது அறியாமால் தவித்தேன் .பின் எனது முடிவே எனது எண்ணமே நிறைவேறியது ..மனைவியையும் மகளையும் அவர்களின் வைபவத்துக்கு அனுப்பி விட்டு கொழும்பு தமிழ்சங்கம் நோக்கி புறப்பட்டேன்.

மண்டபத்தை அணுகியதும் மண்டபத்தில் ஓரிருவர் இருந்தனர் .குறித்த நேரத்தில் ஆரம்பமாகுமா என சந்தேகமாக இருந்தது ,ஏனெனில் ஒரு நிபந்தனையில் தான் என்னை அழைத்து வந்தார் எனது உறவினர் குறித்த நேரத்தில் திரும்பும்படி .அவருக்கோ இப்படியான நிகழ்வுகள் கற்பூரவாசனை மாதிரி.அப்படி நினைத்து கொண்டு இருக்கும் பொழுது முன் வரிசையில் ஜந்து ஆறுபேர் இருந்து பேசி கொண்டு இருந்தார்கள் .அதிலிருந்த ஒரு பச்சை சட்டைக்காரரை நான் அடையாளம் கண்டு கொண்டேன் .

அவரது வலைபதிவில் புரைபைல் பக்கத்தில் போட்டு வைத்த புகைப்படம் மூலமாக. நான் இவ்வளவு காலமும் பரந்த நல்ல தெருவில் இலகுவாக எந்த தொந்தரவு இல்லாமால் சொகுசுகாக பயணம் செய்யும் மயிலை காளை வண்டி மாதிரி எனது முகமூடியை வைத்து கொண்டு இலகுவாக இந்த வலைபதிவு உலகில் உலாவி வந்தேன் .இந்த முகமூடி இருப்பதால் 17 வயது இளைஞனாகவும் 70 வயது முதியவராகவும் சில வேளை என்னால் அவதாரம் எடுக்க முடிகிறது என்னால். .இந்த சுதந்திரத்தை இழந்து போகக் கூடாது என்று எனது மனதில் உறுதி எடுத்து கொண்டேன். கடைசிவரையும் எனது முகமூடியை கழட்டாமால் நான் யார் என்று அடையாளம் காட்டாமால் நடப்பதை மூலையில் பார்த்துவிட்டு திரும்பி விடுவது என்று.

எனக்கே தெரியாது என்ன நடந்தது என்று தெரியாது .எனது உறுதி எல்லாம் சுக்கு நூறாக அந்த கணத்தில் சிதறியது.போய் முன் வரிசையில் இருந்த அந்த பச்சை சட்டை வலை பதிவரிடம் நீங்களா அந்த பெயர் உடையவர் என்று கேட்டு எனது பேச்சை தொடங்கினேன். அவரும் என்னருகே வந்து நீங்கள் என்று விழிப்புடன் என்னுடன் சம்பாசனைக்கு தயாரானார்.என்னை எப்படி அறிமுகபடுத்துவது என்ற தயக்கம் என்னுள் எழுந்தது .நான் ஒரு வலபதிவர் என்று ஆரம்பிக்கலாமா என்று யோசித்தேன் .கூகிள் ஈ-மெயில் வைத்திருப்பர்க்ள எல்லாம் வலை பதிவர் ஆகலாம் .அதை ஒரு அடையாளமாக வைத்து என்னை அறிமுகபடுத்தலாமா என்று நினைத்தாலும் ஒருவாறு சுதாகரித்து கொண்டு சொன்னேன்,

. நானும் ஒரு வலைபதிவர் எனது பெயர் சின்னக்குட்டி தெரியுமா என்று? கொஞ்ச நேரம் மெளனம் காத்த அந்த பச்சை சட்டை கார்ர் அந்த வீடியோ பதிவு போடுவரா ?...ஓம் என்று கூறினேன் பிறகு சிறிது நேரம் பேசினோம். இங்கு இருப்பீங்கள் தானே பிறகு சந்திப்பம் என்று கூறி விட்டு முன் வரிசையில் இருந்த பேராசிரியர்கள் மற்றும் பெரும் தலைகளுடன் ஜக்கியமாகி விட்டார்

நானும் மூன்றாவது நாலாவது மூலையில் தனித்து இருந்தேன். இப்ப மண்டபத்தில் அரைவாசி நிரம்பி விட்டது , அந்த பச்சை சட்டைக்காரர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை என்னருகில் அமர்ந்து மீண்டும் பேச்சை தொடங்கினார் என்ன இப்ப அதிகம் எழுதிறதில்லை முன்பு அதிகம் எழுதனீங்கள் தானே என்று. .அப்படி கதைத்து கொண்டு இருக்கும் பொழுது ஒரு சிவப்பு சட்டைக்கார்ர் வந்து அந்த பச்சை சட்டைக்கார்ருடன் வந்து ஜ்க்கியமானார்.அந்த சிவப்பு சட்டைக்காரரரையும் எனக்கு வலை பதிவு மூலம் அறிமுகம். அத்துடன் அவர் உண்மையிலேயே அவர் ஒரு சிவப்பு சட்டைக்காரர். அவர் வலைபதிவுகளை நான் வாசிப்பது வழக்கம்.இவர் தான் சின்னக்குட்டி என்று பச்சை சட்டைக்கார்ர் சிவப்பு சட்டைக்காரரிடம் அறிமுக படுத்த . சிறிது நேரம் யோசித்த சிவப்பு சட்டைக்கார்ர் அந்த வீடியோ போடுறவரா? என்று கேள்வி குறியுடன் என்னை கூர்ந்து பார்த்தார் . உங்களுடைய புரைபைல் படத்துக்கு முழு எதிர் மாறாக இருக்கிறீர்கள் என்று,தொடர்ந்து கூறினார். எனக்கு என்னவோ இந்த சிவப்பு சட்டைக்காரரும் என்னை வீடியோ பதிவராக என்னை குறுக்கி கொண்டது எனக்கு என்னமோ போல் இருந்தது .

வீடியோவை போடும் பதிவராக வலை பதிவு உலகத்தில் என்னை பலராலும் அறியப்பட்டாலும் . நானும் எழுதுவேன் எழுதி இருக்கிறேன் என்று என்னுள் நான் நினைப்பதால் நானே எனக்கு பின்னால் நானும் ஒரு எழுத்தாளன் என்ற சின்ன ஒளிவட்டத்தை எனக்குள் இவ்வளவு காலமும் உருவாக்கி இருந்தேன் .அது எல்லாம் தவிடு பொடியாக போகும் பொழுது எனக்கே ஒரு மாதிரி இருந்தது எனது சிறுகதைகள் அடங்கிய வலைபதிவை பார்க்க இங்கே அழுத்தவும்

முன் வரிசையில் பேராசிரியர்களுடன் பேசி கொண்டு இருந்த இன்னொருவரும் அந்நேரத்தில் நான் சின்னக்குட்டி என்று அறிந்து என்னுடன் அளவிளாவினார் .தானும் எனது வலை பதிவுகளை பார்ப்பாதாக கூறினார் எனக்கு சந்தோசமாக இருந்தது .ஏனெனில் அவரும் இன்றைய விழாவின் முன்னனி பேச்சாளரில் ஒருவர் .



பச்சை சட்டைக்கார்ரும் சிவப்பு சட்டைக்காரும் கூட இன்றைய விழாவின் முன்னனி பேச்சாளர்கள் தான் என்பதால் மேடைக்கு சென்று விட்டார்கள் ..அவர்களது நிகழ்ச்சியை முழுமையாக வீடியாவாக கொண்டு வர எனது கமராவின் கொள்ளளவு இடம் கொடுக்கவில்லை முடிந்தவரை சில வீடியோ காட்சிகளை கமராவில் எடுத்தேன் .எனது உறவினரின் தொல்லை காரணமாக விழா முடிய முன்பே பாதியில் கிளம்பி விட்டேன்

எனது முகநூலில் உள்ள சில நண்பர்களை கொழும்பில் தங்கி இருக்கும் போது சந்திக்கும் ஆவல் இருந்தது.ஆனால் நேரம் இடம் கொடுக்கவில்லை ..அப்போது தான் எனது தவறை உணர்ந்தேன் ஊரில் நின்ற நாட்களில் சில நாட்களை கொழும்புக்கு ஒதுக்கி இருக்காலம் என்று.