Pages

வாசகர் வட்டம்

Monday, November 01, 2010

திசை மாறிய பறவைகள்


ஊருக்கு போக வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் வருவது போல் எனக்கும் வந்தது .அதுவும் இருப்பதைந்து வருசங்களுக்கு பிறகு பிறந்த நாட்டுக்கு செல்ல முடிவெடுத்த நாளிருந்து மனம் தன்னுள்ளே துள்ளி குதித்து சந்தோசம் கொண்டாடியது. நான் செல்லும் விமானம் முக்கி முனகி ஏறும் முன்பே நாட்டுக்கு சென்று விட்டேன் மனத்தளவில்.ஊரிலிருக்கும் வரை ஊரின் அருமை தெரியாமால் தான் இருந்தது .அதன் அருமை புலத்தில் நினைவு மீட்டல்களாக அங்கென்றுமாக இங்கொன்றுமாக வந்து ரீங்காரம் இடத்தான் அதை இழந்த வலி தெரிந்தது.நான் இப்போழுது அந்த நானாக இல்லை அது போல் ஊரும் அதே ஊராக இருக்காது மனத்தின் ஒரு பகுதி வந்து அலாரம் அடித்தாலும்.மனதின் மறு பகுதி அவற்றுக்கெல்லாம் மறுத்தான் போட்டு கொண்டு காலத்தால் அழிந்த அவைகளை நினைவுகளால் அலங்கரித்து போகும் முன்னே உயிர்ப்பித்து கொண்டு இருந்தது.


அந்நிய நாட்டு குடிமகனின் அந்தஸ்த்துடன் பிறந்த நாட்டுக்கு வரும் என்னை ப்போல உள்ள சிலரையும் வேறு பல்லின பல நாட்டு குடிமக்களையும் காவி வந்த விமானம். அதீத மெளனத்துடன் தரை இறங்க முடியாமால் தவித்து பின்ஒரு விதமாக தரையை தொட்டது .இந்த இருப்பதைந்து வருடங்களுக்குள் இந்த நாட்டில் என்னவல்லாம் நடந்து முடிந்து விட்டது. அப்படி ஒரு அசுமாத்தமில்லாத மாதிரி சனங்கள் இயங்கி கொண்டிருந்தனர் .உடுக்கடித்து ஊதி பெருப்பித்து புலம் பெயர் ஊடகங்கள் சில உருவாடுவது மாதிரி இல்லாமால் இலங்கை எங்களை வரவேற்றது.

விமான நிலையத்துக்கு வெளியில் எங்களை ஏற்றிச்செல்ல யாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாகவே அங்கு வந்த வான் ஒன்று காத்து கொண்டிருந்தது,.கொழும்பு செல்லாமாலே யாழ் செல்ல போகிறோம் என்று வாகன சாரதி சொன்ன போது இந்த இருப்பதைதந்து வருட காலத்தில் எத்தனை தடைகள் தாண்டி ஊர் சென்று வந்தவர்கள் சொன்ன கதைகள் ஞாபகம் வந்தது.ஒரு பத்து மணித்தியாலத்தில் விமானத்தில் கொழும்பு அடைந்தவர்கள் நாட்கள் கிழமைகள ஏன் சிலவேளை மாதம் கடந்து தான் ஊர் சென்று இருக்கிறார்கள். வான் .புத்தளமூடாக அனுராதபுரம் வ்வுனியா என்று சென்று ஓமந்தையை அடைந்தது .

அங்கு ஒரு இராணுவச்சாவடியில் எங்களை பரிசோதித்தார்கள்.வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர் இலங்கையராக இருந்தாலும் வடக்குக்கு செல்வதாய் இருந்தால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும் நடைமுறை இருக்கிறது, அதனால் அங்கு பரிசோதிக்கும் அதிகாரிகளும் வெளிநாட்டிலிருந்து செல்பவர்களும் இதனால் குழம்புவது வழக்கமாக இருந்தது . வெளிநாட்டு பாஸ்போட்டுடன் வருபவர்கள் இலங்கையில் பிறந்து இருந்தால் அந்த பாஸ்போட்டில் பிறந்த இடம் போட்டிருந்தால் அந்த அனுமதி பத்திரம் எடுக்க தேவையில்லை என்பது தான் நடைமுறை உண்மை .இதை விளங்கி கொள்ளாத அந்த அதிகாரி என்னிடம் கேட்க நான் விளங்கபடுத்தினேன். பின் அந்த பிறந்த ஊர் எங்கே யாழ்ப்பாண்த்தில் என அவன் குழம்பி கொண்டிருக்க .அவனுக்கு புவியியல் பாட்ம் எடுத்து விளங்கபடுத்திய பிறகு தான் எங்களை அனுப்பினான்.

ஊரை அடைந்த போது நள்ளிரவை தாண்டிவிட்டது. அந்த ஊரின் அழகான விடியலுக்கான ஆயத்தங்களை அந்த நேரம் அந்த இரவு செய்து கொண்டிருந்தது.வீட்டு பின் மாமரத்தில் இருந்த சேவல் ஒன்று விடிந்து விட்டுது என்ற தவறாக அடையாளம் கண்டு என்னவோ சோம்பல் முறித்து கூவியது.வீட்டில் நுளம்புடன் தற்காப்பு யுத்தம் செய்வதற்க்கான துணை கருவிகள் படுக்கும் அறையில் தாரளமாக கிடந்தன.இவ்வளவு நுளம்பை எதிர்க்கும் தற்காப்பு கருவிகளோடு அந்த காலம் தூக்கத்தை தழுவினதாக ஞாபகம் இல்லை .அதனோடு சமரசம் செய்து கொண்டு அழகான நித்திரை கொண்டதாக தான் ஞாபகம் . அன்று இரவு அவ்வளவு பிரயாண களைப்பு. தூக்கம் தானே தாலாட்டி தானே தூங்கி கொண்டது ..

.விடிய எழும்பி பார்க்கும் போது தற்காப்பு கருவிகளுடன் படுத்தவர்களுக்கு கூட அங்கும் இங்கும் நுளம்பு முத்தம் கொடுத்த தடங்கள் இருந்தன. என்னை ஏனோ தீண்டவில்லை ...சில இரத்த குறூப் உள்ளவர்களை தான் நுளம்பு தீண்டுமாம் என்று அந்த விடியல் பொழுதில் ஒரு பெரிசு ஒன்று மருத்துவ குறிப்பு சொல்லி கொண்டிரிந்துச்சு...அந்த வகையில் நான் ஒரு தீண்டதகாதவன் ..அதுவும் ஒரு சந்தோசமே.

நான் அந்த காலத்தில் வழமையாக ராஜ நடை போட்டு செல்லும் சந்திக்கு சென்று பழகியவர்கள் தெரிந்தவர்களை சந்திக்கலாம் என்று கிளம்பினேன் .செல்வதற்க்கு மூலையில் இருந்த பழங்கால சைக்கிள் தான் கண்ணில் பட்டது அதை எடுத்து கொண்டு செல்ல .. இங்கை ஒவ்வோரு வீட்டிலும் ஒன்றுக்கு இரண்டு மோட்டர் சைக்கிள் நிற்கிது ,,உந்த ஓட்டை சைக்கிளிலே போக போறீயே என்று ஒரு கெளவரவ பிரச்சனையை வீட்டிலிருந்த பெருசு ஒன்று எழுப்பியது. இது போன்ற கெளவரவ பிரச்சனைகள் அப்பவும் இருந்தது இப்பவும் இருக்கிறது எப்பவும் இருக்கும் என்று மனதில் சொல்லி கொண்டு எனது பாதையில் அந்த சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன்.

அந்த காலத்தில் அந்த சந்திக்கும் வீட்டுக்கும் ராஜநடைபோடும் கொஞ்சம் நேரத்தில் எத்தனை பேருக்கு அறிமுக சிரிப்பு சிரித்து எத்தனை பேரின் கேள்விக்கு பதில் சொல்லி இருப்பேன் .அப்படி ஒரு நட்பு வட்டம் தெரிந்த கூட்டம் இருந்தது

இப்பவும் அது போல அந்த சந்தி செல்லும் போது தெரிந்த முகங்கள் தெரியாத முகங்களாக போகிவிட்ட நிலமை ...அவர்களும் பரக்க பரக்க வெறித்து பார்த்து அடையாளம் காணும் முயற்சி செய்து பின் தோல்வி அடைந்து தன் பாட்டில் என்னை கடந்து செல்லுகிறார்கள் ..எனது இளம் நரையையும் முன் பின் வழுக்கையையும் மறைப்பதற்க்கு நான் எடுத்து கொண்ட முழு மொட்டை வேடம் தான் .அவர்கள் என்னை அடையாளம் காண முடியாமால் நிற்கிறார்கள் என்று நான் நினைத்து கொண்டாலும் உண்மை அது அல்ல.நானும் அவர்களின் நரைத்த மீசையூனூடாக உற்று பார்த்தாலும் அவர்களை அடையாளம் காணமுடியாத சந்தர்ப்பமும் நடந்து கொண்டிருந்தது.

அப்படிச்செல்லும் போது என்னை அடையாளம் கண்ட மெலிந்த களைத்த உருவம் ஒன்று எப்படா மச்சான் வந்தனீ என்ற குரலுடன் வழி மறித்தது. அவனை கண்டதும் எனக்கு ஆச்சரியம் ஏன் ஏன்றால் எனக்கு இந்த இருபத்தைந்து வருட காலத்தில் கேள்வி பட்ட காது வழி வந்த கதைகளில் ஒன்று அவன் இறந்து விட்டான் என்று ..அவன் என்னுடன் படித்த வகுப்பு தோழன் ..மார்கண்டேய தமிழ் நடிகரின் பெயர் கொண்ட அவன் ..படிக்கும் காலத்தில் கெட்டிகாரன் படிப்புக்கு பிறகு தான் உலகத்தில் எல்லாம் என்ற எண்ணம் கொண்டவன் . படிப்பில் தோல்வி அடைந்தவர்களை பரீட்சையில் தோல்வி அடைந்தவர்களை அவனது நக்கல் நளினம் படாது படுத்தும் .அந்த நக்கல் நளினத்துக்கு ஓடி ஒழிந்தவர்கள் இன்று உலகம் முழுதும் பேராசிரியர்கள் டாகடர் பொறியலாளர்கள் பல வல்லுனர்கள் என பரந்து இருக்கிறார்கள்...

ஆனால் அவனது பிச்சைக்கார கோலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் .அது மட்டுமன்றி சாப்பிட்டுக்கு வழி இல்லை மச்சான் எனக்கு .ஏதாவது உதவி செய் என்று பிச்சைக்காரத்தனமாக இரந்தது எனக்கு ஏதோ செய்தது.நானும் வெளிநாட்டில் வாழும் ஒரு பிச்சைக்காரன் தான் என்று ஒப்பிக்காமால் எனது சக்திக்கு மீறிய தொகையை அவனது கைகளில் கொடுத்துவிட்டு மாறி விட்டேன்.

அன்று இரவு நுளம்பால் பிரச்சனை இருக்கவில்லை இவனை நினைத்து அன்று தூக்கம் இன்றி தவித்தேன், .யாழ் பல்கலைகழகத்தின் மருத்துவ பீடத்தில் அனுமதி கிடைத்து இரண்டு வருடங்கள் முடிய முன்பே. அவ்வூர் சந்தி படியாத வர்த்தகர்களால் டாக்டர் என்று செல்ல பெயர் கொண்டு அழைக்க பட்டான்.அவனின் திறமையான டைம்மிங்கில் விடும் பகிடிக்காகவே .அவனை திரும்பி பார்க்க மனமில்லா பெட்டைகள் கூட திரும்பி பார்த்து சிரித்து செல்லுவார்கள் .அவனுக்கு தனது படிப்பின் மீது இருந்த அதீத பெருமையால் படிப்பை தவறவிட்டவர்களை கேலி செய்வதை வழமையாக கொண்டிருந்தான்.

எங்களில் சில பேர் இந்த மனப்பாடம் செய்து கிரகித்ததை திரும்ப ஒப்புவித்து அதனூடாக பரீட்சையில் வெற்றி அடையும் அளவு கோலை அறிவாக கொள்ளுவதில்லை .என அவனுக்கும் தெரியும் .அதனால் .எங்களுடன் அந்த நக்கல் நளினத்தை அவன் வைத்து கொள்ளுவதில்லை .என்றாலும் அவன் என்னை பார்த்து ஒரு முறை சொன்னது ஞாபகம்..உப்படி படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமால் உப்படியே தேவை இல்லாத்தை கதைத்து கொண்டிருந்தால் இப்ப வைத்திருக்கின்ற உந்த மரக்கட்டை பெடல் போட்ட சைக்கிளோடை தான் 30 வருசம் சென்றாலும் திரிவாய் என்று.

அவனது அதீத தன்னம்பிக்கை மற்றும் இயற்க்கையாகவே இருந்த பைத்தியகாரத்தன்மை காரணமாக படு மோசமான முறையில் ராக்கிங் காலத்தில் ஈடுபட்டான் . பின் ஒர் இரு முறை பல்கலைகழக நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டு கடைசியாக மருத்துவ பீடத்திலிருந்து முற்று முழுதாக நீக்க பட்டான் ..

பல்கலைகழக வரலாற்றிலையே ஒரு..மருத்தபீட மாணவன் தனது படிப்பு காலம் முடியும் முன்னர் நீக்கப்பட்டவன் இவனாக தான் இருக்கும் என்று நினைக்கிறன். பின் இவனது பெற்றோரின் பணம் வளம் மூலம் இந்தியாவில் தனது மருத்துவ படிப்பை படிக்க சென்றானாம் அங்கும் படிப்பை தொடராமால் ஏதோ முறையில் பெரும் பணத்தை உருவாக்கி கொண்டான் என்று கேள்வி பட்டு கொண்டேன் . இவன் ஒரு அதீத எம்ஜீஆர் ரசிகன் ..கிட்டத்தட்ட ஒரு சினிமா பைத்தியம் கூட ..அந்த சந்தியில் ஒரு தியேட்டரில்ஒரு முறை எம்ஜீஆர் படம் ஓடிய போது ஹவுஸ் புல் ஆகோனும் என்றதுக்காகவே சிலருக்கு படம் பார்க்க காசு கொடுத்த அனுப்பிய படித்த முட்டாள்.

அவனது இந்த சினிமா பைத்தியத்தை தெரிந்து கொண்ட சிலர் .ஏதோ முறையில் அவன் உழைத்த பணத்தை கொண்டு சினிமா தயாரிக்கும் வருத்தம் தரக்கூடிய ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.படமும் தோல்வி அடைய . பெற்றோர்களும் இறக்க ..உறவினர்களும் கைவிட்ட நிலையில் இப்போது அவன் இப்ப அந்த சந்தியில் பிச்சைக்காரனாக சுற்றி கொண்டிருக்கிறான்.

அவனோடு படித்த ஒரு வகுப்பு தோழன் தான் அப்பிரதேசத்தில் உள்ள இலங்கையிலே பிரபலமான கல்லூரி ஒன்றின் அதிபராக ஆக இப்ப இருக்கிறார். இவனுக்கு அவ்வூர் வர்த்தகர்களுடன் கதைத்து ஏதாவது வேலை எடுத்து கொடுக்கலாம் என்று நினைத்து கொண்டு அதே மரக்கட்டை பெடல் போட்ட சைக்கிளில் திரும்பி வரும் போது ..என்னை வேகமாக கடந்த சென்ற மோட்ட சைக்கிளிலிருந்து எனது பெயரை இருப்பதைந்து வருடங்களுக்கு முன்னால் அழைத்த அதே தொனியுடன் ஒலித்தது.

ஹெல்மட் மறைவில் இருந்து வெளியில் வந்த ஒருவன் . தன்னை அடையாளம் கொள்ளுகிறாயா என்று ஆங்கிலத்தில் கேட்டான் ..நான் பதில் சொல்லும் முன்பே தனது பதவிகளை பந்தங்களையும் விவரிக்க தொடங்கி விட்டான் ....முடிவில் வெளிக்கிடும் போது கூறினான் ..வெளியில் இருந்து வந்தனீங்கள் மச்சான் ஏன் இந்த ஓட்டை சைக்கிளிலை திரியிறாய் என்று ....அவனுக்கே ஒரு மாதிரியாக இருந்திருக்க வேண்டும் எனது பரதேசி கோலம் ..இப்படி பலதும் பத்தையும் நினைத்து கொண்டு வந்ததால் ..எனது பாதையை விட்டு எங்கையோ திசை மாறி விட்டேன்

வீடு திரும்ப இருண்டு விட்டது....அந்த அந்தி மாலை பொழுது இருப்பதைந்து வருடங்களுக்கு முன் இருந்த அழகை தந்து கொண்டிந்தது ..

அதை ரசித்து மனதை லேசாகி கொண்டிருந்தேன்