திரைப்பட வரலாற்றில் தமிழ் எழுத்தாளர்களின் தாக்கம் நிறைய இருந்திருக்கின்றன.. ஏன் திராவிட எழுச்சிக்கே திரைப்படத்தில் வரும் எழுத்தின் தாக்கம் மிக உதவியது.. மனோகராவில் பத்மாவதியாகா வரும் கண்ணாம்பா பேசும் வசனம் இது,"செவ்வாழைத்தோட்டத்தில் குதித்தாடும் குரங்குகளே! மங்கை உருவில் மகான் உருவில் இந்த மண்ணை வளைக்க வந்த மகாபாதர்களே!சரித்திரத்தை மறந்தவர்களே! செப்படி வித்தையால் செழுந்தமிழர் செங்கோலை முறிக்க வந்த சிறுநரிக்கூட்டமே!". இப்படியான எழுத்துக்களால் எழுத்தாளர்கள் சினிமாவின் சாதனத்தில் புகுந்து சிந்திக்க வைப்பதோடு அந்தக் காலம் எழுச்சியூட்டினார்கள்
கல்கி புதுமைபித்தன் தொடங்கி இன்றைய பிரபலஎழுத்தாளர்கள் வரை சினிமா தாக்கம் நிறையவே இருந்திருக்கிறது.
புதுமை பித்தன் 1940 களில் வெளிவந்த காமவல்லி என்ற படத்திற்க்கு வசனம் எழுதியிருந்தாராம். இதே போல் கல்கி அவர்களுக்கும் சினிமா தாக்கம் நிறையவே இருந்திருக்கிறதாம். தம்முடைய நாவல்கள் எல்லாம் திரைபடங்களாக வேண்டுமென பெரிதாக விரும்பினாராம். அந்த வகையில் கல்கியின் "பொய்மான் கரடு" என்ற நாவல் பொன் வயல் என்ற பெயரில் திரைப்படமாக வந்தது. அதே போல் கல்கியின் புகழ் பெற்ற "கள்வனின் காதலி" என்ற நாவல் திரைப்படமாக சிவாஜி பானுமதி நடிப்பில் 50களில் வெளிவந்திருந்தது. கல்கியின் முதல் வரலாற்று நாவலான "பார்த்திபன்கனவு" திரைப்படமாக வந்தது. அப்பொழுது கல்கி உயிருடன் இல்லை. கல்கியின் பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர் கமலகாசன் போன்றவர்கள் திரைப்படமாக்க முயற்சித்தார்கள், ஆனால் இன்று வரை கை கூடவில்லை.
எழுத்தாளர் அகிலனின் புகழ் பெற்ற "பாவை விளக்கு" நாவலும் திரைப்படமாகியது. அகிலனின் மற்றொரு புகழ் பெற்ற, பரிசு பெற்ற நாவல் "வாழ்வு எங்கே". "குலமகள் ராதை" என்ற பெயரில் திரைப்படமாகியது. இரண்டிலும் சிவாஜி கணேசன் தான் கதாநாயகன் . இன்னுமொரு பரிசு பெற்ற நாவலான கயல்விழி என்ற நாவல்.. எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனாக" வந்தது.
கன்னிமாடம் , யவனராணி கடல்புறா என நாற்பதுககு மேற்பட்ட நாவல்களை எழுதியிருந்த சாண்டில்யன் கூட "என்வீடு" என்ற திரைப்படத்திற்க்கு வசனம் எழுதியுள்ளார்.சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களும் ஆனந்த விகடனில் வெளிவந்த குறுநாவல் "யாருக்காக அழுதானை" நாகேசை வைத்து படமாக்கினார்.அதே போல் "உன்னைப்போல் ஒருவன்" என்ற நாவலை படமாக்கி இந்திய அதிபரின் பரிசைப்பெற்றார். அவருடைய "சில நேரங்களில் சில மனிதர்கள்", லட்சுமி நடிப்பில் உருவான "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" போன்றவையும் திரைப்படமாக வந்திருக்கின்றன.
கல்கண்டு பத்திரிகையை நடத்தி மற்றும் துப்பறியும் சங்கர்லால் மர்ம நாவலை எழுதி புகழ் பெற்ற தமிழ்வாணன்,ஜெயசங்கர் நடித்த "காதலிக்க வாங்க" என்ற படத்தை தயாரித்து கதை வசனம் எழுதியுள்ளார்.
மு.வ என்று அழைக்கப்படும் வரதராசன் அவர்களுடைய "கள்ளோ காவியமா" என்ற நாவல் "எங்கள் செல்வி" என்ற பெயரில் திரைப்படமாகியிருந்தது. அதில் ஏ.நாகேஸ்வரராவ், அஞ்சலி தேவி ஆகியோர் நடித்திருந்தனர்.மு.வ எழுதிய மற்றொரு நாவலான "பெற்றமனம்" கூட சிவாஜி நடித்த படமாக வெளி வந்திருந்தது.
சூரியகாந்தம்,மிதிலா விலாஸ்,காஞ்சனையின் கனவு என்று பல நாவல்களை எழுதியுள்ளார் பெண் எழுத்தளாரான லட்சுமி. அவருடைய காஞ்சனையின் கனவு என்ற நாவல் காஞ்சனாவாக 50 களில்திரைப்படமாக வெளி வந்திருந்தது. இதில் பத்மினி நடித்திருந்தார்.
மற்றுமொரு பெண் எழு்த்தாளரான சிவசங்கரியின் 47 நாட்கள் நாவலை பாலசந்தர் அவர்களும் திரைப்படமாக்கியிருந்தார்.சிவசங்கரியின் மற்றுமொரு படைப்பான "அவன் அவள் அது" திரைப்படமாகி சிவகுமார்,லட்சுமி,சிறிப்ரீயா நடிப்பில் வெள்ளி விழா கண்டது.
அநுத்துமா,லட்சுமி சுப்பிரமணியம் ஜோதிர்லதா கிரிஜா, அம்பை இந்துமதி, திலகவதி, சிவகாமி போன்ற பெண் எழுத்தாளர்களின் நாவல்கள் கூட திரைப்படமாக்கக்கூடிய சிறந்தவையாக இருக்கின்றன. பிற்காலத்தில் இவர்களுடைய நாவல்கள் திரைப்படமானாலும் அதிசய படுவதற்க்கில்லை
ஆனந்தவிகடனில் தொடராக வந்த கொத்தமங்கலம் சுப்புவின் தில்லான மோகனம்பாள் திரையில் வந்து சக்கை போட்டது.சுஜாதாவின் இரண்டு நாவல்கள் படமாயிருக்கின்றன. அதில் கரையெல்லாம் செண்பகப்பூ என்று படமான நாவல் நா.வானமாமலை தொகுத்த நாட்டுப்புற பாடல்களை வைத்து எழுதியதாக சொல்வார்கள்.சுஜாதாவின் மற்றுமொரு நாவலான "ப்ரியா"வும் திரைபடமாகியுள்ளது . இதில் ரஜனி சிறிதேவி நடித்திருந்தார்கள். ப்ரியா நாவலின் களம் லண்டனிலிருந்தது. படத்தில் மலேசியா சிங்கப்பூரில் எடுத்திருந்தார்கள்.கோமல் சுவாமிநாதன் என்ற எழுத்தாளரின் தண்ணீர் தண்ணீர் என்ற நாடகத்தைதான் பாலசந்தர் அவர்கள் "தண்ணீர் தண்ணீர்" என்று திரைப்படமாக்கினார்.
ஈழத்தில் கூட செங்கை ஆழியான் எழுதிய வாடைக்காற்று நாவல் திரைபடமாகியது.ராமதாஸ் அவர்கள் எழுதிய கோமாளிகள் ஏமாளிகள் றேடியோ நாடகம் திரைபடமாக வந்திருக்கிறது. கே.எஸ் பாலசந்தரனின் றேடியா நாடகம் தணியாத தாகம் திரைக்கதை அம்சத்துடன் இருந்தது. படமாக்க முயற்ச்சித்தார்களோ தெரியாது.
ஈழத்தில் கூட செங்கை ஆழியான் எழுதிய வாடைக்காற்று நாவல் திரைபடமாகியது.ராமதாஸ் அவர்கள் எழுதிய கோமாளிகள் ஏமாளிகள் றேடியோ நாடகம் திரைபடமாக வந்திருக்கிறது. கே.எஸ் பாலசந்தரனின் றேடியா நாடகம் தணியாத தாகம் திரைக்கதை அம்சத்துடன் இருந்தது. படமாக்க முயற்ச்சித்தார்களோ தெரியாது.
இப்படி இன்று வரை தமிழ் எழுத்தாளர்களின் தாக்கம் சினிமாவில் இருந்து கொண்டேயிருக்கிறது.கமலகாசன் ஒருமுறை சிற்றிலக்கியக்காரரை சினிமாவில் வந்து பங்காற்ற வரும்படியும் அதன் மூலம் தரமான திரைப்படங்களை உருவாக்க அவர்கள் உதவ வேண்டும் கூறியது ஞாபகம் வருகிறது.
4 comments:
அருமையான பதிவு.......வாழ்த்துகள்
Article is good. You could have used "sri" dierctly instead of "siri" . If you are against Sanskrit script you should not have use "Jo"
நாவல்கள் தரைப்படங்கள் பலதையும் மகிழ்வுடன் ஞாபகப்படுத்திய பதிவு. நன்றி
வணக்கம் டொக்டர்,குரு, மற்றும் அநோமதைய நண்பருக்கு, ,,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்
Post a Comment