Pages

வாசகர் வட்டம்

Thursday, April 07, 2011

கிட்டடியில் தமிழ் நாட்டில் தேர்தலாமே?


இடம் இருந்து வலமாக சாவச்சேரி நவரத்தினம் எம்பி ,தந்தை செல்வா,அமிர்தலிங்கம் நேருவும் இந்திராகாந்தியும் இலங்கை வந்த போது)


தமிழ்நாட்டு தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் தருணத்தில் இந்த தமிழ்நாட்டு வர்த்தக சஞ்சிகைகள் பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களின் தாக்கங்களினால் இலங்கை தமிழர்களையும் பாதித்திருப்பது தவிர்க்க முடியாதவை தானே. சஞ்சிகைகள் பத்திரிகைகள் என்பவற்றின் தாக்கத்தினால் தமிழ்நாட்டு அரசியலை இலங்கை தமிழர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர் தமிழ்நாட்டு தமிழர் இலங்கை அரசியலை தெரிந்து வைத்திருந்ததை விட கூட என்று கூறலாம்.




70 களில் தந்தை செல்வாவின் இறுதி சடங்குக்கு எம்ஜீஆர் வருவார் என யாழ் மக்கள் எல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள்.ஆனால் வந்தவர்கள் அதிமுக சார்பில் நாஞ்சில் மனோகரனும் திமுக சார்பில் ஒருவரும் வந்திருந்தார்கள் .தெல்லிப்பளை தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்துக்கு முன்னர் காரில் கறுத்த கண்ணாடியும் கையில் மந்திரக்கோலுடன் ஏற முற்பட்ட நாஞ்சில் மனேகரனை வழி மறித்த ஒரு இளைஞர் ஆசைத்தம்பி சுகமா என்று கேட்டார். இப்படியொரு கேள்வியை அதுவும் யாழ்ப்பாணத்தில் தன்னிடத்தில் செலுத்துவார்கள் என நாஞ்சில் மனேகரன் எதிர்பார்க்கவில்லை .என்றாலும் நாஞ்சில் மனோகரன் தன்னை சுதாகரித்து கொண்டு ஆசைத்தம்பியை என்ன ஆஸ்பத்திரியிலா விட்டு விட்டு வந்திருக்கிறேன் என நக்கலாக பதிலை சொல்லி சமாளித்து கொண்டார்.

இந்த இளைஞரின் கேள்வியும் இப்படியான நாஞ்சில் மனேகரனின் பதிலும் ஏன் என்பது பலருக்கு விளங்காமல் இருக்கலாம் அல்லது மறந்து இருக்கலாம். செல்வாவின் மறைவுக்கு சிறிது காலத்துக்கு முன்னர் நடந்த லோக்சபா தேர்தலில் எம்ஜிஆரின் அலை காரணமாக 38 தொகுதிகளிலும் அதிமுக வெல்ல. அதிமுக பிரபல பிரமுகரான நாஞ்சில் மனோகரன் மிச்சமுள்ள ஒரு தொகுதியான வட சென்னையில் திமுக வேட்பாளர் ஆசைத்தம்பியிடம் தோற்றிருந்தார்.நாஞ்சில் மனேகரன் இந்த சம்பவத்துக்கு பின்னர் தமிழர் விடுதலை கூட்டணி வட்டாரங்களில் கூறியதாக கேள்வி. யாழ் இளைஞர்கள் நன்கு தமிழ்நாட்டு விபரங்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டாராம்.அன்றல்ல இன்றும் இலங்கை தமிழர்கள் மத்தியில் தமிழ்நாட்டு தேர்தல் மற்றும் அரசியலை உற்று நோக்குவது தவிர்க்க இயலாமல் தான் இருக்கிறது.



அப்போதைய இலங்கையின் உள்ளூராட்சி மந்திரியாக இருந்த தமிழரசுகட்சியை சேர்ந்த திருச்செல்வம் கருணாநிதியுடன்



மிக உலக பிரசித்திபெற்ற வழக்கறிஞர் ஜிஜி பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று சமஸ்டிக்கட்சி அல்லது தமிழரசு கட்சியை எஸ்.ஜே,வி செல்வநாயகம் ஸ்தாபித்தார் .ஜிஜி பொன்னம்பலத்தின் 50க்கு 50க்கு கோரிக்கையை நிராகரித்து சமஸ்டி கோரிக்கையை வைத்தார். அதன் தலைவர் எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்களின் முன்னுள்ள எஸ்.ஜே என்ற விரிவாக்கமான சாமுவேல் ஜேம்ஸ் என்ற கிறிஸ்த்தவ பெயர்கள் காரணமாக பிரச்சனைக்குள்ளானார்.

யாழ் உயர் இந்துத்துவ சிந்தனையுள்ள தமிழ் காங்கிரஸினர் இந்த விடயத்தை ஒரு ஆயுதமாக கையில் எடுத்து செல்வநாயகம் தமிழருக்கு தலைமை தாங்க தகுதி இல்லாதவர் என பிரச்சாரம் செய்தனர் .அப்பொழுது தமிழ்நாட்டில் எழும்பிய திராவிட எழுச்சி அல்லது திராவிட முன்னேற்றகழகத்தின் எழுச்சி இலங்கையில் தமிழரசு கட்சியினருக்கும் உதவியது என்பதை மறுக்க முடியாது.திராவிட முன்னேற்ற கழகத்தினரின் போராட்ட முறைகளை தாங்களும் பின்பற்றியது மட்டுமன்றி அவர்கள் மாதிரியே மேடைப்பேச்சுகளை பேசி மக்களை உசுப்பேத்தினர்.மொத்தத்தில் தமிழ்நாட்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் நகலாக இங்கு இருந்தனர் என்று சொல்லலாம்.

so call சுதந்திர இந்தியாவிற்குக்கு முற்பட்ட காலத்தில் பிரிட்டிஸாரால் உருவாக்கப்பட்ட காந்தி நேருவின் காங்கிரஸ் கட்சியிலும் பார்க்க தமிழ் நாட்டில் ஒரு காலகட்டத்தில் இடதுசாரிகள் வலுவாக இருந்தார்கள் என்று கூறுவோர்களும் உளர்.அது போல யாழிலும் உந்த தமிழரசுக்கட்சியின் எழுச்சிக்கு முன்னர் இடதுசாரிகளின் அலை இருந்தது என்று சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள் .so call சுதந்திர இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் வடக்கில் பருத்தித்துறை தொகுதியில் கம்னீயூஸ்ட் கட்சியில் கந்தையா அமோக வெற்றி பெற்றிருந்தார் .அத்துடன் ட்ரொக்ஸிய சிந்தனை நிரம்பிய என்.எம் பெரேராவின் சமசமாஜக் கட்சிக்கும் யாழில் பல இடங்களில் மிக்க ஆதரவு இருந்திருக்கிறது என்று கூறுவோர் உளர் .

பிற்க்காலத்தில் தமிழர் கூட்டணி தலைவராக இருந்த சிவசிதம்பரம் தோழர் கந்தையாவின் அரசியல் பாசறையில் இருந்து தான் வந்தவர் என கூறுவர் உளர். இப்ப இருக்கிற ஆனந்தசங்கரி முன்னர் சமசமாஜக்கட்சியில் போட்டியிட்டவர் .இப்படி வடக்கில் இடதுசாரிகளுக்கு தமிழர்கள் ஆதரவு வழங்கி இருந்தாலும் பின்னர் வடே தோசை அபிட்ட எப்ப (வடை தோசை எங்களுக்கு வேண்டாம்)என்று கோசம் போட்டு தமிழருக்கு எதிராக ஊர்வலம் போனவர்கள் என்று தமிழர்கள் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டும் உண்டு.


தமிழரசுகட்சி தமிழர்விடுதலை கூட்டணியான பிறகு யாழ் முற்றவெளியில் நடந்த கூட்டத்தை பார்த்த நீயூஸ்வீக சஞ்சிகையின் நிருபர் ஒருவர் எழுதி இருந்தார் .கறுத்த கோட் போட்டு வழக்கறிஞர் தொழிலாக கொள்ளும் இந்த தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் வாய்ச்சவடால் பேச்சின் மூலம் தமிழ் மக்களை தங்களுக்குள் அதிசயக்க வகையில் கட்டுகுள்ளாகிறாக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டார். இந்த நிருபர் இந்த பேச்சு வழிமுறையின் அசல் சொந்தக்கரார்களான திராவிட முன்னேற்ற கழகத்தினரின் பேச்சுக்களை பார்க்கவில்லை போலும்

. 70 களில் தமிழர் கூட்டணி மேடைகளில் பிரபல மேடை பேச்சாளராக வண்ணை ஆனந்தன் என்றொருவர் இருந்தார் இவரின் பேச்சினால் பல இளைஞர்கள் கவரப்பட்டார்கள் . அதனால் முட்டாள் தனமாக உணர்ச்சி வசப்பட்டார்கள். இரத்தத்தால் நெற்றி பொட்டு இட்டார்கள்.இவரின் பேச்சு வழமையான பேச்சில் இருந்து வித்தியாசமான முறை இருந்தது என்பது உண்மை தான் . பின்னர் தான் அறியகூடியதாய் இருந்த்து. தந்தை பெரியாரின் பேச்சு ஸ்டைலை பின்பற்றியிருந்தாராம். இவர் மேடை நாகரிகமின்றி துப்பி பேசுவார் . பெரியார் இப்படி பேசினாரோ தெரியாது. வண்ணை ஆனந்தனின் பேச்சு போலத்தான் இன்று சீமான் அவர்கள் தன் பேச்சினால் இளைஞர்களின் நரம்புகளை முறுக்கேற்ற வைக்கிறார் .காலம் காலமாக உலகத்தில் தமிழன் எங்கை வாழ்ந்தாலும் உந்த உசுப்பேற்றிய பேச்சை நம்பியே ஏமாந்து போவதை வழக்கமாக கொண்டிருக்கிறான்.

இலங்கை தமிழரசுக்கட்சியினர் எப்பொழுதும் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு தான் விசுவாசமாகத்தான் இருந்துள்ளனர் என்று சொல்லலாம் .எம்ஜீஆர் மலையாளி என்பதால் ஒரு அவ நம்பிக்கை காரணமாக இருந்திருக்கலாம் .அதற்க்கு சில உதராணம் கூறலாம் கருணாநிதியின் ஊழல் குற்றசாட்டு காரணமாக அப்பொழுது சன்சோனி கமிசன் அமைத்திருந்தார்கள் ..பிற்கால்த்தில் தமிழர் கூட்டணியில் இணைந்திருந்த உலக பிரபல வழக்கறிஞர் ஜீஜீ பொன்னம்பலம் கருணாநிதிக்காக வழக்காட இந்தியா சென்றமை . எம்ஜீஆர் ஆட்சி காலத்தில் மதுரையில் நடந்த தமிழராய்ச்சி மகாநாடு நடைபெற்றது .அந்த காலம் திமுக என்றாலும் சரி அதிமுக என்றாலும் சரி ஈழ அரசியலை தவிர்த்து அரசியல் நடத்த முடியாத நிலைமை. அந்த தமிழாராய்ச்சி மகாநாட்டுக்கு அமிர்தலிங்கம் தமிழர் கூட்டணி தலைவர்கள் சென்று இருந்தனர்.இவர்களுக்கு வசதி அளிப்பதற்க்கு வரவேற்பதற்க்கு இரு கழகத்தவரும் போட்டி போட்டனர்.எம்ஜீஆர் இவர்களுக்கு என்று பிரத்தியேகமான கார் வசதிகள் போன்றவற்றை அளிப்பதுக்கு ஏற்கனவே ஒழுங்கு படுத்தி வைத்து இருந்தார் .ஆனால் தமிழர் விடுதலை கூட்டணியினர் தங்களுக்குள்ள திமுக விசுவாசம் காரணமாக திமுகவினரினர் காரில் சென்றமையால் எம்ஜீஆரை கடுப்பாகிய நிலைமையும் நடந்ததுண்டு.

இலங்கையில் சிங்களவர் பெரும்பான்மையாராக இருந்தாலும் தமிழ்நாட்டு தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டு அரசியல் காரணமாக இந்துசமுத்திர பிராந்தியத்தில் அவர்களிடம் சிறுபான்மை உணர்வே மேலோங்கி இருந்தது .இப்பொழுதைய தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் நடவடிக்கையின் காரணமாக அவர்களிடம் அந்த பயம் நீங்கியுள்ளது.அத்துடன் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளை கோமாளிகளாக பார்க்கும் நிலமையே இப்பொழுது ஓங்கி உள்ளது.


ஒரே குட்டை ஊறிய மட்டைகளுக்கு காலமாக காலமாக மாறி மாறி வாக்கு அளித்து தமிழ்நாட்டு மக்களுக்கும் இன்னும் விடிவில்லை. உலக தமிழ் மக்களுக்கும் விடிவில்லை .மாற்று அரசியலை விரும்பி ஒரு மாற்றத்தை விரும்புவர்கள் கூட தேர்தல் பாதையைத்தான் காட்டுகிறார்கள் .உது சாதாரண மக்களுக்கு ஒரு விடிவை தராது என்பது தான் நிதர்சனம்

No comments: