பட்டணம் போற வழியில் (சிறுகதை)
நேரம் போய் விட்டதை அப்பொழுது தான் உணர்ந்தான் .அதை துரத்தி பிடிக்கும் நினைப்பில் அவசரத்தில் அவன் செய்யும் காரியங்களை பார்க்க அவனுக்கே ஒரு நகைப்பாக இருந்தது.ஒரு கணம் சுதாகரித்து தனது அடுத்தடுத்த வேலைகளை செய்ய தயாரானவனை றேடியோவில் சரியாக இப்ப ஏழு மணி என்று கொண்டு இசை முழக்க பரிவாரங்களுடன் வந்த கே.எஸ் ராஜா இடை மறித்தார்.கிழக்கு பறவை மேற்கு வானில் பறக்க பார்க்குது என்று ஏதோ சொல்லி ஓடாத படத்தை ஓட்டுவதற்க்காக கூவுவதை பார்க்க எரிச்சல் எரிச்சலாக வந்தது .உந்த வானொலி நிகழ்ச்சி முடிய அரை மணி நேரம் எடுக்கும் அதுக்கு முதல் அவன் அந்த எக்ஸ்பிரஸ் பஸை பிடிக்கவேண்டும் அதற்காக அந்த அரை மணித்தியாலத்துக்குள் கால் மைல் தூரத்தில் உள்ள சந்தியை அடைந்தே தீரவேண்டும் அதுக்குள் எல்லாம் முடிக்கவேண்டும். எல்லாம் முடித்து விட்டு நடந்து கொண்டிருந்தான்.அன்று அவன் வாரத்தில் ஒரு நாள் பட்டணத்துக்கு போகும் நாள் .எப்போது இல்லாமால் அன்று அவனது நடை உடை பாவனை எல்லாம் மாறி இருக்கும் .அவன் இன்று பட்டணம் போகிறான் என்று சொல்லாமால் ஒரு சொல்லல் பார்ப்பவர்களுக்குள் உணர்த்தி கொண்டிருக்கும்.ஏன் அன்று விசேசமாக அப்படி போய் வருகிறான் என்று யாரும் கேட்டதுமில்லை .யாருக்கும் தெரிந்ததுமில்லை யாருக்கும் சொன்னதுமில்லை.
அவனைப்போல பல பேர் அவசரத்துடன் அந்த வேக பஸ்ஸை பிடிப்பதற்கு காத்திருப்பர்,பஸ்ஸில் ஏறக் காத்திருப்பர் என்று கூறுவது கொஞ்சம் மரியாதை குறைவு .ஏறுவதற்க்கு இவர்கள் படும் பாடு இருக்கே அந்த தள்ளு முள்ளு பாய்தல் இறங்குதல் இடித்தல் எல்லாம் பார்க்க கிடைத்தால் ஒரு கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.அந்த காட்சியை முழுமையாக இரசிக்க கிடைக்க வேணுமென்றால் நீங்கள் அந்த வாகனத்தில் போகாதவராக இருக்க வேண்டும். அப்படி போகாமல் அந்த காலை வேளையில் அந்த சந்தியில் அந்த நேரம் வழக்கமாக பிரச்சனமாகி இருப்பார் தண்ணியடிச் சாமியார் இதற்காகவே.அவரை இந்த நேரத்தில் மட்டும் விரும்பினால் சாமியார் என்று அழைக்கலாம் அதுக்குரிய அணிகலனுடன் உங்களுக்கு தரிசனம் தருவார்.மற்ற நேரங்களில் நிறை வெறியில் இருக்கும் அவரையும் அவரது நடத்தைகளையும் பேச்சுகளையும் பார்க்க மற்றவர்களுக்கு தான் கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.
வழமையாக அந்த பஸ்ஸை காத்து நிற்கும் அந்த சொற்ப நேரங்களில் அவனும் அந்த சாமியாரும் உரையாடி சிரித்து குதூகலிப்பார்கள்.தராதரம் பார்ப்பவர்களுக்கு பார்ப்பதுக்கு ஒரு மாதிரியாக இருக்கும் .எந்த மாதிரியுமே இவனுக்கு இருக்கவே இருக்காது .மேலும் சொல்லப் போனால் ஒரு குதூகலம் இருப்பதைத்தான் காணக்கூடியதாக இருக்கும் .இவர்கள் இருவருக்கும் என்ன பந்தம்? அப்படித்தான் இருந்தாலும் இவ்வளவு சுவராசியமாக பேச என்ன தான் விசய தானம் இருக்கு என்று அறிய அந்த அவசரத்தில் கூட காதை நீட்டி கேட்க முனைவர் சிலர்.சாமியாருக்கு இவ்வளவு வயது வந்தும் உந்த 20 மைல் தூரத்தில் உள்ள பட்டணத்துக்கு செல்லவில்லை என்ற மனக்குறை எப்பவுமே இருக்கு.. இப்படி வேசம் கட்டி டிப் டொப்பா எல்லாம் வெளிக்கிட்டு இடித்து பிடித்து ஏறி போறீங்களே அப்படித்தான் என்னதான் அங்கு இருக்கடப்பா?.நானும் ஒரு நாள் பட்டணம் வந்து எப்படி இருக்கு என்று கட்டாயம் பார்க்கோணும் என்பார் புன்னகையுடன். அவன் இவர் இப்படி வெள்ளாந்தியாக கேட்பதனால் அவரை ஒன்றுமறியா முட்டாள் என்று எப்பொழுதுமே நினைத்ததுமில்லை.அரசியல் முதல் கொண்டு சகல விடய தானங்களையும் விரல் நுனையில் வைத்திருப்பார் .அத்துடன் விவாதிக்கும் போது விளக்கும் பொழுது அவருக்கே உரித்தான பாணி இருக்கும் என்பது அவனை தவிர அவ்வூரில் யாருக்குமே தெரியாது என்பது தான் உண்மை.இவரை முதல் முதல் கண்டது எப்ப என்பதை ஞாபகத்தில் நினைத்து பார்க்க முயற்சி செய்தாலும் ஞாபகத்துக்கு வர முடியாத படி பல வருடங்களாகி விட்டன.
ஒரு நாள் எப்பவும் போலவே அவ்வூர் வைரவ கோயிலடி வடக்கு வீதியிலுள்ள வேப்ப மரத்தின் கீழ் கொதிக்கும் கோடை வெய்யிலை தணிக்க உதவும் சோழ்க்காற்றினை அநுபவித்து கொண்டு ஏகாந்தமாக இருப்பது வழக்கம் .நாலடி தள்ளி ஒரு பெரும் சுவர் அதை தாண்டி யாரும் பல காலமாக பாவிக்க படாத பாழடைந்த வீடு .பல காலமாக வெளிப்படையாக பலரும் பாவிக்காத வீட்டை கொஞ்ச காலமாக ஆக்கிரமித்து இருக்கிறார்கள் அவ்வூர் இளைஞர் சிலர் ,அவ்வூர் இளைஞர்கள் மட்டுமல்ல வேறு புது முகங்களும் அங்கங்கே கண்ணில் தென்பட தொடங்கி இருக்கிறார்கள்.நாடு பிடிப்பதற்க்காக நாடு விட்டு கடல் கடந்து போய் கையை காலை உடம்பை உரமாக்கி பல கலைகளையும் கற்று திரும்பி இருக்கினம் என்று சனம் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறான் .கொஞ்ச காலத்துக்கு முதல் இந்த கோயிலுக்கு முன்னால் உள்ள வெட்டையில் பன மட்டையை பற்றாகவும் ஊமத்தங்கொட்டையை பந்தாகவும் நினைத்து அரை கால் சட்டையுடன் விளையாடிய அதே சிறார்கள் தான் இப்ப ஏகே யோ ஜீ 3 யையோ ஏதோ இரும்பாலை செய்த ஆயுத்த்தை தூக்கி கொண்டு திரிந்து கொஞ்ச காலமாக அவ்வூர் மக்களை மிரள வைத்து கொண்டு இருக்கிறார்கள்.அவல மரணச்சத்தம் கேட்க என்னவென்று கேட்க போனபொழுது தான் முகத்தை மறைத்த தாடியுடன் அழுக்கு நிறைந்த உடையுடனும் மல்லாக்காய் படுத்த படி குளறியென்று இருந்தார்
அவரை அவர்கள் கையில் கிடந்த எல்லாத்தினாலும் தாக்கியபடி விசாரித்து கொண்டிருந்தனர்.இவன் உளவாளி விசாரிக்கிறம் இதிலை தலையாடதையுங்கோ... பின் தலையிடாதே என்று மாறி ...,பிறகு கனக்க கதைச்சி என்றால் இவருக்கு நடக்கிறது தான் உனக்கு நடக்கும் என்று உச்ச ஸ்தாயில் அவர்களின் வார்த்தைகள் தடித்த பொழுதும் அவர் அப்பாவி என்று ஏதோ அவனுக்கு பட்டதால் பல மணிநேரம் வாதிட்டு மீட்டு எடுத்து வந்ததில் ஏற்பட்ட பந்தம் இப்பவும் தொடர்கிறது,
அவர் பக்கத்தில் இருக்கிற நாலு ஊரை தாண்டிய அடுத்த ஊரை சேர்ந்தவர் ..ஏதோ பிரச்சனையில் ஊரை விட்டு வெளிக்கிட்டு ஊர் ஊராய் அலைகிறார் என்பது மட்டும் அவரை பற்றி அவர் அவனுக்கு சொன்ன கதை அவ்வளவு தான் ..அதற்க்கு மேல் அவரது நதி மூலத்தையும் ரிசி மூலத்தையும் விசாரிக்கவுமில்லை மேல் விபரங்களை சொல்லவுமில்லை. அன்று அப்படி உளவாளி என நினைக்கப் பட்டவர் . இன்று உள்ளுர் வாசியாக மாறி தண்ணிச்சாமியார் என்றாலே எல்லாருக்கும் தெரிந்தவராக பிரபலமாகியும் விட்டார்
சந்தியை அடையும் பொழுது தேநீர் கடையிலிருந்து இப்பொழுத நேரம் சரியாக ஏழு மணி முப்பது நிமிடம் என்று விடைபெறுவது கே.எஸ் ராஜா ,,,என்று றேடியோ அலறியது.....அதை காது கொடுத்து கேட்டவன் பின் சந்தியை நோக்கி கண் கொடுத்து பார்த்தான் .எல்லோரும் அவசரத்தில் பஸ் வரும் திசையை நோக்கி பார்த்த வண்ணம் இருந்தனர் ..பஸ் இன்னும் வரவில்லை...வழமையான நேரத்தில் அங்கு காணும் சாமியார் இன்று கொஞ்சம் லேட்டாய் வந்தாலும் எப்பொழுதும் பரட்டையாக தோன்றும் தலையை வாரி இழுத்து நசனலும் வேட்டியுமாய் காட்சியளித்தார்.அவர் அவனை பார்த்து சிரிக்கும் பொழுது நான் இன்றைக்கு பட்டணம் போறன் எல்லோ என்று சொல்லாமால் சொல்லுவது மாதிரி இருந்தது.
பஸ்க்குள் நெரிசலோடு நெருசாலாக ஏறிய படியால் அவர் பஸ்ஸில் ஒரு தொங்கலில் அவன் மற்ற ஒரு தொங்கலில்.அசுர வேகத்தில் செல்லும் அந்த வாகனம் பட்டணத்து தரிப்பிடத்தில் வழமை போல் எட்டுமணி பதினந்து நிமிடத்தில் நிற்பேன் என சொல்லுவது போல் ஓடிக்கொண்டிருந்தது.எதிர்புறமாக வேகமாக ஓடும் வீடுகளும் மரங்களும் வேலிகளும் அதை உறுதி செய்தன.இவ்வளவு காலமும் அவரது தனிப்பட்ட அந்தரங்கத்தை கேட்காதவனின் மனது அவர் இன்று ஏன் பட்டணம் செல்லுகிறார் என்று அலட்டிக்கொண்டது .முன் சீட்டில் ஒன்று ஒரு பெரிசு சுவராசியமாக பேப்பர் படித்து கொண்டிருந்தது.பேப்பரின் தலைப்பில் பல நாள் கிடப்பில் இருந்த இரட்டை கொலை வழக்கு இன்று மேல் நீதிமன்றத்தில் என்ற வரிகள் முந்திரிகை கொட்டை எழுத்தில் சிரித்து கொண்டிருந்தது.,நெரிசலில் சுகம் காணும் இளசுகள் ஒரு புறமும் .நெருசலில் வேதனைபடும் பழசுகளுமாய் பட்டணத்தை நோக்கி பஸ்ஸின் வேகத்திலும் பாரக்க மனசை அப்படி ஒரு விரைவில் வைத்திருந்தினர் அதனால்..அப்படி ஒரு அவசரக் களை அவர்களிடம் தோன்றியது.ஆனால் சாமியாரின் எண்ணமோ பஸ்ஸில் பிரயாணம் செய்யாமால் எங்கோ பிரயாணம் செய்து கொண்டிருந்தது.
வையடா இன்னொரு வெடி அவளின்ரைக்குள்ளை. என்று..அவளை கொலை செய்த பின்னும் அந்த வீரியமற்றவர்கள் வீரியம் காட்டியது..அவளோடை தொடர்புடையவனும் அவளோடு சேர்ந்து மாண்டு போனது சந்தர்பசவசத்தால் தான் அதற்க்கு சாட்சியானது அதனால் அந்த ஊரை விட்டு வெளியேறியது தண்ணிச் சாமியாராக மாறியது எல்லாம் பழங்கதையாக போய் விட்டது என்று நாட்களை கடத்தியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.முடிவுறாத வழக்காக கீழ்க் கோட்டில் கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கை இத்தனை வருடங்கள் பின் மேல்கோட்டில் விசாரணையாம் ,,விலாசமில்லாமால் இருந்தவைரை எப்படியோ விலாசம் தேடி கண்டிபிடித்து அவருக்கு மேல் கோட் மூலம் அழைப்பாணை கையளிக்க பட்டிருந்தது,விருப்பத்தோடு பார்க்க வேண்டி நினைத்த பட்டணத்தை பார்க்க போக இப்படி ஒரு விருப்பமில்லாத சூழ்நிலை நிலையில் அமைந்தது அவருக்கு வேதனை அளித்தது.அவனுக்கு இந்த கதையை சொல்ல வேணும் என்று மனது துடித்தது ஆனால் அவன் இந்த சன நெருக்கத்தை தாண்டி பஸ்ஸின் மூலையில் அல்லவா இருந்தான், அவனும் அவரிடம் இந்த அவசர பட்டண விஜயம் ஏன் என கேட்க ஆவலுடன் இருந்தாலும் கேட்க முடியாமால் தவித்தான் .இப்படி ஒருதருக்கு ஒருதர் பேச முடியாமால்தவித்து கொண்டிருக்கும் பொழுது பஸ் அந்த பரந்த வெளியினூடாக ஓடிக் கொண்டிருந்தது.
அந்த ஒரு கணம் முடிந்த அடுத்த கணத்தில்.தூக்கி ஏறியப்பட்டு ஒரு பற்றை மறைவுக்கு பின் அருகருகே கிடந்தனர் .பஸ்ஸில் சந்திக்க பேச முடியாத இருந்தவர்களுக்கு விபத்து என்னவோ நடந்து இவர்களை இப்படி ஆக்கி விட்டிருக்கு.இருவருக்குமே பலத்த அடி அங்கங்கே அவர்களின் உடம்பின் பல பாகங்களிலுமிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பரிதாபட்டு கொள்ளவே மட்டும் முடிந்திருந்தது.,எழும்ப திராணியற்று கிடந்தனர்
பலத்த சத்தம் கேட்டது ,தனது முழு சக்தியை பிரயோகித்து தன் முன்னால் மறைத்த பற்றைச் செடியை விலக்கி பார்த்தார்
அரிவாளுடன் இருந்த நால்வர் ஒருவரோடு ஒருவர் பிணைத்து கை விலங்கு மாட்டி இருந்தவர்களை துரத்தி கொண்டிருந்தனர் .
,,அங்கு ஒரு பழிவாங்கல் ஒரு முயற்சி நடந்து கொண்டிருந்தது இவருக்கு விளங்கியது
பழைய கொலையாளிகளுக்கு புதிதாக கொலையாளிகளாக போறவர்கள் தண்டனை கொடுத்து கொண்டிருந்தனர்
தலை முண்டம் ஒன்று அவர்கள் இருந்த பத்தை நோக்கி உருண்டு வந்து வெட்டுண்ட காளிதாஸின் தலையின் பாணியில் கிடந்தது
இவர்கள் பத்தை மறைவில் கிடந்தமையால் யாரும் இவர்களை கவனிக்கவில்லை
பட்டண கோட்டில் நடக்கும் வழக்குக்கு இந்த வெளியில் தீர்ப்பு வழங்கபட்டிருக்கிறது..
என்ன நடந்தது ஏன் என்று ஒன்று தெரியாமால் அவன் தவித்து கொண்டிருந்தான்
தனது முதல் பட்டண விஜயம் நிறுத்தபட்டுவிட்டது இந்த கதையின் தலைப்பு இது தான் என்று நகைச்சுவையாக கூறிக் கொண்டு
அவனுக்கு இவ்வளவு நாளும் சொல்லாத கதையை முதலில் இருந்து சொல்லி கொண்டிருந்தார்,,,அவனும் கேட்டு கொண்டிருந்தான்
அந்த வெளியில் இப்பவும் பெரிய கூச்சலும் கலவரமுமாகவே இருந்தது. அது இன்னுமே அடங்கவில்லை
அதைப்பற்றி ஒன்றும் கவலைப்படாமால் அவர்கள் இருவரும் பேசி கொண்டு இருக்கின்றனர்.
.
அந்த பற்றை மறைவுக்கு பின்னால் படு காயம் அடைந்து இருக்கும் இருவரையும் யாரும் காணும் மட்டும்
பேசிக்கொண்டு இருப்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்.. அந்த கணத்தில் அவர்களுக்கு?
மிதுவின் கிறுக்கல்களில் எழுதப்பட்டது
No comments:
Post a Comment