Wednesday, August 22, 2012
இவனும் ஒரு மேடை பேச்சாளன் -மிதுவின் சிறுகதை
ஊர் இப்ப தோரணங்கள் கொடிகள் சுவரொட்டிகள் உடன் தன்னை அலங்கரித்து தேர்தல் திருவிழாவுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தது.இது வழமையான தேர்தல் அல்ல .ஆண்ட பரம்பரை மீள ஆள நினைப்பதில் தவறு என்ன என்ற இறுக்கமான கோசத்துடன் கிளம்பிய தேர்தல் .இதனால் ஊர் சனம் மட்டுமின்றி ஏதோ திருடனை பிடிக்க போகின்றது போல் அவசரத்தில் போலிஸ் ஜீப்பில் அங்கும் இங்கும் திரிகின்ற பொலிஸ்காரமும் கூட உணர்ச்சி பிளம்பில் மிதந்து கொண்டிருந்தனர்.குறிப்பிட்ட அனுமதிக்க பட்ட நேரத்தில் மேடை அமைத்து வீராவசத்துடன் அவர்கள் பேச சனமும் உணர்ச்சி பிளம்பாக தகிப்பார்கள்.உணர்ச்சி பிளம்பாக இரவு வீடு சென்று படுத்து நாடு கிடைத்த கனவில் மூழ்கி விடிய எழும்பி வேதனை தரும் தலைப்பு செய்தியை பத்திரிகைகளில் படிப்பார்கள்.
இவன் ஒருவன் எந்த விதமான மேடை அலங்காரமின்றி பட்ட பகலில் சுடும் வெய்யிலில் புல் தரை முன்பாக உள்ள உயரமான கல் மதில் குத்தி ஒன்றிலிருந்து காட்டமாக பேசி கொண்டிருக்கிறான் . நீண்ட நேரம் பேசி இருப்பான் போலும் . பேசியதை முடித்து விட்டு சில நேரம் அவகாசம் எடுத்து விட்டு புதிய தொனியில் புதிய விசயத்தை சொல்ல தொடங்குகிறான்.
இவ்வளவு நேரமும் எனது அரசியல் ஞானம் கலந்த பேச்சை கேட்டு கண்டுண்டவர் போல மெளனமாக இருக்கும் உங்களின் ஆர்வம் புரிகிறது. எனக்கு எப்படி இந்த அரசியல் சாணக்கியம் கிடைத்தது என்ற கதை சுவராசியமானது.யாருக்கும் சொல்லாதாது இது .இன்று சொல்லுகிறேன் உங்களுக்கு.
இந்த ஊரை தாண்டி இருக்கும் வல்லிபுரக்கோவில் அதன் தொடர்ச்சியாக இருக்கின்ற மணல் திட்டுக்கள் உடன் நீண்ட பாலை வனம் போல இருக்கின்ற பகுதி ,பொட்டல் காடு நீண்ட கால பயிரிடப்படாத வயல்கள் உங்களுக்கு தெரிந்தவை ..இவற்றை தெரியாதவர்கள் இவ்வூர் வாசிகளாக நிச்சயமாக இருக்க மாட்டீர்கள் .,..இந்த பகுதியில் பெரிய ஒரு அரச இராச்சியத்தின் தலை நகரம் இருந்தது என்று தெரியாதவர்கள் ..எழுத்து கூட்டி வாசிக்க முடியாதவர்கள் தான் அப்படி இருப்பீர்கள்..
திருவிழா காலம் அல்லது ஏதும் விசேசமான நாட்களில் தான் அப்பகுதிக்கு சென்று இருப்பீர்கள் , நான் இந்த நாட்கள் தவிர்ந்த நாட்களிலும் உலாவுவதுண்டு .இந்த பிரதேசத்தின் தனிமை அமைதி ஏகாந்தம் நடுநிசி இரவு நேரத்தில் கூட இருக்காது
ஆக்களுடன் வாழும் போது முட்டி மோதலினால் ஏற்படும் மன இறுக்கத்தை தவிர்க்க அடிக்கடி இங்கு செல்வதுண்டு.
அப்பகுதியிலிருந்து ஊரை பார்க்கும் போது ஊர் மூச்சு முட்டி தவித்து கொண்டிருப்பது போல் மாதிரியான உணர்வு ஏற்படும் . தூரத்தில் தெரியும் மணல் திட்டுகளை தாண்டி வானத்தை தொட்டு கொண்டிருக்கின்ற சாடையாக நீலமாக தெரிகின்ற கடல் தெரியும் . காற்றின் வீச்சின் ஏற்ற தாழ்வுக்கு ஏற்ப கடல் அலை எழுப்பும் சத்தம் அப்ப அப்ப கேட்டும் கேட்காமால் போகும் .தூரத்தில் சில கட்டாகாலி மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும்.எப்பாவது இருந்து அந்த பிரதேசத்தின் அண்டிய றோட்டில் வான் பஸ் போகும் சத்தம் கேட்கும் சிலவேளை அதுவும் கேட்காது.
அந்த பிரதேசத்தில் உலாவும் போது நானே அவற்றுக்கு எல்லாம் ராஜா மந்திரி என்று நினைத்து கொள்ளும் போது ஒரு நாள் நீண்ட சடை முடி தாடியுடன் அமைந்த சாமியார் போன்ற தோற்றமுடைய ஒருவர் அந்த பொட்டல் காட்டில் உள்ள கொடி செடிகளுடன் பேசிக் கொண்டிருந்தார் .சில வேளை கேள்வி கேட்பவர் மாதிரி இருக்கும் . சிலவேளை பதில் சொல்லுகிறவர் மாதிரி இருக்கும்.ஏதோ பைத்தியமாய் இருக்கும் என்று நினைத்து கொண்டு அவரை தாண்டும் போது மெளனமாக செல்வேன் . அவரும் அத்தருணத்தில் என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு செடி கொடியுடன் பேசுவதை நிறுத்தி விட்டு மெளனமாகி விடுவார்.இப்படி மெளன அறிமுக பரிமாற்றம் இருவரிடமும் பல காலமாக நடந்தேறியது.
.ஒரு முறை இப்படி இவரை தாண்டி செல்லும் போது மகனே என்று அசரீரி போல் என அழைத்து நிறுத்தி என்னுடன் பேச்சு கொடுக்க தொடங்கினார் . நானும் மிக பயத்துடனும் பவ்வியத்துடனும் அளவிளாவா தயாரானேன்.உன்னை ப்பார்த்தால் படித்தவன் போல் தோன்றுகிறது ...இந்த செடி பற்றி தெரியுமா என கேட்டார் .வாயை கொடுத்து வம்பை வளப்பான் என நினைத்து கொண்டு பதில் கொடுக்க வாயை திறந்த வாயை மறுத்தான் கொடுத்து மூடி கொண்டேன்.என்னிடம் எதுவும் நீண்ட நேரம் பதில் வராத நிலையில் இவ்வளவு காலமும் எனக்கு சொல்ல இருந்ததை மெளனத்துக்குள் வைத்து விட்டு இப்ப எல்லாம் சேர்த்து வைத்ததை சொன்ன மாதிரி மடை திறந்த வெள்ளம் போல கொட்ட தொடங்கி விட்டார்.
இந்த செடியை பற்றி யாருக்கும் சொல்லுவதில்லை ..அதை தெரிந்து கொள்ளுவதுக்கு உனக்கு இந்த அதிர்ஸ்டம் கிடைத்திருக்கிறது ..இந்த செடியின் விதை இருக்கிறதே உன்னால் காலத்தை வைத்து கணிக்க முடியாத வயதை உடையது .சில காலங்களில் தான் இது தோன்றும் சில காலங்களில் மண்ணில் அடி யில் உறங்கு நிலையில் இருக்கும் ..இது தோன்றும் பொழுது எனக்கு இருக்கும் அனுமாஷ்ய சக்தியினால் அறிந்து இங்கு வந்து இதனுடன் வந்து பேச்சு கொடுப்பேன் .இதன் தாவர பெயர் இது . இதன் தாவரபெயரின் சூத்திரம் இது என்று அடுக்கி கொண்டு சொல்லிக்கொண்டு போனார் .பைத்தியம் போல் இருக்கும் இந்த சாமியாரிடம் அஞ்ஞானம் மட்டுமல்ல விஞ்ஞானம் தெரிந்து இருக்கிறதே என்று அதிர்ச்சியுற்றாலும் அவர் கூறிய அந்த செடி காஞ்சிரோண்டி வகை செடி .அதன் இலையை எடுத்து சிறு வயதில் யாருக்கும் விளையாட்டுக்கு தேய்த்து விடுவதுண்டு . அப்படி தேய்த்ததனால் ஏற்படும் எரிச்சல் கடி அடங்க நீண்ட நேரம் எடுக்கும் ...
அதனால் நம்பிக்கையற்று அவரை முழு பைத்தியமே என்னுள் தீர்மானித்து கொண்டு எவ்வளவு விரைவாக அவ்விடத்தை விட்டு அகல முடியமோ அவ்வளவு விரைவாக அகன்று விட்டேன்.
எப்பவும் போல அப்பப்ப அங்கு உலாவுவேன் .ஆனால் அந்த சாமியரை இப்ப கன காலம் காணவில்லை.எங்கு சென்றார் என்று என்னுள் ஒரு ஏக்கம் இருக்கும்..சிலவேளை அவரின் அசரீரி குரல் அங்கு கேட்பது போல் எனக்கு பிரமை தோன்றும் .சில வேளை திரும்பியே பார்த்து விடுவேன் .ஒன்றுமே இருக்காது அவ் விடத்தில் வெறும் கட்டாக்காலி மாடுகள் தான் மேய்ந்து கொண்டிருக்கும் .அவர் கதைக்கும் அந்த காய்ஞ்சோண்டி மரச்செடியை கூட காணவில்லை .அதை சூழ பல புதர் செடிகள் முளைத்து விட்டன.ஒரு நாள் பெளணர்மி அன்று அவ்விடத்தில் உலாவும் போது அந்த செடி தெரிந்தது .என்னையறியாமால் அதை நோக்கி சென்றேன். அது தீடிரென்று அரையளவுக்கு உயர்ந்தமாதிரி இருந்தது .அதன் இரு பக்கமும் கிளைத்து நிற்க்கும் இலைகள் கைகள் போல மாறி என்னை நோக்கி வா வா என்று அழைப்பது போல் இருந்தது .அதில் ஒரு இலை குத்தன கிளம்பி மேல் பக்கம் அசைந்து தலை போல காட்சி அளித்தது.இலையின் நடுவிலுள்ள காம்பு திறந்து மூடியது வாய் விட்டு சிரிப்பது போல் இருந்தது .நல்ல நிலவு காய்ந்து கொண்டிருந்தது .என்னை அறியாமால் எனக்குள் ஒரு ஆனந்தம் ஏன் என்று தெரியவில்லை .எனக்கு தீடிரென்று தொடவேண்டும் என்று உணர்வு .உடனே அருகில் போய் இலையை வருடினேன்.
அப்போது தீடிரென்று சத்தம் மட்டும் தான் கேட்டது எனது உடல் கால் பகுதியில் தொடங்கி மெல்ல மெல்ல அருவமாக மாறி கொண்டிருந்தது.அதே நேரம் அந்த பிரதேசத்தின் சீதோஸ்ண நிலை மாறியது .தீடிரென்று ஒரு வித மணம் வீசியது .நாங்கள் சொல்லும் நறுமணத்துக்கு மேலான அந்த நேரத்தில் மட்டுமே உணரக்கூடியதான வாழ் நாளில் நான் நுகர்ந்திராத ஆனந்தம் தரக்கூடிய மணமாய் இருந்தது .. கோட்டைகள் கொத்தளங்கள் ,குதிரை தடம் தெரியும் பெரும் வீதிகளுடன் அங்கங்கு நெருப்பு பந்தங்கள் எங்கள் உலகத்து மேர்க்கூரி வெளிச்சத்தின் மேலான வெளிச்ச செலுத்தி கொண்டிருக்கின்ற இடமாக மாறி கொண்டிருந்தது. ..என்னில் எல்லா உணர்ச்சிகளும் இருக்கின்றன ஆனால் ..நானோ அருவமான நிலையில்
அங்கு ஆவி போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தேன் ..தீடிரென்று ஒரு வித நக்கல் சிரிப்புடன் ஒரு குரல் கேட்டது . மகனே நீ இங்கு வருவாய் எனக்கு தெரியும் என்ற படி ...கேட்ட குரலாக இருக்கிறதே திரும்பி பார்த்தால் அந்த சாமியார் தான். ஆனால் வித்தியாசமாய் இருந்தார் .கொஞ்சம் இளமை ததும்பினதுமாக இருந்தார்
உடை அலங்காரமும் தலை அலங்கராமும் வித்தியாசமாய் இருந்தார் ,சிரிக்கும் போது தெரியும் பற்களின் அமைப்பும் மட்டும மாற வில்லை.
வா மகனே நல்ல நேரத்தில் தான் இங்கு வந்திருக்கிறாய் .. எங்கு நிற்கிறாய் தெரியுமா? நீ காலத்தை கடந்து
இறந்த காலத்துக்கு வந்திருக்கிறாய்
.உன்னுடைய சரித்திர ஆசிரியர்கள் சொல்லி தந்து போல் இங்கு இல்லை என இங்கு இருக்கும் சிறிது நேரத்தில் உணர்வாய் ..
.அவரே பேசி கொண்டு இருந்தார் .
அதோ பார் வெள்ளை இனத்தவரும் கடும் கறுத்த இனத்தவரும் சப்பை மூக்கு உடைய அமைப்புடையோரும் மிக கட்டை இனத்தவரும் அந்த பாய் மரக் கப்பலில் வந்து கரை ஏறி
கொண்டிருக்கிறார்களே ஏன் தெரியுமா?
.இந்த நாட்டின் அரசியல் பொருளாதார விற்பன்னர்கள் சேர்ந்து இன்று மாலை கருத்தரங்கு வைக்கிறார்கள் அதை கேட்க தான் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்
அந்த அரசியல் கருத்தரங்கத்தில் அருவமாக நான் . அவர்களின் உரை விளங்குவது கஸ்டமாக இருந்தது. நாம் பேசும் தமிழாக இல்லாமால் கமா ,கேள்விக்குறி முற்று புள்ளியுடன் இருக்கும் எழுத்து தமிழ் போல இருந்தது ..ஆரம்பத்தில் கஸ்டமாக இருந்தது ..பிறகு இலகுவாக எனது மூளை யின் தினுசுக்களுக்களுள் அந்த உரைகள் அத்தியாயங்களாக மாறி நீண்ட பக்கங்களுடன் பெரிய புத்தகமாகவே சேமிக்க பட்டன.எனக்கு என்னவோ இந்த அரசியல் அறிவை எல்லாம் உடனடியாக எனது காலத்துக்கு சென்று பிரயோகிக்கவேண்டும் போல் இருந்தது.
கெஞ்சிய குரலில் கேட்டேன் எப்படி எனது காலத்துக்கு செல்லுவதுக்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று சாமியாரை நோக்கி ...சாமியார் மெல்லிய சிரிப்பை உதிர்த்து விட்டு இயல் நிலையை கடந்து காலம் கடந்து வந்தவர் திரும்பி சென்றது நடந்ததில்லை அது பல சிக்கல்களை தரும் என்பதால்.
எது எப்படியோ நான் அபாயத்தை எதிர் கொண்டு உனக்கு திரும்பி செல்லுகின்ற இரகசியத்தை சொல்லி தருகிறேன் அதன் படி செய் என்றார்.
அதோ குளம் மாதிரி தெரிகிறதே அதன் அருகில் இருக்கும் அருகில் இருக்கும் மரத்தில் பழம் மாதிரி இருக்கிறதை கடித்து துப்பு காலம் கடந்து செல்வாய் என்றார் .அவசரமாய் ஓடி அவர் சொன்னது போல செய்தேன் ..இப்ப அந்த பொட்டல் வெளியில் நான் மெல்ல மெல்ல தலையிலிருந்து காலை நோக்கி அருவத்திலிருந்து உருவமாக மாறி கொண்டு அரை நினைவுடன் மயங்கி இருக்கிறேன் . தூரத்தில் றோட்டில் வான் பஸ் போகும் சத்தம் கேட்கிறது.
இவன் இங்கு நீட்டி முழுங்கி முழு அரசியல்வாதி மாதிரி பேசி கொண்டிருப்பதை பார்த்த றோட்டால் போன இவனது உறவுக்கார வயது போன மனிசி தன்னுக்குள் புலம்பி கொண்டு சென்றது...என்ன படிச்ச பொடியன் இப்படி பைத்தியகாரனாய் மாறி தன் நிலை தெரியாமால் பேசி கொண்டு திரியுது .என்ன இருந்தாலும் அவரவர் விதியை மார்த்த முடியுமே என்றபடி
இவன் இப்பவும் தொடர்ந்து பேசி கொண்டிருக்கிறான் .ஆனால் ஒரு வித்தியாசம். இவன் பேசி கொண்டிருக்கும் கல் அத்திவார மேடைக்கு முன்னுள்ள புல் வெளியில் இவ்வளவு நேரமும் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் சிதறி வேறு பக்கம் பார்த்து கொண்டு மேய்ந்து கொண்டிருக்கின்றன
Tuesday, July 17, 2012
மிதுவின் சிறுகதை -எது நிஜம் ?
Monday, July 16, 2012
மிதுவின் சிறுகதை -வீடு இல்லாதவன்
வீடு இல்லாதவன்(சிறுகதை)
என்னத்துக்கோ என்று தெரியாமால் முட்டி மோதி கொண்டு நகர்ந்து கொண்டிருக்கும் நிலக்கீழ் சுரங்க நிலைய பாதையின் ஒரு மூலையில் எந்த வித சலனமுற்று தூங்கி கொண்டிருந்தான் ஒருவன்.பலர் இப்படி அங்கும் இங்கும் தெருவோர பாதைகளில் தூங்குவது ஒரு காலத்தில் சூரியன் மறையாத ராஜ்யம் வைத்திருந்தவர்களின் தலை நகரத்திலும் இப்ப சகஜம் என்றாலும்.எனக்கு அவன் ஒருவிதத்தில் பரிச்சயமானவன்.
இதே பாதையில் இதே அவசரத்துடன் இதே பட படப்புடன் கடந்த பத்து வருடங்களாக யாருடையதோ பண மூட்டையை நிமிர்த்தி வைக்க சென்று வருகின்றேன் .அவர்கள் தூக்கி எறியும் அற்ப சொற்ப பணத்துக்காக.இப்படி சென்று திரும்பு வழியில் தான் அவன் என் கண்ணில் தென்பட்டான்.
குளிர்காலம் என்றால் என்ன கோடைகாலம் என்றால் என்ன அவனது உடை ஒரே மாதிரி தான் .அவனது சவரம் செய்யப் படாதா முகமும் கத்தரிக்கோல் கண்டு பல யுகமாய் இருக்கும் என்று நினைக்க வைக்கும் தலை மயிரும் வயது போனவன் போன்று தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோற்றமளிக்கும்.அவனை அண்மிக்கும் போது எதையும் யாசிக்காத கூர்மையான பார்வையும் அர்த்தமில்லாத மென் சிரிப்பும் மிளிரும். .அத்தருணத்தில் இளமையின் இளம் கதிர்கள் சிதறி நிற்ப்பதை காணலாம்
இவனை முதன் முதலாக கண்டேன் எப்பவென்றால். பல வருடங்கள் முன்பும் இதே அவசரத்துடன் சென்று கொண்டிருக்கும் பொழுது தன்னை மறந்த நிலையில் கிட்டார் வாசித்து கொண்டிருந்தான்.அவன் முன்னால் பெரிய துணி ஒன்று விரித்து கிடந்தது ..அதில் அங்கும் இங்கும் நாணயங்கள் சிதறி கிடந்தன.நாணயத்திற்க்காக நாணயாமாய் நடித்து
பாடுபவன் போல் தோன்றாது.அவன் தன்னை மறந்து தான் பாடி தான் ரசித்து வாசித்து கொண்டிருப்பது போலத்தான் தோன்றும்.அந்த அவசரத்தில் செல்லும் அவசரக்காரர்களுக்கு கூட அங்கு அவன் மூலம் வரும் இசையினால் அவனை தாண்டி செல்லும் அந்த சிறு கணத்தில் மகிழ்வை கொடுத்திருக்க கூடும் .ஏனென்றால் அவனை திரும்பி பாராமல் சென்றவர்கள் குறைவு என்று சொல்லலாம் அந்த நகரும் கூட்டத்தில்
.
சில நேரத்தில் எதுவும் செய்யாமால் சும்மா வெறித்து பார்த்தபடி அந்த தூணில் சாய்ந்தபடி இருப்பான் .அடிக்கடி காச்சல் தடிமன் வருத்தம் மனிதர்களுக்கு மட்டுமன்றி .இந்த ரயில்களுக்கும் ஏற்படும்,காய்ச்சல் அளவை தெரிவுக்கும் வெப்பமானி போல் தாமத கால அளவுகளை நிலைய ஒலிபெருக்கி தெரிவுக்கும்..அந்த சிறு கால தருணத்தில் அவனுடன் பேச்சு கொடுத்து பார்த்தால் என்ன என்று ஏனோ எனக்கு தோன்றும். அவனை நோக்கி சிறு புன்னகைப்பேன். அவன் ஒருமுறை பார்ப்பான் படாரென்று பார்க்க கூடாததை பார்த்த மாதிரி முகத்தை அங்கால் தூக்கி விடுவான்.இப்படி பல முறைகளாக பல காலங்களாக.
அங்கு மட்டுமெல்ல நகரத்தின் பெருந்தெரு கரையோரங்களில் கூட அவன் தனித்து மட்டுமன்றி அவனை போல உள்ள கூட்டத்தோருடையும் சேர்ந்து இருக்க காணுவதுண்டு. ஒரு நாள் இப்படியே நான் நகர்ந்து கொண்டிருக்கும் போது நகரின் மையப் பகுதியே என உணர்வின்றி, எந்த வித சலனமின்றி அங்கு கிடைத்த யாரோ ஒருவளுடன் சல்லாபித்து கொண்டிருந்தான்.அத்தெருவினூடக சனங்கள் போகின்றார்களே வருகிறார்களே என்ற எந்த வித பிரகஞை இன்றி .அவனும் அவளும் அவர்களின் வேற உலகத்தில் .சொர்க்கத்தை கண்டு கொண்டிருந்தார்களோ என்னவோ.
தீடிரென்று ஒரு சத்தம் எங்கையோ வந்த கார் சாரதி ஏதோ நினைவில் பின் றிவர்ஸ் எடுக்கும் போது இவர்களது ஆனந்தமய நிலையை குழப்ப அங்கு ஒரு போர்க்களத்துக்கான நிலை எடுப்பு உருவாகி கொண்டிருந்தது.அங்கு வெற்றி தோல்வியை தராமால் அவ்விடத்தில் இரத்த வெள்ளத்தை தந்து கொண்டிருந்தது..
அந்த சம்பவத்தின் பின் அதன் காரணமான சாட்சி சம்பிரதாயத்துக்கு சென்றதன் காரணமாகத் தான் அவனுடன் ஆழமாக பழக ஏற்பட்டது.பேச்சு கொடுத்து பார்த்தேன் ,,பேச்சு கொடுத்து பேசி பழகுவது எல்லாருக்கும் இயல்பானது இலவகுவானது தானே என்று நினைத்திருந்தேன் அவனுடன் பழகும் மட்டும்.கேள்வி பதிலில் இன்னொமொரு தேவையற்ற கேள்விக்கு இடமின்றி அவனின் பதில் இருக்கும் ..அப்படி பல
அவன் ஒரு phd முடித்த கல்வியாளன் அவனுடனான உரையாடலிருந்து பெறும் தகவல்களில் இருந்து கண்டு கொண்டேன்.அந்த படிப்பை அந்த பட்டத்தை அலட்சியமாக அநாயசமாக வெறுப்பதாக கூறினான்..சராசரிகளின் எதிர்பார்ப்புக்கு எதிர்மாறக இருந்தது அவனது எதிர்பார்ப்பு .சீ எந்த வித எதிர்ப்பார்ப்பே இல்லாத ஒருவனாய் இருந்தானே.அவனது நாடோடி தன்மை அவன் அனுபவிக்கும் சுதந்திர காற்று என்னிடமில்லையே என்ற வேதனை பொறாமை எல்லாம் அவனை காணப்போகும் போதெல்லாம் எனக்கு ஏற்படும்.நாங்கள் எல்லாம் காற்றடித்த யாரோ ஒருவருடைய விருப்பு வெறுப்புக்கு ஏற்ப நடந்து கொண்டு இருக்கும், றீமோட்டோல் இயக்கும் பொம்மைகளாக தோன்றும் அப்போது.
காலம்களும் சும்மா இல்லை இயந்திரகதியில் நகர்ந்து கொண்டிருந்தது ..நான் அடிக்கடி சந்திக்கும நபர்களை கால இடவெளியில் காண நேரிடும் சந்தர்ப்பம் ஏற்படும். அவர்களிடம் இருந்து இளமையிலிருந்து இடம் மாறிய முதுமை தோற்றம் எனனுள் வந்ததை அப்ப தான் எனக்கு வந்து நினைவுறுத்தும் .இந்த இடைபட்ட காலங்களில் இவனை தேடி கண்கள் நான் போகும் இடம் எல்லாம் அலையும் ஆனால் .கண்ணில் படவில்லை .அவன்.எங்களைப் போல் அக்கம் பக்கம் கொஞ்ச நகராமால் அபாயத்தை துளியும் நேரிடயாக சந்திக்க துணிவில்லாமால் நேர்கோட்டில் வாழுபவனா .அவன்? .எங்காவது சென்று இருப்பான் என்று நினைத்தாலும் அவன் நினைவு என் மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது.
அவன் தூங்கி கொண்டு இருக்கிறான் என்றல்லா நினைத்து விட்டேன் ,ஏது நடந்து விட்டது .அவனை சுற்றி நிற்க்கும் பொலிஸ் உடை அம்புலன்ஸ் உடை தரித்தவர்கள் பரபரப்படன் இயங்கி கொண்டிருப்பதை பார்க்கும் போது செத்து கொண்டிருக்கிறானா செத்துவிட்டானா..என்ற ஏக்கம் என்னுள்.
அங்கு அவனை தூக்கி செல்கிறார்கள் .பார்க்க முடியவில்லை பரபரப்பாக செல்லும் கூட்டம் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறது.வாழ்வதாக நினைத்து கொண்டு சடமாக வாழும் இந்த கூட்டம் வாழ்வையும் சாவையும் ஒன்றாய் நினைத்து வாழும் போதே வாழ்ந்து விட்டு செத்தவனை பார்க்க என்னமாய் அங்காலாய்க்கிறது என்று ஆத்திரமாய் வந்தது எனக்கு.
எல்லா பக்கம் செல்லும் நிலக்கீழ் ரயில்களுக்கும் ஒரே நேரத்தில் காச்சல் பீச்சல் ஏற்பட்டு விட்டதோ என்னவோ தெரியவில்லை.வழமையாக இதே நேரத்தில் பரபரப்பாக அசைந்து கொண்டு இருக்கும் கூட்டம் அசைவிற்று சிதறி நிற்பது போல தென்பட்டது ..இந்த இடையில் நிற்பவர்களின் வம்பு பேச்சை கேட்டு பார்க்கவேண்டும். கேட்டு பாருங்களேன் ஒரு ஆராய்ச்சியே செய்து முடித்திருப்பார்கள்.
இவர்களால் நகரின் அழகே கெடுது என்று பக்கத்தில் நின்ற மற்ற ஒருவனிடம் கூறிக்கொண்டு நின்றது . பார்க்க சகிக்காத கடுமையான மூஞ்சியை முகத்தில் ஒட்டியிருந்தது போல இருந்த கோட்டு சூட்டு போட்ட அழகற்ற கபோதி ஒன்று.
அதற்கு தலை ஆட்டி விட்டு தொடங்கியது மற்றவன். அதை போல இருந்த இன்னொன்று .அந்த ஆட்டத்துக்கு அர்த்தம் ஒம் என்றுதா இல்லை என்றதா கொள்ள முடியமால் இருந்தது
.
இவையளை ஒழுங்கு படுத்தி ஒரு வீட்டு வசதி செய்தாலும் அதுகள் திரும்ப வந்து றோட்டுக்கு வந்து படுக்குதுகள். அதுக்கு அரசாங்கம் என்ன செய்யிறது என்று தொட்ரந்து கொண்டு இருந்தார்.
அவன் இறந்து விட்டான் .அடுத்த நாள் பப்பராசி பத்திரிகையில் அவனது படத்துடன் முகப்பு செய்தியாக வந்ததது பெரிதாக ஆச்சரியமாக படவில்லை
அதை விட ஆச்சரியம் எனக்கு காத்திருந்தது. அவன் உண்மையில் பரம்பரை கோடிசுவரன் என்ற உண்மையை வெளியிட்டு இருந்தது தான் ..இனிமேல் அவனை பற்றி உண்மை பொய்யும் கலந்து வெளியிட்டு பல கதைகள் சொல்லும் வேலையை அவர்களே செய்வார்கள் என்று நினைத்து கொண்டு நிலசுரங்க ரயில் நிலைய படிக்கட்டுளூடகா அதே படபடப்புடன் அதே அவசரத்துடன் சென்று கொண்டு இருக்கிறேன்
இப்பொழுது அந்த இடத்தில் அந்த பிளாட்பார தூணுக்கு கீழ் வேறு ஒரு வீடு அற்றவன் படுத்து கொண்டு இருக்கிறான்
Thursday, May 17, 2012
மிதுவின் (மே மாத -2012) சிறுகதைகள்
Thursday, November 24, 2011
மிதுவின் கார்த்திகை மாத(2011) சிறுகதைகள்
அவனுக்கு இன்று அரசாங்க முத்திரை இடப்பட்டு வந்த கடிதத்தை பார்த்ததிலிருந்து உப்பிடித்தான் இருக்கிறான்.வீட்டுக்கு அண்மையிலுள்ள சந்தியை இதற்க்குள் வந்து விட்டேன் என்பதை நினைக்கும் பொழுது அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது,.இப்ப கொஞ்ச நேரம் முன் தான் அந்த டச்சு கிழவனிடம் விடைபெற்று வந்த மாதிரி இருந்தது, அவனை அறியாமால் வருபவர்கள் போவர்களுக்கு வழி விட்டு மற்றும் திரும்ப வேண்டி இடத்தில் திரும்பி நிற்க வேண்டிய இடத்தில் நின்று இவ்வளவு தூரத்தை நடந்து கடந்தது ஒரு நிமிடத்துக்குள் என்ற மாதிரி இருந்தது.அதற்கு காரணம் அவனுக்கு தெரியாததல்ல,, .எண்ணங்களோடு முட்டி மோதி சமாதனப்படுத்தி இருக்கும் பொழுது மறுபுறத்தில் தீடிரென்று கொழுந்து விட்டு எரியும் மனக்குமுறல்களை தணித்து ஆழ்மனத்தை அடக்குவதில் செலவழித்ததில் நிஜ கால அளவை கடந்த ஞானி போல் இருந்தான்.இப்ப கொஞ்ச முன்பு தான் தனது பாசத்துக்கு நேசத்துக்கும் நட்புக்குமுரிய அந்த கிழவனிடம் அந்த செய்தியை சொல்லி அதற்கு என்ன செய்யலாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்றல்லாம் விவாதித்து ஏதோ முடிவை பெற்று கொண்டது போல் இருந்த இந்த மனம்.அதற்க்குள் அந்த ஒரே விசயத்தையே திரும்ப திரும்ப அரைத்து உள்ளத்தை குமுற வைத்து வாந்தி எடுத்து கொண்டிருந்ததை பார்க்க தன்னிலையே வெறுப்பு கொண்டான் .இது என்ன வாழ்க்கையடா ..சொந்த பிறந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை பற்றி ஏன் இவ்வளவு கவலை படுவான் என்று அலுத்து கொண்டான்,
வந்த ஆத்திரம் கோபத்தில் விரக்தியில் வாசித்தததும் வாசிக்காததுமாய் இருந்த எறியப்பட்ட கடிதம் மேசையின் மூலையில் நிலத்தில் இதோ விழப்போறன் என்ற மாதிரி ஒழங்கற்ற மாதிரி மேசையில் தொங்கி கொண்டிருந்தது,திரும்ப எடுத்து வாசித்து பார்க்க மனமின்றி இருந்தவன், அப்படி இருந்த நிலையை மாற்றி அந்த கடித்ததில் கறுத்த தடித்த எழுத்துகளில் கோடிட்ட வாசகங்களை திரும்ப திரும்ப படித்தான். இலங்கை இந்திய சமாதன ஒப்பந்தத்தின் அடிப்படையில் அங்கு அமைதி திரும்பி விட்டது, இன்னும் இரு வாரங்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் இல்லாவிடின் வெளியேற்ற படுவீர் ,,
,வாசித்தவன் தொடர்ந்து வாசிக்காமால் நிறுத்தி விட்டு இவங்கள் பிரச்சனை முடிந்து சமாதனம் வந்து விட்டது என்று சொல்லுறாங்கள் ,சனம் இனிமேல் தான் பிரச்சனை அடிபாடு தொடங்க போகுது என்று பரவலாக கதைக்குது .,இப்படி கடிதம் கிடைத்தவன்கள் எல்லாம் அவனவன் எங்கையல்லாம் ஓடி தப்ப என்று யோசித்து கொண்டிருக்கிறான்கள் ,எங்கை ஓடி தப்பிறது.. ..இவன்கள் எடுத்த முடிவைப் போல தான் மற்ற ஜரோப்பா நாடுகள் முழுவதும் எடுக்கும் ,,ஓடுறது என்றால் எங்கை ஓடுறது ...கனடாக்காரனும் உவன் ஸ்கன்டிநேவியன் நாட்டு காரன்களும் உள்ளுக்கு விட்ட அகதிகளை ஒரு போதும் திருப்பி அனுப்பினதாய் சரித்திரம் இல்லையாம் என்று சொல்லுகினம்.....யார் கண்டாங்கள் எல்லாம் உதை... ஒரு காலத்திலை சரித்திரம் திரும்பிச்சுது என்றால்.
அந்த டச்சு கிழவன் ,,கிழவன் என்று தான் அவனை அன்போடு கூப்பிடுவான் .கிழவன் என்று சொல்லுமளவுக்கு அவனுக்கு அவ்வளவு வயதில்லை சரியாக,வாழ்க்கையை அனுபவிக்க தொடங்கும் வயதான நாற்பது அப்படித்தான் இருக்கும் ,,உண்மையாய் வாழ்க்கையை ரசித்து கொண்டாடி குதூகலித்து இந்த வயதிலும் இருக்கும் அவனைப் பார்க்க ..ஒரு வித பொறாமை கலந்த ஆச்சரியம் தான் ,,அவன் அனார்கிசிஸ்டாம் என்று முதல் சொல்லும் பொழுது அது என்ன என்று புரியவில்லை ,...எப்படி முதலில் அவனுக்கு பழக்கம் ஏற்பட்டது என்று சுவையான சம்பவம் .அதிலும் பார்க்க சுவையான விடயம் வாரக் கடைசியில் ஒரு காதலியை சந்திக்கும் ஏக்கத்துடன் இருப்பது மாதிரி இருந்து சந்தித்து மது அருந்தி விவாதித்து அவர்கள் தங்களுக்குள் கொண்டாடுவது. .ஒரு பெட்டை பிடியன் ,வரண்டு பாலைவனமாக இருக்கும் உன் மனதை குளிர்மையாக்கி பசும் சோலை மாதிரி வைத்திருக்கும் உன் உடலுக்கும் நல்லது என்று அடிக்கடி அந்த கிழவன் அவனுக்கு ஆலோசனை சொல்லுவான்.அது மட்டுமன்றி அப்படியான சூழ்நிலைகளை உருவாக்குவதற்க்காக தனது தெரிந்த வளங்கள் வழிமுறைகள் அனைத்தையும் அவனுக்காக பயன் படுத்தினான் ,அவனது முயற்சி ஒரு பொம்மைக்கு உயிர் வர வைக்கும் முயற்சியாகத்தான் இருந்தது .கிழவன் இவனை ஒரு சங்கோஜ பிரஜையோ ,,என்று நினைத்தாலும் ,அது உண்மை இல்லை ..ஏதோ படி தாண்டா பதிரனாக சின்ன வயதிலிருந்து பழக்க படுத்திய காரணமோ அல்லது பவுத்திரமாக தமிழில் செய்த பெட்டையை பெற்றோர் ..மூலம் இறக்குமதி செய்யும் நோக்கத்தில் இருப்பது தான் காரணமோ தெரியாது.
ச்சாய்... கிழவன் சொன்னமாதிரி ஒரு டச்சு பெட்டையை பிடித்து இருந்தால் .இந்த சமயத்தில் மற்றவன்கள் செய்யிற மாதிரி கலியாணம் செய்ய போறன் என்று காட்டி விசா எடுத்திருக்கலாம் ,,என்ன உவகளோடை தொடர்ந்து வாழப்போறமே அல்லது அவகள் தான் எங்களோடை வாழுவுகளோ,,ஒரு கொஞ்ச வருசத்துக்கு பிறகு ,ஒன்று நாங்கள் துரத்துவம் அல்லது அவகள் விட்டு போவாகள் ,நிச்சயமாக தொடர்ந்து இருக்கும் திருமணம் இல்லாவிட்டாலும் ,ஆனால் விசா மட்டும் நிச்சயமெல்லோ ,,,என்று நினைத்து சந்தர்ப்பங்களை தொலைத்ததை தேடி கொண்டிருந்தான்.
டெலிபோன் மணி அடித்தது,,மீண்டும் அவன் மைத்துனர் தான் சொர்க்கத்துக்கு போகும் பாதையும் வழிமுறைகளும் ஆலோசனை சொல்லி கொண்டிருக்கிறார் ,,அதை விட சொர்க்கத்தில் இருந்து இன்றைக்கு மட்டும் நாலு தரம் அடித்து போட்டார் ,மைத்துனருக்கும் தான் இருக்கும் நாடு அப்படி என்ற நினைப்பு வேற,அவனை பொறுத்தவரையில் அவன் இருக்கும் நிலமையில் இந்த நாட்டை விட்டு ஏதாவது நாடு ஒன்று ஏற்கும் என்றால் அது சொர்க்கமே
.சனம் சொர்க்கத்தின் நுழைவாயிலை அடைந்து விட்டால் காணும் என்ற நிலையில் தங்களுக்கு தெரிந்த சகல வழிமுறைகளை யாவற்றையும் பயன் படுத்தி கொண்டு முயற்சி செய்யுதுகள் சிலதுகளுக்கு வெற்றி சிலதுகளுக்கு தோல்வி உந்த அம்ஸ்ரடாமாலை வாறதை விடு ...எல்லாம் ஏயாப்போட்டும் எங்கட கள்ள முறையளும் அடிப்பட்டு போச்சாம் ,,உங்கட பிறவுண் தோலை கண்டால் காணுமாம் உதுக்காலை விடுறான்கள் இல்லையாம் ,,,மைத்துனர் மட்டும் கனடா போனாப்போலை வெள்ளையாய் போனார் என்று நினைத்தாரோ தெரியாது ,,ஏதோ புது டெக்னீக்களை பார்த்து செய்து இங்காலே கெதியாய் வரப்பார் என்று சொல்லி டெலிபோனை வைத்துப்போட்டார் ,
சூர்னாம்காரின் டச்சு பாஸ்போட்டிலை தன்ரை தலையை மாத்தி எல்லாம் றெடியாக்கி வைச்சு இருக்கக்கை இந்த ஆள் இப்படி பயப்படுத்துது...என்று நினைத்தவன் ,,ராஜன் தான் தனக்கு ஒன்று ஒழுங்கு படுத்தக்கை அவனுக்கு ஒன்று ஒழுங்கு படுத்தனவன் .அதோடை ராஜனின் மாத்தின பாஸ்போர்ட்டை பார்க்க்ககை கீளீனா மாத்தின மாதிரி இருக்கு ,,தனக்கு மாத்தின பாஸ்போர்ட் கொஞ்சம் கீளினாக மாத்தவில்லை என்று அவனுக்கே பட இப்பவே ஏர்போர்ட்டில் பிடிபட்டமாதிரியான உணர்வு மேலோங்கியது
அவனிலும் விட கிழவன் தான் என்ன செய்யலாம் என்று மூளையை கசக்கி பிழிந்து எதாவாது வருகுதா என்று அசையாமால் \யோசித்து கொண்டிருந்தான் ,தீடிரென்று புதிய கண்டுபிடிப்பை கண்டு பிடித்தவன் போல் துள்ளி குதித்தான் ..மகிழ்ந்தான் ,,என்றாலும் இது நடைமுறைக்கு சாத்தியமா ,அவன் சம்மதிப்பானா என்ற அச்சம் புருவத்தில் ஓடி மறைந்தது.
இது தான் திட்டம் ,,,டச்சு பெட்டையோடை ஜோடியாக போறது,,,,என்று சொல்லிவிட்டு தொடர்ந்து சொன்னான், எனக்கு தெரிந்த பெட்டை இருக்கிறாள் அவள் உந்த நாடுகளுக்கு எல்லாம் போறவள் ,,வாறவள்..என்ன அவளுக்கு கனடா போறதுக்கு நீ டிக்கட் போட்டியெண்டால் ,,அவள் உனக்கு ஜோடியாக நடிக்க தயாராவாள் திட்டம் வரைந்து பேசி கொண்டிருந்தவனை இடைமறித்த அவன் ,,விளையாடுறீயா ,,எனக்கே டிக்கட் போடுறதுக்கு எங்கெல்லாம் தெண்டி அல்லாடுகிறேன் ,,,,அவளுக்கும் டிக்கட் என்றால் ....நான் எங்கு போறது,,,என்று சொல்லும் பொழுது குரலில் ஒரு பரிதாபமும் கையறந்த நிலையும் கலந்திருந்தது
கிழவனின் சேமிப்பு அவளின் டிக்கட்டாக மாறியது
என்னதான் திட்டத்தை வரைந்தாலும் சிறிலங்காகாரன் சூர்னாம் நாட்டுக்காரன் மாதிரி இருந்தாலும் ,,,எங்கேயோ இவர்களிடம் இருக்கும் அப்பாவித்தனமான தோற்றமோ வெகுளித்தனமோ அவன்களிடமிருந்து வித்தியாச படுத்தி காட்டுகிறது ..அதனால் ,,அதுவும் இவனை பார்த்தாலே தெரிகிறது .என்ன செய்யலாம் என்று கிழவன் மேலும் யோசித்தான்
நாலு ஜந்து மணித்தியாலங்களில் பாரிஸ் விமான நிலையத்தில் இருந்து பயணம் அம்ஸ்டாமிலிருந்து பெல்ஜியத்துக்கூடாக பாரிஸ் செல்லும் பஸ் இல் இந்த ஜோடிகள் .
..அவள் அவனது கை குலுக்கும் பொழுது உள்ளங்கையை சுரண்டிய பொழுதே அவள் இந்த ஜோடி நடிப்புக்கு தயராகி விட்டாள்,,இவன் பதட்டபட்டது தயாரகவில்லை என்றதையும் காட்டியது
போரில் இந்த அஸ்திரத்தை ஒரு முறை தான் பாவிக்கலாம் அதற்கு மேல் பாவிக்க கூடாது என்று குந்திதேவி சத்தியம் வாங்கியது போல் ,,,கிழவனும் இவனிடம் சத்தியம் வாங்கி கொடுத்திருந்தான்.ஒரு முறை தான் பாவிக்கவேணும் .என்று..மூன்று மாத்திரைகள் , அந்த நேரத்தில் பதட்ட படாமால் இருக்க வேணும் என்பதற்க்காக,,,
அது ஹாலந்தை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட சிறிது போதை வஸ்து கலந்த மாத்திரை மருத்துவ தேவைகளுக்காக பாவிப்பக்கபடுவது
பஸ் மெல்லிய ஒளியில் தூங்கி வழியும் பிரியாணிகளுடன் பெல்ஜியத்தினூடாக ஓடிக் கொண்டிருந்தது ,அவனும் அவளும் பக்கத்தில் இருந்தாலும் ஜோடியாக தெரிய மறுத்தது ..கிழவன் கொடுத்த மாத்திரை அவனுள் சென்றது ,,அவனுக்கு அவளின் மனது நெருங்கி வருவது போல் இருந்தது அவன் பேசினான் அவளும் பேசினாள்
...அவள் தனது காதலன் கனடாவில் படிக்கிறான் என்றாள் ,,,
அவனுக்கு இப்பொழுது மிதப்பது போன்ற மனத்தடை எதுவும் இல்லாத உணர்வு ...எனது காதலி நீ தான் இப்ப என்றான் .
.
ஏதோ நகைச்சுவையை கேட்ட மாதிரி சிரித்தாள்.
அவன் தூங்க இடமும் தலையணையும் தேடினான்
.
அவள் அவளது தோள்பட்டையை காட்டினாள் .
அவனோ அவளினுள் துவண்டான் ..அவளும் நெளிந்தாள்...ஏனோ அவளும் அதை அனுமதித்தது மாதிரி இருந்தது ,,அவன் அவளின் அதரத்தை மலர வைக்கும் முயற்சில் முயன்றான் அவளோ நாகரிகமாக தடுத்து கூறினாள்
...எனது காதலனை தவிர உதட்டில் முத்தம் கொடுப்பதில்லை என
அவன் என்ன கணக்கு இது என்று சிரித்தான் ,,,அவளும் சிரித்தாள் அது என்ன கணக்கு என்று விளங்கவில்லை
ஜோடியாக அழகாக நடித்து அந்த விமான நிலையத்தில் உள்ள பாஸ்போர்ட் செக் பண்ணும் இடத்தை கடந்து விட்டார்கள்..
.இருவரும் அங்குள்ள கோப்பி கடை ஒன்றில் ,,,ஒலிபரப்பு அலறுகிறது,
,,இவனது சூர்னாம் பாஸ்போர்ட்டு பெயரை சொல்லி வரும்படி ,,இவனுக்கு அவனின் பெயர் தானே ஞாபகத்தில் இருக்கும் ..
.அவர்கள் நேரடியாகவே வந்து விட்டார்கள் ..விசாரணை தொடங்கியது ..டச்சு எழுத வைத்து பார்த்தார்கள் கதைக்க வைத்து பார்த்தார்கள் .
..அத் தருணத்தில் அவர்களை நம்ப வைக்கும் நோக்கில் அவள் அவனை அடிக்கடி இறுக்க கட்டி அணைப்பதுமாயும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுவதுமாயும் இருந்தாள் ..
விமானம் புறப்படும் நேரம் கடந்து விட்டது ..விமான பணிப்பெண்கள் காத்திருந்தார்கள் இவர்களை கூட்டி செல்ல
,,சந்தேகம் தீர்ந்து அதிகாரிகள் அவனை அனுமதித்து வெளிக்கிடும் பொழுது ,,
,அதே நேரம் அங்கு,உள்ளுக்கு பிடிப்பட்டிருந்த ராஜன் சத்தம் போட்டான்
,,,,உவனும் சிறிலங்காகாரன் என
அவள் கனடா சென்றாள்
அவனும் ராஜனும் ..
......
(யாவும் கற்பனை)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கள்ள வேலை ( சிறுகதை)
கொஞ்சம் இறுக்கி போடடா ..உரக்க கத்தினான் என்னை சைக்கிளில் வைத்து உழக்கியவன் .இயலுமட்டும் எதிர் காற்றுக்கு போராடி என்னடா இவன் போடுற டபிள் பெடல் அவ்வளவு காணதே என்று சலித்து இயலாப்பாட்டில் கூவிய குரல் அது..எங்கோ யோசித்து கொண்டிருந்தபடியால் என் உதைப்பின் வேகம் குறைந்திருக்க வேண்டும்.இந்த கணத்தை விட்டு ஏதோ ஒரு காலத்தில் யோசிப்பதில் ஒரு சுகம்.அது மட்டுமே எங்களுக்கு இப்ப வாழும் வாழ்க்கையில் இருக்கு .என்ன நான் சுகம் காண நினைத்தால் அவன் வேதனை அனுபவிக்க இருக்கு அவ்வளவு தான். டே உழக்கடா ஊண்டி என மீண்டும் சத்தம் போட்டான், ,அவனிலும் பிழையில்லை ஒரு பத்து நிமிசம் பிந்தி போனாலும் அந்த எருமை தலையன் ஒரு மணித்தியால காசை வெட்டி போடுவான் .அதுவும் நாலு கில்டன் இலங்கை காசுக்கு பத்தினொன்டாலே பெருக்கி பாத்தால்...வயித்த பத்தி எரியுது ..அவனும் தன்ரை வயிறும் மனம் எரிந்து கொண்டு தான் சம்பளம் தாறன் என்று சொல்லுறான்..அவனோ வடக்கு ஹாலந்து தேசத்தின் சிறு தோட்ட முதலாளி .நாங்களோ அண்மையில் அந்த நாட்டுக்கு வந்த அகதி மக்கள்.அவன் தனது வரி ஏய்புக்காக வேலை செய்ய அனுமதி இல்லாத எங்களை பயன் படுத்துகிறான் .நாங்கள் அவனை பயன் படுத்துகிறோம்.இதிலை டயலாக் வேறை என அலுத்து கொள்ள எங்களை தாண்டி ஒரு பச்சை கார் ஒன்று சென்றது ,
ராஜன் தான் ...அது.. அவனும் எங்களை போலத்தான் ஆனால் வந்து குறுகிய காலத்தில் இப்படி வசதியாக, பத்து நிமிசத்திலை. நாங்களோ ஜந்து மைல் தூரத்தை இந்த எதிர் காற்றையும் சேர்த்து கடக்க ஒன்றே கால் மணித்தியாலம் பிடிக்குது.எப்படி சம்பாதித்தான் என்ற வினாவுக்கு தங்களின் பொறாமையின் பூச்சுகளுடன் வர்ணம் தீட்டி தங்களின் நினைப்புக்கு ஏற்றவாறு ஆக்கள் ஒவ்வொரு கதை கூறுவினம்...எதை நம்புறது எதை நம்பாமால் விடுறது என்று தெரியலை சில வேளை,.ஒரு நாளைக்கு மூன்று தரம் நூறுமைல் தூரமுள்ள அம்ஸ்ரடாமுக்கு காரில் போட்டு திரும்புறான் ,அப்பிடி என்ன அவசியமோ தெரியலை ,எனக்கு அது பெரிய ஆச்சரியமில்லை ,,அந்த டச்சு தோட்டக்காரனுக்கோ அது பெரிய ஒருஆச்சரியம் ,,,தானே ஒருதரமோ இருதரமோ தான் வாழ்நாளில் போயிருக்கிறன் அதோடை அங்கு போகவணுமெண்டும் தேவை இருக்கவில்லை என்கிறான்.
,,எங்கள் இரண்டு பேரையும் உவன் கேட்டவன் ஒருக்கா காட்டில் இருந்து வந்திருக்கிறம் என்ற நினைப்பில் உங்கட ஊரிலை முந்தி பந்து கண்டிருக்கிறீயளோ சைக்கிள் கண்டிருக்கிறீயளோ என்று,,,,, இப்ப இவருக்கு இவங்கள் எல்லாம் வீரன் சூரன்களா விபரம் தெரிந்தாக்களாக இருக்கிறான்கள் என்று அறிந்தா பிறகு ஒரே கொன்பியூஸ் ,, அதன் பின் டச்சுக்காரனுக்கு ராஜனுக்குமிடையில் அந்நியோன்யம் வளர்ந்தது .மாதிரி இருந்தது..அது எவ்வளவுத்துக்கு என்று எங்களால் உணர முடியவில்லை .எங்களால் என்பது என்னையும் என்னை சைக்கிளில் வைத்து தள்ளும் நண்பனையும் மட்டும் தான் சொல்லுறன். ஏனென்றால் ,மற்றவர்கள் எல்லாம் ராஜனால் அங்கு வேலைக்குச் சேர்க்கப் பட்டவர்கள் என்று கால போக்கில் தான் அறிந்து கொண்டோம்.
சைக்கிளில் என்னை வைத்து உதைக்கும் தோழர் இருக்கிறாரே .. அவர் ஊரிலை போராட்டத்துக்கு தலைமை சக்தியாக அவர்கள் தான் இருக்க வேணுமென்ற கொள்கையோடு அந்த காலம் பாட்டாளி வர்க்கத்தை தேடி மலையகம் சென்ற ஆக்களில் ஒருவராம் .அவர் நல்ல அன்பான நட்புத்துவத்துக்குரிய ஆள் என்றாலும் எதுக்கு எடுத்தாலும் காரண காரியங்களை சொல்லி ஒரே தொண தொண. அதனால் எனக்கு சிலவேளை எரிச்சல் ஏற்படுவதோடு மட்டுமன்றி பிரச்சனைகளையும் விலைக்கு வாங்க வைத்து விடுவார்.எப்பவும் அநியாயத்துக்கும் அடக்குமுறைக்கும் குரல் கொடுக்கிறதை நீ தப்பாய் புரிந்து கொண்டு விட்டாய் என்று கூறுவார் ... இந்த போர்குணத்தை இலகுவில் மாற்ற இயலாமால் கிடக்கு என்பார். எனக்கு என்றால் சிலவேளை இவற்றை கதையை கேட்க சிரிப்பு சிரிப்பாய் வரும்
,,,நித்திரையிலை கூட வாய் விட்டு சிரித்து இருக்கிறன் .அண்ணை என்று முதல் கூறி இப்ப வாடா போடா என்று பழக்கப்பட்டா பிறகும் கூட கனதரம் சொல்லி இருக்கிறன் .நாட்டில் இருந்து எப்ப பிளைட் ஏறினமோ உந்த உளவராங்களை எல்லாம் எங்கையாலும் கட்டி கடலிலை போட்டுட்டு வந்த இடத்திலை நாலு காசு சம்பாதிக்க பார்க்க வேணும் என்று .அவரை மாத்த வெளிக்கிட அவர் என்னை மாத்த பார்த்தார் அதுக்கு நான் விடவில்லை .அண்ணை உங்களுக்கேற்ற ஆக்களை தேடி உப்படியாய் இருந்தால் .அப்படியான ஆட்கள் கிடைக்கும் வரை காத்திருந்தால் தட்டி போடும் அப்படி .யாரும் வந்தாலும் அவையளும் மண்டை தட்டின ஆட்களாதான் இருப்பினம் என்று.அப்படி இப்படிசொல்லி ஒரு மாதிரி ஆளை மறுத்தான் கொடுத்து மாத்தி தான் இந்த தோட்டத்திலை பூ பிடுங்கிற வேலைக்கு கூட்டியண்டு போறன்
..நாங்களாய் உப்பிடி அங்கினை வேலை தேடி கேட்டதிலை கிடைச்சிட்டு நாலு கில்டன் என்றான் .அதுக்கென்ன என்று நாங்கள் போய்க்கொண்டிருக்கிறம் .அதுக்கும் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கு இந்த ஆள்,,போன இடத்தில் ஏடா கூடாம நடந்திடும் பயம் ..பயந்த மாதிரியே...
அழகாய் வளர்ந்து இருக்கின்ற அந்த பூவை எல்லாம் பிடுங்கி எறிய ஒரு மாதிரி இருந்தது எனக்கு முதலில்.பிடிங்கிய பூ எல்லாம் கசங்கி வாய்க்கலுக்கு பரிதாபமாக கிடக்க .இது என்ன பைத்தியகாரத்தனம் என்று தோன்றியது,,,ஏன் இப்படி செய்கிறான்கள் என்று விளங்கவில்லை..என்னுடைய தோழர் இருக்கிறாரே அவர் எதையும் பக்கெண்டு பிடிச்சுடுவர் .இந்த பூவை தக்க தருணத்தில் பிடிங்கினால் அடி வேர் கிழங்கு நல்லாய் வரும் அவங்களுக்கு கிழங்குதான் முக்கியம் பூ அல்ல என்று சொல்லிப்போட்டு அது போல என்று தொடங்குவார் .நான் அந்தரப்பட்டு அவற்றை புராணத்துக்கு பிறேக் போட்டு விடுவன்.அன்றைக்கு உந்த ஆள் என்னத்தை சொல்ல......
....இடுப்பு நாரி குனிந்த படி இந்த தொங்கலில் இருந்த அந்த தொங்கல் வரையும் பிடிங்கி போட்ட படி நிமிராமால் போகணும் ...கொஞ்சம் நிமிர்ந்தாலும் அங்காலை வேலை செய்து கொண்டிருக்கிற தோட்டக்கார முதலாளி கோய் என்று கூக்குரிலிட்டு எச்சரிக்கை செய்து குனிய செய்வான். இடுப்பல்லாம் வலிக்கும் முதுகெல்லாம் உழையும் இடையில் விட்டுட்டு ஓடிடுவமா என்று தோன்றும் ..நாலு கில்டன் நமஹா என்று தோஸ்திரம் சொல்லி விட்டு தொடர்ந்து வேலை செய்வம் .
டே ,,,போய் வேலை செய்யடா ..எல்லாரும் தான் கஸ்டப்படுறம் உரத்த குரலில் தமிழில் கேட்டது வேலை கஸ்டத்தில் வேலை செய்ய முடியாமல் தன்னிச்சையாக வெளியேற முடிந்த அந்த ஆட்களில் ஒருவனை விரட்டி கொண்டிருந்தான் ராஜன் ,அவன் தோட்டத்தில் இருந்து வெளியில் ஓடுவதும் ராஜன் உள் இழுத்துவதுமாக கொஞ்சம் நேரம் கடந்தது இதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம் தோட்டக்காரன் நான் உட்பட வேடிக்கை பார்க்க முடியாதவர் தோழர் என்று சொல்லாமல் தெரிந்திருக்கும்
வாதங்கள் முற்றின...ஒரே களேபரம் ... கொடுக்கும் நாலு கில்டனில் ஒரு கில்டன் ராஜனுக்கு என்ற கதை வெளியில் வந்தது ..அந்த ஒரு கில்டன் கொமிசன் தான் தோட்டக்காரனுக்கு இல்லாத அக்கறை ராஜனுக்கு இருக்கவேண்டி வந்தது என்று தெரிய வந்தது.
அவன் செய்வதே பக்கா உடல் சுரண்டல் அதுக்குள்ளை நீ வேற என்று தோழர் கத்தினார்... செய்யிற கள்ள வேலை நீ என்ன கதைக்கிறாய் உனக்கும் மூன்று கில்டன் தான்
..என்னை மீறி ஒன்றும் நடக்காது என்று உறுமினான் ராஜன் ராஜனும் தோட்டக்காரனும் என்னவோ பேசினார்கள் தோட்டக்காரன் கூறினான் நாலு கில்டன் தருகிறேன் அதில் மாற்றமில்லை என்று சமாதனப் படுத்தினான் வேற ஒரு தோட்டத்தை காட்டினான் நாளை அங்கு வேலை என அது முடிய எல்லா காசும் சேர்த்து தாறன் என்று
எப்படி வீச்சா டபிள் பெடல் போட்டாலும் மணிக்கூட்டை பார்த்த பொழுது நேரம் பிந்தி விட்டதாகவே தோன்றியது ... ஆனால் அந்த தோட்டத்தில் ஒரு தரும் பூ பிடுங்க வேலைக்கு என்று ஆட்களை காணவில்லை அந்த டச்சு காரணையும் காணவில்லை ராஜன் ஆட்களை காணவில்லை ராஜனும் டச்சுக்காரனும் சேர்ந்து எங்களது சம்பளத்திற்க்கும் வேலைக்கும் செய்த சதி...அப்பத் தான் விளங்கியது யாருக்கு முறையிடுறது ..செய்த வேலையோ அனுமதியற்ற வேலை
திரும்பி வரும் வழியில் தென்னிந்திய திரை நடிகர்களின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது அந்த பூத்தோட்டங்களில் ஒன்றில் ஆடி பாடி கொண்டிருந்தனர்..அதையாவது பார்ப்பம் என்று சிறிது நேரம் நின்றால்
,,,பிரபல நடிகர் ஒருவர் வலிய வந்து கதைத்தார்...மகிழ்ந்தார் ...உலகத்தின் எந்த துருவ மூலைக்கு சென்றாலும் தமிழரை காணக் கிடைக்குது என்று...
உதுக்கு எல்லாம் சந்தோசம் கொள்ளும் மனம் நிலையில் அப்போது இல்லை
...மூன்று கில்டனுக்கு என்றாலும் நான் வேலை செய்திருப்பன் .
..
ச்சேய் இது எல்லாம் இந்த தோழரால் வந்த வினை
இப்ப எல்லாம் பிழைக்க தெரியாத ஆட்களைக் கண்டால் நாலு அடி தூரத்திலை போயிடறது
இப்ப நான் அச்சா பிள்ளை
மிதுவின் கிறுக்கல்களை பார்க்க
Saturday, October 29, 2011
மிதுவின் ஜப்பசி மாத(2011) சிறுகதைகள்
வேகமாக சென்ற லண்டன் நிலக்கீழ் ரயில் தீடிரென்று நின்றது.ஏதோ நினைவுகளுடன் போராடி முட்டி மோதாடி எங்கோ நின்றிருந்தவைனயும் மறித்து திரும்பி நிஜத்துக்கு வரச்செய்தது.என்ன என்று அறியும் ஆவலுடன் தவிக்கும் மற்ற பயணம் செய்து கொண்டிருக்கும் பிரயாணிகள் போலவே அங்கும் இங்கும் நோட்டமிட்டு கொண்டு அசைந்த கண்கள் ஒரு இடத்தில் அசையாமால் தீடிரென்று நின்றது,அந்த வெள்ளை தோலுகளுக்கிடையில் இருந்த ஆசிய நாட்டு பெண்ணாய் இருந்ததுக்கல்ல,,எந்த வித சலனமற்று அமைதியாக அடுத்த கணம் எதுவானாலும் வரவேற்கும் முகபாங்குடன் இருக்கும் அவளை எங்கையோ எங்கையோ நெருக்கமாக பார்த்திருக்கிறேனே என்று என்று .......அவன் தவித்துக்கொண்டு அதற்க்குரிய விடையறிய முன் .நினைவுகள் வழுவி நழுவி நேரம் ,நாள் மாதம் வருடங்கள் கடந்து அந்த வருடத்தில் அந்த நாளில் ஒடுங்கியது
,,,பயப்பிடாதையுங்கோ..ஒன்றுக்கும் யோசியாதையுங்கோ ,,,எங்கட ஆட்களுக்கு உதவி செய்யாமால் யாருக்கு உதவி செய்ய போறன் உங்களை கூட்டி எண்டு போறனே என்று பட பட வென்று சிவாஜி பாணியில் வசனம் பேசி கொண்டிருந்தான் ,,,வசனம் பேசுவதற்கு குடித்த பானமும் உதவி செய்து கொண்டிருந்தது.அவனுக்கு
நீண்ட பயண களைப்பு நித்திரை என்ற ஓட்டத்தினூடாக இரவை விரைவாக்கியது ...பலத்த சத்தத்துடன் அலாரம் ஒன்று இருளை விலக்கி வெளிச்சத்தை தந்து உறுமி விட்டு அடங்கியது..
அதை தொடர்ந்து கதவு மெல்லிதாக தட்டும் சத்தம் கேட்டது ,,
பதட்டத்துடன் வந்த அவன் வெளியில் பொலிஸ்காரர் கதவை தட்டுகிறார்கள்.
மிதுவின் கிறுக்கல்களிலிருந்து-நன்றி



.jpg)



