Pages

வாசகர் வட்டம்

Sunday, June 12, 2011

லண்டனில் திரையிடப்பட்ட 1999 என்ற கனடிய தமிழ்த் திரைபடம்

லண்டனில் கனடாவில் புலம் பெயர்ந்த தமிழர்களால் உருவாக்கப்பட்டு பல விருதுகளை பெற்ற 1999 என்ற திரைபடம் 11.06.11 அன்று காண்பிக்கப்பட்டது.இத் திரைபடம் அதிகம் அறியப்பட்டிராத ஒரு நிறுவனத்தின் திரைபட விழா மூலம் திரையிடப்பட்டது. லண்டன் புறநகர் பகுதியான kingston இல் திரையிடப்பட்ட பொழுதும் அரங்கு நிறைந்த நிலையில் பல இனத்தவரும் காணப்பட்டனர்.இந்த படம் சகல மட்டத்து திரைபட ரசிகர்களாலும் பார்க்க கூடிய படம். ஆனால் இந்த படத்தை லண்டனில் யாரும் விநியோகிக்க முன் வரவில்லையாம் என்பது துன்பகரமான செய்தி. இந்த படம் இத்திரை படவிழாவில் இலவசமாக காண்பிக்கப் பட்டது.இந்த படம் பார்த்து முடித்துவிட்டு என்னுள் எழுந்த கருத்து.தென்னிந்திய மற்றும் குப்பை படங்களை ரசித்து பழக்கப்பட்ட ரசிகர்கள் இந்த படத்தை விரும்பி பார்க்க மாட்டார்கள் என்று விநியோகப்பவர்களின் முன் முடிவுகள் தான் காரணம் தான் என்று நினைக்கிறேன்.


விருதுகள் பெற்ற திரைபடம் அதனால் நல்ல படமாக இருக்கும் என்ற நோக்கில் படம் பார்க்க போகும் பொழுது இருக்கவில்லை .ஆனால் படம் முடித்து திரும்பும் போது நான் எதிர்பார்த்ததிலும் மேலாக ஒரு திருப்தி இருந்தது.இந்த படம் ஆரம்பமாகும் முன்னர் திரைபட விழா முக்கியஸ்தர்கள் பேசினார்கள். அதில் பேசிய ஒரேயொரு தமிழரான பெண்மணி இத் திரை படத்தை பற்றிய முன்னோட்டத்தை கூறும் போது .தாயகத்தில் இருக்கும் பிரச்சனைகளை தாங்கள் இப்ப இருக்கும் புலம் பெயர்ந்த நாட்டிலும் கொண்டு வந்து சேர்க்கிறார்கள் என்று ..அவருடைய அந்த கருத்தில் முழுமையாக எனக்கு உடன் பாடில்லை.இந்த கோஸ்டி மோதலை மையக் கருவாக இந்த படம் எடுக்கப் பட்டமையால் அவ அப்படி கூறியிருந்தார்.நான் அறிந்தவரை இந்த குழுவாக இருந்து மோதலில் ஈடுபடுவது தமிழர்கள் மட்டுமல்ல ,,சீனர்கள் கறுப்பர்கள் கிழக்கு ஜரோப்பியர்கள் சீக்கியர் போன்றோர் வெவ்வேறு கால கட்டத்தில் குழு மோதலில் பிரபலமாகி இருந்திருக்கிறார்கள் ,காலப் போக்கில் ஆரோக்கியமான சமூகமாக தங்களை ஆக்கிய பின்னர் அவர்களிடமிருந்த இந்த போக்கு அகன்று இருந்தது.தமிழர்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சனையாக கூறியது பேச்சாளரின் தவறான கணிப்பு என்பது எனது கருத்து.


டொரண்டோ நகர இனம் புரியா இரவு நேர அமைதியின் பின்னனியில் திரைபடம் ஆரம்பமாகிறது . ஆரம்பத்திலையே பிரபல குழு தலைவன் மரநாயின் தம்பியை இன்னொரு குழு தலைவனான குமாரின் தம்பி துப்பாக்கியால் சுட்டு கொல்லுகிறான் .குமார் ஆரம்பத்தில் தம்பியை தாக்கியவனை தாக்க போய் அதன் தொடர்ச்சியாக சந்தர்ப்பவசத்தால் ஒரு குழுவுக்கு தலைவனாகிறான் .இவனில் விசுவாசம் வைக்கும் பாசமுள்ள தகப்பனுக்கு மகனா இருக்கும் அன்பு என்ற இளைஞன் .அவனுக்கு சிறு வயது முதல் ஒரு பெண் மேல் காதல் . வாட்டர்லூ பல்கலைகழகத்தில் படிக்கும் அன்புக்கு தெரிந்த குடும்பத்து நேரம் கிடைக்கும் நேரம் போதெல்லாம் பொதுசேவை செய்யும் அமைதியான அகிலன் என்றொருவன்.அன்பு விரும்பும் அதே பெண்ணைத்தான் அகிலனும் விரும்புகிறான்.இவர்கள் இருவரின் காதல் ஒரு தலைக்காதல் என்பது குறிப்படதக்கது.மரநாயின் தம்பியை கொலை செய்த குற்றத்திலிருந்து குமார் தனது தம்பியை பொலிசாரிடமிருந்தும் மரநாயிடமிருந்தும் காப்பாற்ற தனது மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ளுகிறான். தனக்கு விசுவாசம் உள்ள அன்புவை இந்த கொலையின் சூத்தரதாரி என மரநாயுடமும் பொலிசாரிடமும் மாட்டி விடுகிறான்.


அன்புக்கும் அகிலனுக்கும் நடக்கும் முக்கோண காதல் பற்றிய பிரச்சனையுடனும் . குமார் மரநாய் பொலிசார் போன்றோரிடமிருந்தும் அன்பு எப்படி மீளுகிறான் என்பதோடு படம் நகருகிறது.அன்புக்கு விசுவாசமான நண்பனாக நடிக்கும் உடும்பன் என்ற ஒரு வயதான இளைஞன். .அன்புவுடன் பழகிய நண்பர்கள் விலகி ஓடும் பொழுது உடும்பன் மட்டும் கடைசி வரையும் மட்டும் அன்புவுடன் துணை நிற்பது போல் உருவாக்கப்பட்ட உணர்ச்சிகரமான பாத்திரம் .கடைசியில் குமாரின் தம்பி பிடிபட போகும் சாத்தியங்கள் தான் என்று தெரியும் வரும் போது அவன் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு அழித்து கொள்ளுகிறான் .அன்பு அந்த அன்பான தகப்பனாரின் இருதய நோயையும் சுகப்படுத்தி அமைதியான குடும்ப வாழ்வுக்கு போவதோடு படம் முடிவடைகிறது..



படத்தில் சில காட்சிகள் நாடகத்தனமாக இருக்கின்றன என்று சிலர் சொல்லக்கூடும் .அதை ஈடு கட்டும் விதமாக பின்னனி இசை அற்புதமாக ஒலிப்பதனால் காட்சிகள் எல்லாமே சினிமாத்தனமாகவே இருக்கின்றன. இந்த படத்துக்கு இசை அமைத்தது இன்னும் இலங்கையை வதிவிடமாக கொண்டிருக்கும் இளைஞனாம் .திரை கதையின் திசை மாற்றத்தோடு அதற்க்கேற்றவாறு பின்னனி இசையும் அற்புதமாக பயணிக்கிறது .மற்றும் கதையின் காட்சி அமைப்பை முன்னும் பின்னும் மாற்றி மாற்றி காட்டும் தமிழ் படத்தில் இதுவரை வராத புதிய முறை கதை சொல்லலை கையாண்டுள்ளார் இயக்குனர். இதன் மூலம் ஓரே காட்சியை மற்றும் காட்சியின் தொடர்ச்சியை வெவ்வேறு பாத்திரங்களின் பார்வையில் எப்படி இருக்கின்றன என்பதன் மூலம் அழகாக திரைக் கதையை நகர்த்தும் பொழுது இயக்குனரின் திறமை மிளிர்கிறது.






குழு தலைவன் குகனின் உதவியாளார் அன்புவை மாட்டி விடச் சொல்லும் போது மனசாட்சியை விட்டு எப்படி செய்வது என்று தவிக்கும் இடம் நன்றாக இருக்கிறது. காருக்குள் இருந்து தகப்பனாருடன் தொலைபேசியில் உணர்ச்சிபூர்வாமாக பேசும் பொழுது அன்புவின் நடிப்பு நன்றாக இருக்கிறது .அன்புவின் நெருங்கிய நண்பனாக வரும் உடும்பன் என்ற பாத்திரம் அதிகம் பேசமால் அற்புதமாக வெளிப்படுத்த பட்டிருக்கிறது.அகிலனின் நண்பர்களில் ஒருவர் ஆங்கிலத்திலேயே முழுவதும் கதைப்பார் .ஒரு இடத்தில் நண்பரில் ஒருவர் அவரை பார்த்து கூறுவார். உனக்கு நாங்கள் பேசுற தமிழ் உனக்கு விளங்குது தானே? பின்னை என்னத்துக்கு உப்பிடி பேசுறாய்..தமிழிலை கதையன்.. என்ற இடம் மூலம் புலத்தின் வளரும் சிறார்களின் நிலமையை நன்றாக வெளிபடுத்த பட்டிருக்கிறது.காட்சிகள் மூலம் குழு வன்முறையாளர்களிடம் கூட அன்பு ஈரம் மனசாட்சி நட்புத்துவம் இருக்கிறது என வெளிபடுத்தபட்டிருக்கிறது.இந்த படத்தில் இயங்கும் பாத்திரங்கள் அநேகமானவை வில்லத்தனமானவர்களாக சித்தரித்தாலும் நடிப்பு திறமை மூலம் எல்லாரும் கதாநாயகர்களாகவே மிளிர்கிறார்கள்.எதிர்பாராத கதை திருப்பங்களை உருவாக்கி திரைக் கதை நன்கு அமைக்கப்பட்டிருக்கிறது, குறிப்பாக இரவு நேர காட்சி அமைப்புகளில் ஒளி அமைப்பு நன்றாக இருக்கிறது. இந்த படத்தின் முக்கிய கதாநாயகியான கீதாவையும் முக்கிய வில்லனான மரநாயையும் வருவார்கள் வருவார்கள் என பார்வையாளர்களை எதிர்பார்க்க வைத்து கடைசி வரையும் காட்டாமால் விட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.




இலங்கையிலும் தென்னிந்திய திரைபடங்களின் போர்முலாவை மீறி வாடைக்காற்று , பொன்மணி என்ற படங்கள் வந்த போதிலும் திரும்பவும் தென்னிந்திய திரைபட பாணியையே பின் பற்றினார்கள். இத் திரைபடத்தைப் பற்றி சினிமா சம்பந்தமான அறிவு தங்களுக்குள் கூட இருக்கு என்று நினைக்கிற பண்டிட்டுகள் என்ன குறை கூற வருவார்கள் விமர்சிப்பார்கள் என்று எனக்கும் ஓரளவுக்கு தெரியும். ..அவற்றையெல்லாம் தவிர்த்து ..இது போன்ற நல்ல புலம் பெயர்ந்த தமிழ் சினிமாக்களை பாரட்ட வேண்டும்




இத்திரை படவிழா முடிவுற்ற பின் அங்கு கூடி நின்ற பார்வையாளர்களுடன் உரையாடிய வேற்று இனத்து பத்திரிகையாளர்கள் இந்த படத்தை பற்றி வியந்து பாரட்டியதை கேட்க கூடியதாயிருந்தது

(கதாநாயகன் கதாநாயகி ஆடி பாடும் டூயட் காட்சிகள் அடங்கிய படம் சிட்னியிலும் கனடாவிலும் திரையிட்டு இருந்தார்கள் என்று அறிய கூடியதாய் இருந்தது .திரைபட விழாக்களில் என்ற படியால் அந்த காட்சிகளை தவித்து காட்டி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் .உண்மையில் அந்த காட்சிகளை தவிர்த்து காட்டி இருப்பது தான் நன்றாக இருக்கிறது என்பது எனது அபிப்பிராயம்)

Friday, May 20, 2011

பெர்லின் சுவர் உடைய முன்பு ஒரு மே தினத்தில்(மீள் பதிவு)

வந்து மூன்று மாதம் தானாகிறது...இந்த குளிரும் நாடும் எனக்கு ஒத்துக்கொள்ள முரண்டு பிடித்துக்கொண்டிருந்ததது... வின்ரர் முடிஞ்சுது இப்பவும் உனக்கும் குளிருதே என்றபடி... யன்னல் சீலை திறந்தான் கண்ணன்......அவன்...இந்த பெர்லினுக்கு வந்து கனகாலம்...சொல்லுவன் தானே....

அந்த யன்னலூடகவோ...பெர்லின் சுவர் கண்ணில் தெரிந்தது.....சுவரை தாண்டி... ஒரு காவல் கோபுரம் ...அதில் நிற்கும் ஒருவனை பார்த்து வாஞ்சையோடு..... இந்த பக்கத்து றோட்டோரம் நடந்து செல்லுவோர் கை காட்டுகின்றனர்...அவனும் பதிலுக்கு புன்னகைத்து கை அசைக்கிறான்

மக்களை ,மொழியால்...அன்பால் ஒன்றாயிருந்தாலும்......இந்த சுவர் வீம்புக்கு நிமிர்ந்து நின்று ...அரசியலுக்காக பிரித்து வைக்குது

சீலை திறந்து...மதிலையே உற்று நோக்கியவன்....மெளனம் கலைந்து....டேய்...இருந்து பார்...ஒருநாளைக்கு உந்த மதில் உடைந்து...போகும்......சனம் ஒன்று சேருமென்றான்...

எனக்கு அது... வெறுப்பின் உச்சகட்டத்தில் வரும்... நப்பாசையாகவே...பட்டது.......

ம்ம் ...என்றபடி.....மீண்டும் ...நான் போர்வைக்குள்...........கீழே.....அழைப்பு மணி அடித்து சத்தம் கேட்கிறது...இவன்ரை கேர்ள் பிரண்டாயிருக்கோணும்....இவன் ஆள் சுள்ளி தான்...கெதியிலை.மொழியையும் பிடிச்சு....டொச்சு பெட்டையை ஒன்றையும் மடக்கிட்டான்...........அவன் நேற்றே சொன்னவன் .. இன்றைக்கு மே நாளடா வேளைக்கு எழும்பு ஒரு இடத்துக்கு போக வேணுமென்று ......எழும்ப விட்டால் தானே...இந்த குளிர்.....

உவன்...இந்த டொச்சு பெட்டையை ..பிடிச்சதாலை.... கன ஜெர்மன்காரரின்ரை தொடர்புகிடைச்சு இருக்கு......அப்பவே ஊரிலையிருக்க்கையையே தன்னை புத்திஜீவியாக காட்டுறதுக்காக உந்த சிவத்த புத்தங்களை எல்லாம்..வாசிச்சு கொண்டு திரிந்தவன்.......இங்கையும் தொடருது போலை ....வாவன் ஊர்வலத்துக்கு...எல்லாம் தெரியுமெண்டவன்......பார்ப்பம்
வாசலில்..கார்...ஸ்ராட்டாகி கேட்டது....அவர்கள் காருக்குள் ஏறி விட்டார்கள் எனக்காக தான் காத்து கொண்டிருந்தனர்..காருக்குள் இன்னொரு டொச்சுக்காரனும் இருந்தான் ... .....ஏற்ற இறக்க சுருதிகளுடன் அந்த மொழியில் ஏதோ சிரித்து கதைத்து கொண்டிருந்தனர்

அவள் ஏதோ கேட்டாள்...அவனிடம்....என்னை பற்றி தான் கேட்கிறாளென்று புரிந்தது....இவனும் பதிலுக்கு சிரித்துக்கொண்டு சொல்லிட்டு......என்னடா என்று தமிழில் நமிட்டு சிரிப்புடன் பார்த்தான்.. ....அந்த சிக்னல் லைட்டை கடந்து வலது பக்கம் திரும்ப....அவ்வழியே இராணுவ டாங்கி கடந்து சென்றது...........இப்பொழுது பிரித்தானிய எல்லைக்குள் உட்பட்டு நுழைகிறீர்கள் என்ற போர்ட் வரவேற்றது....அதையும் தாண்டி வலது இடது என்று பல திசைகளில் திரும்பி கார் தன் பாட்டில் நகர்ந்து கொண்டிருந்தது

வெஸ்ற் பெர்லினை செக்கன்ட் வேர்ல்ட் வார் காலத்தில் இருந்து பிரிட்டிஸ் அமெரிக்க பிரான்ஸ் இராணுவ வலயமாய் வைச்சிருக்கினமாம்.....போர் சூழல் இருக்கிற மாதிரி...நினைச்சால் மரண விசாரணையை கூட நடத்தாமால் தடுக்கலாமாம்....அழகான கார்களும் பஸ்களுமும் ஓடுகின்ற அந்த றோ்ட்டில் இராணுவ டாங்கிகளும் ஓடி கொண்டிருக்கின்றது ஆச்சரியமாய் இருந்தது

கார் கடைசியாக ஒதுக்கு புறத்தில் உள்ள கட்டிட பகுதிக்கு வந்தடைந்து....அங்கு தான் பின்னேரம் நடை பெறும் மே டே ஊர்வலத்துக்கான ஆயுத்தங்கள் நடக்கிறது......

இப்படித்தான்...ஊரிலை இருக்கிற சைக்கிள் கடை மாணிக்கண்ணை கேட்டதுக்க்காக உந்த மே டே ஊர்வலத்திற்க்கு போனது நினைவுககு வந்தது.....எட்டுமணித்தியாலய நேர கட்டுபாடு தொழிலாளர் பெற்று கொண்ட நாளாம்... வானிலை சிவத்த கொடியெல்லாம் கட்டி யாழ்ப்பாணம் போய் உலக தொழிலாளரே ஒன்று சேருங்கள் என்று கோசம் போடுவினம்... பல பேர் பின்னர் மீற்றிங்கிலை வீறாப்பிலை பேசுவினம்.......மாணிக்கண்ணை சொன்னவர்...நாங்கள் இண்டைக்கு மட்டும் தான்...ஹீரோக்கள்......மற்றும்படி திரும்பவும் நாதியற்று போயிடுவம் என்றார்....அவர் அப்படி சொல்லக்கை...எனக்கு அவரை பார்க்க பாவமாயிருந்தது


அங்கை பலஸ்தீனியர் கறுப்பர் என்று ..பல நாட்டுக்காரரும் அங்குமிங்குமாக போஸ்டர் பதாகைளையும் வைத்து ஏதோ செய்து கொண்டிருந்தனர்.... அந்த கட்டிடம் சுத்தபடுத்தாமாலும்... அந்த கட்டிட்டத்தில் red army என்று ஆங்கிலத்திலும் வேறு கோசங்கள் டொச் மொழியிலும் எழுதியிருந்தது...

அந்த கட்டிடத்தின் மூலையில் உள்ள பெரிய அறையில் பலர் விவாதம செய்து கொண்டிருந்தனர்...நீண்ட முடி தாடியுடனுமும்....பார்த்தால் பிச்சைக்காரர் போல் அவர்கள் உடையும் இருந்தது..

கண்ணன் அதிலிருந்த ஒருவனை அறிமுகபடுத்தினான்.. அவனை பார்க்க பயங்கரமாயிருந்தது....அவனது அடர்ந்த மீசை தாடிக்குள்ளால் அவனது பற்களைகளை காட்டி சிரிக்கும்பொழுது....ட்ரகுலா...கிறிஸ்ரோப்பர் அலி போல் இருந்தான் ...அவன் தனது காதலியை அணைத்தப்படியே....ஆங்கிலத்தில் கேட்டான்.....

பீர்..விஸ்கி...ஏதாவது...

அழகான ஆங்கிலத்தில் விவாதம். செய்தான்...செய்தோம்....அவன் ...ஒடுக்கபடும் மக்களுக்காக அவனுக்குள் இருக்கும் நேசத்தை பார்க்கும்போது பின்னர்....அவன் எனக்கு அழகாயே தெரி்ந்தான்....

ஊர்வலத்தில் எவ்வளவோ சனம் ..அமெரிக்காவுக்கு எதிரான கோப கொப்பளிப்பு.....அமைதியாக சென்ற ஊர்வலம் தீடிரென்று ..கலவரமாக மாறியது....கலகமமடுக்கும் பொலிசாரும் குதிரை படை பொலிசாரும் ...ஒரு புறமும் ...கண்ணீர் குண்டுகளையும் பொழிந்த படி மறுபுறமும்.....ஊர்வலத்தை சின்னாபடுத்தி கொண்டிருந்தனர்..... முதலாளித்துவம் தொழிலாளர்களிடமிருக்கின்ற பயத்தை காட்டிகொண்டிருந்தது...

அந்த அழகான மனிதனை பொலிசார் பிடிச்சு சென்று விட்டனர்

ஆனால் அடுத்த வருடமும் இதே போல் மே ஊர்வலம் நடக்கும்...

Friday, April 29, 2011

அரச குடும்ப திருமணம் -குதூகலத்தில் நம்மவர்கள்

 இன்று பிரிட்டனில் எல்லோரும் இந் நாட்டு மன்னர்கள் ஏனெனில் பொதுவிடுமுறை.பொதுவிடுமுறையின் காரணம் என்னவெனில் இன்று பிரிட்டன் அரச குடும்பத்தின் வாரிசுக்கு திருமணமாம்.இன்று நடைபெறும் இதே தேவாலயத்தில் தான் கொஞ்ச காலங்கள் முன்னதாக இந்த வாரிசு தாயாரின் உடலை வைத்திருத்த போது செய்வதறியமால் கண்ணீர் விட்ட காட்சி என் கண் முன் நிற்கிறது. பிரான்சில் கார் விபத்தில் தாய் இறந்ததாக கூறினாலும் ஏதோ சதியோ என் கேள்வி குறியாக இருந்தமை தான் காரணம்.இந்த அரச குடும்பத்தின் திருமணத்தை தங்கள் திருமணம் போல குதுகாலிக்கும் அரச குடும்ப விசுவாசிகளும் இதற்க்காக கோடிக்கணக்கான பணச் செலவு செய்வது வேறு காரணங்களுக்காகவும் எதிர்க்கும் ஒரு பகுதியினருமாக இத்திருமணத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வாரிசின் தாயார் தகப்பனாரும் திருமணத்துக்கு பின் முட்டி கொண்டு அதன் பின் நடந்த விபீரிதம் யாவரும் அறிந்ததே. இந்த வாரிசுவும் காதலியும் திருமணத்துக்கு முன்பே முட்டி மோதிய கதை கட்டுரைகள் பத்திரிகைகளில் படங்களுடன் வெளியாகி இருந்தன. இப்போழுது ஒருவாறு திருமணத்துடன் முடிந்து விட்டன வாழ்த்துக்கள் .இன்றைய மணமகள் சிறிது காலத்துக்கு முன்பு சாதாரண தரிப்பிட பரிசோதக தொழிலாளியுடன் முட்டி மோதிய கதைகளும் உண்டு.தரிப்பிட பரிசோதகரிடம் இன்றைய மணமகள் தான் இந்த நாட்டு முடி வாரிசின் காதலி நான் என சொன்ன் திமிரும் . நீ யாராய் இருந்தால் எனக்கென்ன என்னுடைய தொழில் இது. இந்தா உனது தண்ட பணத்துக்குரிய பற்றுச்சீட்டு சொன்ன அந்த தொழிலாளியின் தைரியுமும் இந்த சந்தர்பத்தில் ஞாபகத்துக்கு வருகிறது.

மூன்றாம் உலக நாடுகளில் உள்ள மக்கள் மட்டுமல்ல இந்த அறியாமையில் மூழ்கி இருப்பது ஏதோ வகையில் வளர்ந்திருக்கின்ற சொல்லப் படுகின்ற இந்த நாட்டிலும் இருக்கிறது. அரச குடும்ப திருமணத்தை தன் வீட்டு திருமணமாக பூரித்து ஒரு பொய்யான மகிழ்வில் மூழ்வதன் மூலம் தங்களிடமும் நிறைய அறியாமை இருக்கிறது என வெளிச்சம் காட்டி கொள்ளுகிறார்கள்.இவர்களுடன் இணைந்து கொள்ளுகிறார்கள் நம்மவர்களில் உள்ள வைற் கொலர்காரர்களும்..அவர்களின் குதுகாலிப்பே ஒரு தனி ரகம் ...அவர்களின் குதூகலிப்பை இணையத்தில் பார்த்தால் தெரியும் சந்தோசங்கள் மகிழ்ச்சிகள் பூரிப்புக்கள் கொட்டி குவிந்திருக்கிறது.

உலகம் முழுவதும் உலகத்தை ஒரு காலத்தில் ஆண்டு சுரண்டி களவெடுத்து கொழுத்து இன்று பல் விழுந்த கிழவி என்ற அடை மொழியோடு அழைப்படுகிறது இன்றைய பிரிட்டன் .கொழுத்து தினவு எடுத்த இந்த அரச பரம்பரை தனது திமிர் இன்னும் அடங்கவில்லை என அடிக்கடி இப்படியான வைபங்கள் நடக்கும் பொழுது காட்டி ஞாபக படுத்த முயற்சிக்கிறது . இந்த நாட்டில் அறியாமை மூழ்கி நிற்கும் சாதாரண மக்கள் மட்டுமல்ல. ஒரு காலத்தில் இந்த ஆண்டாருக்கு அடிமையாக இருந்து நல்ல சேவகன் என பெயர் எடுத்த நம்மவரும் இந்த குதூகலத்தில் மிகவும் முன் நிற்கிறார்கள் என்பது வருத்ததுக்குரிய செய்தி

இந்த அரச குடும்பத்துக்கு விசுவாசமாக காலம் காலமாக நம்மவர்கள் இருந்துள்ளார்கள். வரலாற்றில் பல கதைகள் உள்ளன.அவற்றில் ஒன்று ...அடங்காதமிழன் சுந்தரலிங்கம் என்ற ஒரு பழைய இலங்கை தமிழ் அரசியல்வாதி ஒருவர் இருந்தவர்.இது என்ன அடங்காதமிழன் என்றதுக்கு பின்னர் சொல்லுகிறேன். இந்த சுந்தரலிங்கம் இன்றைய பிரிட்டிஸ் மகாரணிக்கு கணித பாடம் சொல்லி கொடுத்தவராம் .இதனால் பிரிட்டிஸ் மகாராணி இலங்கைக்கு ஒரு முறை விஜயம் செய்த பொழுது தனது அரச குல திமிருடன் எல்லாருக்கும் தனது கையுறையுடன் கை குலுக்க ..இவருக்கும் மட்டும் தனது கை உறையை கழட்டிய பின்னர் கை கொடுத்தாவாம் ,,,இந்த பெருமையை தங்களுக்கே தந்ததாக பெருமை கொள்ளும் நம்மவர்கள் காலம் காலமாக சொல்லி மகிழ்ந்து தங்களையும் தங்கள் உரிமைகளையும் இழந்தார்கள்.

இந்த சுந்தரலிங்கம் மாவிட்டபுரக் கோவில் ஆலய பிரவேசத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்களில் ஒருவர்.இந்த பிரவேச பிரச்சனையில் தனக்கு எதிரான பாதகமான நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அரச குடும்பத்தின் செல்வாக்கை பாவிக்க முனைந்தவர் என்ற தகவல் உண்டு .


இந்த so call நன்கு படித்த அரசியல்வாதி என்று சொல்லப்படும் இந்த சுந்தரலிங்கத்தை ஏன் அடங்காதமிழன் என்று அழைத்தார்கள் என்பதை இப்போழுது சொல்லி விடுகிறேன் .இலங்கை பாரளுமன்றத்தில் சபாநாயகர் இவரை வெளியேற்றிய பொழது வெளியேற மறுத்து இருந்தார் ,அவரை பாரளுமன்ற காவலர்கள் கதிரையுடன் தூக்கி கொண்டு போய் வெளியில் வைத்தார்களாம்.அத்துடன் அந்த காலம் மனோவசிய கலைகளான ஹிப்னாடிசியம் மெஸ்மரிசம் போன்றவற்றை தெரியாத காலம் ஆனால் இவர் கற்று தேர்ந்து இருக்கிறார் .அதன் உதவியுடன் பாரளுமன்றத்தில் சபாநாயகருடன் நடந்த கருத்து மோதலின் போது தனது கடைசி அஸ்திரமாக தனக்கு தெரிந்த மெஸ்மரிச கலையை பாவித்து இருந்தார் .அதனால் சபாநாயகர் மயங்கி விழுந்திருக்கிறார் ..அதனாலும் இவரின் பெருமை ஓங்கி இருக்கிறது


அன்று தொடங்கிய நம்மவர்களின் பிரிட்டிஸ் அரச விசுவாசம் இன்றும் தொடருகிறது .அந்த விசுவாசம் இருப்பதில் பெருமை கொள்ளுகிறார்கள் ,அந்த பெருமைக்குரிய ஆண்டைக்கு நல்ல பெருமைக்குரிய அடிமையாக இருப்பதில் பெருமை கொள்ளுகிறார்கள் .பக்கிகாங் அரண்மனை யன்னல் கதவடியில் இந்த புதிய அரச வம்ச திருமண ஜோடி வழங்கும் பகிரங்க திருமண முத்தத்தை காண வெளியில் திரண்டு காத்திருக்கும் இந்த முட்டாள் மக்கள் கூட்டத்துடன் இவர்களும் காத்து இருக்கிறார்கள் ,அந்த முத்தத்தை கண்ட தரிசனத்தில் சந்தோசத்த்தில் தாங்கள் கொடுத்த சொந்த முத்தங்களை கூட மறந்தே போயிருப்பார்கள்.

பூரிப்பில் திகழும் இந்த பெருமைக்குரிய அரச குடும்ப விசுவாசிகளை வாழ்த்துவதோடு இந்த புதிய திருமண தம்பதிகளை எனது பங்குக்கு வாழ்த்துகிறேன் ,


பிரிட்டன் அரச குடும்ப திருமணம்: செலவு செய்வது யார்? என்று தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்

Thursday, April 07, 2011

கிட்டடியில் தமிழ் நாட்டில் தேர்தலாமே?


இடம் இருந்து வலமாக சாவச்சேரி நவரத்தினம் எம்பி ,தந்தை செல்வா,அமிர்தலிங்கம் நேருவும் இந்திராகாந்தியும் இலங்கை வந்த போது)


தமிழ்நாட்டு தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் தருணத்தில் இந்த தமிழ்நாட்டு வர்த்தக சஞ்சிகைகள் பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களின் தாக்கங்களினால் இலங்கை தமிழர்களையும் பாதித்திருப்பது தவிர்க்க முடியாதவை தானே. சஞ்சிகைகள் பத்திரிகைகள் என்பவற்றின் தாக்கத்தினால் தமிழ்நாட்டு அரசியலை இலங்கை தமிழர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர் தமிழ்நாட்டு தமிழர் இலங்கை அரசியலை தெரிந்து வைத்திருந்ததை விட கூட என்று கூறலாம்.




70 களில் தந்தை செல்வாவின் இறுதி சடங்குக்கு எம்ஜீஆர் வருவார் என யாழ் மக்கள் எல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள்.ஆனால் வந்தவர்கள் அதிமுக சார்பில் நாஞ்சில் மனோகரனும் திமுக சார்பில் ஒருவரும் வந்திருந்தார்கள் .தெல்லிப்பளை தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்துக்கு முன்னர் காரில் கறுத்த கண்ணாடியும் கையில் மந்திரக்கோலுடன் ஏற முற்பட்ட நாஞ்சில் மனேகரனை வழி மறித்த ஒரு இளைஞர் ஆசைத்தம்பி சுகமா என்று கேட்டார். இப்படியொரு கேள்வியை அதுவும் யாழ்ப்பாணத்தில் தன்னிடத்தில் செலுத்துவார்கள் என நாஞ்சில் மனேகரன் எதிர்பார்க்கவில்லை .என்றாலும் நாஞ்சில் மனோகரன் தன்னை சுதாகரித்து கொண்டு ஆசைத்தம்பியை என்ன ஆஸ்பத்திரியிலா விட்டு விட்டு வந்திருக்கிறேன் என நக்கலாக பதிலை சொல்லி சமாளித்து கொண்டார்.

இந்த இளைஞரின் கேள்வியும் இப்படியான நாஞ்சில் மனேகரனின் பதிலும் ஏன் என்பது பலருக்கு விளங்காமல் இருக்கலாம் அல்லது மறந்து இருக்கலாம். செல்வாவின் மறைவுக்கு சிறிது காலத்துக்கு முன்னர் நடந்த லோக்சபா தேர்தலில் எம்ஜிஆரின் அலை காரணமாக 38 தொகுதிகளிலும் அதிமுக வெல்ல. அதிமுக பிரபல பிரமுகரான நாஞ்சில் மனோகரன் மிச்சமுள்ள ஒரு தொகுதியான வட சென்னையில் திமுக வேட்பாளர் ஆசைத்தம்பியிடம் தோற்றிருந்தார்.நாஞ்சில் மனேகரன் இந்த சம்பவத்துக்கு பின்னர் தமிழர் விடுதலை கூட்டணி வட்டாரங்களில் கூறியதாக கேள்வி. யாழ் இளைஞர்கள் நன்கு தமிழ்நாட்டு விபரங்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டாராம்.அன்றல்ல இன்றும் இலங்கை தமிழர்கள் மத்தியில் தமிழ்நாட்டு தேர்தல் மற்றும் அரசியலை உற்று நோக்குவது தவிர்க்க இயலாமல் தான் இருக்கிறது.



அப்போதைய இலங்கையின் உள்ளூராட்சி மந்திரியாக இருந்த தமிழரசுகட்சியை சேர்ந்த திருச்செல்வம் கருணாநிதியுடன்



மிக உலக பிரசித்திபெற்ற வழக்கறிஞர் ஜிஜி பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று சமஸ்டிக்கட்சி அல்லது தமிழரசு கட்சியை எஸ்.ஜே,வி செல்வநாயகம் ஸ்தாபித்தார் .ஜிஜி பொன்னம்பலத்தின் 50க்கு 50க்கு கோரிக்கையை நிராகரித்து சமஸ்டி கோரிக்கையை வைத்தார். அதன் தலைவர் எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்களின் முன்னுள்ள எஸ்.ஜே என்ற விரிவாக்கமான சாமுவேல் ஜேம்ஸ் என்ற கிறிஸ்த்தவ பெயர்கள் காரணமாக பிரச்சனைக்குள்ளானார்.

யாழ் உயர் இந்துத்துவ சிந்தனையுள்ள தமிழ் காங்கிரஸினர் இந்த விடயத்தை ஒரு ஆயுதமாக கையில் எடுத்து செல்வநாயகம் தமிழருக்கு தலைமை தாங்க தகுதி இல்லாதவர் என பிரச்சாரம் செய்தனர் .அப்பொழுது தமிழ்நாட்டில் எழும்பிய திராவிட எழுச்சி அல்லது திராவிட முன்னேற்றகழகத்தின் எழுச்சி இலங்கையில் தமிழரசு கட்சியினருக்கும் உதவியது என்பதை மறுக்க முடியாது.திராவிட முன்னேற்ற கழகத்தினரின் போராட்ட முறைகளை தாங்களும் பின்பற்றியது மட்டுமன்றி அவர்கள் மாதிரியே மேடைப்பேச்சுகளை பேசி மக்களை உசுப்பேத்தினர்.மொத்தத்தில் தமிழ்நாட்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் நகலாக இங்கு இருந்தனர் என்று சொல்லலாம்.

so call சுதந்திர இந்தியாவிற்குக்கு முற்பட்ட காலத்தில் பிரிட்டிஸாரால் உருவாக்கப்பட்ட காந்தி நேருவின் காங்கிரஸ் கட்சியிலும் பார்க்க தமிழ் நாட்டில் ஒரு காலகட்டத்தில் இடதுசாரிகள் வலுவாக இருந்தார்கள் என்று கூறுவோர்களும் உளர்.அது போல யாழிலும் உந்த தமிழரசுக்கட்சியின் எழுச்சிக்கு முன்னர் இடதுசாரிகளின் அலை இருந்தது என்று சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள் .so call சுதந்திர இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் வடக்கில் பருத்தித்துறை தொகுதியில் கம்னீயூஸ்ட் கட்சியில் கந்தையா அமோக வெற்றி பெற்றிருந்தார் .அத்துடன் ட்ரொக்ஸிய சிந்தனை நிரம்பிய என்.எம் பெரேராவின் சமசமாஜக் கட்சிக்கும் யாழில் பல இடங்களில் மிக்க ஆதரவு இருந்திருக்கிறது என்று கூறுவோர் உளர் .

பிற்க்காலத்தில் தமிழர் கூட்டணி தலைவராக இருந்த சிவசிதம்பரம் தோழர் கந்தையாவின் அரசியல் பாசறையில் இருந்து தான் வந்தவர் என கூறுவர் உளர். இப்ப இருக்கிற ஆனந்தசங்கரி முன்னர் சமசமாஜக்கட்சியில் போட்டியிட்டவர் .இப்படி வடக்கில் இடதுசாரிகளுக்கு தமிழர்கள் ஆதரவு வழங்கி இருந்தாலும் பின்னர் வடே தோசை அபிட்ட எப்ப (வடை தோசை எங்களுக்கு வேண்டாம்)என்று கோசம் போட்டு தமிழருக்கு எதிராக ஊர்வலம் போனவர்கள் என்று தமிழர்கள் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டும் உண்டு.


தமிழரசுகட்சி தமிழர்விடுதலை கூட்டணியான பிறகு யாழ் முற்றவெளியில் நடந்த கூட்டத்தை பார்த்த நீயூஸ்வீக சஞ்சிகையின் நிருபர் ஒருவர் எழுதி இருந்தார் .கறுத்த கோட் போட்டு வழக்கறிஞர் தொழிலாக கொள்ளும் இந்த தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் வாய்ச்சவடால் பேச்சின் மூலம் தமிழ் மக்களை தங்களுக்குள் அதிசயக்க வகையில் கட்டுகுள்ளாகிறாக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டார். இந்த நிருபர் இந்த பேச்சு வழிமுறையின் அசல் சொந்தக்கரார்களான திராவிட முன்னேற்ற கழகத்தினரின் பேச்சுக்களை பார்க்கவில்லை போலும்

. 70 களில் தமிழர் கூட்டணி மேடைகளில் பிரபல மேடை பேச்சாளராக வண்ணை ஆனந்தன் என்றொருவர் இருந்தார் இவரின் பேச்சினால் பல இளைஞர்கள் கவரப்பட்டார்கள் . அதனால் முட்டாள் தனமாக உணர்ச்சி வசப்பட்டார்கள். இரத்தத்தால் நெற்றி பொட்டு இட்டார்கள்.இவரின் பேச்சு வழமையான பேச்சில் இருந்து வித்தியாசமான முறை இருந்தது என்பது உண்மை தான் . பின்னர் தான் அறியகூடியதாய் இருந்த்து. தந்தை பெரியாரின் பேச்சு ஸ்டைலை பின்பற்றியிருந்தாராம். இவர் மேடை நாகரிகமின்றி துப்பி பேசுவார் . பெரியார் இப்படி பேசினாரோ தெரியாது. வண்ணை ஆனந்தனின் பேச்சு போலத்தான் இன்று சீமான் அவர்கள் தன் பேச்சினால் இளைஞர்களின் நரம்புகளை முறுக்கேற்ற வைக்கிறார் .காலம் காலமாக உலகத்தில் தமிழன் எங்கை வாழ்ந்தாலும் உந்த உசுப்பேற்றிய பேச்சை நம்பியே ஏமாந்து போவதை வழக்கமாக கொண்டிருக்கிறான்.

இலங்கை தமிழரசுக்கட்சியினர் எப்பொழுதும் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு தான் விசுவாசமாகத்தான் இருந்துள்ளனர் என்று சொல்லலாம் .எம்ஜீஆர் மலையாளி என்பதால் ஒரு அவ நம்பிக்கை காரணமாக இருந்திருக்கலாம் .அதற்க்கு சில உதராணம் கூறலாம் கருணாநிதியின் ஊழல் குற்றசாட்டு காரணமாக அப்பொழுது சன்சோனி கமிசன் அமைத்திருந்தார்கள் ..பிற்கால்த்தில் தமிழர் கூட்டணியில் இணைந்திருந்த உலக பிரபல வழக்கறிஞர் ஜீஜீ பொன்னம்பலம் கருணாநிதிக்காக வழக்காட இந்தியா சென்றமை . எம்ஜீஆர் ஆட்சி காலத்தில் மதுரையில் நடந்த தமிழராய்ச்சி மகாநாடு நடைபெற்றது .அந்த காலம் திமுக என்றாலும் சரி அதிமுக என்றாலும் சரி ஈழ அரசியலை தவிர்த்து அரசியல் நடத்த முடியாத நிலைமை. அந்த தமிழாராய்ச்சி மகாநாட்டுக்கு அமிர்தலிங்கம் தமிழர் கூட்டணி தலைவர்கள் சென்று இருந்தனர்.இவர்களுக்கு வசதி அளிப்பதற்க்கு வரவேற்பதற்க்கு இரு கழகத்தவரும் போட்டி போட்டனர்.எம்ஜீஆர் இவர்களுக்கு என்று பிரத்தியேகமான கார் வசதிகள் போன்றவற்றை அளிப்பதுக்கு ஏற்கனவே ஒழுங்கு படுத்தி வைத்து இருந்தார் .ஆனால் தமிழர் விடுதலை கூட்டணியினர் தங்களுக்குள்ள திமுக விசுவாசம் காரணமாக திமுகவினரினர் காரில் சென்றமையால் எம்ஜீஆரை கடுப்பாகிய நிலைமையும் நடந்ததுண்டு.

இலங்கையில் சிங்களவர் பெரும்பான்மையாராக இருந்தாலும் தமிழ்நாட்டு தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டு அரசியல் காரணமாக இந்துசமுத்திர பிராந்தியத்தில் அவர்களிடம் சிறுபான்மை உணர்வே மேலோங்கி இருந்தது .இப்பொழுதைய தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் நடவடிக்கையின் காரணமாக அவர்களிடம் அந்த பயம் நீங்கியுள்ளது.அத்துடன் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளை கோமாளிகளாக பார்க்கும் நிலமையே இப்பொழுது ஓங்கி உள்ளது.


ஒரே குட்டை ஊறிய மட்டைகளுக்கு காலமாக காலமாக மாறி மாறி வாக்கு அளித்து தமிழ்நாட்டு மக்களுக்கும் இன்னும் விடிவில்லை. உலக தமிழ் மக்களுக்கும் விடிவில்லை .மாற்று அரசியலை விரும்பி ஒரு மாற்றத்தை விரும்புவர்கள் கூட தேர்தல் பாதையைத்தான் காட்டுகிறார்கள் .உது சாதாரண மக்களுக்கு ஒரு விடிவை தராது என்பது தான் நிதர்சனம்

Monday, March 21, 2011

மதிப்புக்குரிய திருவாளர்களை சந்தித்த பொழுது

சூரியன் மறையாத தேசம் என்று ஒருகாலத்தில் சொல்லப்பட்ட நாட்டுக்கு வந்து கொஞ்சகாலம் தான் ஆகிறது . இதற்க்கு முன்பு ஜரோப்பாவில் ஒரு நாட்டில் ஒரு குக் கிராமத்தில் நீண்ட காலம் நாட்களை கடத்தி துரத்தி ஏனோ தானோ வாழ்ந்து கொண்டிருந்தேன்.இந்த லண்டனில் செட்டில் ஆக வேண்டும் என்ற எனது குடும்பத்தினரின் நச்சரிப்பு காரணமாக ஆங்கில கால்வாயை கடந்து வந்த காலம் . அங்கை இடது இங்கை வலது கார்கள் ஓட்டும் முறை மட்டுமல்ல செல்லும் பாதை வழி முறைகளிலும்...பாதையை கடப்பது கூட மிகவும் கடின முயற்ச்சி எடுத்து தான் கடக்க வேண்டும். றோட்டில் எழுதி இருக்கும் வலது பக்கம் பார்த்து கடக்கவும் என்ற வாசகத்தை பார்த்து கடக்க வேண்டிய காலம். அந்த காலம் எப்பவென்றால் பன்னிரண்டு பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர்.


இந்த நாட்டு சூழ்நிலைக்கு உடனடியாக மாற முடியாமால் திண்டாடி கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள் , வெளியில் உலாவ சென்றேன் உடல் ஆரோக்கியத்துக்கு மன்றி மன ஆரோக்கியத்துக்கு நல்லது என்று கூறிக்கொண்டு .ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல இந்த திருவாளர்களை எங்கையாவது சந்தித்தால் எப்படி இருப்பார்கள் என்று பார்ப்பம் என்று,

. பொழுது போகாமால் இருந்த படியால் பொழுது போக்க அன்று முதல் நாள் இரவு ஒரு வீடியோ கசட்டை போட்டு பார்த்ததிலிருந்து அவர்களை பார்க்க வேணும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டு இருந்தது ,அது ஏன் ஏற்ப்பட்டது என்று நினைத்து எனக்கே சங்கடமாயிருந்தது. லண்டனில் பார்க்க எவ்வளவு விசயங்கள் இருக்கும் போது அதை விட்டுட்டு இதை என்று.

சரத்குமார் ராதிகா விவேக் மற்றும் தென்னிந்திய கலைஞர்கள் பங்கு பற்றிய நிகழ்ச்சி அந்த வீடியோவில் .அந்த நிகழ்ச்சி லண்டனில் உள்ள பிரபலமான வெம்பிளி ஸ்டேடியத்திலுள்ள மண்டபத்தில் நடைபெற்றது.அந்த நிகழ்ச்சியில் இடையிடையே வந்து விவேக் விதூசகனாக வந்து சிரிப்பூட்ட முயற்சி செய்து விட்டு போவார் . சிரிக்க தெரியாத இளைஞர்களோ அல்லது மற்றவர்களை எப்பவும் குழப்பத்தில் ஆழ்த்துவதில் சந்தோசமடையும் சில இளைஞர்களோ தெரியவில்லை
கூக்குரல் போட்டு குழ்ப்பி கொண்டே இருந்தார்கள். ஆனால் இந்த நடிகர் விவேக் இந்த நிகழ்ச்சிக்கு வரும் முன்பே இவர்களை பற்றி விபரம் சேகரித்து விட்டார் போலும். வெம்பிளி ஓகேயா , ஹரோ ஓகேயா ஈஸ்ட்ஹாம் ஓகேயா, மற்றும் வேறும் சிலவற்றைக் கூறி அவர்களை குளிர்ச்சீயூட்டி மகிழ்வூட்டி சாந்தப் படுத்தி கொண்டிருந்தார் .விவேக் இந்த நாட்டிற்க்கு வந்து இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மதித்து போற்றியது யாரை என்று நினைக்கிறீர்கள் ? அவர்கள் தான் லண்டன் வாழ் திருவாளர் தமிழ் இளைஞர் கோஸ்டியினர்.

விவேக் கூறிய ஓகேயா ஓகேயா என்றது லண்டனிலுள்ள இடங்களின் பெயர்கள் என்றாலும் அவை அந்த இளைஞர்கள் கோஸ்டியினர்களுக்கு உரித்தான பெயர்கள். இந்த நாட்டில் முடியாட்சி முறை முற்றும் இல்லாமால் போகவில்லை உணர்த்துவதுக்காவோ என்னவோ தெரியவில்லை. அவர்கள் லண்டனிலுள்ள மேற்கூறிய ஊர்களில் எல்லைகளை வகுத்து சேர சோழ பாண்டியர்களாக அரசோட்சி கொண்டிருந்தார்கள்.அவ்வளவுக்கு அவர்களின் ஆதிக்கம் நிலவி வந்தது .அரசோட்சுபோது படைகள் வேண்டாமா ? ஒவ்வொரு குழுவும் எவ்வளவுத்துக்கு தங்கள் குழுக்கு ஆட்களை சேர்க்க முடியுமோ அவ்வளவு இளைஞர்கள் இளைஞிகளை சேர்த்தார்கள் .படைகள் இருந்தால் மட்டும் போதுமா ஆயுதங்கள் வேண்டாமா ?வைத்திருந்தார்கள் அவர்களுக்கு இந்த நவீன ஆயுதங்களில் நம்பிக்கையுமில்லை விரும்பமில்லையும் போலும் .கத்தி அரிவாள் கோடாரி போன்ற பாரம்பரிய ஆயுதங்களை அதிகம் கைவசம் வைத்திருந்தார்கள்

அரசர்கள் மாதிரி இருந்தால் போதுமா? அதை மாதிரியான அல்லது ஒத்த தன்மையான அணிகலன்கள் அணிய வேண்டாமா?..அணிந்திருந்தார்கள் காதிலை மூக்கிலை வாயிலை உடையிலை எல்லாத்திலையும் வித்தியாசம் காட்டி கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு குழுவுக்கு இடையில் இந்த விசயத்தில் கூட குறைய என போட்டி இருப்பதால் காலத்து காலம் வித்தியாசமாக தோற்றமளித்து கொண்டிருந்தார்கள். இளைஞர் கோஸ்டியினரின் அங்கம் வகிக்கும் தனி உறுப்பினர் எதோ விசயத்துக்காக எல்லையை தாண்டி வந்து மற்றவர்களிடம் மாட்டுப் பட்டால் ஒற்றனோ என ஜயப்பட்டு படுமோசமாக நையபுடையப் படுவார்கள்

.இவர்களின் குழுவில் சேருவதுக்காகவே நன்கு படித்த இளைஞர்கள் கூட படிப்பை நிற்ப்பாட்டிய சம்பவம் கூட நடந்து இருக்கிறது .பெரியவர்கள் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று எல்லா வகைப்பட்டவரும் இவர்களைக் கண்டால் மூக்கை பொத்தி வாயை மூடி பவ்வியமாக நடக்க வேண்டி இருந்தார்கள். காளை அடக்குபவன் தான் வீரன் அவனில் தான் பெண்கள் விருப்ப படுவார்கள் என தமிழ் சமூகத்தில் ஒரு காலம் இருந்ததாம். லண்டன் வாழ் டீன் ஏஜ் பெண்களும் எந்த இளைஞர் கோஸ்டியினர் மிகவும் வலுவாக இருக்குதோ அதில் மயங்குபவர்களாக இருந்திருக்கிறார்கள் .இதன் மூலம் கல்வி செல்வம் வீரம் எது சிறந்தது என்றதுக்கு லண்டன் வாழ் இளைஞிகள் சிலர் வீரம் என்ற விடையை செலுத்தி கொண்டிருந்தார்கள்.


இந்த திருவாளர்களின் மகோன்மியத்தை காதுவெளி செவ்வியாக கேள்விபட்டதுவே நான் மேற்கூறியவை ,,அந்த சூப்பர் மார்க்கட்டுக்கு செல்ல அந்த நகரத்திலுள்ள உள்ளூராட்சி சபையால் பேணப்படும் அந்த பார்க்கை பாவிப்பது வழக்கம் .அந்த சன வாகன நெருக்கடி மிகுந்த நகரத்தில் அந்த பார்க்கில் மட்டும் இருக்கும் அந்த தனிமை அந்த ஏகாந்தம் எனக்கு ரம்மியமாக இருக்கும் அந்த பார்க்கோடு சேர்த்து தான் சவக்காலையை வைத்திருக்கிறார்கள் ஏனோ தெரியவில்லை .தூரத்தில் சிறுவர்கள் கோடைக்கால சந்தோசத்தை அனுபவித்து கால் பந்து விளையாடி கொண்டிருக்கிறார்கள் .பார்க்கில் ஒரு சில வயோதிப தம்பதிகள் இருக்கும் சில காலங்களை ஒவ்வொரு கணமாக உலகை ரசித்து கொண்டு இருந்தனர்.பார்க்கை கடந்து அந்த மூலைக்கடையில் பியரை வேண்டிக்கொண்டு அதே பார்க் இட பரப்பூடாக திருப்பி கொண்டிருந்தேன் ,இப்பொழுது பார்க்கின் காட்சியோட்டமே மாறி இருந்தது .அநேகர் இப்ப அங்கங்கே குழுமி இருந்தனர் .

புலம் பெயர்ந்த பின்னர் விஸ்கி பிராண்டி வோட்கா எல்லா வகைகளையும் ஒரு அளவுக்கு மேல் பதம் பார்த்திருக்கிறேன் இப்ப உடலும் வீட்டு சூழ்நிலையும் இடம் கொடுக்காதாதால் கொஞ்சம் காலமாக பியரில் இறங்கி வந்த நிலமை . நாங்கள் விஸ்கி பிராண்டி முழுசாக குடிப்பதை பார்த்து ஒரு வெளிநாட்டு வெள்ளைக்காரனே ஒரு தரம் கூறியது ஞாபகம் .இந்த சிறிலங்காகாரனைப் போல இப்படி முழுசா விஸ்கி குடிக்கிறவனை உலகத்திலை ஒருதரையும் பார்க்கவில்லையென்று. பியர் மட்டுமே குடிக்கிற ஆள் என்று என்னை சீப்பாக நீங்கள் நினைக்க கூடாது என்றதுக்கு தான் மேல் கூறிய எனது மகோன்மியம் .

ரம்மியமாக வீசும் இந்த காற்றை அனுபவித்துக்கொண்டு இந்த பியரையும் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து குடிப்பம் என்று ஒரு மரத்துக்கு கீழுள்ள ஒரு தனி இருக்கையில் அமர்ந்து இருந்தேன்,இருக்கையோடு அண்மித்து மூன்று பக்கம் மூடி ஒரு பக்கம் திறந்த இருக்கைகள் அமைந்த கட்டிடம் இருந்தது, நான் இருக்கும் இடத்தில் இருந்து பார்த்தால் அங்கால் பக்கத்தில் நடப்பது தெரியாது .ஆனால் சில தமிழும் ஆங்கிலமும் கலந்த குரல்கள் கேட்க தொடங்கின. அந்த குரல்களின் வகைகள் அதிகாரம், குழைவு, நமுட்டு சிரிப்பு, நளினம், நக்கல் எல்லாம் கலந்தனவையாக இருந்தன.அந்த குரல்கள் ஆண்களினதும் பெண்களினதும் உடையதாகவும் இருந்தது, நான் பார்க்கவேண்டும் ஆவலோடு இருந்த மதிப்புக்குரிய திருவாளர்களோ என்ற ஜயமும் சந்தோசமும் ஏற்பட்டது.

ஜெர்மன் ஊடகவியளார் ஒருவர் ஜெர்மனில் வாழும் கறுப்பினத்தவர்களின் வாழ்க்கை முறையை அறிவதற்க்கு தன்னை கறுப்பு இனத்தவன் மாதிரி உருமாற்றி அவர்களோடு இணந்து தகவல்களை அறிந்திருந்தார் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள் . நானும் சிலவேளை இந்த இளைஞர் கோஸ்டியில் சேர்ந்து இவர்களின் மகோன்மியத்தை அறிய வேணுமெண்டும் ஆசைப்பட்டதுண்டு, இந்த எனது மனசு இருக்கே நடைமுறைக்கு உதவாத விசயத்தையும் சில வேளை கற்பனை செய்வதுண்டு .இளைஞனை கடந்து இப்ப் இருக்கும் எனது நடுத்தரவயது தோற்றம் பொருத்தமாயிருக்காது என்று எனது மனசுக்கு சொல்லி சமாதானம் சொல்லிய காலங்களுமுண்டு.

இப்படி எனது மதிப்புக்குரிய திருவாளர்களுக்கு மிகவும் அண்மையில் நிற்கிறேன் என்று உணரும் போது புளகாங்கிதமாக இருந்தது.இருக்கும் இடத்தில் இருந்து அவர்களை பார்க்க முடியாமால் இருந்தாலும் அவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்று அறிய எனது காதை நீட்டினேன் .அவர்கள் ஆங்கிலத்தை தவிர்த்து பேசும் தமிழ் வார்த்தைகள் சாதாரணமாக மக்கள் பாவிக்காதவை .ஆனால் நடிகர் வடிவேலு அறிமுக படுத்தும் வசனங்கள் மாதிரி அவர்கள் பயன் படுத்தும் சொற்றொடர்கள் ரசிக்க கூடியதாகவும் இருந்தது. இப்படி புதிய தமிழ் சொற்களை எல்லாம் அறிமுகபடுத்தி இந்த தமிழ் மொழியை செழுமை படுத்தும் இந்த திருவாளர்களை தரிசித்து செல்வதென்றே முடிவு கட்டி விட்டேன். எழுந்து பார்ப்போம் என்று ஒரு கணம் யோசிப்பேன் மறுகணம் இருந்து விடுவேன் அது நாகரிகமில்லை என.

தீடிரென பேசி கொண்டிருந்தவர்களிடையே தீடிரென ஒரு அமைதி பின் ஓர் இரு வார்த்தைகள் அதில் மாமா நிற்கிறார் . தமிழ் மூன்று எழுத்து ஒன்று அங்காலை நிற்குது போலை என்று வார்த்தைகள் அடிபட்டன.இன்னொரு குரல் ஒன்று கேட்டது இப்ப இங்கத்தை பொலிசிலை-தமிழ் ஆக்களும் இருக்கினம் எங்களை பலோ பண்ண ,அவனோ தெரியாது அங்காலை இருக்கிறது என

ஒரு அதிகார குரல் விம்பி வெடித்தது யாரது பார்ப்பம் தூக்கத்தான் இருக்கு; .தூக்கிறது எல்லாம் இயக்க காலத்திலை உருவான சொற்கள் எனக்கு பழக்கமான சொற்களும் கூட. .ஆனால் என்னை பற்றித்தான் பேசுகிறார்கள் என இந்த ரூயூப் லைட்டுக்கு ஒரு கணம் பிந்தி தான் விளங்கியது .அந்த கணம் முடிவதற்க்குள் திருவாளர் கோஸ்டி தலைவர் தீடிரென்று என் முன்னே காட்சியளித்தார்.நான் கேள்விபட்டு மனம் கண்ணால் உருவகபடுத்தி வைத்திருந்ததிலும் பார்க்க மிகவும் கம்பீரமாகத் தான் இருந்தார் .குரலில் மிகவும் கடுமை இருந்தது ,பியர் அடிக்கிற சாட்டிலை எங்களை பலோ பண்ணிறீரோ ,நீர் மாமாவோ மூன்று எழுத்தோ யாராக இருந்தாலும் பரவாயில்லை .எங்களை ஒன்றும் செய்ய இயலாது ஏன் என்றால் இந்த நாட்டில் பிறந்தவர்கள் .வேணுமெண்டால் மாமி வீட்டுக்கொண்டு போய் மூன்று நாள் அல்லது மூன்று மாதம் வைத்திருந்தீர்களில்லை என்று சொல்லி கெக்கரித்து சிரித்தான்..

அட பாவி உங்களை தரிசிக்க இவ்வளவு நாள் துடித்த என்னை மூன்று எழுத்து என்று சந்தேகிக்கலாமோ எனது மனது துடித்தது.இப்பொழுது அந்த மற்ற இளைஞர் இளைஞிகள் முற்றும் முழுதுமோ சூழ்ந்து கொண்டார்கள் .மாறி மாறி கேள்விகள் அதற்க்கு எனது அப்பாவித்தனமான பதில்கள் ..இடை இடையே டெலிபோன் அழைப்புகளை மேற் கொள்ளுகிறார்கள் டெலிபோன் அழைப்பை ஏற்று கொள்ளுகிறார்கள் . என்னை என்ன செய்யவேண்டும் என்பதை முடிவு கட்ட மத்திய குழுவோடையோ தலமைபீடத்துடனோ கதைக்கிறார்களோ என ஜயம் ஏற்பட்டது.என்னை அசைய வேண்டாம் உதிலை இரும் என்று கூறி மூன்று பேரை என்னை சுற்றி காக்க வைத்து விட்டு தூரத்தில் நீண்ட விவாதம் செய்து கொண்டிருந்தனர் . முடிவெடுத்திட்டினம் போலை ஒருத்தி எனது அருகில் வந்து ஜயா உங்களை பார்த்தால் அப்பாவி மாதிரி தான் இருக்கு. உங்களுக்கு ஒன்று செய்யவில்லை உங்களை விடுறம் என்று. சொல்லிப்போட்டு ஒரு கண்டிசன் என்றாள் ..நாங்கள் இப்ப இந்த இடத்தை விட்டு போறம் அரை மணித்தியாலத்துக்கு நீங்கள் இந்த இடத்தை விட்டு அசையக் கூடாது கை தொலைபேசி பாவிக்க கூடாது..நீங்கள் இந்த கண்டிசனை மீறுகீர்களோ என ஒரு ஆள் உங்களை தூரத்திலே இருந்து பார்த்து கொண்டிருப்பார் என்று.

எனக்கு அடித்த பியரால் ஏற்படும் உற்சாகம் தீடிரென இறங்கி விட்டது .அந்த அரைமணித்தியாலத்தில் அங்கேயே இருந்து மீண்டும் ஒரு பியர் குடிக்க சந்தர்ப்பம் தந்த திருவாளர்களுக்கு நன்றி சொல்லி கொண்டேன்

இவர்களின் தரிசனம் அருள் கிடைத்த பிறகு இவர்களை பற்றிய பயம் அவ்வளவு இல்லை..ஆனால் இவர்களின் வீர பிரதாபங்கள் அட்டாகசங்கள் அயோக்கியதனங்கள் பற்றி தமிழ் வட்டாரங்களை தாண்டி ஆங்கில ஊடகங்களும் பேச தொடங்கி இருந்தன

லண்டன் பொலிஸ் குற்ற தடுப்பு ஆணையாளர் ஒரு அறிக்கை விட்டார் இந்த இளைஞர் கோஸ்டி பற்றி இந்த நாட்டில் பிறந்தவர்களாயும் இருந்தாலும் இந்த நாட்டு குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும் இவர்கள் தொடர்ந்து இந்த சமூக சீரழிவை செய்வார்களாயிருந்தால் இவர்களை சிறிலங்காவுக்கு எவ்வித தயக்கமின்றி நாங்கள் நாடு கடத்துவோம்

இந்த ஒற்றை அறிக்கை இவ்வளவு பவுர் புல் ஆக இருக்கும் என்று நான் அப்பொழுது நினைக்கவில்லை .இந்த அறிக்கைக்கு பின்னர் இந்த திருவாளர்கள் முடி துறந்து நாடு துறந்து வனவாசம் போவார்கள் என்று . இந்த திருவாளர்கள் இப்ப கூட்டமாக காண கிடைப்பதில்லை ...இவர்களின் அட்டாகசமும் குறைந்த சந்தோசம் லண்டன் வாழ் மக்களிடையே..

அன்றைக்கு ஒரு நாள் என்னை விசாரித்த குழு தலைவர் சிங்களாய் சென்று கொண்டிருந்தார் ,சிங்கமாய் இல்லை .என்னை கண்டவுடன் கூனி குறுகிக் கொண்டு










\

Wednesday, March 16, 2011

ஊருக்குள் புகுந்த கடல்



இயற்கையின் சீற்றத்தினால் நிலம் அதிர்ந்தது, கடல் ஊருக்குள் புகுந்தது,.ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அழிவு, பெரும் சொத்து நாசம் இதுவெல்லாம் அண்மைக்கால செய்திகள் .அதன் உச்சகட்டமாக ஜப்பானில் நடந்த அண்மையில் நடந்த அழிவினால் ஒரு முறை அணுகுண்டால் அழிந்த அந்த நாட்டில் இன்னுமொரு அணு கதிர் கசிவு ஏற்பட போகுது என்ற செய்திகள்.அந்த நாட்டை கடந்து தங்கள் நாட்டுக்கு வந்துடுமோ என்று அஞ்சு நாடுகள். தங்களுக்கு இந்த பிரச்சனையால் ஒரு ஆபத்து இல்லை என்று தங்களை தாங்களே சமாதானப்படுத்தும் நாடுகள் . இவையை பற்றித்தான் இந்த டிவி பத்திரிகை மற்றும் எல்லா தொடர்புசாதனங்களில் எல்லாம் பேச்சு ஆராய்ச்சி விளக்கம் கட்டுரைகள் .என்ன என்ன எல்லாம் விளக்கத்துடன் படங்களுடன் காரணங்களும் தீர்வுகளும் சொன்னாலும் அனுபவம் வாய்ந்த விஞ்ஞான தரப்பு இயற்க்கையின் குமுறலுக்கு அல்லது கோபத்துக்கு ஒன்றுமே செய்ய இயலாது என்று ஒப்பு கொள்ளுகிறது.ஒப்புக்கொண்டாலும் சில இடங்களில் சிலர் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு இவர்கள் காட்டுகிற கள்ள மெளனங்கள் எரிச்சலை ஊட்டுகின்றன.

அண்மைகாலங்களில் அடிக்கடி உலகத்தில் நடக்கின்ற இயற்க்கை அழிவுகளினால். இந்த மதவாதிகள் ஜோதிடர்கள் ஹாஸ்யம் கூறுவர்கள் புனை திரை கதை கூறுகின்றவர்கள் சொல்லுகிற மாதிரி 2012 உலகம் அழிய போகிறது என்ற உண்மையை . பொய்யை அல்லது கற்பனையை பலரும் இப்பொழுது உற்று நோக்குகிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது.ஆஸ்தினாகட்டும் நாஸ்திகனாட்டும் அவர்களுக்கு வரும் மரண பயம் என்றது பொதுவே.பொதுவாக சொல்லுவார்கள் மரணம் அண்மை கணங்களில் நிகழப்போகுது என்று தெரியும் போது பயம் பெரிதாக வராது என்று .ஆனால் இப்படியான உணர்வு தான் வருமென்று.. நான் சரியாகவே வாழவே தொடங்கவில்லை அல்லது வாழவில்லை ..அதுக்குள் அழியப்போகிறனே என்று .ஆனால் இப்பொழுது தனிமனித பயத்தை தாண்டி இன்னும் சரியாக வாழ தொடங்காத ஒட்டு மொத்த மனித குலத்துக்குரிய பயமாக மாறி இருப்பதை டிவி பத்திரிகைகளில் நடைபெறும் விவாதங்கள் காட்டுகின்றன.

2004 வருடம் ஒரு நாள் ஒரு நள்ளிரவு தாண்டி அசந்து ஆழ்ந்து தூக்கி கொண்டிருந்த எங்களை டெலிபோன் மூலம் அடித்து எழுப்பி ஒரு அவல செய்தி சொன்னான் என் நண்பன் ஒருவன் .நாட்டிலை ஊருக்குள் கடல் புகுந்து விட்டுதாம் பலர் கடலோடு சங்கமாகிவிட்டாராம் என்று .அதுக்கு பெயர் சொன்னான் சுனாமி என்று. இந்த பெயரை ஞாபகபடுத்தி பார்த்தேன் அணமை காலத்தில் கேள்விபட்டிருக்கிறேன் அதுவும் கமலின் படமான அன்பே சிவம் படத்தில் ,கமல் இந்த சுனாமி பற்றி சொல்ல மாதவன் இங்க எல்லாம் வராது என்று சொல்ல இங்கு வரும் என்று கமல் கூறுவார்.எங்கள் அனுபவத்தில் இயற்கை அனர்த்தம் என்றால் ஒரு சூறாவளி ஒரு பெரும் அடை மழை ,ஆறு குளம் பெருக்கெடுத்து வழிவது ,ஒரு மண் சரிவு என்று தான் இருந்திருக்கும் .இந்த கடல் புகுந்த அனுபவம் எங்களுக்கும் இருந்திருக்கவில்லை எங்கள் ஊருக்கும் இருக்கவில்லை என்பது தான் உண்மை.

சுனாமி என்றதை ஒத்த ஒரு கடல் அழிவு நடை முறையினால் தான் குமரி கண்டம் முழுகினதாக சொல்லுவார்கள் இதை தமிழில் கடல் கோள் என்று கூறுவார்கள் .சங்கம் வளர்த்த மதுரை இப்ப இருக்கிற தமிழ் நாட்டில் உள்ள மதுரை இல்லை அழிந்த குமரிகண்டத்தில் உள்ள மதுரை தான் என்று கூறுவோரும் உள்ளர்.கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் வாசித்த காலத்தில் அதில் கடல் கோளை பற்றிய வர்ண்ணையை வாசித்ததாக ஞாபகம், இந்த பூமி அதிர்ச்சி கூட ஓரு பாடத்தில் படித்த விடயமாக ஒரு செய்தியாக கன காலமாக எனக்குள் இருந்தது .செய்தியாக இருந்த இந்த விசயம் ஒருமுறை அனுபவமாக மாறியது எப்பவெனில் 2002 இல் விடுமுறைக்கு இந்தியா சென்ற போது சென்னையில்.திருவான்மையூரில் எனது உறவினரின் மொட்டை மாடியில் ஜாலியாக பேசி கொண்டிருந்த போது இந்த அதிர்வை உணர்ந்தேன்.அந்த மரண பயத்தினால் அன்று இரவு முழுவதும் தூங்கமால் தூங்கி கொண்டு றோட்டிலேயே இருந்து இருக்கிறார்கள் பலர் ..வருவது வரட்டும் ஊரோடு ஒத்தது தானே என்று நினைத்து கொண்டு மற்றவர்கள் போலல்லாது நான் வீட்டிற்க்குள் போய் தூங்கி விட்டேன் .ஆழமான தூக்கம் கிடைத்தது அன்று. அருமையான தூக்கம் எனது வாழ் நாளில் ஒருபோதும் தூங்கி இருக்கவில்லை.அப்பிடி ஒரு சுகனுபவம் அதற்கு காரணத்தை என்னுள் தேடினேன் கிடைக்கவில்லை . அப்பொழுது தான் அங்கிருந்த பெரிசு ஒன்று சொல்லிச்சுது மரணத்துக்கு அருகாமாயில் வரும் பொழுது ஒரு சுகானுபவம் வருமென்று .

2004 இல் வந்த சுனாமி சுப்பர் மூன் என்று அழைக்கப்படும் சந்திரன் பூமிக்கு அண்மையில் வந்த இரண்டு கிழமைக்குள் வந்ததாயும் அது போல் இந்த ஜப்பானில் நடந்த சுனாமியும் வருகின்ற மார்ச் 19 ந்திகதி அன்று நடக்கிற சுப்பர்மூன் காரணமாகத்தான் வந்ததாயும் கூறுவோரும் உளர். இந்த சந்திரனுக்கும் கடலுக்கு ஏதோ தொடர்பு இருக்கத்தான் செய்யுது எனது அனுபவத்திலலை பார்க்கும் போது . வடமராட்சி பகுதியில் உள்ள வல்லிபுரக்கோவில் கடல் தீர்த்தம் பெளர்ணமி அன்றுதான் நடைபெறும் அப்பொழுது அந்தகடல் ஊருக்குள் வந்து விட விருப்பம் காட்டுவது போல பொங்கி எழும்பி ஜாலம் காட்டும்

சில வேளை இந்த இயற்கை அழிவினால் ஜீவராசிகள் இல்லாமால் போய் நான் ஒன்று இல்லாமால் போனாலும் நானும் நானிமில்லாத ஒன்று இருக்க தானே போகிறது.

Monday, February 14, 2011

ஊர் சென்ற போது கொழும்பில் தங்கிய நாட்கள்

ஊருக்கு சென்று திரும்பி வரும்போது கொழும்பில் சில நாட்கள் தான் தங்கியிருந்தேன் .அந்த சில நாட்களில் உறவினர்களின் அழைப்பை ஏற்றுகொள்ளுவதில் அதிகமாக கழிந்தது. அதை மீறி இருக்கும் நேரங்களில் இவர் இவரை சந்திக்க வேணும் என்று நினைத்து கொண்டாலும். ,அதற்கு இடம் கொடுக்காமால் என்னை விரைவில் புகலிடத்துக்கு துரத்துவதில் தான் நேரமும் கண்ணாயிருந்தது. கொழும்பு எனக்கு புதிதான ஊரில்லை .கோழி மேய்த்தாலும் கொர்ணமேந்து உத்தியாகம் பார்க்கவேணும் என்று அந்த காலத்து நியதியின் காரணமாக எனது தகப்பானர் நான் பிறக்கும் முன்பிருந்தே பல காலமாக அங்கு ஜீவனம் நடத்தியிருந்தார்.அதனால் நான் பிறந்த பின்னும் சிறுவயது காலங்கள் அங்கு வசிக்க நேர்ந்து இருக்கிறது

கொழும்பு முகத்துவார பகுதியில் எனது இரண்டு வயதில் எடுத்த போட்டோ


கொழும்பு என்ற ஊருடன் பிறந்த காலத்திலிருந்தே என்னுடன் ஒரு தொடர்பு இருக்கு என்று நினைத்து கொண்டாலும் அம்மாவின் வயிற்றிலிருந்த காலத்திலிருந்தே ஒரு பயப்பீதியுடன் தான் தொடர்பு தொடங்கி இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது,எங்கள் வீட்டின் சுவரில் பல காலமாக ஒரு புகைப்படம் தொங்கி கொண்டிருந்தது .அந்த புகைப்படத்தில் தூரத்தில் நடுக்கடலில் ஒரு பெரிய கப்பல் போய்க்கொண்டிருக்கும்


அந்த புகைப்பட கப்பலை பற்றி கதை கதையாக சொல்லுவதால் சிறு வயதில் பள்ளிகூடத்தில் இலங்கையின் தலை நகரம் கொழும்பு என்று சொல்லி தரும்போதெல்லாம் கூட ஒரு பயபீதி என்னை வந்து கவ்வும். அம்மா அந்த புகைப்படத்தின் கதையை ஒரு முறை அல்ல. பல முறை எனது வயதின் பல படி முறை கால காட்டத்தில் ஏனோ தெரியாது எனக்கு அடிக்கடி சொல்லி கொண்டிருந்திருக்கிறா.அந்த அளவுக்கு அந்த சம்பவம் அவவை அவ்வளவுத்துக்கு பாதித்து இருக்கவேணும் .அந்த சம்பவம் தான் இலங்கையின் நடந்த 1958இல் நடந்த இனக்கலவரம் . அந்த இனக்கலவரம் காரணமாக அடி உதையுடன் மற்றும் மரண பயத்துடன் இருந்த தமிழர்களை கொழும்பிலிருந்து பருத்தித்துறை வரையும் ஏற்றி வந்த கப்பலாம் அது.


.அந்த புகைப்படத்தை பப்பாவுடன் கொழும்பில் அவருடன் வேலையும் செய்யும் சக சிங்கள நண்பர்கள் எடுத்து கொடுத்திருந்தார்கள் .அதில் எனது பெற்றோர் மட்டும் பிரயாண செய்யவில்லை நானும் பிரயாண்ம் செய்து இருந்தேன் அம்மாவின் வயிற்றில் இரண்டு மாத கரு உருவில்.

சரஸ்வதி மண்டபத்தில் சாப்பாட்டுக்கு கை ஏந்தி நின்றது ,கப்பலுக்கு கூட்டி செல்லும் முன்பு ஒரு பிக்கு வேடத்தில் வந்தவர் தங்கள் மீது கைகுண்டு எறிய முயற்சி செய்ய முற்ப்பட்ட போது பிடிப்பட்டது, களுத்துறையில் கோயில் ஜயரை சிவலிங்கத்துடன் கட்டிப்போட்டு எரித்தது
போன்ற கதைகளை அம்மா சொல்லி இருந்தா ..அதனால் வவுனியா தாண்டி ரயில் செல்லும் பொழுது என்னை அறியாமால் இனம் தெரியாத உணர்வு கவ்வி கொள்ளும் .எனக்கு மட்டுமல்ல மற்றும் பல தமிழர்களை அப்பொழுது அவதானித்து இருக்கிறேன் வவுனியா வரை அட்டாகாசம் பண்ணி கதைத்து தங்களுக்குள் குதர்க்கம் செய்து வருபவர்கள் வவுனியா தாண்ட தாங்களாகவே பெட்டி பாம்பாக அடங்கிவிடுவதை.

எனக்கு 8, 9,வயது காலகட்டத்தில் அம்மா தனது முயற்சி மூலம் தனியார் ஆசிரியர் மூலம் சிங்களம் படிப்பத்திருந்தா ..அதனால் இன்றும் எழுதுவேன் வாசிப்பேன் ஆனால் அதன் கருத்து விளங்காது கதைக்க மாட்டேன்.இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் எனது பப்பா தனது 17 வயதிலிருந்து சிங்கள பிரதேசங்களில் வாழ்ந்து வந்தவர் அதிகமாக கொழும்பில் ..சிங்களவர் மாதிரியே அட்ச சுத்தத்துடன் சிங்களம் பேசுவார் .

77 இனக்கலவரத்தில் புத்தம் சரணம் கச்சாமி என்று ஏதோ அவர்களின் மத சம்பந்தமான சுலோகம் சொல்லத் தெரியாமால் தமிழராக அடையாளம் காணப்பட்டு தாக்கப்பட்டதன் காரணமாக யாழ்ப்பாணம் மாற்றாலாகி வர நேரிட்டது .இவ்வளவு சிங்களவர் மாதிரி சிங்களம் கதைக்கும் பப்பா சிங்களம் வாசிக்க மாட்டார் ..கொழும்பில் சில வேளை அரச பஸ்களுக்கும் வருத்தம் ஏற்படுவதுண்டு தனி சிங்களத்தில் போர்ட் போட்டுகொண்டு வரும் வருத்தம். அப்பொழுது பப்பா என்னைத்தான் வாசித்து என்ன எழுதி இருக்கு என்று வாசித்து சொல்லு என்று கேட்பார் அந்த நேரத்தில் ஒரு பச்சை தமிழனாக மாறி முழிப்பதை கண்டு என்னில் ஒரு பெருமிதம் முகத்தில் தோன்றி மறையும்.

இப்படி பிறந்த கால கட்டத்தில் இருந்து கொழும்போடு ஒரு தொடர்பு இருந்தாலும் இப்ப எனக்கு கொழும்பில் வலது இடது தெரியாமால் எனது நிலமை. இடம் எல்லாம் ஒரு புதிய இடமாக இப்ப தெரிந்தது .. என்னுடன் படித்தவர்கள் அநேகமானவர் புலம் பெயர்ந்து விட்டார்கள் அப்படி ஒரிருவர் தான் கொழும்பில் இப்பவும் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருந்தேன் . இன்றும் டே என்றும் மச்சான் என்றும் போட்டு கதைக்கூடிய ஒருவன் கொழும்பில் இருக்கிறான் என்று அறிந்து அவனது டெலிபோன் நம்பர் முன்பே எடுத்து வைத்திருந்தேன் .அவனுடைய கந்தோருக்கு போன் பண்ணினேன்.

30 வருடம் காலத்தை என்ன என்னவெல்லோம் செய்திருக்கும் என்ற அச்சத்தில் நீங்கள் என்று தொடங்கி பவ்வியமாக அவனுடன் பேச்சை ஆரம்பித்தேன் ..எனது பவ்வியமான பேச்சை கண்டு வேறு ஆரோ என அடையாளம் கண்டு குழம்பி . நீ தானா நீ தானா நீ என்று பலமுறை கேட்டுதான் நான் என்று பின்பு உறுதி செய்தான் கொழும்பில் எங்கை இருக்கிறாய்? எங்கை சந்திக்காலம்? என்று ..வினவும் போது...ஆச்சரியம் காத்திருந்தது. அவனது வீட்டுக்கு அடுத்த வீட்டில் தான் தங்கியிருந்தேன் .அவன் சொன்னான் தான் எழுதும் கதைகளில் வரும் சம்பவமாக மாதிரி சர்ப்பரைஸ் ஆக இருக்கிறதே என்று . அவன் படிக்கும் காலங்களிலே 16 வயதிலேயே தனது சிறுகதையை இலங்கை பத்திரிகைகளில் எழுத தொடங்கியவன்.இப்பொழுது இலங்கையில் தமிழ் சிறுகதை உலகில் மிகவும் அறியப்பட்ட ஒரு எழுத்தாளனாக இருக்கிறான் .அவனுடன் கதைக்க நீண்ட நேரம் ஆசை இருந்தது .ஆனால் அவனுக்கும் நேரம் இடம் கொடுக்கவில்லை எனக்கும் நேரம் இடம் கொடுக்கவில்லை

பத்திரிகையை புரட்டிபார்க்கும் போது ஒரு செய்தி பார்க்க கிடைத்தது .அந்த செய்தி கூறியது வளரி பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழா இன்று கொழும்பு தமிழ்சங்க மண்டபத்தில் இன்ன நேரம் நடை பெற இருக்கிறது என்று .அதில் பேச்சளார்களாக குறிப்பிட்ட பெயர்கள் வலை பதிவுலகத்தில் பரிச்சயமான பெயர்களாக இருப்பது மட்டுமல்ல எனக்கும் பரிச்சயமான பெயர்களாக இருந்தது தான். அவர்கள் எனது வலை பதிவுகளுக்கு எப்போதாவது ஓர் இருமுறை பின்னூட்டம் போட்ட பந்த தொடர்பும் இருந்தது.வலைபதிவு சந்திப்பு அது இது என்று இப்பொழுது அமர்களம் போடும் இந்த கால கட்டத்தில். இப்படியொரு நிகழ்ச்சி நான் கொழும்பில் நிற்கும் நாட்களில் நடப்பது சந்தோசத்தை தந்தது. தப்பவிடகூடாது என்று நினைத்து தீர்மானித்து கொண்டிருக்கும் பொழுது .மனைவியின் உறவினரின் முக்கியமான வைபவ நிகழ்ச்சியும் அதே நேரம் நடைபெற இருந்தது .செய்வது அறியாமால் தவித்தேன் .பின் எனது முடிவே எனது எண்ணமே நிறைவேறியது ..மனைவியையும் மகளையும் அவர்களின் வைபவத்துக்கு அனுப்பி விட்டு கொழும்பு தமிழ்சங்கம் நோக்கி புறப்பட்டேன்.

மண்டபத்தை அணுகியதும் மண்டபத்தில் ஓரிருவர் இருந்தனர் .குறித்த நேரத்தில் ஆரம்பமாகுமா என சந்தேகமாக இருந்தது ,ஏனெனில் ஒரு நிபந்தனையில் தான் என்னை அழைத்து வந்தார் எனது உறவினர் குறித்த நேரத்தில் திரும்பும்படி .அவருக்கோ இப்படியான நிகழ்வுகள் கற்பூரவாசனை மாதிரி.அப்படி நினைத்து கொண்டு இருக்கும் பொழுது முன் வரிசையில் ஜந்து ஆறுபேர் இருந்து பேசி கொண்டு இருந்தார்கள் .அதிலிருந்த ஒரு பச்சை சட்டைக்காரரை நான் அடையாளம் கண்டு கொண்டேன் .

அவரது வலைபதிவில் புரைபைல் பக்கத்தில் போட்டு வைத்த புகைப்படம் மூலமாக. நான் இவ்வளவு காலமும் பரந்த நல்ல தெருவில் இலகுவாக எந்த தொந்தரவு இல்லாமால் சொகுசுகாக பயணம் செய்யும் மயிலை காளை வண்டி மாதிரி எனது முகமூடியை வைத்து கொண்டு இலகுவாக இந்த வலைபதிவு உலகில் உலாவி வந்தேன் .இந்த முகமூடி இருப்பதால் 17 வயது இளைஞனாகவும் 70 வயது முதியவராகவும் சில வேளை என்னால் அவதாரம் எடுக்க முடிகிறது என்னால். .இந்த சுதந்திரத்தை இழந்து போகக் கூடாது என்று எனது மனதில் உறுதி எடுத்து கொண்டேன். கடைசிவரையும் எனது முகமூடியை கழட்டாமால் நான் யார் என்று அடையாளம் காட்டாமால் நடப்பதை மூலையில் பார்த்துவிட்டு திரும்பி விடுவது என்று.

எனக்கே தெரியாது என்ன நடந்தது என்று தெரியாது .எனது உறுதி எல்லாம் சுக்கு நூறாக அந்த கணத்தில் சிதறியது.போய் முன் வரிசையில் இருந்த அந்த பச்சை சட்டை வலை பதிவரிடம் நீங்களா அந்த பெயர் உடையவர் என்று கேட்டு எனது பேச்சை தொடங்கினேன். அவரும் என்னருகே வந்து நீங்கள் என்று விழிப்புடன் என்னுடன் சம்பாசனைக்கு தயாரானார்.என்னை எப்படி அறிமுகபடுத்துவது என்ற தயக்கம் என்னுள் எழுந்தது .நான் ஒரு வலபதிவர் என்று ஆரம்பிக்கலாமா என்று யோசித்தேன் .கூகிள் ஈ-மெயில் வைத்திருப்பர்க்ள எல்லாம் வலை பதிவர் ஆகலாம் .அதை ஒரு அடையாளமாக வைத்து என்னை அறிமுகபடுத்தலாமா என்று நினைத்தாலும் ஒருவாறு சுதாகரித்து கொண்டு சொன்னேன்,

. நானும் ஒரு வலைபதிவர் எனது பெயர் சின்னக்குட்டி தெரியுமா என்று? கொஞ்ச நேரம் மெளனம் காத்த அந்த பச்சை சட்டை கார்ர் அந்த வீடியோ பதிவு போடுவரா ?...ஓம் என்று கூறினேன் பிறகு சிறிது நேரம் பேசினோம். இங்கு இருப்பீங்கள் தானே பிறகு சந்திப்பம் என்று கூறி விட்டு முன் வரிசையில் இருந்த பேராசிரியர்கள் மற்றும் பெரும் தலைகளுடன் ஜக்கியமாகி விட்டார்

நானும் மூன்றாவது நாலாவது மூலையில் தனித்து இருந்தேன். இப்ப மண்டபத்தில் அரைவாசி நிரம்பி விட்டது , அந்த பச்சை சட்டைக்காரர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை என்னருகில் அமர்ந்து மீண்டும் பேச்சை தொடங்கினார் என்ன இப்ப அதிகம் எழுதிறதில்லை முன்பு அதிகம் எழுதனீங்கள் தானே என்று. .அப்படி கதைத்து கொண்டு இருக்கும் பொழுது ஒரு சிவப்பு சட்டைக்கார்ர் வந்து அந்த பச்சை சட்டைக்கார்ருடன் வந்து ஜ்க்கியமானார்.அந்த சிவப்பு சட்டைக்காரரரையும் எனக்கு வலை பதிவு மூலம் அறிமுகம். அத்துடன் அவர் உண்மையிலேயே அவர் ஒரு சிவப்பு சட்டைக்காரர். அவர் வலைபதிவுகளை நான் வாசிப்பது வழக்கம்.இவர் தான் சின்னக்குட்டி என்று பச்சை சட்டைக்கார்ர் சிவப்பு சட்டைக்காரரிடம் அறிமுக படுத்த . சிறிது நேரம் யோசித்த சிவப்பு சட்டைக்கார்ர் அந்த வீடியோ போடுறவரா? என்று கேள்வி குறியுடன் என்னை கூர்ந்து பார்த்தார் . உங்களுடைய புரைபைல் படத்துக்கு முழு எதிர் மாறாக இருக்கிறீர்கள் என்று,தொடர்ந்து கூறினார். எனக்கு என்னவோ இந்த சிவப்பு சட்டைக்காரரும் என்னை வீடியோ பதிவராக என்னை குறுக்கி கொண்டது எனக்கு என்னமோ போல் இருந்தது .

வீடியோவை போடும் பதிவராக வலை பதிவு உலகத்தில் என்னை பலராலும் அறியப்பட்டாலும் . நானும் எழுதுவேன் எழுதி இருக்கிறேன் என்று என்னுள் நான் நினைப்பதால் நானே எனக்கு பின்னால் நானும் ஒரு எழுத்தாளன் என்ற சின்ன ஒளிவட்டத்தை எனக்குள் இவ்வளவு காலமும் உருவாக்கி இருந்தேன் .அது எல்லாம் தவிடு பொடியாக போகும் பொழுது எனக்கே ஒரு மாதிரி இருந்தது எனது சிறுகதைகள் அடங்கிய வலைபதிவை பார்க்க இங்கே அழுத்தவும்

முன் வரிசையில் பேராசிரியர்களுடன் பேசி கொண்டு இருந்த இன்னொருவரும் அந்நேரத்தில் நான் சின்னக்குட்டி என்று அறிந்து என்னுடன் அளவிளாவினார் .தானும் எனது வலை பதிவுகளை பார்ப்பாதாக கூறினார் எனக்கு சந்தோசமாக இருந்தது .ஏனெனில் அவரும் இன்றைய விழாவின் முன்னனி பேச்சாளரில் ஒருவர் .



பச்சை சட்டைக்கார்ரும் சிவப்பு சட்டைக்காரும் கூட இன்றைய விழாவின் முன்னனி பேச்சாளர்கள் தான் என்பதால் மேடைக்கு சென்று விட்டார்கள் ..அவர்களது நிகழ்ச்சியை முழுமையாக வீடியாவாக கொண்டு வர எனது கமராவின் கொள்ளளவு இடம் கொடுக்கவில்லை முடிந்தவரை சில வீடியோ காட்சிகளை கமராவில் எடுத்தேன் .எனது உறவினரின் தொல்லை காரணமாக விழா முடிய முன்பே பாதியில் கிளம்பி விட்டேன்

எனது முகநூலில் உள்ள சில நண்பர்களை கொழும்பில் தங்கி இருக்கும் போது சந்திக்கும் ஆவல் இருந்தது.ஆனால் நேரம் இடம் கொடுக்கவில்லை ..அப்போது தான் எனது தவறை உணர்ந்தேன் ஊரில் நின்ற நாட்களில் சில நாட்களை கொழும்புக்கு ஒதுக்கி இருக்காலம் என்று.

Monday, January 24, 2011

பொழுது போக்கிய மூலைக் கடை

நீண்ட விடுமுறை எப்பெழுதும் சந்தோசம் தராது . விடுமுறை இல்லாத காலங்களில் இருக்கும் பிரச்சனைகளை விடுமுறை காலத்திலையே அது மீண்டும் கொண்டு வந்து தந்து விடும் என்ற எடுகோள் பலராலும் வைக்கப்படுவது வழக்கம்.சிலர் தங்கள் அனுபவத்தை இப்படி பகிர்ந்து கொண்டார்கள் ஜரோப்பிய நாடுகளில் வசிக்கும் போது விலைக்கு வாங்கிய அல்லது பரம்பரை காரணங்களினால் வரும் வருத்தங்களான சலரோகம் ,உயர் ரத்த அழுத்தம் போன்றவை விடுமுறையிலோ சிறிது காலமோ இலங்கையில் வாழும் போதோ அதன் தாக்கம் குறைந்து விடுகிறது அல்லது இல்லாமால் போய் விடுகின்றது என்று.அந்த கருத்துக்கு எதிர் கருத்து கூறுபவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால் ஒப்பீட்டளவில் குறைந்த மாதிரி தோற்றமளித்தாலும் கொஞ்ச காலம் அங்கு இருந்தால் மீண்டும் வந்துவிடும் என்று .அது போலவே குறைந்த விடுமுறை எப்பவும் சந்தோசம் தரும் கொஞ்சம் நீளமாகி விட்டுது என்றால் சந்தோசத்தை கொன்று விடும் என்று.

நானும் நீண்ட காலத்துக்கு பிறகு ஊருக்கு சென்றமையால் கிழமைகள் மாதம் என்று தங்காமால் மாதங்களாக தங்கி இருந்தேன் .இவர்கள் சொன்ன மாதிரி நீண்ட விடுமுறை அப்படி சந்தோசத்தை கொல்லவில்லை அதற்கு பதிலாக ஜரோப்பாவுக்கு திரும்புவதில் தான் சந்தோசமில்லாமால் வந்தேன் .எனக்கு தெரிந்தவர்கள் இலங்கை சென்றால் யாழ்குடா நாட்டுக்குள்ளேயே கோஸ்டி கோஸ்டியாக உந்த கீரிமலை நயினாதீவு அந்த கடற்க்கரை இந்த கடற்க்கரை என்று ஊர் ஊராக சென்று பார்த்து வருவார்கள்

இவர்களுக்கு முன்பு உந்த வசதி வாய்ப்பு இல்லாத காரணத்தினால் இவ்விடங்களுக்கு சென்றிருக்க மாட்டார்கள் இப்ப தங்களுக்கு இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுகிறார்கள் அவ்வளவு தான் என்று நினைத்து கொள்ளுவேன் .ஏனோ ஏதோ காரணத்தினால் தாயகத்தில் வசிக்கும் போதே யாழ்குடாவில் அதிகமான இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு இருந்திருந்தது, அதனால் நான் அங்கு நீண்ட காலம் தங்கி இருந்தாலும் ஊருக்குள்ளையே ஊர் சுற்றுலா சென்று பொழுதை போக்க வில்லை

அதற்க்குப் பதிலாக ஊரில் இருக்கும் மூலைக்கடை ஒன்றில் அரட்டை அடிப்பது மூலம் பொழுதை கழித்தேன் .நான்.புகுந்தவீடு உள்ள ஊரில் மூலை கடை வைத்திருந்தான் பால்ய காலத்தில் என்னுடன் படித்த ஒருவன் .அதனால் எனக்கு நல்ல வசதியாக இருந்தது .இந்த கஸ்டமர் சேவிஸ் என்று சொல்லுகிறார்களே உந்த முன்னோறிய நாடுகளில் ..அத்ற்க்கு எவ்வளவு செலவளித்து ஜரோப்பிய நாடுகளில் பயிற்ச்சி அளிக்கிறார்கள் .அந்த மூலைக்கடையில் நின்ற சிறிது காலத்துக்குள்ளையே அதிசியித்தேன் அவனுடைய வியாபார நடைமுறை தந்திரம் மற்றும் வாடிக்கையாளர்களை கவரும் முறையை...இதை எல்லாம் படிக்காமால் அனுபவத்தில் முதிர்ச்சியில் அவனுக்கு சொல்லி கொடுத்திருக்கிறது .அவனது செய்கைகளை நான் அதிசையமாக வியந்து பார்ப்பதை கண்டு அவனுக்கே அதிசியமாக இருந்தது.

இப்படித்தான் நான் பிறந்த வீட்டிற்க்கு அண்மையில் ஒரு மூலைக்கடை இருந்தது.இந்த மூலைகடைகள் அவசரதேவைக்கு உதவும் மிகவும் சிறந்த நண்பனுமாயிருக்கும் எதிரியுமாயுமிருக்கும் .கடையிற்க்கு முன்பு உறவுக்கு பகை கடன் என்று போர்ட் எழுதி வைப்பார்கள் ஆனால் கடன் கொடுப்பார்கள் கடன் வேண்டுபவர்கள் அப்ப அப்ப அவசரத்துக்கு கடன வேண்ட எவ்வளவு வேண்டினது என்றதை மறந்து போய்விட்ட காரணத்தினால் அந்த கடன் சில வேளை குட்டியும் போட்டு விடும் ..அதனால் மாசக் கடைசியில் நெருக்கும் போது கட்ட முடியாமால் போவோதோடு தேவையில்லாத மனச் சச்சரைவையும் உருவாக்கி விடும்.

சமையலுக்கு அடுப்பில் ரெடியாகி விட்டு ஏதோ ஒன்று இல்லாமால் இருக்க அந்த கணத்தில் வந்து ஓடி வந்து வேண்டி போவர்களும் உண்டு. தலையில் எண்ணை வைத்து முழுக வெளிக்கிட்டு அரப்பு தேசிக்காய் சம்போ என்று முழுகின குறையில் வந்து வேண்டுபவர்களும் உண்டு

. இந்த மூலைக்கடைகள் அநேகமாக மூலை கடைகாரனின் வீட்டோடு இருக்குமென்றால் அர்த்த ராத்திரி என்று பார்க்காமால் பீடி சிகரட் இல்லாமால் இருக்கமாட்டதவர்கள் எழுப்பி தொந்தரவு செய்வதும் வழக்கமாக இருக்கும்.

நான் தங்கி இருந்த நாட்களில் இந்த பிறந்த வீட்டுக்கு அண்மையில் இருந்த மூலைக்கடை இருக்கும் இட்த்தை சைக்கிளில் தாண்டி செல்லும் போது எல்லாம் எனது பால்ய காலத்து ஞாபக குவியல்கள் எல்லாம் சிதறி ஒவ் ஒவ்வொன்றாய் எனது எண்ணக்கோவையில் வந்து தோற்றமளிக்கும்.இந்த மூலைக்கடை பொருட்கள் வாங்கும் இடமாக மட்டும் என்று அல்லாமால் செய்திகளை உலக நடப்புகளை அறிவதற்க்கு நண்பர்கள் ஒருங்கிணைந்து அரட்டை அடிப்பதற்க்கு பயன்படுபவையாகவும் இருந்தன.

எனது பதின்ம வயது உருவாக முன்பே அரை றாத்தல் சீனிக்கும் முக்கால் போத்தல் மண்ணெணனையுக்கும் வாங்குவதற்க்கு போவேன் . அப்பொழுது ஊரில் பெரிய மனிதர்கள் என வெள்ளை வேட்டி சால்வை கட்டி வெளி வேசம் போடுவர்களும் அவ்விடத்தில் விசயதானம் இல்லாமால் வெட்டி வியாக்கியனம் செய்து கதைத்து கொண்டிருப்பார்கள். ...அந்த சிறு வயதிலேயே இவர்களின் சின்னத்தனமான கதைகளை கேட்டு வெறுப்பும் எரிச்சலும் அடைந்திருக்கிறேன்.நான் அவர்களின் கதைகளை அவதானிப்பதை கண்டு தங்களுக்குள் ஒருவரை ஒருவர் எச்சரித்து என்னை துரத்தி அவ்விடத்தை விட்டு அகல வைப்பார்கள் .

கொஞ்சம் வளர்ந்தப்போலவும் அக்கடையில் பொழுது போகாத நேரத்தில் நின்று விடுப்பு பார்ப்பது உண்டு ..மூலை கடை வைத்திருப்பவர் ஊரில் இருப்பவர்களின் சகல இரகசியங்களை எப்படியும் தன்னுள் சேகரிப்பத்தில் வல்லுனராக இருந்தார் .ஒரு வாடிக்கையாளரிடம் ஒரு கதையை விட்டு மற்ற வாடிக்கையாளரிடம் ஒரு கதையை எடுத்து தகவல்களை சேகரிப்பார்.ஒரு பத்திரிகையை பக்கம் பக்கம் பிரித்து அங்கு நிற்கும் நாலு ஜந்து ஒவ்வோரு பிறத்திலும் நின்று வாசிப்பார்கள் ..வாசித்து விட்டு அவர்கள் விவாதிப்பதை பார்த்தால் நாட்டு அரசியல் திட்டத்தையும் உலக பொருளாதரதிட்டத்தையும் நடைமுறை படுத்த இவர்களிடமே விட்டுவிடலாம் என்ற மாதிரி தோன்றும்..சிறு பிள்ளை வேளான்மை வீடு வந்து சேராது என்று சொல்லி திருந்தவர்கள் ...அந்த காலக்கட்டத்தில் நிலமை காரணமாக தம்பி இதை பற்றி என்ன நினைக்கிறாய் என்னையும் தங்கள் கலந்துரையாடல் இழுக்க பார்ப்பார்கள் ..அந்த காலகட்டத்து இள வயதினருக்கேயுருத்தான பக்குவ முதிர்ச்சி காரணமாக மெளனமாக கலைந்து விடுவேன்.

ஊருக்கு போன நின்ற நாட்களில் எனது பால்ய நண்பனின் கடையில் எனக்கு தெரிந்த என்னோட்டை வயதுடைய நண்பர்களுடன் எமது முந்திய தலை முறை செய்த அதே வெட்டி வியாக்கியனங்களை செய்து கொண்டிருந்தோம் .அப்பொழுது வந்த இளம் யுவதிகள் கிலோ கணக்கில் சீனியும் பவுடர் சென்ட் பலவற்றை வாங்கி கொண்டிருந்தார்கள் ..அவர்கள் நவநாகரிகமான உடை அணிந்திருந்தார்கள் ..எனக்கோ ஆச்சரியம் எங்கட காலத்திலை அரை றாத்தல் சீனி வேண்ட எவ்வளவு பாடுபட்டம் ..இப்ப இந்த வெளிநாட்டு பணத்தாலை கொள்வனவு சக்தி கூடி விட்டுதோ என்று .அப்படி கொள்வனவு சக்தி கூடினாலும் இவ்வளவு சீனியும் என்னத்துக்கு என்று கேட்டேன் ..அவன் சொன்னான் வெளிநாட்டோடை தொடர்பான ஆக்கள் மட்டும் சொகுசாய் வாழ்ந்தால் காணுமே ..அப்படி தொடர்பு இல்லாதவர்களும் சொகுசாக வாழ்வதற்க்கு இப்ப அங்கை அங்கை உந்த குடிசை கைத்தொழில் செய்து வருமானத்தை பெருக்கினம் அதுக்கு உந்த சீனி என்றான் ..

.அவன் சொன்ன குடிசை கைத்தொழில் விளங்கினமாதிரி இருந்தது ஆனால் வடிவான தெளிவில்லாமால் இருந்தது ...அவனை வளர்த்த நாய் முகத்தை பார்த்த மாதிரி பார்த்தன் ..கொஞ்சம் நாள் இன்னும் இங்கை இருந்தி என்றால் நல்லாய் விளங்கி கொள்வாய் என்றான்

..அப்பொழுது அவசரமாய் அரை றாத்தல் பாணுக்கும் ஏதோ ஒன்றுக்கும் வந்த எனக்கு தெரிந்த ஒன்று என்னும் போகவில்லையே என்னை பார்த்து கேட்டுது ..கன நாள் நிக்கிறியள் என்றார் ....நாங்கள் அங்கை கனகாலம் நிற்க விரும்பினாலும் அங்குள்ள கனபேருக்கு நாங்கள் நீண்டகாலம் நிற்பது விருப்பம்
இல்லை ஏனோ தெரியவில்லை...

Wednesday, December 22, 2010

யாழ் தியேட்டரில் பார்த்த எந்திரன்

ஊருக்கு போன காலகட்டத்திலை ஏதோ அலுவலாக யாழ் நகரம் வந்தம் இருந்தம் என்று இல்லாமால் ..ஒரு படம் இங்கு பார்த்தால் என்ன என்று தினவு எடுத்திச்சு ..வெளிநாட்டு தியேட்டர்களில் அல்லது டிவிடிக்களில் பார்க்காத படமா ..அப்படி என்ன பெரிய படமாக பார்த்து கிளிக்க போறம் என்று அலுப்படித்தாலும் பார்த்தே தீருவேன் என்ற உறுதியுடன் அந்த இரண்டு மணி சோ பார்க்க நடையை கட்டினேன் .பார்க்க நான் தேர்ந்த எடுத்த படம் எந்திரன் ..அந்த படம் ராஜா தியேட்டரில் வந்து இரண்டு அல்லது மூன்று கிழமை தான் அப்பொழுது இருக்கும் ....25 வருடங்களின் முன்னர் ஒரு புதுப்படம் வந்து அதுவும் முன்னனி நாயகர்கள் நடித்திருந்தால் ...என்ன கோலாகாலம் என்னனென ஆர்ப்பாட்டங்கள் இருக்கும்.இந்த பிரபல நடிகர்களின் படங்கள் ஓடுவதன் காரணமாக முழுமையாக நிரம்பாத யாழ் நகரமே அப்பொழுது நிரம்பி வழியும் ...

ஆனால் அங்கு போகும் போது யாருமே இல்லை தனித்து விடப்பட்ட கட்டவுட் எந்திரன் ரஜனி.தான் ஆடாமால் அசையாமால் நின்று கொண்டு இருந்தார். பிறகு மெல்ல மெல்ல சிலர் வர தொடங்கினர் .அப்படி வந்தவர்கள் அநேகர் இளம் ஜோடிகள் படம் பார்ப்பதுக்கு ஆர்வம் உள்ளவர்கள் போல காணப்படவில்லை ..ஒதுங்க இடம் தேடி வந்தவர்கள் போலவே காணப்பட்டனர் . வெளிநாட்டில் இருந்து வரும் காசில் சும்மா ஊதி பெருத்து வெறும் பட்டோபம் காட்டும் நபர்களாகவே எனக்கு தெரிந்தது.இந்த பனியிலும் குளிரிலும் ஏதோ ஏதோ வழியில் உழைத்து இங்கு அனுப்பு பணத்தில் என்ன செய்வது என்று தெரியாமால் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று பார்க்கும் போது பட்டது.,ராஜா தியேட்டரின் உள் சுவர்களில் எனது கண்கள் நோட்டமிட்டன. பல கறுப்பு வெள்ளை பிறேம் போட்ட படங்கள் மாட்டி இருந்தன. அதில் அந்த காலம் எம்ஜீஆர் நடித்த ஒளிவிளக்கு படத்தின் வெள்ளிவிழா நிகழ்வின் படங்கள் இருந்தன.அந்த வெள்ளிவிழா கொண்டாட்டத்துக்கு எம்ஜீஆர் மற்றும் சரோஜதேவி போன்றோர் இந்தியாவிலிருந்து யாழ் வந்த போது ரசிகர்களை கட்டு படுத்த முடியாமால் ராஜா தியேட்டர் ஒரு பக்க மதிலையே அப்போது உடைத்தார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.


எனது வயது மாதிரி உள்ளவர்கள் ஒரு தரும் படத்துக்கு அங்கு வருகை தந்து இல்லாமையால்
எனக்கு ஓரு மாதியாக இருந்த மாதிரியும் இருந்தது. ஓரு மாதிரியாக இல்லாத மாதிரி இருந்தது.நுழைவு சீட்டு வழங்கும் இடத்தில் பல்கனி ,சூப்பர் பல்கனி என எழுதி இருந்தது ..ஒரு சூப்பர் பல்கனி தாங்க என்று நான் சொல்லி முடிக்க முன்பு என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு அண்ணை வெளியிலிருந்தா ..உங்கா உதுகளின் அட்டாகசாம் தாங்க முடியவில்லை ..சூப்பர் சூப்பிரில்லாதது என்று இப்ப ஒன்று மில்லை எல்லாம் ஓன்று தான் இப்ப என்றார்...தாங்க அந்த ஓன்றை என்று கேட்டு வாங்கி உள்ளே நுழைந்து நல்லா சுற்றும் விசிறி கீழுலுள்ள கதிரையில் இடம் பிடித்து கொண்டேன் . எனது நல்ல காலமோ கெட்ட காலமோ தெரியாது என்னை சுற்றி அந்த இளம் ஜோடி பட்டாளங்கள் ,அமர்ந்திருந்தது
படம் இன்னும் தொடங்கவில்லை ஆனால் அதுக்கு முன்பே அங்கே அவர்கள் படம் காட்ட தொடங்கி விட்டார்கள்.அத்தோடை இந்த மேலே சுற்றும் விசிறி உடம்பில் இருந்து வெளியில் கொட்டு வேர்வையை உறிஞ்சி எடுக்க போதுமானதாக இல்லை .. ஆனால் அதை விட சுற்ற வர உறிஞ்சும் சத்தங்கள் இயல்பாக வந்து கொண்டிருந்தது .என்ன கோலா பன்ரா ஸ்ரோவிலை சத்தத்தோடை குடித்து கொண்டிருக்கனம் போலை என நினைத்து கொண்டிருக்க. கன காலம் கண்டு இப்ப எங்கை என்ற படி ஒரு குரல் .எனது தனிமையை பறை சாற்றியபடி இருந்த வெறுமையான பக்கத்து கதிரையில் அமர்ந்தது

அந்த குரலுக்கு சொந்தக்காரனை மேலும் கீழும் நான் பார்த்து கொண்டிருக்கும் தவிப்பை கண்ட அவர் . என்ன அதுக்கிடையிலை மறந்து போனீங்களே?. அதுக்கிடையிலே என்று அவர் சொன்னது ஏறக்குறைய இருப்பத்தைந்து முப்பது வருட காலப்பகுதியை. இவர்களைப் போல காலத்தின் அளவுகளை நன்மை என்றால் என்ன தீமையென்றால் என்ன உணர்ந்து உணர்வூர்பாக வாழ்பவர்களா நாங்கள். எங்கையோ எதையோ தொலைத்து விட்டு தொலைத்தது எது என்னவென்று தெரியாமால் எங்கேயோ தேடி கொண்டிருப்பவர்கள் அல்லவா நாங்கள் , முன்பு ஓடும் எலி எங்கேயோ ஓட காரணம் தெரியாமால் பின்னால் ஓடும் எலி கூட்டம் போல உள்ள கூட்டங்கள் அல்லவா நாங்கள் .குளிர் பனி குவியலுக்குள் உணர்வுகளை புதைத்து விட்டு வாழ்பவர்கள் அல்லவா நாங்கள்..இப்படி எண்ணி கொண்டிருக்க அவர். என்ன கனக்க யோசிக்கிறியள் ?முன்னுக்கு பின்னுக்கு பக்கத்திலை நடக்கிற திருவிளையாடலையா ?என்று கேள்வியை அவரே கேட்டு அவரே பதிலை சொன்னார் . இதெல்லாம் இப்ப இங்கை சகஜம் பாருங்கோ என்று.அந்த காலம் ஜரோப்பாவிலை இதெல்லாம் சகஜம் என்று தங்கள் நினைப்புகள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து சொன்னவர்கள் வாயாலே இப்படி சொல்ல வைக்கும் கால மாற்றத்தை நினைத்து பார்த்தேன்.


.இவர் சொன்ன மாதிரி இப்ப தான் சகஜம் என்று இல்லை எப்பவும் உது சகஜமாக தான் இருந்தது ..ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து சங்ககாலத்து களவியலூடாக எனக்கு தெரிய ராணி தியேட்டர் பொக்ஸ் றூம் வரையும். சுஜாதா சிவாஜி திரை படத்தில் ஒரு வசனம் எழுதி இருப்பார் தமிழ் பெண்களை பார்க்க யாழ்ப்பாணம் தான் போகவேணும் என்று..இந்த வசனம் யாரை திருப்தி படுத்தியதோ இல்லையோ தெரியாது .நிச்சயம் இன்னும் யாழ்ப்பாணிய சிந்தனை உள்ள இந்த கலாச்சார காவலர்களை கட்டாயம் திருப்தி படுத்தி இருக்கும் . இந்த வெளி உலகம் தெரியாத வெறும் புத்தகத்துக்குள் மட்டும் தலை ஓட்டி கொண்டிருந்த இந்த அம்மு பேபிகளுக்கு தான் நான் இப்படி சொல்வது கோபம் வரும் என நினைக்கிறேன்.


படம் இடைவேளையை தாண்டி ஓடி கொண்டிருந்தது.படத்தோடை ஒட்ட முடியவில்லை..படத்தின் கதை போக்கை முன்பே ஊகிக்க கூடியதாய் இருந்தது ..இந்த சீறீதர் காலத்து முக்கோண காதல் கதையை கம்பியூட்டர் கேம் போல படத்திலை காட்டினம் அவ்வளவு தான் ..இந்த படத்தில் புதிதாக கதை இருக்கிற மாதிரி தெரியலை .அதுக்குள்ளை என்ரை கதை அவன்ரை கதை என்று சண்டை சச்சரவு வேறை ...இப்படி பார்க்க போனால் முப்பது வருடங்களுக்கு முன்னால் எனக்கு உதே மாதிரியான சாயலில் கதை சொன்ன மெக்கானிக் அண்ணையுமெல்லோ வழக்கு போடோணும் .

இந்த படம் போரடித்தமையால் எனது மனம் இந்த கதை போல சொன்ன அந்த மெக்கானிக் அண்ணையுடன் பழகிய கால சம்பவங்களின் நினைவுகள் படம் முடியும் மட்டும் போரடிக்காமால் வைத்து கொண்டு இருந்தது..

இந்த மெக்கானிக் அண்ணை எனக்கு எனது பதின்ம வயதுகளில் இருந்து பழக்கம் ..எனக்கு எப்படி இவருடன் பழக்கம் ஏற்பட்டது எனக்கு ஞாபகம் வருகுதில்லை.எனக்கு மட்டுமல்ல என்னோடை வயதை ஒத்த பல நண்பர்களுக்கும் நடுத்தர வயதை அண்மித்த இவருடன் சிநேகபூர்வமான பழக்கம் இருந்தது. மெக்கானிக் அண்ணை தனக்கு தானே தீவிர இடதுசாரி பொதுவடமை வாதி என முத்திரை குத்தி கொண்டவர்,எட்டாம் வகுப்பு படித்த அவரால் அவருக்கு சித்தாந்த வகுப்பு எடுக்கும் ஆசான்களின் திறமையால் என்னவோ உலக நடப்புகளை அழகாக கதைப்பார் .அதுமட்டுமன்றி சமூகத்தின் மேலுள்ள பார்வையை ஆடாமால் அசையாமால் ஓரு நேர்கோட்டில் பார்க்க வைத்த எங்களின் பள்ளி வீட்டு அறிவை விட வித்தியாசமான கோணத்தில் காட்டி அவர் பொழிப்புரை செய்ததது எங்களுக்கு புதிதாகவும் ஆவலாகவும் இருந்திருக்க கூடும். அதனால் எங்களுக்கு அவரிடம் ஒரு நெருக்கம் ஏற்பட்டு இருக்க கூடும்.


எனக்கு பழைய குமுதம் விகடன் கார்ட்டூன்களை விரும்பி பார்க்கும் பழக்கம் இருந்தது ..அதில் ஒரு கார்ட்டூனில் ஒரு கரும் பயங்கர பூதம் சீன பகுதி இலிருந்து இந்தியாவின் வடகிழக்கு பகுதியான அருணாசல பகுதியில் இரு கைகளை வைத்து ஆக்கிரமிப்பிக்கிறாதாக இருந்தது. எங்களின் தாய் நாடாக எங்களுக்கு சொல்லி தந்த இந்தியா மேலே கை வைக்கிற ஒன்று மேலே கோபம் வெறுப்பு வராதா என்ன? என்ன தான் பழகினாலும் மெக்கானிக் அண்ணையிடம் ஒரு நாள் கேட்டே விட்டேன் இதை காட்டி என்ன உங்கடை கொம்னீயூஸ்ட் என்று.

அதுக்கு அவருக்கு அரசியல் வகுப்பு எடுத்தவர்கள் சொல்லி கொடுத்ததை வைத்து சொன்னாரோ அவராக சிந்தித்து சொன்னாரோ தெரியாது .அதுக்கு அவர் சொன்ன விளக்கம் காலனித்துவ காலத்தில் பிரிட்டிசார் இந்த நிலபரப்புகளுக்கள் முரண்பாடுகள் இருக்கவேணும் என்றதுக்காக திட்ட மிட்டு செய்த விடயம் இது என்றும் ..இப்படி கார்ட்டூன் போடுவது மூலம் கம்னீயூசத்தில் வெறுப்பு ஏற்பட செய்வதற்க்காக இந்த முதலாளித்தவ பத்திரிகைகள் செய்யும் திட்ட மிட்ட பிரச்சாரம் இது என்றும் கூறினார் , இப்ப எங்களுக்கு கம்னீயூசம் என்ற சொல்லோடை காலனீத்துவம் முதலாளித்துவம் என்ற இரண்டு புது சொற்கள் கூட தெரிந்து கொண்டோம்.

இப்படி பல கோணத்தில் நாங்கள் கேட்கும் சந்தேகத்துக்கு பதில் சொல்லும் மெக்கானிக் அண்ணை ஒரு நாள் தான் திருத்தும் இயந்திரங்களின் உதிரி பாகங்கள் காதல் செய்கின்றது தங்களுக்குள் அடிபடுகின்றன என்றும். தான் இரவில் இதை படுக்கும் போது உணர்கிறேன் என்றும் .இதை தன்னால் மட்டும் தான் உணர முடியுமென்று என்றும் கூறினார்......இவ்வளவு தெரிந்த மெக்கானிக் அண்ணை உப்பிடி லூசு மாதிரி கதைக்காலாமோ என்று பரிகசிக்க ..அதுக்கும் தனது பாணியில் சித்தாந்த விளக்கம் தர முற்பட்டார் . நாங்கள் எங்களுக்குள் கதைத்து கொண்டோம் .கோவூரின் மனோத்துவ கதை சம்பவங்கள் வரும் உள பிறழ்வு அடைந்த நாயகர்களில் ஒருவர் மாதிரி எங்கடை மெக்கானிக் அண்ணை மாறிவிட்டார் என்று

இப்படி உளப்பிறழ்ந்த மன நிலையில் தான் இந்த படத்தை எடுத்தவர்கள் எடுத்திருப்பார்களோ என நினைத்து கொண்டு படம் முடிய அவசரம் அவசரமாக பஸ் நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்

Monday, November 01, 2010

திசை மாறிய பறவைகள்


ஊருக்கு போக வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் வருவது போல் எனக்கும் வந்தது .அதுவும் இருப்பதைந்து வருசங்களுக்கு பிறகு பிறந்த நாட்டுக்கு செல்ல முடிவெடுத்த நாளிருந்து மனம் தன்னுள்ளே துள்ளி குதித்து சந்தோசம் கொண்டாடியது. நான் செல்லும் விமானம் முக்கி முனகி ஏறும் முன்பே நாட்டுக்கு சென்று விட்டேன் மனத்தளவில்.ஊரிலிருக்கும் வரை ஊரின் அருமை தெரியாமால் தான் இருந்தது .அதன் அருமை புலத்தில் நினைவு மீட்டல்களாக அங்கென்றுமாக இங்கொன்றுமாக வந்து ரீங்காரம் இடத்தான் அதை இழந்த வலி தெரிந்தது.நான் இப்போழுது அந்த நானாக இல்லை அது போல் ஊரும் அதே ஊராக இருக்காது மனத்தின் ஒரு பகுதி வந்து அலாரம் அடித்தாலும்.மனதின் மறு பகுதி அவற்றுக்கெல்லாம் மறுத்தான் போட்டு கொண்டு காலத்தால் அழிந்த அவைகளை நினைவுகளால் அலங்கரித்து போகும் முன்னே உயிர்ப்பித்து கொண்டு இருந்தது.


அந்நிய நாட்டு குடிமகனின் அந்தஸ்த்துடன் பிறந்த நாட்டுக்கு வரும் என்னை ப்போல உள்ள சிலரையும் வேறு பல்லின பல நாட்டு குடிமக்களையும் காவி வந்த விமானம். அதீத மெளனத்துடன் தரை இறங்க முடியாமால் தவித்து பின்ஒரு விதமாக தரையை தொட்டது .இந்த இருப்பதைந்து வருடங்களுக்குள் இந்த நாட்டில் என்னவல்லாம் நடந்து முடிந்து விட்டது. அப்படி ஒரு அசுமாத்தமில்லாத மாதிரி சனங்கள் இயங்கி கொண்டிருந்தனர் .உடுக்கடித்து ஊதி பெருப்பித்து புலம் பெயர் ஊடகங்கள் சில உருவாடுவது மாதிரி இல்லாமால் இலங்கை எங்களை வரவேற்றது.

விமான நிலையத்துக்கு வெளியில் எங்களை ஏற்றிச்செல்ல யாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாகவே அங்கு வந்த வான் ஒன்று காத்து கொண்டிருந்தது,.கொழும்பு செல்லாமாலே யாழ் செல்ல போகிறோம் என்று வாகன சாரதி சொன்ன போது இந்த இருப்பதைதந்து வருட காலத்தில் எத்தனை தடைகள் தாண்டி ஊர் சென்று வந்தவர்கள் சொன்ன கதைகள் ஞாபகம் வந்தது.ஒரு பத்து மணித்தியாலத்தில் விமானத்தில் கொழும்பு அடைந்தவர்கள் நாட்கள் கிழமைகள ஏன் சிலவேளை மாதம் கடந்து தான் ஊர் சென்று இருக்கிறார்கள். வான் .புத்தளமூடாக அனுராதபுரம் வ்வுனியா என்று சென்று ஓமந்தையை அடைந்தது .

அங்கு ஒரு இராணுவச்சாவடியில் எங்களை பரிசோதித்தார்கள்.வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர் இலங்கையராக இருந்தாலும் வடக்குக்கு செல்வதாய் இருந்தால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும் நடைமுறை இருக்கிறது, அதனால் அங்கு பரிசோதிக்கும் அதிகாரிகளும் வெளிநாட்டிலிருந்து செல்பவர்களும் இதனால் குழம்புவது வழக்கமாக இருந்தது . வெளிநாட்டு பாஸ்போட்டுடன் வருபவர்கள் இலங்கையில் பிறந்து இருந்தால் அந்த பாஸ்போட்டில் பிறந்த இடம் போட்டிருந்தால் அந்த அனுமதி பத்திரம் எடுக்க தேவையில்லை என்பது தான் நடைமுறை உண்மை .இதை விளங்கி கொள்ளாத அந்த அதிகாரி என்னிடம் கேட்க நான் விளங்கபடுத்தினேன். பின் அந்த பிறந்த ஊர் எங்கே யாழ்ப்பாண்த்தில் என அவன் குழம்பி கொண்டிருக்க .அவனுக்கு புவியியல் பாட்ம் எடுத்து விளங்கபடுத்திய பிறகு தான் எங்களை அனுப்பினான்.

ஊரை அடைந்த போது நள்ளிரவை தாண்டிவிட்டது. அந்த ஊரின் அழகான விடியலுக்கான ஆயத்தங்களை அந்த நேரம் அந்த இரவு செய்து கொண்டிருந்தது.வீட்டு பின் மாமரத்தில் இருந்த சேவல் ஒன்று விடிந்து விட்டுது என்ற தவறாக அடையாளம் கண்டு என்னவோ சோம்பல் முறித்து கூவியது.வீட்டில் நுளம்புடன் தற்காப்பு யுத்தம் செய்வதற்க்கான துணை கருவிகள் படுக்கும் அறையில் தாரளமாக கிடந்தன.இவ்வளவு நுளம்பை எதிர்க்கும் தற்காப்பு கருவிகளோடு அந்த காலம் தூக்கத்தை தழுவினதாக ஞாபகம் இல்லை .அதனோடு சமரசம் செய்து கொண்டு அழகான நித்திரை கொண்டதாக தான் ஞாபகம் . அன்று இரவு அவ்வளவு பிரயாண களைப்பு. தூக்கம் தானே தாலாட்டி தானே தூங்கி கொண்டது ..

.விடிய எழும்பி பார்க்கும் போது தற்காப்பு கருவிகளுடன் படுத்தவர்களுக்கு கூட அங்கும் இங்கும் நுளம்பு முத்தம் கொடுத்த தடங்கள் இருந்தன. என்னை ஏனோ தீண்டவில்லை ...சில இரத்த குறூப் உள்ளவர்களை தான் நுளம்பு தீண்டுமாம் என்று அந்த விடியல் பொழுதில் ஒரு பெரிசு ஒன்று மருத்துவ குறிப்பு சொல்லி கொண்டிரிந்துச்சு...அந்த வகையில் நான் ஒரு தீண்டதகாதவன் ..அதுவும் ஒரு சந்தோசமே.

நான் அந்த காலத்தில் வழமையாக ராஜ நடை போட்டு செல்லும் சந்திக்கு சென்று பழகியவர்கள் தெரிந்தவர்களை சந்திக்கலாம் என்று கிளம்பினேன் .செல்வதற்க்கு மூலையில் இருந்த பழங்கால சைக்கிள் தான் கண்ணில் பட்டது அதை எடுத்து கொண்டு செல்ல .. இங்கை ஒவ்வோரு வீட்டிலும் ஒன்றுக்கு இரண்டு மோட்டர் சைக்கிள் நிற்கிது ,,உந்த ஓட்டை சைக்கிளிலே போக போறீயே என்று ஒரு கெளவரவ பிரச்சனையை வீட்டிலிருந்த பெருசு ஒன்று எழுப்பியது. இது போன்ற கெளவரவ பிரச்சனைகள் அப்பவும் இருந்தது இப்பவும் இருக்கிறது எப்பவும் இருக்கும் என்று மனதில் சொல்லி கொண்டு எனது பாதையில் அந்த சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன்.

அந்த காலத்தில் அந்த சந்திக்கும் வீட்டுக்கும் ராஜநடைபோடும் கொஞ்சம் நேரத்தில் எத்தனை பேருக்கு அறிமுக சிரிப்பு சிரித்து எத்தனை பேரின் கேள்விக்கு பதில் சொல்லி இருப்பேன் .அப்படி ஒரு நட்பு வட்டம் தெரிந்த கூட்டம் இருந்தது

இப்பவும் அது போல அந்த சந்தி செல்லும் போது தெரிந்த முகங்கள் தெரியாத முகங்களாக போகிவிட்ட நிலமை ...அவர்களும் பரக்க பரக்க வெறித்து பார்த்து அடையாளம் காணும் முயற்சி செய்து பின் தோல்வி அடைந்து தன் பாட்டில் என்னை கடந்து செல்லுகிறார்கள் ..எனது இளம் நரையையும் முன் பின் வழுக்கையையும் மறைப்பதற்க்கு நான் எடுத்து கொண்ட முழு மொட்டை வேடம் தான் .அவர்கள் என்னை அடையாளம் காண முடியாமால் நிற்கிறார்கள் என்று நான் நினைத்து கொண்டாலும் உண்மை அது அல்ல.நானும் அவர்களின் நரைத்த மீசையூனூடாக உற்று பார்த்தாலும் அவர்களை அடையாளம் காணமுடியாத சந்தர்ப்பமும் நடந்து கொண்டிருந்தது.

அப்படிச்செல்லும் போது என்னை அடையாளம் கண்ட மெலிந்த களைத்த உருவம் ஒன்று எப்படா மச்சான் வந்தனீ என்ற குரலுடன் வழி மறித்தது. அவனை கண்டதும் எனக்கு ஆச்சரியம் ஏன் ஏன்றால் எனக்கு இந்த இருபத்தைந்து வருட காலத்தில் கேள்வி பட்ட காது வழி வந்த கதைகளில் ஒன்று அவன் இறந்து விட்டான் என்று ..அவன் என்னுடன் படித்த வகுப்பு தோழன் ..மார்கண்டேய தமிழ் நடிகரின் பெயர் கொண்ட அவன் ..படிக்கும் காலத்தில் கெட்டிகாரன் படிப்புக்கு பிறகு தான் உலகத்தில் எல்லாம் என்ற எண்ணம் கொண்டவன் . படிப்பில் தோல்வி அடைந்தவர்களை பரீட்சையில் தோல்வி அடைந்தவர்களை அவனது நக்கல் நளினம் படாது படுத்தும் .அந்த நக்கல் நளினத்துக்கு ஓடி ஒழிந்தவர்கள் இன்று உலகம் முழுதும் பேராசிரியர்கள் டாகடர் பொறியலாளர்கள் பல வல்லுனர்கள் என பரந்து இருக்கிறார்கள்...

ஆனால் அவனது பிச்சைக்கார கோலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் .அது மட்டுமன்றி சாப்பிட்டுக்கு வழி இல்லை மச்சான் எனக்கு .ஏதாவது உதவி செய் என்று பிச்சைக்காரத்தனமாக இரந்தது எனக்கு ஏதோ செய்தது.நானும் வெளிநாட்டில் வாழும் ஒரு பிச்சைக்காரன் தான் என்று ஒப்பிக்காமால் எனது சக்திக்கு மீறிய தொகையை அவனது கைகளில் கொடுத்துவிட்டு மாறி விட்டேன்.

அன்று இரவு நுளம்பால் பிரச்சனை இருக்கவில்லை இவனை நினைத்து அன்று தூக்கம் இன்றி தவித்தேன், .யாழ் பல்கலைகழகத்தின் மருத்துவ பீடத்தில் அனுமதி கிடைத்து இரண்டு வருடங்கள் முடிய முன்பே. அவ்வூர் சந்தி படியாத வர்த்தகர்களால் டாக்டர் என்று செல்ல பெயர் கொண்டு அழைக்க பட்டான்.அவனின் திறமையான டைம்மிங்கில் விடும் பகிடிக்காகவே .அவனை திரும்பி பார்க்க மனமில்லா பெட்டைகள் கூட திரும்பி பார்த்து சிரித்து செல்லுவார்கள் .அவனுக்கு தனது படிப்பின் மீது இருந்த அதீத பெருமையால் படிப்பை தவறவிட்டவர்களை கேலி செய்வதை வழமையாக கொண்டிருந்தான்.

எங்களில் சில பேர் இந்த மனப்பாடம் செய்து கிரகித்ததை திரும்ப ஒப்புவித்து அதனூடாக பரீட்சையில் வெற்றி அடையும் அளவு கோலை அறிவாக கொள்ளுவதில்லை .என அவனுக்கும் தெரியும் .அதனால் .எங்களுடன் அந்த நக்கல் நளினத்தை அவன் வைத்து கொள்ளுவதில்லை .என்றாலும் அவன் என்னை பார்த்து ஒரு முறை சொன்னது ஞாபகம்..உப்படி படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமால் உப்படியே தேவை இல்லாத்தை கதைத்து கொண்டிருந்தால் இப்ப வைத்திருக்கின்ற உந்த மரக்கட்டை பெடல் போட்ட சைக்கிளோடை தான் 30 வருசம் சென்றாலும் திரிவாய் என்று.

அவனது அதீத தன்னம்பிக்கை மற்றும் இயற்க்கையாகவே இருந்த பைத்தியகாரத்தன்மை காரணமாக படு மோசமான முறையில் ராக்கிங் காலத்தில் ஈடுபட்டான் . பின் ஒர் இரு முறை பல்கலைகழக நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டு கடைசியாக மருத்துவ பீடத்திலிருந்து முற்று முழுதாக நீக்க பட்டான் ..

பல்கலைகழக வரலாற்றிலையே ஒரு..மருத்தபீட மாணவன் தனது படிப்பு காலம் முடியும் முன்னர் நீக்கப்பட்டவன் இவனாக தான் இருக்கும் என்று நினைக்கிறன். பின் இவனது பெற்றோரின் பணம் வளம் மூலம் இந்தியாவில் தனது மருத்துவ படிப்பை படிக்க சென்றானாம் அங்கும் படிப்பை தொடராமால் ஏதோ முறையில் பெரும் பணத்தை உருவாக்கி கொண்டான் என்று கேள்வி பட்டு கொண்டேன் . இவன் ஒரு அதீத எம்ஜீஆர் ரசிகன் ..கிட்டத்தட்ட ஒரு சினிமா பைத்தியம் கூட ..அந்த சந்தியில் ஒரு தியேட்டரில்ஒரு முறை எம்ஜீஆர் படம் ஓடிய போது ஹவுஸ் புல் ஆகோனும் என்றதுக்காகவே சிலருக்கு படம் பார்க்க காசு கொடுத்த அனுப்பிய படித்த முட்டாள்.

அவனது இந்த சினிமா பைத்தியத்தை தெரிந்து கொண்ட சிலர் .ஏதோ முறையில் அவன் உழைத்த பணத்தை கொண்டு சினிமா தயாரிக்கும் வருத்தம் தரக்கூடிய ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.படமும் தோல்வி அடைய . பெற்றோர்களும் இறக்க ..உறவினர்களும் கைவிட்ட நிலையில் இப்போது அவன் இப்ப அந்த சந்தியில் பிச்சைக்காரனாக சுற்றி கொண்டிருக்கிறான்.

அவனோடு படித்த ஒரு வகுப்பு தோழன் தான் அப்பிரதேசத்தில் உள்ள இலங்கையிலே பிரபலமான கல்லூரி ஒன்றின் அதிபராக ஆக இப்ப இருக்கிறார். இவனுக்கு அவ்வூர் வர்த்தகர்களுடன் கதைத்து ஏதாவது வேலை எடுத்து கொடுக்கலாம் என்று நினைத்து கொண்டு அதே மரக்கட்டை பெடல் போட்ட சைக்கிளில் திரும்பி வரும் போது ..என்னை வேகமாக கடந்த சென்ற மோட்ட சைக்கிளிலிருந்து எனது பெயரை இருப்பதைந்து வருடங்களுக்கு முன்னால் அழைத்த அதே தொனியுடன் ஒலித்தது.

ஹெல்மட் மறைவில் இருந்து வெளியில் வந்த ஒருவன் . தன்னை அடையாளம் கொள்ளுகிறாயா என்று ஆங்கிலத்தில் கேட்டான் ..நான் பதில் சொல்லும் முன்பே தனது பதவிகளை பந்தங்களையும் விவரிக்க தொடங்கி விட்டான் ....முடிவில் வெளிக்கிடும் போது கூறினான் ..வெளியில் இருந்து வந்தனீங்கள் மச்சான் ஏன் இந்த ஓட்டை சைக்கிளிலை திரியிறாய் என்று ....அவனுக்கே ஒரு மாதிரியாக இருந்திருக்க வேண்டும் எனது பரதேசி கோலம் ..இப்படி பலதும் பத்தையும் நினைத்து கொண்டு வந்ததால் ..எனது பாதையை விட்டு எங்கையோ திசை மாறி விட்டேன்

வீடு திரும்ப இருண்டு விட்டது....அந்த அந்தி மாலை பொழுது இருப்பதைந்து வருடங்களுக்கு முன் இருந்த அழகை தந்து கொண்டிந்தது ..

அதை ரசித்து மனதை லேசாகி கொண்டிருந்தேன்

Wednesday, August 11, 2010

வலித்தாலும் வாழ்க்கை அழகானது

டிக் டிக் டிக்

ஓயாமால் கேட்டபடி

என்ன அது

அதனருகே நான்,எத்தனையோ சத்தங்களை முன்பு கேட்டு கொண்டிருந்த பொழுதும் இப்பொழுது இந்த சத்தம் உறுத்தி கொண்டிருந்தது

அது ஒரு சுவர் மணிக்கூடு

அதனருகே நான் ,,ஏன்... இருக்க வேண்டும்...இருந்தே தீரவேண்டும்..அது ஒரு ஆஸ்பத்திரி வார்ட் ..நேற்று வரை நல்லாத்தான் இருந்தேன்..யார் சொன்னார்கள்...நான் தான் சொல்லுகிறேன்...மற்றவர்களுக்கும்
. பார்த்தவர்களுக்கும்..என்னை வருத்தக்காரன் மாதிரி என்று சொல்ல தோன்றாது....

ஏதோ தேவைக்காக யாருக்காகவோ ஆஸ்பத்திரி வந்த என்னை ஏதோ வருத்தமென்று பிடித்து வைத்திருக்கிறார்கள்...இரத்த பரிசோதனையில் ...வருத்தம் என்று டொக்டருக்கு தெரிந்திருக்கிறது ...அந்த செக்கிங் இந்த செக்கிங் எல்லா முடிந்தும் என்ன வருத்தம் என்று தெரியவில்லையாம் அதுக்காகவே சின்ன சத்திரசிகைச்சை செய்ய வேண்டுமாம்...

நாளைய பிணங்கள் இன்றைய நடை பிணங்கள் நேற்றைய சராசரி மனிதர்கள்..எல்லாரும்.இந்த வார்ட்டுக்குள் ..அவர்களை...குசலம் விசாரிக்க உறவினர்கள்...அன்பாகத் தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்...இப்படி எப்பவும்.மற்ற சமயங்களில் அன்பாகத் தான இருந்திருப்பார்களா . ...ஏன் என்னுள் எழவேண்டும் இந்த கேள்வி ..ஏன் இந்த அவநம்பிக்கை ..என்று என்னை கேட்க இந்த மனசுக்கு அவகாசம் கொடுக்கவில்லை......இந்த ...சுவர் மணிக்கூடு எனது கட்டிலில் அருகில் இருந்து கொண்டு மீண்டும் தொல்லை கொடுக்கிறது

டிக் டிக் டிக்

ஓங்கி உதை விட்டு உடைக்க வேணும் போல் இருந்தது ...உடைக்கலாம் ..எட்டும் தூரத்தில் தான் இருக்கிறது. பக்கத்து பெட்டில் இருக்கிறவன் ..லொக் லொக் என்று பிரேக் போடமால் இருமி கொண்டு இருக்கிறான்

இந்த அவல இருமலின் கனைப்பிலும் பார்க்க இந்த மணிக்கூட்டின் சிணுங்கல் எவ்வளவோ பரவாயில்லை என்று உணர்த்தியது

டிக் டிக் டிக்

இது தான் இந்த கணம் தான் உண்மை என்று அடிக்கடி உணர்த்தி கொண்டிருக்குதோ....

நாளைக்கு சத்திரசிகிச்சை ...இன்றைக்கே நான் சத்திரசிகிச்சை கூடத்தில் மனத்தளவில்...ஒரே பய பீதி ...ஒரு முறையும் இது வரை சத்திரசிகிச்சை செய்ய வில்லை...மரணமும் ஒருமுறையும் நிகழவில்லை தானே...அதை எல்லாம் நினைத்து இவ்வளவு காலம் பயந்து இருந்தேனா

.இந்த மணிக்கூடு டிக் டிக் என்று சத்தம் போட்டு விரைந்து ஓடுவதால் அதில் அந்த வெறுப்போ.....மணிக்கூட்டை ஓடாமல் சத்தத்தை நிறுத்தி விட்டால்...நாளை வராமாலா விடப்போகுது...அது சரி நாளை வராமால் இன்று எப்பவும் இருந்தால் நான் ஆஸ்பத்திரியில் எல்லவோ எப்பவும் இருக்கோணும்

அழகான பெண் நர்ஸுகளும் டாக்டர்களும் அங்கும் இங்கும் சிரித்து ஏதோ கதைத்து கலப்பாக கலப்பாக சென்று கொண்டு இருக்கிறார்கள்....அவர்களுக்கு என்ன அங்கு வேலை செய்பவர்கள் ....எங்களை போல நோயாளிகளா என்ன...அவர்களுக்கு ...இந்த ..டிக் டிக் உதவக்கூடும்....சிலருக்கு சிப்ட் முடிய உதவும் சிலருக்கு தொடங்க ..உதவும்...


அதில்....ஒரு நர்ஸ் கனிவோடு அந்த பக்கத்து பெட் கிழடோடு என்று பேசி கொண்டிருக்கிறாள்.......எனக்கு கொஞ்சம் பொறாமை தான் ..கொஞ்சம் முந்தி என்னோடு கனிவோடு மட்டு மன்றி சிரிக்க சிரிக்க பேசினாள்......அது அவளுடைய வேலை ..அவளுக்கு அப்படி பயிற்ச்சி அளிக்க பட்டு இருக்கிறது..என்று அந்த கணத்தில் புத்தி வேலை செய்யவில்லை


சத்திர சிகிச்சை பயத்தில் இருக்கும் பொழுது தேவையா இது என்று கேட்டால்....எந்த பய பீதியிலும்...ஹி..ஹி..ஹி....வாழ்க்கையின் சுவராசியமே அதில் தானே அடங்கி இருக்கிறது..... எல்லா நேரம் வாழ்க்கையில் பயந்து கொண்டு இருக்க முடியுமா...மரணமும் கட்டாயமும் நிகழத்தான் போகிறது....அதுக்காக இன்றைக்கே சுடுகாட்டில் இருக்க வேண்டுமா என்ன

நாளையை நாளை பார்த்து கொள்ளட்டும் என்று இருந்தால்...நாளையும் வந்து விட்டது..

அவள் அந்த நர்ஸ்தான் என்னை அந்த ஆஸ்பத்திரி கட்டிலில் வைத்து தள்ளி கொண்டு போகிறாள்....இப்படி எத்தனை பெயரை தள்ளி கொண்டு சத்திரசிகைச்சை கூடத்துக்கு போயிருப்பாள்...அவளிடம் தான் கேட்கிறேன்....இது என்னுடையது மைனர் ஒப்பிரேசன் தானே .. ரிக்ஸ் ஏதாவது இருக்குமே.என்று..அவள் சாதாரணமாக சொல்லுறாள் ...எந்த ஒப்பிரேசனும் ரிக்ஸ் தான் என்றாள்.சர்வ சாதாரணமாக

சத்திர சிகிச்சை மூலம் பிறந்த குழந்தை ஒன்று வீல் வீல் என்று சத்தம் போடுகிறது மற்ற பக்கத்தால் தள்ளி கொண்டு செல்லுகிறாள் இன்னோரு நர்ஸ்.அந்த குழந்தைக்கே வாழ்க்கையை தொடங்க முன்பே ...எங்களின் பட படப்பு அதுக்கு இப்பவே பற்றி கொண்டு விட்டது....

மயக்க மருந்து கை களினூடாக ஏற்றுகிறார் சத்திர சிகைச்சியாளர்.....மரணத்துக்கு பின்பு போல ..அதுக்கு பின் ஒன்றுமே தெரிய வில்லை

...அதே..டிக்...டிக் .. டிக் சத்தம் ..அந்த மணிக்கூட்டுக் கீழ் உள்ள
கட்டிலில் ...நான் ......உடம்பில் ...வலித்தது....உயிரோடு இருக்கிறேன் என்ற உணர்வு என்னிடம்...

வலித்தாலும் ...வாழ்க்கை அழகானது..

Thursday, August 05, 2010

தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களின் தாக்கம்

திரைப்பட வரலாற்றில் தமிழ் எழுத்தாளர்களின் தாக்கம் நிறைய இருந்திருக்கின்றன.. ஏன் திராவிட எழுச்சிக்கே திரைப்படத்தில் வரும் எழுத்தின் தாக்கம் மிக உதவியது.. மனோகராவில் பத்மாவதியாகா வரும் கண்ணாம்பா பேசும் வசனம் இது,"செவ்வாழைத்தோட்டத்தில் குதித்தாடும் குரங்குகளே! மங்கை உருவில் மகான் உருவில் இந்த மண்ணை வளைக்க வந்த மகாபாதர்களே!சரித்திரத்தை மறந்தவர்களே! செப்படி வித்தையால் செழுந்தமிழர் செங்கோலை முறிக்க வந்த சிறுநரிக்கூட்டமே!". இப்படியான எழுத்துக்களால் எழுத்தாளர்கள் சினிமாவின் சாதனத்தில் புகுந்து சிந்திக்க வைப்பதோடு அந்தக் காலம் எழுச்சியூட்டினார்கள்

கல்கி புதுமைபித்தன் தொடங்கி இன்றைய பிரபலஎழுத்தாளர்கள் வரை சினிமா தாக்கம் நிறையவே இருந்திருக்கிறது.
புதுமை பித்தன் 1940 களில் வெளிவந்த காமவல்லி என்ற படத்திற்க்கு வசனம் எழுதியிருந்தாராம். இதே போல் கல்கி அவர்களுக்கும் சினிமா தாக்கம் நிறையவே இருந்திருக்கிறதாம். தம்முடைய நாவல்கள் எல்லாம் திரைபடங்களாக வேண்டுமென பெரிதாக விரும்பினாராம். அந்த வகையில் கல்கியின் "பொய்மான் கரடு" என்ற நாவல் பொன் வயல் என்ற பெயரில் திரைப்படமாக வந்தது. அதே போல் கல்கியின் புகழ் பெற்ற "கள்வனின் காதலி" என்ற நாவல் திரைப்படமாக சிவாஜி பானுமதி நடிப்பில் 50களில் வெளிவந்திருந்தது. கல்கியின் முதல் வரலாற்று நாவலான "பார்த்திபன்கனவு" திரைப்படமாக வந்தது. அப்பொழுது கல்கி உயிருடன் இல்லை. கல்கியின் பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர் கமலகாசன் போன்றவர்கள் திரைப்படமாக்க முயற்சித்தார்க‌ள், ஆனால் இன்று வரை கை கூடவில்லை.


எழுத்தாளர் அகிலனின் புகழ் பெற்ற "பாவை விளக்கு" நாவலும் திரைப்படமாகியது. அகிலனின் மற்றொரு புகழ் பெற்ற, பரிசு பெற்ற நாவல் "வாழ்வு எங்கே". "குலமகள் ராதை" என்ற பெயரில் திரைப்படமாகியது. இரண்டிலும் சிவாஜி கணேசன் தான் கதாநாயகன் . இன்னுமொரு பரிசு பெற்ற நாவலான கயல்விழி என்ற நாவல்.. எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனாக" வந்தது.


கன்னிமாடம் , யவனராணி கடல்புறா என நாற்பதுககு மேற்பட்ட நாவல்களை எழுதியிருந்த சாண்டில்யன் கூட "என்வீடு" என்ற திரைப்படத்திற்க்கு வசனம் எழுதியுள்ளார்.சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் அவர்களும் ஆனந்த விகடனில் வெளிவந்த குறுநாவல் "யாருக்காக அழுதானை" நாகேசை வைத்து படமாக்கினார்.அதே போல் "உன்னைப்போல் ஒருவன்" என்ற நாவலை படமாக்கி இந்திய அதிபரின் பரிசைப்பெற்றார். அவருடைய "சில நேரங்களில் சில மனிதர்கள்", லட்சுமி நடிப்பில் உருவான "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" போன்றவையும் திரைப்படமாக வந்திருக்கின்றன.


கல்கண்டு பத்திரிகையை நடத்தி மற்றும் துப்பறியும் சங்கர்லால் மர்ம நாவலை எழுதி புகழ் பெற்ற தமிழ்வாணன்,ஜெயசங்கர் நடித்த "காதலிக்க வாங்க" என்ற படத்தை தயாரித்து கதை வசனம் எழுதியுள்ளார்.


மு.வ என்று அழைக்கப்படும் வரதராசன் அவர்களுடைய "கள்ளோ காவியமா" என்ற நாவல் "எங்கள் செல்வி" என்ற பெயரில் திரைப்படமாகியிருந்தது. அதில் ஏ.நாகேஸ்வரராவ், அஞ்சலி தேவி ஆகியோர் நடித்திருந்தனர்.மு.வ எழுதிய மற்றொரு நாவலான "பெற்றமனம்" கூட சிவாஜி நடித்த படமாக வெளி வந்திருந்தது.


சூரியகாந்தம்,மிதிலா விலாஸ்,காஞ்சனையின் கனவு என்று பல நாவல்களை எழுதியுள்ளார் பெண் எழுத்தளாரான லட்சுமி. அவருடைய காஞ்சனையின் கனவு என்ற நாவல் காஞ்சனாவாக 50 களில்திரைப்படமாக வெளி வந்திருந்தது. இதில் பத்மினி நடித்திருந்தார்.
மற்றுமொரு பெண் எழு்த்தாளரான சிவசங்கரியின் 47 நாட்கள் நாவலை பாலசந்தர் அவர்களும் திரைப்படமாக்கியிருந்தார்.சிவசங்கரியின் மற்றுமொரு படைப்பான "அவன் அவள் ‍அது" திரைப்படமாகி சிவகுமார்,லட்சுமி,சிறிப்ரீயா நடிப்பில் வெள்ளி விழா கண்டது.

அநுத்துமா,லட்சுமி சுப்பிரமணியம் ஜோதிர்லதா கிரிஜா, அம்பை இந்துமதி, திலகவதி, சிவகாமி போன்ற பெண் எழுத்தாளர்களின் நாவல்கள் கூட திரைப்படமாக்கக்கூடிய சிறந்தவையாக இருக்கின்றன. பிற்காலத்தில் இவர்களுடைய நாவல்கள் திரைப்படமானாலும் அதிசய படுவதற்க்கில்லை

ஆனந்தவிகடனில் தொடராக வந்த கொத்தமங்கலம் சுப்புவின் தில்லான மோகனம்பாள் திரையில் வந்து சக்கை போட்டது.சுஜாதாவின் இரண்டு நாவல்கள் படமாயிருக்கின்றன. அதில் கரையெல்லாம் செண்பகப்பூ என்று படமான நாவல் நா.வானமாமலை தொகுத்த நாட்டுப்புற பாடல்களை வைத்து எழுதியதாக சொல்வார்கள்.சுஜாதாவின் மற்றுமொரு நாவலான "ப்ரியா"வும் திரைபடமாகியுள்ளது . இதில் ரஜனி சிறிதேவி நடித்திருந்தார்கள். ப்ரியா நாவலின் களம் லண்டனிலிருந்தது. படத்தில் மலேசியா சிங்கப்பூரில் எடுத்திருந்தார்கள்.கோமல் சுவாமிநாதன் என்ற எழுத்தாளரின் தண்ணீர் தண்ணீர் என்ற நாடகத்தைதான் பாலசந்தர் அவர்கள் "தண்ணீர் தண்ணீர்" என்று திரைப்படமாக்கினார்.

ஈழத்தில் கூட செங்கை ஆழியான் எழுதிய வாடைக்காற்று நாவல் திரைபடமாகியது.ராமதாஸ் அவர்கள் எழுதிய கோமாளிகள் ஏமாளிகள் றேடியோ நாடகம் திரைபடமாக வந்திருக்கிறது. கே.எஸ் பாலசந்தரனின் றேடியா நாடகம் தணியாத தாகம் திரைக்கதை அம்சத்துடன் இருந்தது. படமாக்க முயற்ச்சித்தார்களோ தெரியாது.

இப்படி இன்று வரை தமிழ் எழுத்தாளர்களின் தாக்கம் சினிமாவில் இருந்து கொண்டேயிருக்கிறது.கமலகாசன் ஒருமுறை சிற்றிலக்கியக்காரரை சினிமாவில் வந்து பங்காற்ற வரும்படியும் அதன் மூலம் தரமான திரைப்படங்களை உருவாக்க அவர்கள் உதவ வேண்டும் கூறியது ஞாபகம் வருகிறது.

Wednesday, August 04, 2010

கொள்ளி வாய் பிசாசுடன் கொஞ்ச நேரம்


இரவு பத்தரை இருக்கும் இங்கு வீ்ட்டின் பின் பக்கம் அவல குரலுடன் கீச்சிடும் சத்தம் கேட்டு தேய்ந்து .ஓய்ந்தது இந்த குரலை எங்கையோ கேட்டிருக்கிறன். ஆ..அது ஒரு பறவையின் குரல் இந்த வினோதமான குரலை நீண்ட காலத்துக்கு பிறகு கேட்டிருக்கிறன்.ஆ..இதை சுடலை குருவி என்று சொல்லுவினம்..நாடு கடல் மைல்கள் காலங்கள் தாண்டி ஒலித்த இந்த குரல் திரும்ப திரும்ப ஒலித்து பேயறைந்தவன் போல் என்னை ஆக்கி கொண்டிருந்தது

.நீண்ட பரந்த செவ்வக வடிவமுள்ள வயல் பரப்பு பகுதியின் வடகிழக்கு மூலையில் அந்த ஊர் சுடலையும் அடர்ந்த பனங்காணியும், வட மேற் மூலையில் வேப்பமரத்துடனூன வைரவர் கோயிலும் இருக்கு தென் மேற்கு மூலையில் தனித்து விடப்பட்ட மாமரத்து உடனனா பழங்கால வீடும் அதன் பின் சில இடை வெளி விட்டு தான் நெருங்கிய ஊர் மனைகளின் தொடர்ச்சிகள் தொடங்குகின்றன.தனித்து விடப்பட்ட அந்த சுண்ணாம்பும் சீமேந்து கலவையிலான அந்த ஓட்டு வீடு தான் அப்பம்மாவின் வீடு. அவவின் ஒரே பிள்ளையான அப்பர் பல முறை எங்களோடை வந்து இரு என்று கேட்டும் வராமால் பூதம் காத்த மாதிரி கொண்டு வாழ்ந்து கொண்டு வருது.. எங்கட றோட்டுக்கரை வீட்டிலிருந்து உள் ஒழுங்கைகள் ,காணிகளூடான ஒற்றையடி பாதைகளுக்களாலை போனால் உந்த வயல் மூலையிலுள்ள வைரவ கோயிலடியிலை மிதக்கலாம் ஒரு இரண்டு மைல் தானிருக்கு்ம்.

உந்த போகும் வழியில் அருகருகே வீடுகள் குறைவு சில இடங்களில் பத்தைகளாக கவனிப்பாரற்று கிடக்கும் காணிகளின் ஊடாக உந்த ஒற்றையடி பாதை வளைந்து செல்லுகிறது .பகலிலை என்றால் பிரச்சனை இல்லை . பாம்பு வேற விச ஜந்துகள் ஆக்கள் மிதிக்கோணும் நாங்கள் பதம் பார்ப்பம் என்ற மாதிரி போற வழியில் ஓய்வு எடுப்பினம் கொஞ்சம் இருட்டிட்டு என்றால் ரிஸ்க் எடுத்து கொண்டு தான் உதுக்காலை போகோணும்.

வைரவர் கோயிலடி அண்மையிலுள்ள கேணிகட்டில் சில இளைஞர்கள் சிரித்து கும்மாளமடித்து கொண்டிருக்கின்றனர் சில சிறுசுகள் அந்த கோயிலை சுத்தி திரியற பைத்தியத்தின் மேல் கல் எறிந்து வெறுப்பேத்தி விளையாடுகின்றனர்... ஒரு சோலி சொரட்டுக்கும் போகாத சும்மா தன் பாட்டில் புலம்பி திரியும் பைத்தியம். பாவம் அவர்களினது சேட்டைகளில் இருந்து தப்பிக்க படாத பாடு படுகுது. இன்னும் இருளவில்லை இருள முன்னம் கலைந்து விடுவார்கள்.உந்த வேப்ப மரத்தில்
முனி இருக்கு என்று கன காலமாக ஆக்கள் கதைக்கிறவை. கண்டவை கூட இருக்கினமாம் கொஞ்சம் தூரத்திலை சுடலையும் இருக்கிறதாலை பட்டினசபை லைற் கம்பமும் இஞ்சால் பக்கம் இன்னும் வரலை. கொஞ்சம் இருண்டால் காணும் இந்த பிரதேசத்தை பயங்கரமான இடமாக பிரகடபடுத்தி வைச்சுருக்குதுகள் சனங்கள். சங்கு ஊதி மணி அடித்து கேட்கிறது சவ ஊர்வலம் ஒன்று சுடலையை நோக்கி போய் கொண்டிருக்கிறது. சிரித்து கும்மாளமடித்த கொண்டிருந்த இளைஞர்கள் அமைதியாகி பின்னு க்கு கைகட்டி ஒரு வித இனம் தெரியாத உணர்வுடன் பார்த்து கொண்டிருக்கின்றனர் . பிரேதத்துக்கு கை காட்ட கூடாதாம் கை காட்டினால் கை அழுகிடுமாம். இப்படி எத்தனை புலுடாவை சொல்லி வைச்சிருக்கினம் சனம்.
இந்த வைரவ கோயிலிலுருந்து அப்பம்மா வீடு வரை ஒரே வெளி ஒரு புறம் வயல் வெளி மறு புறம் சதுப்பு நிலம்... இருளுக்கு முன்னுக்கு போய் இருள முந்தி திரும்பி வர எண்ணி நினைச்சனான் ஆனாலும் இருள் என்னை முந்தி மெல்ல விரைந்து வந்து கொண்டிருந்தது. அப்பம்மா வீட்டு முன் மாமர இருட்டு இன்னும் அந்த வீட்டு தனிமையை இன்னும் பயங்கரமாக்கி கொண்டிருந்தது.அப்பம்மாவின் தனிமையை போக்க அவ வளர்க்கும் மாடுகள் தாங்களே தங்கள் முகத்தால் உந்தி கேட்டை திறந்து உள்ளே போகின்றன.லாம்பு வெளிச்சத்தை கொஞ்சம் தூண்டிய படியால் என்னவோ இருளை கிழித்து வந்த வெளிச்சத்த்துடன் வந்த அப்பம்மாவின் குரல்

காடு கழிஞ்ச நேரம் எங்கை திரியிறாய் மோனை.. என்ற படி.. அண்டைக்கு சொன்னான் உந்த சுடலை குருவி கீச்சிடக்கை ஆரோ ஊருக்கிளை மண்டையை போடப்போயினம் என்று நீ நம்பேலை பாத்தியே என்றது ஏளனக்குரலில்
கொஞ்ச காலாமாக பக்கத்து வீட்டில் குடி வந்திருக்கிற தாடிக்கார மாமா வின் கதைகளை கேட்டா பிறகு இவவின்ரை மூட கதைகளை நம்பமால் உவவோடை வாதிடுறனான்.. அது தான் இப்ப நிறுவி நெளிச்சு காட்டுது உந்த மனிசி..

நல்லாய் இருட்டிட்டுட்டுட்து.. அமவாசை முன்னிருட்டு வேற.. வரக்க இருந்த சந்தோசம் இப்ப திரும்பக்க இல்லை பயப்பட ஒன்றும் இல்லை என்று உள் மனம் சொல்லிக்கொண்டாலும் வெளி சூழ்நிலைகள் பயத்தை கிளம்பிக்கொட்டி கொண்டிருந்தன. வயலின் அந்த மூலையில் சுடலையில் பனை இடுக்குககாளில் பிணம் எரிந்து கொண்டிருந்தது தெரிந்தது.. இவ்வளவு நேரமாக எரிந்து கொண்டிருக்கிறது இன்னும் எரிந்து முடியல்லை .. வாழக்கையில் சில வேளை சில பேர் சில நேரத்தில் சொல்றவை இந்த கட்டை அவ்வளவு கெதியில் வேகாது என்று. உதுவும் அப்படியான கட்டை ஒன்று போலை.

முன்னுக்கு பக்கத்தில் வட்டமாக நெருப்பு மாதிரி சிறிய நெருப்பு அசைந்து வந்து என்னை கடந்து கொண்டிருந்தது. ஆரோ ஒருவர் சுருட்டை பத்தி கொண்டு எதிரான பக்கம் செல்கிறார் போலை அவர் செல்கிற வேகம் செருமல் அவரது பயம் பிராந்தியை எல்லாத்தையும் நல்லாய் காட்டியது..

இப்பொழுது நான் மட்டும் தான் அந்த வெளியில். தூரத்தில் தெரியும் அந்த வைரவர் கோயிலில் பயம் காட்டி எரியும் தூண்டமாணி விளக்கை கடந்து விட்டால் பிரச்சனை இல்லை . அங்காலை போனால் பாம்பு பூச்சிகள் தானே தெரிஞ்ச சாமான்தானே. பயம் இல்லை. தெரியாததுக்கு தானே சரியான பயமாயிருக்கு இந்த மரணம் பேய் பிசாசு முனி எல்லாம் அப்படியான விசயம் தானே.....

பாதையின் மற்ற பக்கத்தில் சதுப்பு நில பக்கத்திலிருந்து உயரமாக நெருப்பு துகள் என்னை நெருங்கி வந்து கொண்டிருந்தது... அப்பம்மா சொல்ற மாதிரி கொள்ளி வாய் பிசாசோ.. வேகமாக ஓட வேகமாக ஓட வேகமாக துரத்துது மெதுவாக நடந்தால் மெதுவாக துரத்துது .. கிறிஸ்ரோபர் அலி நடிக்கும் ட்ரகுலா படங்களில் சிலுவையை காட்டி தப்பிக்கிற மாதிரி... ஏதாவது தேவாரம் பாடி தப்பிக்கலாம் என்று பார்த்தால் பித்தா பிறைசூடி... அங்காலை உள்ள வரிகள் சரியாக ஞாபகம் வர மாட்டுட்டுது.. பக்கத்து வீட்டு மாமா சொன்னவர் மெதேன் என்ற வாயு சதுப்பு நிலங்கள் உருவாகிறது என்று. அதைத்தான் கொள்ளி வாய் பிசாசு என்று சொல்றவை என்று.. உந்த புத்தி வேலை செய்யவில்லை தூண்டாமணி விளக்கடி மட்டும் மூச்சிறக்க ஓடிவந்தேன் .திரும்பி பார்த்தேன் நெருப்பு வெளிச்சத்தை காணவில்லை .

இங்காலை வைரவர் கோயிலடி வேப்பமரத்தடியில் திருப்பி பார்த்தன் ஓர் கரிய உருவம் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தது......... ஹிஹி சிரித்தபடி... வைரவரா , முனியா ...வையந்திமாலாவை கல்யாண கட்ட போறனே. என்றபடி......கேட்ட குரலாக. இருக்கே... அந்த கோயிலை சுத்தி திரிந்த கொண்டிருக்கிற பைத்தியம் அதே தான்..

மீண்டும் அந்த குரல் கேட்க பேயடித்த நிலமையிலிருந்து திரும்ப வைத்தது. தூரத்தில் உள்ள சவக்காலைக்குள் கீச்சு சத்தம் போட்டுக்கொண்டு சென்று கொண்டிருக்கிது அந்த குருவி.