Pages

வாசகர் வட்டம்

Saturday, December 28, 2013

எங்கள் வீட்டில் பிறந்த ஏசம்மா

அதிசயம் யேசு மாட்டு கொட்டகையில் பிறந்தது மட்டுமல்ல அப்படி ஒன்று எங்கள் வீட்டிலும் நடந்தது.அது நடந்ததுக்கு தடங்கள் இல்லை இப்ப என்ற மாதிரி,எங்கள் வீட்டு அதிசயத்துக்கான தடங்களும் இப்ப இல்லை .என்றாலும் இன்று போல அந்த நாள் அது நடந்த நேரம் இப்பவும் என் முன் திரைபடம் போல ஓடி கொண்டிருக்கிறது ..வேறு ஒன்றுமில்லை எனக்கு அதிசயமாக இருந்தது .உங்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரியாது . நத்தார் பிறக்கும் இரவு ஒரு பதினொரு பன்னிரண்டு மணிக்கும் இடையில் தான் அது நடந்தது என்று நினைக்கிறன் .கொட்டும் மழை வேறை அன்றைய காலையிலிருந்து. அடியென்றால் அந்த மாதிரி விடாமால் ஓரே அடி .அந்த மழை எல்லாரையும் வெளிக்கிட விடாமால் வீட்டுக்குள்ளை அன்று முழுவதும் கட்டி போட்டது போதாதுக்கு அன்று இரவும் நித்திரை கொள்ள முனைகின்றவர்களை கண் மூடாமால் பண்ணி கொண்டிருந்தது.இவ்வளவு காலம் இரவில் வந்த இருட்டுகளையெல்லாம் சேர்த்து தடித்து வந்த இருட்டு மாதிரி அப்படி ஒரு கும்மிருட்டு அன்று .

 அத்துடன் விதம் விதம் இசை கருவிகள் எல்லாம் சேர்த்து வாசித்த மாதிரியான சத்தங்கள் இடைக்கிடை வந்து வந்து போகும் .பெரிசுகளுக்கு இது தொல்லையாக இருந்தாலும் எங்களுக்கு குதூகாலம். ஆனால் ஒரேயொரு பயம் . இந்த பயங்கரமாக வீசும் காற்றில் எங்கள் வீட்டுக்கு பக்கத்து காணிக்குள் இருக்கும் பனைகள் ஆடும் நாட்டியத்தை பார்க்கும் பெரிசுகளின் பயம் எங்களை தொற்றி விட்டிருக்கும் .அதில் ஒரு நெட்டிய பனை ஒன்று வீட்டு முகட்டை முத்தமிட வருவதும் விருப்பமில்லாமால் திரும்பி போவது மாதிரி இருக்கும் ,இப்படி வந்து பல காலம் ஏமாற்றியதால் விழாது என்ற நம்பிக்கை பெரிசுகளுக்கு எங்களுக்கு அப்படியே.மின் விளக்குகள் என்பது ஆஸ்பத்திரியிலும் புகையிரத நிலையத்திலும் கண்டால் சரி .கலியாணவீடு நல்ல நாள் பெருநாளுக்கு கூட பெற்றோல் மாக்ஸ் தான்..மின் விளக்குகள் வீடுகளுக்கு எப்ப வரும் என்று தெரியாத காலம் .லாம்பு விளக்கு தான் பிரதான இடத்தில் பிரதான பாத்திரம் வகிக்கும் ,கை விளக்குகள் என்ற குப்பி விளக்குகள் வீசு காற்றில் தப்பி உயிர் வாழ்ந்து கொண்டு இருட்டை கிழித்து கொண்டு அங்கங்கு அசைந்து நடமாடி தெரியும் .இப்ப அடை மழை வேறயெல்லோ ...கிணத்தடி போறவையோ அல்லது வேற தேவைக்கு போறவை கொண்டு செல்ல முடியாது இப்ப அதன் அசைவு கூட மட்டுபடுத்த பட்டிருக்கும். 

வீட்டு பின் பக்கத்தில் இருந்து ஒரு நூறு யார் தூரம் இருக்கும் மாட்டு கொட்டில் இருந்த இடம். வாயில்லாத ஜீவனை கஸ்டபடுத்த கூடாது என்று சொல்லி கொண்டு கொஞ்சம் வசதியாக அமைத்து இருந்தா எங்கள் அப்பம்மா. இதில் அப்பம்மாவை தவிர வீட்டில் இருக்கும் ஒருவருக்கு விருப்பமில்லை முக்கியமாக அம்மாவுக்கு இவங்களை வளர்க்கிறதுக்கே இந்த கூப்பன் காலத்தில் படாத பட வேண்டி இருக்கு இது வேறயாக்கும் என்று சலித்து கொள்ளுவா.இந்த மழை காற்று இடி மின்னல் ,பூச்சி புழு ஈசல் தவளை சத்தம் ,கும்மிருட்டு .குளிர் கூதல் இவை எல்லாத்தையும் மற்ற்வைகளை அனுபவித்து கொண்டிருக்க இதையும் விட முக்கியமான ஒன்றை பற்றி அப்பம்மா கவலை பட்டு கொண்டிருந்தா என்று தெரியும். காலையிலிருந்து தன் பாட்டில் புலம்பி கொண்டிருக்கிறா...அவ வளர்க்கும் பசு மாட்டின் அழுகை, உடல் அசைவுகள் எல்லாம் ஏதோ உணர்த்தியிருக்கவேணும் .இந்த நேரத்தில் மழை இருட்டை கிழித்து வந்த அந்த வந்த அவலக்குரல் கேட்டு வெளியில் போகோணும் என்று முயற்சி செய்யும் அப்பம்மாவை ஏதாவது முறையில் தடை செய்யும் அந்த இயற்கையின் கூத்துக்கள்.வெளியில் நூறுயார் தூரத்தில் இருக்கும் மாட்டு கொட்டகைக்கு போகா முடியாமால் வீட்டுக்குள்ளேயே அங்கும் இங்குமாக மைல் கணக்கில் நடந்து இருப்பா.அவவே பிரசவ வலியால் துடிப்பது போல் துடித்து கொண்டிருந்தா அந்த கன்றை ஈன முனையும் பசுவை போல.

 அவவுக்கு தெரியாத பிரவச வலியா என்ன? அதுவும் அவவுடைய காலத்தில் பிரவசம் செத்து உயிர்ப்பது மாதிரி ..வாழ்வே நிச்சயமில்லாத மாதிரி....ஏன் எங்கள் காலத்தில் கூட ஆஸ்பத்திரி கொண்டு போகமால் தண்ணீர் குடம் உடைந்து வீட்டிலோ வழியிலோ நடப்பது சில தருணத்தில் அபத்தமாக முடிந்து விடுவதுண்டு.தங்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப பிரவசத்துக்கு ஏற்பாடுகளை முன் கூட்டி செய்வதண்டு .சிலர் பக்கத்திலுள்ள பட்டினசபையோ நகரசபையோ நடத்தும் தாதி ஆஸ்பத்திரிகளே கதியாக இருப்பார்கள் .சிலர் கொஞ்ச தூரம் என்றாலும் பரவாயில்லை அரச ஆஸ்பத்திரகளுக்கு என்று போவார்கள் தங்கள் பண தகுதிக்கு மீறி பிரசவ்ம இனிதே நடந்தாக வேணும் என்ற நோக்கில் தனியார் மருத்துவனைகளுக்கு போவார்ளும் உண்டு. வடமராட்சி பகுதிகளில் இருந்து கூட மூளாய் தெல்லிபழை இணுவில் என்று செல்வோர் உண்டு . 

 இயற்கையின் கூத்துகள் யாவற்றுக்கும் எதிர்வினையாற்றி கொண்டு நனைந்து வடிந்து கொண்டிருந்த சாக்கை முக்காடிட்டு கொண்டு நூர்ந்த கை விளக்குயுடன் மாட்டு கொட்டு கொட்டகை அடைந்த பொழுது எல்லாம் நடந்து முடிந்து விட்ட அறிகுறி தென்பட்டது. அங்கு வெள்ளம் உட்புகுந்த நிலமை வேறை .நனைந்த நெருப்பட்டியுடன் போரடி ஒருவாறு வீசும் காற்றை எதிர்த்து கைவிளக்கு ஒளிர்ந்த பொழுது அந்த பசு அந்த கன்றை தன்னால் ஏலமட்டும் காப்பாற்றி கொண்டிருந்தது அவவுக்கு தெரிந்தது.

  அடுத்த நாள் அப்பம்மாவுக்கு சொன்னோம் யேசு பிறந்த நேரத்தில் பிறந்தமையால் யேசும்மா வையணை என்று கூறினோம் .ஏனோ விருப்பமில்லமால் ஓம் என்று தலையாட்டினா..அவ்வுக்கு யேசும்மா என்றது வாயில் வரமால் கொஞ்ச காலம் ஏசம்மா என்று அழைத்தா ...தடாலடியா தான் வைக்கிறது பெயர் என்று பொன்னி என்று மாற்றி விட்டா ..அதுவும் அப்படி கூப்பிட்டால் தான் எதிர் வினையாற்றும் திரும்பி பார்க்கும் . அதுவும் அப்பம்மாவின் கனிவிலும் பராமரிப்பிலும் விரைவில் தள தளவன வளர்ந்து விட்டது.

 ஒருநாள் தான் இப்படிதான் அது அழுது கொண்டிருந்தது. இப்பவும் அப்பம்மாவின் முகத்தில் பரபரப்பு தெரிந்தது. என்னத்துக்கு அழுகுது ஏதும் வருத்தமேணை என்று கேட்க 
 சும்மா போடா ...அதுக்கு அழுகுதடா ..தூ வுக்கு விடணும் ..உனக்கு விளங்கதாடா என்றா 

 எங்களுக்கு விளங்கும் ..நாங்கள் .சொன்னால் ..அழுதால் ..ஏதும் நடக்குமே

 மாட்டுக்கு ஒரு நீதி... மனிசனுக்கு ஒரு நீதியே ,

,என்ன மாதிரியான அமைப்பில் வாழ்ந்து இருக்கிறோம்